Wednesday, 18 March 2015

குறள் அமுது - (103)

குறள்:
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்”                             - (குறள்: 50)

பொருள்:
உலகத்தில் வாழவேண்டிய அறவழியில் வாழ்பவன் வானுலகில் வாழ்கின்ற தெய்வத்துள் ஒருவனாக மதிக்கப்படுவான்.

விளக்கம்:
இத்திருக்குறள் இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் வருகின்றது. ஆணும் பெண்ணும் கூடி மகிழ்ந்து வாழும் வாழ்க்கையில், இருவர் கருத்தும் ஒன்றாகி உலகிற்காக வாழும் அறவாழ்க்கையே இல்வாழ்க்கையாகும். அறவாழ்க்கையே இல்வாழ்க்கை என்பதை இந்த அதிகாரத்தில் ‘அறன்இழுக்கா இல்வாழ்க்கை’ என்றும் ‘அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்றும் திருவள்ளுவர் குறிப்பிடுவதால் அறியலாம். அதாவது அறவழியில் இருந்து மாறாது வாழும் வாழ்க்கை இல்வாழ்க்கை என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அறம் என்று சொல்லப்படுவதே இல்வாழ்க்கை என்றும் அடித்துக் கூறியுள்ளார்.

இல்லற வாழ்க்கை என்பது துறவற வாழ்க்கை போன்ற தனிமனித வாழ்க்கை அல்ல. இல்வாழ்க்கையில் தாய், தந்தை, மாமன், மாமி, கணவன், மனைவி, பிள்ளை, சுற்றம், நண்பர், விருந்தினர் எனப் பின்னிப் பிணைந்து பலரோடு சேர்ந்து இசைந்து வாழ வேண்டும். அத்தகைய வாழ்க்கையில் மற்றோர் மனங்கோணாது எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் இனிமையுடன் பழகி வாழ்தலே சிறந்த இல்வாழ்க்கையாகும். 

அப்படி வாழ்வதால் இல்லறவாழ்வு வாழ்பவர்கள் தம்மை அறியாமலேயே பிறருக்காகவும் பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்து வருகிறார்கள். சுற்றமாய்ச் சூழ்ந்து அன்புடன் வாழும்போது நன்மையிலும் தீமையிலும் ஒருவர்க்கொருவர் உதவி செய்து வாழமுடிகின்றது. தன்னையும் காத்து பிறரையும் பாதுகாத்து வாழ்வதால் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் என இல்வாழ்க்கை வாழ்பவனை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

வாழ்வாங்கு வாழ்தல் என்றால் என்ன? அன்பும்  அறனும் உடையோராய்த் தனக்கென மட்டும் வாழாது, பிறர்க்கெனவும் வாழ்தலே வாழ்வாங்கு வாழ்தலாகும். அதாவது தாம் வாழ என கணவனும் மனைவியும் பாடுபட்டு உழைத்துச் சேர்த்த பணத்தை தங்கை மகள் படிக்கப் பணமில்லாது துன்பப்படுகிறாளே என்றோ சுனாமிக்கென்றோ அள்ளிக் கொடுத்தலும் பிறருக்கென வாழ்தலே.

தன்னை கல்வியில் செல்வத்தில் நன்கு நிலைநிறுத்திக் கொண்டு -  தன் சுற்றத்தினரைப் பாதுகாத்து, நண்பர்களுக்கும் கொடுத்து, மற்றோரும் உலகோரும் வாழவழி செய்தல் வாழ்வாங்கு வாழும் வழியாகும். இப்படி இந்த உலகத்தில் வாழ வேண்டிய வழியில் வாழ்பவர் விண்ணுலகில் வாழ்கின்ற தெய்வத்துக்குச் சமமாக வைத்துப் போற்றப்படுவர் என இத்திருக்குறளில் திருவள்ளுவர் சொல்கிறார்.

No comments:

Post a Comment