Sunday 14 September 2014

அதிகாரி புலமேவி இருந்தருளு இளவழகனே!

புங்குடுதீவு மடத்துவெளி பாலமுருகன் வணக்கப் பாமலர்
-இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -

கங்காசலந் திகள் செஞ்சடைக் கடவுளின் 
கருணைமழை பொழியு நெற்றிக்
கண்ணில்வரு மாறுபொறி காற்றுச் சுமந்துபோய்
கருதினைய சரவண மிசை
பொங்கிவளர் செங்கமல மலர்மீது பெய்திடப்
பூரித்த புத்த ழகுடன்
போக்குவரவற்ற பொருள் புனிதமுறு புதல்வராய்
பொய்கை தவழ்ந்த பெருமான்
மங்கலம் பதினாறு மன்னிவளர் பொன்கைநகர்
வடபால் மடத்து வெளியில்
மருவுமொரு திருமுருக சண்முக சடாச்சர
சரவண பவாய நமவே
எங்குமொலி செய்ய இகபர இரண்டிடை
எமையாள வந்த பாலா
எஞ்ஞான்றுங் காத்திட அதிகாரி புலமேவி
இருந்தருளு இள வழகனே! 
இனிதே,
தமிழரசி.

2 comments:

  1. மங்காத தமிழோடு மதியோடு கதிரோடு
    ................மற்றும்பல் லுடுக்க ளோடு
    ..........மாறாத இளமைக்குள் தீராத இனிமைத்தேன்
    ................மற்றவரு மறியச் செய்ய
    இங்கேகி வருவோர்க்குத் தமிழ்ற்றேனு மதுவிஞ்சும்
    .................இன்னுரைக ளறியத் தந்தும்
    ...........இடரென்று போவோரு மிதமென்ற “இதழ்“உண்ண
    .................இருகண்கள் விரிய வந்தும்
    எங்காத லிதுவென்றோ “மொழிமீதி லுயிர்வைத்தல்“
    .................“ஏத்திடுவோர் போற்றி நிற்றல்“
    ..........ஏளனஞ் செய்வோரை எத்தர்களைப் பித்தர்களாய்
    ................எண்ணிவழி மாற்றக் கற்றல்!
    செங்காந்தள் மலர்ச்செம்மை செம்மாந்த தமிழ்ப்பூவின்
    ...............சீருங்கள் இதழில் பெறுவேன்!
    .......சிகரத்தில் நிற்கின்றீர்! சிற்றிவோன் கற்பதற்குச்
    ................ சிந்தையுளோன் நிதமும் வருவேன்!
    அறிஞரே!
    நான் வலைத்தளத்திற்குப் புதியவன் .
    மிகத் தாமதமாகத்தான் தங்கள் தளத்திற்கு வருகிறேன்.
    தங்களின் படைப்புகள் அனைத்தையும் படிப்பதற்கு ஆவலாய் உள்ளேன்.
    தங்களின் தமிழ்ப்பணி வாழ்க வளர்க!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் எழுத்தும் படைப்புகளும் ஊமைக்கனவாய்த் தெரியவில்லையே. உண்மைக்கனவின் வெளிப்பாடுகள் அல்லவா நர்த்தனமிடுகின்றன. உங்கள் தமிழ் ஆர்வம் தமிழ்த்தாயை மகிழ்விக்கும். சிந்தை மகிழ தமிழை மாந்தி தமிழன்னையை மிளிரச் செய்க!

      Delete