காற்று வீசுகிறது. அதாவது ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு அசைந்து - இயங்கிச் செல்கிறது. அப்படி காற்று இயங்கும் திசையை வைத்து அத்தத்திசையில் இருந்து வீசும் காற்றுக்கு நம்முன்னோர் ஒவ்வொரு பெயர் வைத்துள்ளனர்.
கிழக்கில் [குணக்கில்] இருந்து வீசும் காற்றை ‘கொண்டல்’ என்றனர்.
தெற்கில் இருந்து வீசும் காற்றை ‘தென்றல்’ என்றனர்.
மேற்கில் [குடக்கில்] இருந்து வீசும் காற்றை குடக்காற்று என்றனர். அதுவே கோடைக்காற்று.
வடக்கில் இருந்து வீசும் காற்றை ‘வாடை’ என்றனர்.
மதுரை நகரில் நடைபெற்ற காதல்விழா பற்றி சொல்லும் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் ‘கொண்டற்காற்று பாண்டிய மன்னனின் கூடல் நகரிலே புகுந்து நெடுவேள் என்று சொல்கின்ற மன்மதனின் வில்விழாவைக் [ காதல்விழாவைக்] காணும் பின்பனிக்காலத்து [பங்குனி] பனியரசன் எங்கே உள்ளான்?’ எனக் கேட்டதாம் என்கிறார். அதனை
“கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்து பனியரசு யாண்டுளன்” - (சிலம்பு: 14:110 - 112)
எனும் சிலப்பதிகார வரிகள் சொல்கின்றன. இது கிழக்கே இருந்து வீசிய பின்பனிக்கால கொண்டல் காற்றை எடுத்துச் சொல்கிறது.
ஆனால் பண்டைத் தமிழரால் காற்றுகளிலே மிகச்சிறந்த இடத்தில் புகழ்ந்து கூறப்படும் காற்று தென்றல் காற்றாகும். தம் முன்னோர் வாழ்ந்த தென்திசையிலிருந்து வீசுவதாலோ அன்றேல் என்றும் தென்கடலே தமிழருடைய கடலாக இருந்ததாலோ தென்றல் காற்றின் மேல் பற்று அதிகமாகவே இருந்திருக்கிறது. தென்கடற்கரையில் நின்று மெத்தென எம் உடலை வருடித் தழுவிச் செல்லும் தென்றற்காற்றை நுகர்ந்தோருக்குத் தெரியும் அதன் இதமான சுகத்தின் உண்மை. அந்தத் தென்றல் வந்து எம்மைத் தொடும் போது தோணும் இன்பத்திற்கு ஈடேது? மென்மையாக பய பக்தியோடு இயங்கத் தென்றல் யாரிடம் கற்றது?
கிழக்கே இருந்து வந்த கொண்டலும் மதுரை நகரில் வில்விழாக்காணவந்த பனியரசன் எங்கே உள்ளான்? எனக்கேட்டது என்றாரே இளங்கோவடிகள். அதுபோல தெற்கே இருந்து வந்து மதுரைக் ‘சோலையில் நுழைந்து, வாவிக்குள் புகுந்து, தாமரைமலரைத் தடவிப் பார்த்து, பசுமையான இருவாட்சி, முல்லை, மல்லிகைப் பந்தர்களில் எல்லாம் தாவிச் சென்று மகரந்தங்கள் விரிந்த மலர்களின் நறுமணத்தைச் சேகரித்து, குளிர்ச்சியோடு மென்மையாய் இயங்கும் தென்றலானது அங்கங்கே பல இடங்களிலும் சென்று அந்தக்கலை என்ன சொல்கிறது? இது என்ன சொல்கின்றது? என கலைகளை ஆராய்ந்து கற்று அறியும் மாணவனைப் போல இயங்குமாம்’ என்கின்றது திருவிளையாடற் புராணம்.
“பொங்கரில் நுழைந்து வாவி புகுந்து பங்கயம் துழாவிப்
பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர் தாவிக்
கொங்கலர் மணங்கூட்டு உண்டு குளிர்ந்து மெல்லென்று தென்றல்
அங்கங்கே கலைகள் தேரும் அறிவன் போல் இயங்கும் அன்றே”
- (திருவிளையாடற் புராண திருவாலவாய்க் காண்டம்: 19)
“பொங்கரில் [சோலையில்] நுழைந்து வாவி புகுந்து பங்கயம் [தாமரை] துழாவிப் [தடவி]
பைங்கடி [பசுமையான] மயிலை [இருவாட்சி] முல்லை மல்லிகைப் பந்தர் [பந்தல்] தாவிக்
கொங்கலர் [மரந்தம் விரிந்த] மணங்கூட்டு [மணத்தை] உண்டு [சேகரித்து] குளிர்ந்து மெல்லென்று [மென்மையாகத்] தென்றல்
அங்கங்கே [பல இடங்களிலும்] கலைகள் தேரும் [தேர்ச்சிபெறும்] அறிவன் [மாணவன்] போல் இயங்கும் அன்றே”
கலைகள் பல கற்கும் மாணவர் பொறுமையோடு பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழகம் நூலகம் என்று சென்று தேடி ஓடித் திரிந்து படித்து, ஒவ்வொன்றாய் ஆராய்ந்து குறிப்பெடுத்து நல்லனவற்றைச் சேகரித்து கற்று மகிழ்வோடு மென்மையாகத் திரிதல் போல தென்றலும் இயங்கித் திரிகிறதாம். கற்கும் மாணாக்கர் போல் தென்றல் அசைகிறதாம்.
இனிதே,
தமிழரசி.
காற்று பற்றி மிக அருமையாகச் சொல்லி உள்ளீர்கள். பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteமகிழ்ச்சி.
Deleteஅருமை !!
ReplyDeleteமகிழ்ச்சி.
DeleteThanks a lot. Please continue your Literary Services.
ReplyDeleteInstantly I got the Tamil Lyrics with Wonderful Explanation.
The Reference is appreciated.
Congratulations.
Maha Sakthi Cauvery.
Om.
Thank you!
Delete