Monday, 18 June 2012

சங்ககாலத் தந்தையர் - பகுதி 1


ஆதிமனிதனின் வாழ்க்கை மெல்ல நாகரீகம் அடைய அடைய தாயைவிட தந்தையர் முதன்மை அடையத் தொடங்கினர். தந்தைக்கும் பிள்ளைக்கும் உள்ள தொடர்பு பரம்பரை பரம்பரையாக வருவதை மனிதர் கண்டனர். பண்டைய தமிழரும் அதனை அறிந்திருந்தனர். தொல்காப்பியத்தில் 
“தந்தையர் ஒப்பர் மக்கள்”                            
                                            - (தொல்.கற்பு: 145: 23)
என்னும் பழமொழியை தொல்காப்பியர் கூறுவதால் அவர் காலத்திற்கு முன்பிருந்தே பரம்பரையியல் பற்றிய தெளிவு தமிழரிடம் இருந்ததை நாம் அறியலாம். ஆதலால் தந்தையர் என்ற தகுதியை அடைய ஒருவருக்கு பிள்ளைகளாகிய மக்கள் இருக்க வேண்டும். மக்களைப் பெறுவதற்கு காளையர் காலம் காலமாகச் செய்வது காதல் தானே. காளையர் காதல் செய்ய கன்னியர் வேண்டாமா? கன்னியரைப் பெற்ற சங்ககாலத் தந்தையர் எப்படி கன்னியரை வளர்த்தனர் பார்ப்போமா?
மகள் நிலத்தில் நடந்தாலே மனம் நொந்து அதட்டும் சங்ககாலத் தந்தையைப் பற்றி அகநாநூற்றில் 
“எந்தையும் நிலன் உறப்பெறான், சீரடி சிவப்ப
எவன் இல! குறுமகள்! இயங்குதி என்னும்”        
                                            - (அகம்: 12: 2 - 3)
என மகள் சொல்வதாக கபிலர் காட்டுகிறார். மகள் நிலத்தில் நடப்பதைப் பார்த்த தந்தை அதனைப் பொறுக்கமாட்டது எடி! சின்ன மகளே! உன் சிறிய அடி சிவக்க எதற்காக அங்கும் இங்கும் திரிகிறாய், என அதட்டிக் கேட்பாராம். தான் பெற்றெடுத்த மகள் மேல் சங்ககாலத் தந்தைக்கு எவ்வளவு பேரன்பு பார்த்தீர்களா? 
பொன்போன்ற மேனியும் அழகிய கூந்தலுமுடைய இளநங்கை ஒருத்தி, பெருஞ்செல்வனான தன் தந்தைக்குச் சொந்தமான அகன்ற பெரிய மாளிகையில் நடந்து திரிந்தாள். அதனை கயமனார் என்ற சங்ககாலப் புலவர் பார்த்தார்.
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி
அஞ்சில் ஓதி இவளும்
பஞ்சில் மெல்லடி நடை பயிற்றுமே”
                                                                   - (குறுந்தொகை: 324: 6 - 9)                               
என அதனை நேரடி வருணனையாகத் தந்துள்ளார்.
விளையாடுகின்ற பந்தை காலால் உருட்டி, உருட்டி ஒடுபவள் போல ஓடி அவளது பஞ்சு போன்ற மென்மையான பாதங்கள் நடை பயில்கின்றனவாம். கயமனார் இப்பாடலில் செல்வத்தந்தையையும் பெரிய மாளிகையில் நடந்து திரிந்த மகளையும் மட்டும் எமக்குக் காட்டவில்லை. அதற்கு மேலாக ஒரு வரலாற்றைப் பொதிந்து வைத்திருக்கிறார். அந்த இளநங்கையின் நடையைக் கூறவந்தவர், ‘ஆடு பந்து உருட்டுநள் போல’ எனச் சொன்ன இடத்தில் சங்ககால மகளிர் கால்ப்பந்து ஆடியதையும்  வரலாற்றுப் பதிவாகத் தந்திருக்கிறார். இந்த இருபத்தொராம் நூற்றாண்டில் கூட தமிழ்ப்பெண்களால் பெரிதாக இன்னும் விளையாடப்படாத கால்பந்தாட்டத்தை, சங்ககாலப் பெண்கள் சாதாரணமாக விளையாடித் திரிந்ததை இவ்வரி எமக்குக் காட்டுகின்றது.   
பாரி பறம்பு நாட்டை ஆண்ட குறுநில மன்னன். அவன் கடைஎழு வள்ளல்களில் ஒருவன். அவனே முல்லைக்கொடிக்கு தேரீந்தவன்.  சங்ககாலப் புலவர்களில் புகழ்பூத்த கபிலர் பாரியின் அரசவைப் புலவராகவும், பாரியின் புதல்வியரான ‘பாரிமகளிரின்’ குருவாகவும் இருந்தவர். பாரிமகளிரின் தமிழ் அறிவைப் பறைசாற்றியபடி சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் இருக்கிறது. அப்பாடல் பாரிமகளிரை  சங்கப்புலவர் வரிசைக்கு உயர்த்தி இருக்கிறது.
தந்தையாகிய பாரி மேல் அவர்கள் வைத்திருந்த அன்பையும் அவர்களது கையறுநிலையையும் பாடலில் வடித்திருக்கிறார்கள். 
“அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையோம் எம் குன்றம் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்றெறி முரசின் வேந்தர் எம் 
குன்றம் கொண்டார் யாம் எந்தையும் இலமே”       - (புறம்: 112)
பாரிமகளிரின் இப்பாடல் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழராகிய எமது கையறுநிலைக்கும் பொருந்தும். நாம் தாய் நாட்டைப் பெரிதாக மதித்து ஈழம் எமது தாய்நாடு எனக்கூறுகிறோம். நம் தாய்நாடாகிய ஈழம், போரில் சிக்கிச் சிதறுண்டு சீரழிந்து கிடப்பதுபோல் பாரியின் பறம்புமலையும் சங்ககாலப் போரால் சிதைந்து கிடந்தது. அதைப் பார்த்த கபிலர் பறம்புமலையின் பழைய சிறப்பை கூறுமிடத்தில் பாரிமகளிரின் தந்தைநாடு எனப்போற்றியுள்ளார்.
“பாசிலை முல்லை முகைக்கும்
ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே”     - (புறம்: 117: 9 - 10)
பசுமையான முல்லை அரும்பு போன்ற பற்களையுடைய அழகிய வளையல்களை அணிந்த பாரிமகளிரின் ‘தந்தை நாடு’ என்கிறார். பாரி பொறுப்பு மிக்க தந்தையாய் இருந்து, தன் மகளிர் இருவருக்கும் கல்வியறிவு ஊட்டி வளர்த்ததாலேயே சங்கப்புலவர் வரிசையில் பாரிமகளிர் தனியிடம் வகுக்கின்றனர். சங்ககாலத்  தந்தையர் வாழ்வுக்கு பாரியும் நல்ல ஓர் எடுத்துக்காட்டாகவே விளங்குகிறான்.
இன்னொரு சங்ககாலத் தந்தை தன் அருமை மகளின் உயிர்காக்க என்ன எல்லாம் கொடுக்க முன்வந்தான் என்பதைப் பார்ப்போமா? நன்னன் பூழி நாட்டை ஆண்ட சிற்றரசன். அவனது தோட்டத்து மாமரத்தில் இருந்த மாங்கனி ஒன்று, அருகே ஓடிய வாய்க்காலில் வீழ்ந்து மிதந்து வந்தது. இளம் பெண் ஒருத்தி அந்த வாய்க்காலில் நீந்தி விளையாடிக்கொண்டிருந்தாள். அவ்வாய்க்காலில் மிதந்து அவளருகே வந்த அம்மாங்கனியை எடுத்து உண்டாள். அதனை அறிந்த நன்னன் அவளுக்கு மரண தண்டனை விதித்தான். சான்றோர் பலர் தடுத்தும் நன்னன் கேட்கவில்லை. 
அவள் தந்தையோ மகள் செய்த தவறுக்காக எண்பத்தொரு ஆண்யானைகளும், அவளுடைய நிறையளவு பொன்னால் செய்த பாவை ஒன்றும் தருவதாகக் கெஞ்சிக் கேட்டான். அதற்கும் நன்னன் உடன்படாது சிறுபெண் என்றும் பாராது ஈவிரக்கமின்றி மரணதண்டனை கொடுத்தான். அதனைப் பரணர்
“மண்ணிய சென்ற ஒள்நுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு, அவள் நிறை
பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான் 
பெண்கொலை புரிந்த நன்னன்”                                                                  - (குறுந்தொகை: 292) 
எனக் குறுந்தொகையில் கூறியுள்ளார். சங்ககாலத் தந்தையர் தமது பிள்ளைகளுக்காக இன்னும் என்ன எல்லாம் செய்தார்கள் என்பதை தொடர்ந்து காண்போம்.
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment