Monday 11 June 2012

குறள் அமுது - (35)


குறள்:
“பயனில் சொல் பாராட்டுவானை மகனெனல் 
மக்கட் பதடி எனல்”                                             - 196

பொருள்:
பயன் இல்லாத சொற்களைப் பாராட்டிப் பேசுபவனை மனிதன் எனச் சொல்ல வேண்டாம். மனிதருள் பதர் என்று சொல்லுக.
விளக்கம்:
திருவள்ளுவர் இக்குறளில் பயனில்லாத சொற்களைப் பாராட்டிப் பேசுபவரை எப்படி அழைக்கலாம் என்பதை எமக்குச் சொல்லிச் சென்றுள்ளார். ஒன்றைப் புகழ்ந்து பேசுதலே பாராட்டுதலாகும். இக்குறளில் மகன் என்ற சொல் மனிதன் என்ற கருத்திலேயே வருகின்றது. 
பதடி என்பது உள்ளீடு இல்லாத சோத்தி. நெல்லினுள் இருக்கும் அரிசியே அதன் உள்ளீடு. உள்ளீடாகிய அரிசி இல்லாத நெல்லை நாம் சாவி அல்லது பதர் என்று சொல்வோம். நெல்லைத் தூற்றும்போதோ புடைக்கும் போதோ காற்றில் தூசுடன் பறந்து போவது நெற்பதர். பதர் உள்ளீடு அற்றதால் காற்றில் பறக்கும். நெல்லைப் போல் ஏனையவற்றிலும் பதர் உண்டு. பதரை மிருகங்களோ, பறவைகளோ உணவாக உட்கொள்ளவும் மாட்டா. நெல்லுக்கு அரிசி உள்ளீடாக இருப்பது போல மனிதருக்கு இருக்கும் உள்ளீடு என்ன? அறிவே மனிதரின் உள்ளீடு. எவரிடம் அறிவு என்னும் உள்ளீடு இல்லையோ அவரும் மனிதரில் பதடே.
வேண்டாத விடயங்களை, விதண்டா வாதங்களை, அவதூறுகளை எமது காது கொப்பளிக்க மிக்க ஆர்வத்துடன் சிறப்பித்துப் பேசுபவரை மனிதன் என்று சொல்லவேண்டாம் மனிதப்பதடி எனச் சொல்லுக என்கிறார். பயனில்லாத சொற்களைச் சொல்பவரைக் கூட திருவள்ளுவர் மன்னிப்பார் போல் தெரிகிறது. ஆனால் ஒருவர் சொன்ன வீண்சொற்களைக் கேட்டு தாமும் சொஞ்சம் போட்டு, அதைப் பெரிதாகப் புகழ்ந்து போற்றி கதைத்துத் திரிபவர் மேலேயே வள்ளுவருக்கு தீராக்கோபம். அதனாலேயே அப்படிப்பட்டோரை எமக்கு இனம்காட்ட பயனில் சொல் பாராட்டுவான் எனக் கோடிட்டுக் காட்டுகிறார். அத்துடன் பதடி எனவும் இழித்துக் கூறுகிறார்.
மனிதர் சொல்லும் சொற்கள் தேனீக்கள் போன்றன. அவை தேனையும் சொரியும். கொடுக்கால் கொட்டி நஞ்சையும் சொரியும். எமக்குப் பயனுள்ள தேன் வேண்டுமா? பயனற்று எம்மை வருத்தும் நஞ்சு வேண்டுமா என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும். பயனில் சொல் நஞ்சு போன்றது. எம் வாழ்நாளை வீணாக்கி எம்மை அழிக்கக் கூடியது. நஞ்சை எவராவது பாராட்டிப் புகழ்ந்து பேசுவரா? அப்படிப் பேசுபவர் அறிவிலிதானே! அறிவிலியே மனிதப் பதடி.
எவருக்கும் பயந்தராதவற்றை மிக விரிவாகப் புகழ்ந்து கூறுபவர் மனிதருள் பதடி என இக்குறள் கூறுகிறது.

No comments:

Post a Comment