கமத்தொழிற் சிறப்பைக்கூறும் அவரது பாடல்கள்
எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன்
[தினகரன் ஞாயிற்றுவாரமலர், கொழும்பு: 03 - 08 - 1951]
கானகத்தின் மத்தியிலுள்ள தெளிவில்லாத குளத்தில் மலர்ந்த தாமரைமலர் போல முத்துக்குமாருப் புலவர் திகழ்ந்தார். அப்பொழுது ஒல்லாந்தரின் கீழைத்தேச அரசியல் வானத்தில் இரத்த மேகங்கள் பரவி, இலங்கையில் அவர்களின் அதிகாரப் பகலவன் அஸ்தமித்துக் கொண்டிருந்தது.
அதனாலும் அவர்களின் இயற்கைச் சுபாவத்தினாலும் அவர்கள் குடிமக்களின் சேமங்களையோ கல்வியையோ சிறிதும் கவனிக்கவில்லை. ஆதலால் தமது உணவு, உடை, கல்வி, சமயம் என்பவற்றை மக்கள் தாமே கவனிக்க வேண்டி இருந்தது. இந்த நிலைமையில் வறுமை நோயுற்ற குடியில் தோன்றிய புலவன், எவ்வாறு தனது புலமையின் பெருமையைப் பெருமக்கள் சமூகத்தில் நிலைபெறச் செய்யமுடியும்? உயிருள்ள புலமையல்லவா? ஆதலால் பண்ணைகளிலும் பாட்டாளி மக்களிடையேயும் அது கலந்து மலர்ந்தது.
நெல்லுவெட்டுகிறார்கள் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த கரம்பனில். அங்கே அட்ட ஐஸ்வரியத்துடனும் உத்தியோகம் பார்க்கின்றார் ஒருவர். அவரை “இராசகாரியர் ஆரியர்” என்கின்றார். உணவுக்கு அன்னியரை அவர்கள் கையேந்தவில்லை. கண்ணுங் கருத்துமாகச் செய்த கமம் அது.
தவம் திரண்டது போல முதிர்ந்து விளைந்து கிடக்கின்றது. மெத்த அழகுடன் காட்சி அளிக்கின்றது செந்நெல். அதனைச் சிந்தாமல் வெட்டி அடுக்காக வைக்கவேண்டும் என்கின்றார். வேளாண்மை பேராண்மை என்கின்றார். இதனைச் செய்யுள் வடிவில் பாருங்கள்.
“இலங்கைசேரும் கரம்பனில்வாழும்
இராசகாரியர் ஆரியர் வாரார்
அலங்கிர்தமாகிய செந்நெலரிந்து
அடுக்கில் வையுமென் ஆண்மைப்பள்ளாரே”
பசித்தவர்களின் நிச்சநிரப்பைப் [நித்திய வறுமையைப்] போக்கிச் சோர்வை நீக்கும் ஆண்மைத் தொழிலாம் கமத்தொழில். எனவே அதனைச் செய்வோரை ஆண்மைப் பள்ளாரே என்பதில் என்ன வியப்பு இருக்கின்றது.
தொழிலாளர் வெய்யிலில் கடினமான வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களின் சோர்வைப் புலவரின் பாடலாகிய மந்தமாருதம் வீசி நீக்கிக்கொண்டிருக்கின்றது.
“கறுத்தக் காளைகள் ஓறணை ஈரணை
கமுகடிவயல் உழையிலே
எருத்தைத் தெய்தெய் என்றுரப்பப் போனேன்
அவை எருத்துக்கொண்டது பள்ளாரே”
இது பழங்கதை - வெட்டிக்கொண்டிருக்கும் நெல்லு விதைக்க உழுதபோது நடந்த ஒரு சம்பவம் பேசப்படுகின்றது.
அப்பொழுது கமுகடி வயல் உழுதார்கள். அன்று உழுத காளைகள் எல்லாம் கறுத்தக் காளைகள். மூவணைக் காளைகள் அங்கே உழுதன. முன் ஏரில் நல்ல விடலைக் காளைகள் உழுதுகொண்டு போயின. அவற்றை விரைவாக நடத்தும் பொருட்டு ‘தெய்! தெய்!’ என்னும் ஓசையுடன் உரப்பி நெருக்கினேன். அவைகள் நுகத்தைப் போட்டுவிட்டு என்னை முட்டும் பாவனையில் எதிர்த்துக்கொண்டன. அவற்றையும் அன்புடன் தடவி அடக்கி உழுதுதானே விதைத்தோம்.
விளைந்துஅரிந்து கிடக்கும் கழனியை வெட்டி எடுப்பதில் என்ன கஷ்டம் இருக்கின்றது. ஏன்! படாதபாடெல்லாம் பட்டு நாங்கள் வேளாண்மை செய்து கொடுத்தாலும் எத்தனையோ “கதிரைச் சுவாந்தார்”களுக்குச் சாப்பிடமுடிவதில்லையாம். இன்றைய உலகப் பொருள் போக்கு இப்படி இருக்கின்றது, என்கின்றார் புலவர்.
இன்னும் “எருத்தைத் தெய்! தெய்!” என்ற சொல்லடுக்குகள் அருவி வெட்டுவார் விரைந்து வெட்டக்கூடிய வகையில் முடுகுதாள அடைமானங்கள் பொதிந்து, பாட்டுக்கள் ஒரு புது நடையுடன் சோபித்தல் காண்க.
இன்றைய உலகில் ஏழாயிரம் நெல்லினங்கள் உண்டு. நமது பாரத நாட்டிலேயே நாலாயிரம் இனங்கள் வரையிற் பயிரிடப்படுகின்றன. அவற்றில் நூற்றுக்கணக்கான இனங்கள் இலங்கையில் பயிரிடப்படுகின்றன. சில நெல் இனங்கள் பின்வருமாறு
“குளவாழை கொக்குமூக்கன்
கோங்கன் வெள்ளை நல்ல
குன்றிமணியன் பன்றிப் பீத்தன்
குற்றாலச் சம்பா”
என்றும்
“அழகிய வாணான் இழகிய மூக்கன்
பச்சைப் பெருமாள்
பழகவினிக்கும் இழங்கலையன்
மிளகுச் சம்பா”
மேலே பேசப்பட்டுள்ள நெல்லினங்களில் ஆறுமாச நெல்லுத் தொடக்கம் எழுபது நாள் நெல்லுவரையில் இருக்கின்றன. பெருவேளாண்மை செய்வோர் இன்றும் மேலே கூறப்பட்ட இனங்களை வழக்கத்தில் விதைத்து வருவதை யாவரும் அறிவர்.
வரகவி முத்துக்குமாருப் புலவர் ஆயிரக்கணக்கான நெல்லினங்களை வைத்து அருவிவெட்டுப் பாடல்கள் பாடியிருக்கின்றார். எனினும் அவரது புலமைச்சுடர் அவ்வளவுடன் அணைந்து போகவில்லை.
இனிதே,
தமிழரசி.
குறிப்பு: புங்குடுதீவு ஊரைதீவைச் சேர்ந்த வரகவி முத்துக்குமாரப் புலவர் ஆயிரக்கணக்கான நெல்லினங்களை வைத்து அருவிவெட்டுப் பாடல்கள் பாடியிருக்கிறார் என்று எனது தந்தை பண்டிதர் மு ஆறுமுகன் அவர்கள் இக்கட்டுரையில் குறிப்பிடுவதால் புங்குடுதீவில் எவரிடமாவது புலவரின் பாடல்கள் இருக்கக்கூடும், அவற்றைத் தேடி எடுத்தால் நம் ஊரில் விளைந்த நெல்லினங்களின் பெயர்களை நாம் அறிந்து கொள்ளலாமே. வரகவி முத்துக்குமாருப் புலவர் கூறிய நெல்லினங்களில் இவ்விரு பாடல்களில் இருந்தும் குளவாழை, கொக்குமூக்கன், கோங்கன்வெள்ளை, குன்றிமணியன், பன்றிப்பீத்தன், குற்றாலச்சம்பா, அழகிய வாணன், இழகிய மூக்கன், பச்சைப் பெருமாள், இழங்கலையன், மிளகுச் சம்பா என பதினொரு வகை நெல்லினங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.
அத்துடன் "எனினும் அவரது புலமைச்சுடர் அவ்வளவுடன் அணைந்து போகவில்லை" என என் தந்தை இக்கட்டுரையின் கடைசியில் எழுதியிருப்பதால் ஊரைதீவு வரகவி முத்துக்குமாருப் புலவரின் பாடல்களை தொடர்ந்தும் தினகரன் ஞாயிற்று வாரமலரில் எழுதினாரோ தெரியவில்லை. தேடிப்பார்த்தால் கிடைக்கலாம்.