Sunday 21 September 2014

பரம் இருப்பது எவ்விடம்?



பரம் பொருள் எங்கே இருக்கின்றது? என்ற கேள்வி ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் மட்டும் எழவில்லை. அது என்ன? இது என்ன? என்று கேள்வி கேட்கும் சிறு குழந்தைகளும் கேட்கும் கேள்வியே? எங்கள் வீட்டு சுவாமி அறையில் தங்கையுடன் விளையாடிக்கொண்டிருந்தான் என் மகன். அவன் சுவாமி படத்துக்குக் காலை நீட்டிக் கொண்டிருப்பதைக் கண்ட நான் ‘சுவாமிப்படத்துக்குக் காலை நீட்டக் கூடாது’ என்றேன். ‘ஏன்?’ என்றான். ‘இறைவன் பரம்பொருள் அல்லவா? பரம்பொருளுக்கு நமது காலை நீட்டுவது நல்லதா?’ என்றேன். 

‘பரம்பொருள் படத்தில் மட்டுமா இருக்கிறார்? எத்தனை கடவுளின் படங்கள் காற்றில் பறக்கின்றன. குப்பைத் தொட்டிக்குள் நிறைகின்றன. அவர் எங்கும் நிறைந்தவர் தானே! தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் தானே! நான் நின்றாலும் நடந்தாலும் ஓடினாலும் பரம்பொருள் என் காலடிக்குக் கீழேயும் இருக்கிறார் என்று நினைத்தேன். அம்மா! பரம்பொருள் இல்லாத இடம் இருக்கிறதா காலை நீட்ட’ என்றான். ஏழு வயதுச் சிறுவனாக இருந்த போதும் அவன் கேட்ட கேள்வி என்னைச் சிந்திக்க வைத்தது. அவன் கேட்ட கேள்வியில் எத்தகைய பெரிய உண்மை அடங்கி இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். நாம் சற்றும் சிந்தித்துப் பாராது எதனையும் சிறுபிள்ளைகள் என்று சொல்லக்கூடாது என்பதையும் உணர்ந்து கொண்டேன். எனினும் அவனிடம் எமது காலில் அழுக்குகள் இருக்கும் அல்லவா. கடவுளும் குழந்தைகளும் இருக்கும் இடம் சுத்தமாய் புனிதமாக இருக்க வேண்டும் அதற்காகச் சொல்வது என்றேன்.

ஆனால் என் மனமோ சிவவாக்கியர் என்னும் சித்தர் சொன்ன 

பரமிலாத தெவ்விடம் பரமிருப்ப தெவ்விடம்
அறமிலாத பாவிகட்குப் பரமிலை யதுண்மையே
கரமிருந்தும் பொருளிருந்தும் அருளிலாது போதது
பரமிலாத சூன்யமாம் பாழ் நரகமாகுமே                  
                                        - (சித்தர் பாடல்: சிவவாக்கியர்: 501)

என்ற பாடலை அன்று முழுவதும் இசைபோட்டது.

பரம் இ(ல்)லாதது எவ்விடம் பரம் இருப்பது எவ்விடம்
அறம் இ(ல்)லாத பாவிகட்டு பரம் இ(ல்)லை அது உண்மையே
கரம் இருந்தும் பொருள் இருந்தும் அருள் இ(ல்)லாது போது அது
பரம் இ(ல்)லாத சூன்யமாம் பாழ் நரகம் ஆகுமே

பரம்பொருள் இல்லாத இடம் எந்த இடம்? பரம் பொருள் இருக்கும் இடம் எந்த இடம்? மனித வாழ்க்கையின் முறைமை என்று சொல்லப்படும் அறத்தைச் செய்யமுடியாத பாவிகளுக்குப் பரம்பொருள் என்று ஒன்று இல்லை என்பது உண்மையாகும். பண்டைத் தமிழர் தமது வாழ்க்கையை அறம் எனக்கொண்டு வாழ்ந்தனர். அதனால் அறத்தை - வாழ்க்கையை இல்லறம், துறவறம் என இரண்டாகப் பிரித்து வாழ்ந்தனர். இல்லறத்துக்கு உரிய கடமையைச் செய்து வாழ்தல் ஒருவகை அறம். துறவறத்துக்குரிய கடமையைச் செய்து வாழ்தல் இன்னொரு வகை அறமாகும். இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட போதும் இல்லறத்துக்குரிய செயல்களைச் செய்யாது இருப்போரையும்  துறவறம் பூண்ட சுவாமிமார் என்று கூறியவாறு துறவறத்துக்குரிய செயல்களைச் செய்யாது செய்வது போல நடித்து உலகை ஏமாற்றுவோரையும் அறமில்லாத பாவிகள் என சிவவாக்கியர் திட்டித் தீர்த்துள்ளார். அடுத்து அறமில்லாத அந்தப் பாவிகளால் பரம்பொருளைக் காணமுடியாது என்பதும் உண்மையே என்று சத்தியம் செய்துள்ளார்.

அறம் என்றால் என்ன என்பதை திருவள்ளுவர் இனியவை கூறல் எனும் அதிகாரத்தில் மிக நேர்த்தியாக எடுத்துக் காட்டுகிறார். அவர் காட்டும் அறம் மிக அற்புதமானது. பாருங்கள்.
“முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
இன்சொல் லினிதே அறம்”                                  - (குறள்: 93)

ஒருவரைக் கண்டதும் முகமலர்ச்சியுடன் அன்புடன் பார்த்து மனம் கனிந்து இனிய சொற்களைச் சொல்வதே அறம் என அறத்துக்கு ஒரு வரைவிலக்கணம் தந்திருக்கிறார். இத்தகைய அறமாகிய மனமில்லாத பாவிகளுக்கு பரம்பொருள் இல்லை என்பதும் உண்மைதான். 

அள்ளி அள்ளிக்கொடுக்கக் கரம் இருந்தும்  பொருளிருந்தும் அருள் என்று சொல்லப்படும் இரக்ககுணம் இல்லாத போது அது பரம்பொருள் இல்லாத சூன்யமாகும். அதுவே பாழ் நரகமாகும். 

அதாவது பரம்பொருள் இல்லாத இடம் எது? பரம்பொருள் இருக்கும் இடம் எது என்ற உண்மையை சிவவாக்கியர் இப்பாடலில் கூறியுள்ளார். அன்போடு மனம் கனியக்கனியப் பேசமுடியாத பாவிகளுக்கு பரம்பொருள் தெரியாது. தன்னைப்போல் மற்ற உயிர்களையும் எண்ணிப் பார்க்கும் அருள் நிறைந்த மனம் இல்லாது, கையிருந்தும் கொடுக்காது, பொருளிருந்தும் பிறருக்குக் கொடுக்க நினைக்காது இருப்போரின் மனம் பரம்பொருள் இல்லாத சூன்யமாய் பாழ் நரகமாகுமாம்.

ஆதலால் மனங்கனியப் பேசி, கருணையோடு தன்னிடம் இருக்கும் பொருளைத் தேவையானோருக்குக் கொடுப்போர் மனமே பரம்பொருள் இருக்கும் இடமாகும் என்பதை சிவவாக்கியர் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
இனிதே,
தமிழரசி.

1 comment: