Friday, 19 September 2014

இனிய தமிழும் இயற்கையும் நடனமிடும் தீவகங்கள்

எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன்
[தினகரன் ஞாயிற்றுவாரமலர், கொழும்பு: 07 - 01 - 1951]


புலவர்கள் பிறப்பிடமாகத் திகழும் நயினாதீவின் சிறப்பு
தெள்ளுக்கு எள்ளுவமை கூறிய நாகமணிப்புலவரின் கவிதாவிருந்து

தீவுகள் என்று மெத்த இலேசாகச் சொல்லுவார்கள், அந்த வட இலங்கைத் தீவகங்களை. இயற்கை அன்னை நடமிடும் பூங்கா வனங்கள் அவை. பெரிய வள்ளல்கள், அறிஞர்கள், புலவர்கள், கற்புக்கரசிகள் வாழும் மணிமாடங்கள் தான் அவை.

அவற்றைப் பாருங்கள்:-
ஆழியங் கடலின் வலம்புரி முழக்கம்
       ஏழிசை மானும் நெடுந்தீவெனும் பதி
பணியெந்து செல்வி அணியுற விளங்கும்
       மணித்தீவகமெனும் நயினைமா நகரும்
நிலநலம் பொதுளிக் கனியுயிர் சோலை
       கலகல வெனமிளிர் அனலையம் பதியும்
வாரிதி தருநிதி பெண்ணையம் பெருநிதி
       ஓரிரு நிதியமுங் குறைவிலா எழுவை
நீரகம் பொலிந்து சீரிய செல்வர் வாழ்
       ஏரகம் மலிந்துள்ள காரை மாநகர்
எண்டிசைப் புகழும் இன்புற அடக்கும்
       மண்டைதீ வகமெனும் மாண்புறு நகரும்
பாற்கடல் நடுவண் முத்தென விளங்கும்
       பொன்கொடு தீவகமெனும் பெரு நகரும்
பாற்கடற் பூங்கா வனமெனு மேழு
       தீவகங் காக்கும் ஊர்காவற் றுறையே
                                         - (பண்டிதர் மு ஆறுமுகன்)
ஊர்காவற்றுறையுடன் மண்டைதீவு இணைந்துள்ள படியால் இவை சப்ததீவுகள் என அழைக்கப்படும். 

ஆதியில் அருமையான தமிழர்கள் இத்தீவகங்களில் குடியேறினார்கள். கல்வியையும் செல்வத்தையும் தங்கள் கண்போலப் போற்றினார்கள். சீரிய ஒழுக்கம் விழுப்பந்தர வாழ்வு நடத்தினார்கள். அக்காலந்தொட்டு இன்றும் தமிழ் மணம் அங்கே கமழ்ந்து கொண்டே இருக்கின்றது.

அவற்றுள் நயினாதீவு புலவர்களின் பிறப்பிடமாக விளங்குகிறது. அருட்சக்தியாகிய நாகராஜேஸ்வரி அம்பாளின் திருவடித் தாமரைகள் இயைந்து வீற்றிருக்கும் பதி அது. இன்று சிங்கள சகோதரர்களும் தங்கள் பூமியாக அதனைக் கொண்டாடுகிறார்கள். அங்கே தான் நாகமணிப் புலவர் பிறந்தார். அவரை அனைவரும் நயினை நாகமணிப் புலவர் என்றே வழங்குவார்கள்.  

அவர் ஒரு இயற்கைப் புலவன் - வரகவி. கம்பர், காளமேகம் இவர்களுடன் வைத்து எண்ணத் தகுந்த புலமையாளன். ‘நயினை நீரோட்டயமக அந்தாதி’ புலவரது நுட்பமான புலமையின் சிகரமாக விளங்குகின்றது. ‘நயினை மாண்மியம்’ என்னும் பெரும் காப்பியம் ஒன்று  இவராற் பாடப்பட்டுள்ளது. அது இன்னுமச்சில் வரவில்லை. எத்தனையோ மணிமணியான தனிப்பாடல்கள் இவராற் பாடப்பட்டுள்ளன. 

முப்பத்தைந்து ஆண்டுகள் இருக்கும், அந்நாளில் திருக்கேதீஸ்வரம் புனருத்தாரணஞ் செய்யப்பட்டது. தமிழர்கள் - இந்துக்கள் இலங்கையின் பலபாகங்களில் இருந்தும் அங்கே போனார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்தும் பலர் திருக்கேதீஸ்வரம் போனார்கள். யாழ்ப்பாணம் இருந்து வள்ளமேறி, விடத்தல் தீவில் இறங்கி, அங்கிருந்து நடந்துதான் அவர்கள் எல்லோரும் சென்றார்கள். அந்தப் பாதைதான் நெடுங்காலமாக யாழ்ப்பாணத்தார் திருக்கேதீஸ்வரம் போகும் பாதை.

நயினை நாகமணிப்புலவரும் சில நண்பர்களும் திருக்கேதீஸ்வரம் போக யாழ்ப்பாணத்தில் வள்ளமேறி விடத்தல் தீவில் இறங்கினார்கள். அந்நேரம் பொழுதுபட்டு இருண்டுவிட்டது. அதன்பின் அங்கிருந்து திருக்கேதீஸ்வரம் போக முடியாது. ஆனபடியால் கடற்கரையில் இருந்த ஒரு வாடிவீட்டில் புலவரும் நண்பர்களும் படுத்துக் கொண்டார்கள். நித்திரை கொள்ள முடியவில்லை. ஏதோ ஒன்று அவர்கள் எல்லோருக்கும் பெரிய உபத்திரவங் கொடுத்துக்கொண்டு இருந்தது. புரண்டும், எழுந்தும், இருந்தும் நித்திரை கொள்ளப் பார்த்தார்கள். முடியவில்லை. 

இப்படியே அவர்கள் வருந்திக்கொண்டு இருக்கக் கோழிகள் கூப்பிட்டன. காகங்கள் கரைந்தன. கிழக்கு வெளுத்தது. நண்பர்கள் புலவரைப் பார்த்தார்கள். “என்ன ஐயா! கொஞ்சமும் துங்க முடியவில்லையே” என்றார்கள். அப்பொழுது புலவர் இந்தப் பாடலை எழுதி அவர்களிடம் கொடுத்தார்.

“எள்ளிற் சிறிய பாதியிற் பாதி இருண்டுருண்ட
தெள்ளுக் கொடுமையத் தேவரலாதெவர் திர்க்கவல்லார்
முள்ளிற் செடியிற்படுத்தாலும் முன்பின் உறக்கம்வரும்
துள்ளித் துடித்துக் கடித்தூர்ந்திடின் எவர்தூங்குவரோ”


பாருங்கள்! அத்தனை சிறிய பிராணி தெள்ளு, என்னவெல்லாம் செய்கிறது. துள்ளுகிறது. பலமுறை துடிக்கிறது. பின்பு கடிக்கிறது. கடித்த இடத்தில் இருக்கிறதா! இல்லை! மெல்ல ஊர்ந்து விடுகின்றது. தெள்ளுக்குத் திருவிளையாட்டு, மனிதனுக்கோ தூக்கமில்லை. விடியும்வரை தெள்ளை அகற்ற எடுத்த நடைமுறையொன்றும் பலிக்கவில்லை. ஆதலால் தெய்வந்தான் இந்தக்கொடுமைக் குணத்தைத் தெள்ளில் இருந்து தீர்க்க வேண்டும் என்று கூறுகிறார் புலவர். 

இறைவனது சிருஷ்டிகள் வாழ்வதில் தனக்கு ஒரு குறையும் இல்லையாம். ஆனால் பிறஉயிர்களுக்குத் தொல்லை கொடுக்கும் குணத்தைமட்டும் மாற்றிவிட்டால் போதும் என்கின்றார். தெள்ளுக் கொடுமைமட்டும் இல்லாமல் முள்ளோ செடியோ கிடைத்து அவற்றில் படுத்தாலும் முன்இரவிலோ அன்றிப் பின்இரவிலோ அலுப்பு நீங்கத் தூங்கி இருக்கலாமாம். 

தெள்ளுக்குப் புலவர் பிடிக்கும் உவமை மிக அற்புதமானது. சிறிய எள்ளு எடுக்க வேண்டும். அதனை இருபாதியாக்க வேண்டும். அதில் ஒரு பாதியைத் திரும்பவும் இரண்டாக்க வேண்டும். சிறிய எள்ளு நாலில் ஒன்றாகியும் தெள்ளுக்கு உவமிக்க இயலாதாம். திரும்பவும் அதனை உருட்டிக்கொள்ள வேண்டும். உருட்டும் போது கொஞ்சம் இருள்வர்ணமுஞ் சேர்த்துக்கொள்ள வேண்டும். இனிச்சரி - இப்பொழுது தெள்ளு போல இருக்கும்.  அப்படிச் செய்துபாருங்கள் தெள்ளுதான். 

சத்திமுற்றப் புலவர்
“பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக்கூர்வாய்”
உவமை கண்டதற்குப் பெரும் பரிசில் பெற்றமை அறிஞர்களுக்கு ஞாபகம் இருக்கும். இந்த எள்ளு உவமைக்கு உண்மையில் நயினை நாகமணிப்புலவரும் பரிசில் பெறவேண்டியவரே.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment