Friday 1 June 2012

திருவாசகத்தேன் தமிழுக்கும் கிரந்தமா?


சைவசயப் பெரியோர்களும் நாயன்மார்களும் தெள்ளுதமிழில் பல நல்ல கருத்துக்களை எமக்காகப் பாடிவைத்துச் சென்றுள்ளனர். அவற்றை நாம் படித்துப் புரிந்து கொள்வதில்லை. தேவாரமும் திருவாசகமும் மிக இலகுவான தமிழால் ஆனவை. 

ஆனால் அவற்றுக்கு விளக்க உரை எழுதியோர் வடமொழி கலந்த தமிழில் எழுதியிருப்பதால், அவற்றைப் புரிந்து கொள்வது கடினம். எனவே அவற்றின் விளக்க உரையைப் படியாது, தமிழை வாசிக்க தெரிந்த எவரும் தேவாரத்தையும் திருவாசகத்தையும் எடுத்து மேலோட்டமாக வாசித்தாலே அவற்றை மிக இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு 

வெள்ளம் தாழ்விரிசடையாய் விடையாய்
          விண்ணோர் பெருமானே எனக்கேட்டு வேட்டநெஞ்சாய்
பள்ளம் தாழ் உறுபுனலில் கீழ்மேலாகப்
          பதைத்து உருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்கு
உள்ளம்தாள் நின்று உச்சியளவும் நெஞ்சாய்
         உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
          கண் இணையும் மரமாம் தீவினையினேற்கே” 

என்று மாணிக்கவாசகர் பாடிய இந்த திருவாசகத்தை எடுத்துக் கொள்வோம்.  சுவாமி சித்பவானந்தர் திருவாசகத்திற்கு 1968ம் ஆண்டு எழுதிய விளக்கவுரையில், இத்திருவாசகத்தின் முதலிரண்டு வரிகளான  “வெள்ளம்தாழ்  விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே எனக்கேட்டு வேட்டநெஞ்சாய்” என்பதற்கு தந்த விளக்க உரையைப் பார்ப்போம். ‘கங்காதரா என்றும், ஜடாதரா என்றும், ரிஷபாரூடா என்றும், மஹாதேவா என்றும் உன்னை அழைப்பதைக் கேட்ட மாத்திரத்தில் உன் அன்பர்கள் அருள் வேட்கை எடுத்துப் பரவசமடைகின்றனர்’ என எழுதி இருக்கின்றார். இந்தத் திருவாசகத்தின் எந்த ஓர் இடத்திலாவது கங்காதரா என்றோ, ஜடாதரா என்றோ, ரிஷபாரூடா என்றோ, மஹாதேவா என்றோ மாணிக்கவாசகர் பாடி இருக்கிறாரா? கிரந்த எழுத்து ஏதாவது வருகிறதா? "வெள்ளம் தாழ்விரிசடையாய்! விடையாய்! விண்ணோர் பெருமானே!" என்றே பாடியிருக்கிறார். 
 தமிழில் பொதுவாக வெள்ளம் என்றால் வெள்ளப்பெருக்கை அல்லது பாய்ந்து ஓடும் புதுவெள்ளத்தை, குறிக்கும். அடக்கமுடியாது ஓடும் கண்ணீரையும் கண்ணீர் வெள்ளம் என்போம். பெரும்பாலும் ஆற்றில் வந்தாலும் கடலில் இருந்து வந்தாலும் வேகத்துடன் வருவதே வெள்ளம்.  அதுவே மலையாளத்தில் குவளைக்குள் இருந்தாலும், குடத்தில் இருந்தாலும், சிரட்டையுள் இருந்தாலும், அருவியாய் கொட்டினாலும், ஆற்றில் ஓடினாலும் யாவும் வெள்ளமே. தமிழில் அப்படியில்லை. 
சுவாமி சித்பவானந்தர் எழுதியது போல, 'வெள்ளம்தாழ்' என்பது கங்காதரன் எனக்குறிக்கும் பெயர்ச்சொல் அல்ல. வெள்ளம்தாழ் என்பது, முடிவு பெறாத  எச்சச்சொல். அது விரிசடையாய் என்னும் பெயரை எஞ்சி நிற்கின்ற ஒரு பெயரெச்சமாகும். ‘காலம் தாழ்த்திப் போ’ எனச்சொல்லுமிடத்தில் தாழ் என்பது கொஞ்சம் தங்கி என்ற கருத்தைத் தருவது போல ‘வெள்ளம்தாழ்’ கங்கையாகிய வெள்ளம் தங்கும் எனும் பொருளைத் தருகின்றது. 'கங்கை தங்கும் விரிந்த சடையவனே' என்பதையே மாணிக்கவாசகர் வெள்ளம்தாழ் விரிசடையாய்! என  அழைத்துள்ளார்.
வெள்ளம்தாழ் விரிசடையாய்! விடையவனே!  விண்ணோர் பெருமானே! என மற்றோர்  சொல்வதைக்  கேட்டு, மனம் அதில் ஈடுபட பள்ளத்தில் விழும் [பள்ளம் தாழ்] அருவி நீரில் [உறுபுனலில்] அகப்பட்ட பொருள் தலைகீழாகச் [கீழ்மேலாகப்] சுழல்வது போல பதறி [பதைத்து] நிலைதடுமாறி உருகும் அடியவர்கள் இருக்க, என்னை ஆட்கொண்டாய். உள்ளங்காலிலிருந்து உச்சிவரையும் நெஞ்சாய் உருகாமல், உடம்பு முழுவதும் கண்ணாகி கண்ணீர் வெள்ளம் பாயாமல் இருப்பதால் தீயவினையை உடையவனாகிய எனக்கு கல் நெஞ்சு, மரக்கண்கள் என்றே பாடியுள்ளார்.

பக்தர்களுக்கு, மெய்யடியார்களுக்கு இறைவன் பெயரைக்கேட்டால் உருகத்தெரியும். ஆனால் சரியெது? பிழையெது? என்பது தெரியாது. அதனை மாணிக்கவாசகர் இத்திருவாசகத்தில் அழகாகச் சொல்கிறார்.
பள்ளம் தாழ் உறுபுனலில் கீழ்மேலாகப்
          பதைத்து உருகும் அவர்நிற்க”
பக்தியாகிய அருவியில் வீழ்ந்து நிலைதடுமாறி பதறி உருகுகிறார்களே அல்லாமல், உள்ளத் தெளிவுடன் இறைவனை சிந்தை செய்யத் தெரியவில்லை. அதற்கான பக்குவம் அவர்களுக்கு வரவில்லை. பக்குவம் உள்ளவர்களாக பக்தர்கள் இருப்பார்களேயானால் கள்ளச்சுவாமிமார் கால்களில் விழுவார்களா? சுவாமிமார்கள் சிறைச்சாலைகளை நிரப்புவார்களா? ஆதலால் கீழ்மேலாகப் பதைக்கிறார்கள். 

மாணிக்கவாசகர்
உள்ளம்தாள் நின்று உச்சியளவும் நெஞ்சாய்
         உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளம்தான் பாயாதால்”
எனப்பாடி இறைவனையடையும் வழியையும் காட்டித்தந்துள்ளார். எமது உள்ளங்காலில் இருந்து உச்சிவரையும் நெஞ்சாய் பாவித்து மெய்மறந்து கடவுளை நினைந்து உருகி, உடம்பெல்லாம் கண்ணாய், கடவுளே உன்னை நான் காண்பது எப்போது என அழுது, மணிவாசகர் அண்ணா! எனக் கதறுவது போலக் கதறவேண்டும். எம் சிந்தையின் தெளிவாக பாலில் இருக்கும் வெண்ணெய் போல் கடவுள் வெளிப்படுவான். 

திருவாசகத் தேன் தமிழுக்கும் கிரந்த, சமஸ்கிருத உரைகள் தேவை தானா!
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment