Tuesday 12 June 2012

புத்தகம் தமிழ்ச்சொல்லா!

புத்தகங் கைக்கொண்டு 
இன்றைய தமிழர்களாகிய நாம் பண்டைய தமிழையும் தமிழரையும் பற்றி அறிய விரும்பாது வாழ்கிறோம். அல்லது தமிழர் அல்லாதவர் தமிழைப்பற்றி சொன்னால் நம்பும் அளவுக்கு நம்மவர் சொன்னால் நம்புவதில்லை. இது நமக்கு, நம் மேல் இருக்கும் தாழ்வு மனப்பான்மையையே காட்டுகிறது. 

‘பண்டைய தமிழர் புத்தகம் படித்தார்கள்’ என்று நம்மவர் யாராவது சொன்னால், அவரை ஒர் அசடாகக் கணித்து, ‘ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரே தமிழருக்கு புத்தகம் தெரியும்,’ என்றும் ‘புத்தகம் தமிழ்ச்சொல் அல்ல, ஆங்கிலச் சொல்லான book என்ற சொல்லில் இருந்து புத்தகம் வந்துது’ எனவும் கூறுகின்றனர். வேறுசிலரோ ‘வடமொழிச் சொல்லான 'புஸ்தக்'கிலிருந்து புத்தகம் வந்ததென்றும்  ‘ஏட்டில் எழுத்தாணியால்  எழுதிய பண்டைய தமிழருக்கு எப்படிப் புத்தகம் தெரிந்திருக்கும்?’ என்றும் கேட்கின்றனர். எழுதுகின்றனர். நாமும் அவற்றைக் கண்டும் காணாதவராய் வாழ்கிறோம்.
உண்மையில் தமிழில் பொத்தகம் என்னும் சொல்லை சங்ககால இலக்கியமான பதினெண்கீழ் கணக்கு நூல்களும், தேவாரமும், சரஸ்வதி துதியும், சிறுகாப்பியங்களும் சொல்கின்றன. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து எனது அம்மம்மாவும் பொத்தகம் என்றே எப்பொழுதும் சொன்னார். ஆதலால் இந்த நூற்றாண்டில் வாழும் எமக்கு ‘புத்தகம்’ தமிழ் இல்லாத வேற்றுமொழிச் சொல்லாய் தெரிவது புதுமையானதே.  
ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஏலாதி என்னும் நூலின் ஏட்டுப்பிரதியின் செய்யுள் பொத்தகம் என்று சொல்ல, இன்றைய அச்சுப்பிரதிகள் அதே செய்யுளை புத்தகம் என்கின்றன.  அச்சுப்பிரதியின்படி 
ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம்
பேணொடும் எண்ணும் எழுத்திவை - மாணொடு
கேட்டெழுதி ஓதி வாழ்வார்க்கு ஈய்ந்தார் இம்மையான்
வேட்டெழுத வாழ்வார் விரிந்து”                                   
                                               - (ஏலாதி: 63)
என்ற இந்தச் செய்யுளில் ‘எழுத்தாணி புத்தகம்’ என வருவதால் புத்தகம் என்னும் சொல் இங்கே ஏட்டையே குறிக்கின்றது என்பதை அறியலாம். 
பொட்டு - பொட்டுதல் - பொருத்துதல் 
போத்து - போந்து - போந்தை - பனக்குருத்து 
பொத்தி -  பனங்குருத்து தொகுதி, பனங்கிழங்கு
பொத்திய - சேர்த்த
பொத்தல்  -  ஓட்டை, குழிந்த, துளைத்தல் 
பொத்துதல்  -  கட்டுதல் - பொருத்துதல் - தைத்தல் 
பொத்தி, பொத்தல், பொத்துதல் என்ற காரணப் பெயர் அடியாய் பொத்தகம் ஆகியிருக்கும். ஏட்டுச் சுவடிகளை பொத்தல் இட்டு பொத்தி வரிந்து கட்டி வைத்ததால் பொத்தகம் என்றனர் போலும். அன்று பனம் பொத்தியில் எழுதி, அப்பொத்தியை பொத்திக்கட்டி வைத்தமையாலேயே இன்றும் அருமையான பொருட்களை பொத்திக்கட்டிவை  எனச்சொல்லும் வழக்கம் எம்மிடை இருக்கிறது. ஆதலால் பனை வளர்ந்த இடத்திலேயே பொத்தகம் என்ற சொல் பிறந்திருக்க முடியும். பனைமரம் தந்த கொடையே பொத்தகம் என்றால் அது மிகையாகாது. 

பொத்தகம் பிறமொழியாளர் வாய்ப்பட்டு புத்தகம் ஆகி, வடமொழி சென்று புஸ்தகம் என உருமாறி நிற்கிறது. பொத்தகம் போல் வாழை மடல், போன்ற மடலில் எழுதியவற்றை மடல் எனவும், தாழைத் தாள் போன்ற தாவரத் தாளில் எழுதியவற்றை தாள் எனவும் அழைத்தனர். நம் முன்னோர் எமக்கு அளித்துச் சென்ற அச்சொற்களை இன்றும் நாம் அதே கருத்துடன் ‘மடல்’ எனவும் ‘தாள்’ எனவும் சொல்கிறோம்.
பலர் தமது வீடுகளில் நூற்றுக்கணக்காக புத்தகங்களை அடுக்கி தொகுத்து நூலகமாக வைப்பர். ஆனால் அவை என்ன சொல்கின்றன என்பதை வாசித்து அறியமாட்டார்கள். பெரும் பாடுபட்டு வீடு முழுவதும் புத்தகங்களை நிறைத்து வைத்தாலும் அவற்றை பாதுகாக்கும் அறிஞர் (புலவர்) ஒருவகையினர். அவற்றில் உள்ள கருத்தை அறிந்து பிறருக்கு எடுத்துச் சொல்லும் அறிஞர் (புலவர்) இன்னொரு வகையினர் என நாலடியார் சொல்கிறது.
புத்தகமே சாலத்தொகுத்தும் பொருள் தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப்
போற்றும் புலவரும்வேறே பொருள் தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு”                                            
                                                - ( நாலடியார் 318)
எனவே ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் பொத்தகம், புத்தகம் என்ற சொற்களை பயன்படுத்துகின்றனர். கொங்குவேளிர் எழுதிய பெருங்கதை என்னும் உதயணன் சரித்திரமும்
“நிரைநூற் பொத்தகம் நெடுமணை ஏற்றி”                   
                                               - (பெருங். உஞ்சைக்: 34: 26)
எனக் கூறுகிறது.
புத்தகம் என்ற சொல்லை சங்கத்தமிழ் இலக்கியங்கள் மட்டுமல்ல சிற்பநூல்களும் சொல்கின்றன. திருநாவுக்கரசு நாயனாரும்
“செத்தவர்தந் தலைமாலை கையிலேந்திச்
          சிரமாலை சூடிச் சிவந்த மேனி
மத்தகத்த யானை உரிவை மூடி
           மடவாளவளொடு மானொன் றேந்தி
அத்தவத்த தேவர் அறுபதின்மர்
           ஆறு நூறாயிரவர்க் காடல் காட்டி
புத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கிப்
            புறம்பயம் நம் மூரென்று போயினாரே”                  
                                           - (திருமுறை: 6: 13: 5)
என சிவனின் கையில் புத்தகம் இருந்ததை தமது தேவாரத்தில் பாடியுள்ளார். நம் முன்னோர் புத்தகம் எனும் சொல்லை பாடல்களில் எழுதி வைத்திருந்தும் கி பி முதலாம் நூற்றாண்டில் எழுத்து வடிவம் பெற்ற வடமொழியும், கி பி பதினோராம் நூற்றாண்டில் உருப்பெறத் தொடங்கிய ஆங்கிலமும் தமிழுக்கு புத்தகம் என்ற சொல்லைத் தந்தது எனச் சொல்வோர் தமிழில் உள்ள பண்டைய  நூல்களைப் புரட்டிப் பார்த்தல் நன்றாகும். 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment