Saturday, 20 September 2014

பிறவிக்குணம்


மனிதரை நீரில் நீந்தப் பழகுவது போல் மீன் குஞ்சுக்கு எவரும் நீந்தப் பழக்குவதில்லை. நீரில் பிறக்கும் மீன் குஞ்சு நீரில் அலையடித்தாலும் புரண்டு புரண்டு நீந்தித்திரியும். ஏனெனில் நீந்துவது அதன் பிறவிக்குணம். காட்டில் வாழும் புலி உயிரினங்களைக் கொன்று தின்று வாழ்கிறது. புலிக்குட்டிகளும் பெற்றோரைப் பார்த்து அல்லது பார்க்காமலும் கூட உயிரினங்களை வேட்டையாடி உண்டு வாழ்கின்றன. ‘புலி பசித்தாலும் புல் தின்னாது’ என்ற தமிழ்ப் பழமொழியும் புலியின் பிறவிக்குணத்தை அழகாக எடுத்துச் சொல்கிறது. அதாவது வேட்டையாடுவது புலியின் பிறவிக்குணமாகும். வேப்பங்காய் கைக்கும், புளியங்காய் புளிக்கும், மிளகாய் உறைக்கும், பாக்கு துவர்க்கும் இவை அவற்றின் பிறவிக்குணமாகும். 

நம்முன்னோர்கள் பிறவிக்குணங்களின் தன்மைகளை இளமையாய் இருக்கும் போதே சிறுபிள்ளைகளுக்கு மிக நுணுக்கமாய் கற்றுக்கொடுத்தமையை பண்டைய தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஏனெனில் 'இளமையிற் கல்வி சிலையில் எழுத்தாய்' குழந்தைகள் மனதில் இருக்கும் என்பதை அறிந்திருந்தனர். அதனால் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள் சிறுகுழந்தைகளுக்கான நூல்களை தாமே இயற்றி வைத்துள்ளார்கள். அதில் ஒன்று ‘நறுந்தொகை’ என்று அழைக்கப்படும் மிகச்சிறிய நூலாகும். வளரும் குழந்தைகளின் உலகியல் அறிவு வளர்ச்சிக்குத் தேவையான நல்லனவற்றைத் தொகுத்துச் சொல்வதால் அந்நூலை நறுந்தொகை என்றனர். அதனை அதிவீரராமபாண்டியன் என்னும் பெயருடைய பாண்டிய அரசன் இயற்றினான். அதனை நீங்களும் ‘வெற்றிவேற்கை’ என்ற பெயரில் படித்திருப்பீர்கள்.

“அடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது
சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது
அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது
புகைக்கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது
கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது
அடினும் பால்பெய்து கைப்பறாது பேய்ச்சுரைக்காய்
ஊட்டினும் பல்விரை உள்ளி கமழாது
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே”             
                                         - (நறுந்தொகை: 23 - 30) 


பசுவின் பாலை நன்றாக வற்றக் காச்சினாலும் அதன் சுவைமாறாது. பொன்னை நெருப்பில் போட்டு சுடச்சுட பொன்போல் ஒளிருமே அல்லாமல் கருகிப்போகாது. சந்தன மரக்கட்டையை எடுத்து தண்ணீர்விட்டு நன்றாக அரைத்து குழையலாக எடுத்தாலும் சந்தனமணம் மாறாது இருக்கும். அகில் கட்டையை எடுத்து எரித்து புகை உண்டாக்கினாலும் அந்த புகையிலும் அகில் மணம் மணக்குமே அல்லாமல் கெட்ட மணத்தைக் கொடுக்காது. கடலைக் கலக்கினாலும் அதனைச் சேறாக மாற்றமுடியாது. பேச்சுரைக்காயைப் பால்விட்டு நன்றாய்க் காச்சினாலும் அதன் கைப்பு மாறாது அப்படியே இருக்கும். பலவித நறுமணங்களை  உள்ளிப்பூண்டிற்கு ஊட்டினாலும் உள்ளியின் மணம் எப்போதும் மாறாது. இவை யாவும் அவ்வப்பொருட்களின் பிறவிக் குணங்களாகும். இக்குணங்களை யாரும் அவற்றுக்கு கொடுக்கவில்லை. இவை இயல்பானவை. இவை போல் மனிதர்களிடையே இருக்கும் பெருமையையும் சிறுமையையும் அவரவர்களே உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்கின்றான் அதிவீரராமபாண்டியன்.

பிறவிக்குணம் என்று சொல்லப்படுகின்ற ஜெனட்டிக் மெமொரிஸ் [Genetic Memories] ஆகவரும் மரபணுத் தன்மைகளை நாம் நம் செய்கைகளால் மாற்றி அமைத்துக் கொள்ள எமக்குத் தேவையானது திடமான மனவுறுதியே. அந்த மனவுறுதியை நாம் குழந்தைப் பருவத்திலேயே ஊட்டவேண்டும் என்பதையே நம் முன்னோர் எமக்கு எடுத்துச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். நாம் பிறமொழி மோகத்தில் மயங்கி அவற்றை தொலைத்து நிற்கிறோம். 

படங்களைக் கீறிக் கீறிப்பழக சித்திரம் கீறவரும். அது கைப்பழக்கத்தால் வருவது. செந்தமிழை நன்றாகப் பேசிப்பேசிப் பழகப் பழக செந்தமிழ் பேசவரும். அது நாக்கின் பழக்கத்தால் வருவது. பாடசாலையில் படித்ததை மீண்டும் வீட்டில் வந்து படிப்பது எமது மனப்பழக்கத்தால் வருவது. ஒழுக்கம் [நடை] என்பது நாம் ஒவ்வொரு நாளும் ஒழுகும் விதத்தால் வருவது. ஆனால் பிறரிடம் கொள்ளும் நட்பும், இரக்கமும் [தயை], தனக்கென வாழாது பிறருக்குக் கொடுத்தலும் பிறவிக்குணமாக [Genetic Memories] வருவது. இந்த நல்ல குணங்களை குழந்தைப்பருவத்திலிருந்தே பழக்குவதற்காக குழந்தைகளுக்கு கற்பிக்கும் நூல்களில் அவற்றை நம் முன்னோர் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். குழந்தைகளுக்காக ஔவை சொன்னதைப் பாருங்கள்.

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்”                        
                                          - (ஔவையார் தனிப்பாடல்: 7)

நாம் இனத்தால் மனிதர்கள். நாம் ஒவ்வொருவரும் நட்புடன் வாழவேண்டும். எம்மைப் போல் மரம், செடி, கொடி, பறவைகள் விலங்குகள் யாவற்றையும் இரக்கத்துடன் நேசிக்க வேண்டும். பிறருக்குப் பகுத்துக் கொடுத்து பல்லுயிர் ஓம்பி வாழவேண்டும் மென சிறுகுழந்தையிலிருந்தே சொல்லிவளர்த்துவர அந்தக் குழந்தைகளின் பிறவிக்குணமாக நட்பும் தயையும் கொடையும் இருக்கும். ஏனெனில் மனிதன் 70% தான் சேர்ந்து வாழும் இடத்தின் தன்மையையே தன் குணமாக வெளிப்படுத்துகிறான். 

நட்பும், தயையும் கொடையும் குழந்தைகளின் பிறவிக்குணமாக இருப்பின் போட்டி, பொறாமை, பூசல் அற்று இந்த உலகம் வெற்றி நடை போடுமே! அத்தகைய உலகை நினைத்துப் பாருங்கள். அதுவே சுவர்க்கம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment