Sunday 3 June 2012

தோல் அழகு 1


சுகமான வாழ்வே மனிதனுக்கு நிரந்தரமான அழகைக் கொடுக்கும். சுகத்தோடு அழகாக வாழ்வதற்கு ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தான் காதலிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். தம்மைக் காதலிப்போரே தம்முடலைப் பாதுகாப்பர். மனித உடலின் பாதுகாப்பிற்கு தோல் மிகவும் அவசியம். அதனை நம்மில் பலர் புரிந்து கொள்வதில்லை. 

நம் உடலின் பாதுகாப்பிற்கு அதிகமாக உழைப்பது தோலே. சாதாரண மனிதனின் உடல் ஏறக்குறைய இரண்டு சதுர மீற்றர் தோலால் மூடப்பட்டுள்ளது. எந்நேரமும் எமது உடலை தோல்; கொட்டும் மழை, எரிக்கும் வெய்யில், வீசும் காற்று, கடுபனி போன்ற இயற்கைக் காரணிகளில் இருந்து காக்கின்றது. மேற்குலக நாடுகளில் நிறைந்திருக்கும் தூசிலும் போலூசனிலும் இருந்து காக்கிறது. தோல் மிகவும் அற்புதமாக தன்னைத்தானே எப்போதும் புதுப்பித்துக் கொள்கிறது. அத்துடன் காற்றிலும் தூசிலும் இருக்கும் நோய்க் கிருமிகள் எம்மைத்தாக்காது இடைவிடாது தடுக்கின்றது. நாம் நம் தோலில் ஏற்படுத்திக்கொள்ளும் கீறல், வெட்டுக்காயம், தீக்காயம் போன்றவற்றைக்கூட புதுத்தோலை உண்டாக்கி மாற்றிக்கொள்கிறது. எனவே தோலை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.
தோலில் வெளித்தோல் (epidermis), உட்தோல் (dermis) என இரண்டு அடுக்குகள் உண்டு. வெளித்தோலுக்கு நீர் மிகவும் அவசியம். தோலில் உள்ள நீரின் அளவு குறைந்தால் தோல் வறண்டு சுருக்கங்கள் ஏற்படுவதோடு, வெடித்து செதில் போல் உரியவும் செய்யும். இதனைத் தடுப்பதற்கு நாளொன்றுக்கு குறைந்தது ஆறு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். அதனால் தோல் பொலிவாகும். மலச்சிக்கலும் நீங்கி முகப்பரு உண்டாவதும் குறையும். தோலுக்கு மட்டுமல்லாமல் எம் உடல் உறுப்புக்கள் ஒழுங்காகத் தொழிற்படவும் நீர் தேவை. 
உட்தோலில் இருக்கும் ஒருவகைப் புரதப்பொருள் (Collagen), தோலின் மீள்சக்திக்கு (Elastic) உதவுகிறது. உட்தோலிலேயே இரத்தக்குழாய்கள், நரம்புமுடிவுகள், மயிர்வேர்கள், வியர்வைச் சுரபிகள் எல்லாம் இருக்கின்றன. வெளித்தோலின் ஈரத்தன்மைக்காகப் பூசும் எந்தவொரு கிறீமும் லோசனும் உட்தோலைச் சென்றடைவதில்லை. நீங்கள் சத்துள்ள உணவுகளை உண்ணாது, கொழுப்புள்ள உணவுகளை உண்டாலோ அல்லது உங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ அதற்கு தக்கவாறு உட்தோல் பாதிக்கப்படும். 
எனவே மரக்கறி வகைகளையும் பழவகைகளையும் அதிகமாக உண்பது நல்லது. இவற்றிலுள்ள அன்டிஒக்சிடன்ஸ் (Antioxidants) எமது தோலை மென்மையாகவும், மினுமினுப்பாகவும் செய்து தோலில் வரக்கூடிய கான்சரைத் தடை செய்கிறது.    

No comments:

Post a Comment