சங்ககாலக் கன்னியரை மட்டுமல்ல காளையரையும் தந்தையர் அன்பாகவும் பண்பாகவும் அறிவோடும் வளர்த்துள்ளனர்.
“..................... நளி கடல்
திரைச்சுரம் உழந்த திண்திமில் விளக்கில்
பன்மீன் கூட்டம் என் ஐயர்க் காட்டிய
எந்தையும் செல்லுமார் இரவே”
பெருங்கடலின் அலைகளில் சிக்கிச் சுழலும் படகின் விளக்கொளியில் தன் அண்ணன்மார்க்கு பலவகையான மீன் கூட்டங்களைக் காட்ட, என் தந்தையும் இரவு சென்றார்’ என்கிறாள் ஒரு சங்க காலக் கன்னிகை. சங்ககாலத் தந்தை இரவு நேரத்திலும் கடல்வாழ் மீன்களின் கூட்டத்தை தன் மக்களுக்குக் காட்டி, கடல்வாழ் உயிரினம் பற்றிய அறிவை வளர்த்தமை நெஞ்சை தொடுவதாகும்.
பிள்ளைகளின் பெயரைக் கூறியும் சங்ககாலத் தந்தையர் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.
“செம்பொற்சிலம்பின் செறிந்த குறங்கின்
அம்கலுழ் மாமை, அஃதை தந்தை
அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்” - (அகம்: 96: 11 - 13)
செம்பொன்னால் செய்த சிலம்பையும், குறங்கு செறிபூட்டிய தொடைகளையும், அழகொழுகும் மாமை நிறத்தையும் உடைய அஃதை என்பவளின் தந்தை என இச்சோழ அரசனை மருதம் பாடிய இளங்கடுங்கோ குறிப்பிடுகிறார்.
அதேபோல் அணிகலன் அணிந்திருக்கும் பணைத்த தோள்களையுடைய ஐயை என்பவளின் தந்தை மழைபோல் வாரி வழங்கும் தித்தன். அவனும் ஒரு சோழ அரசனே. அதனை
“இழையணி பணைத்தோள் ஐயை தந்தை
மழைவளம் தரூஉம் மாவண் தித்தன்” - (அகம்: 6: 3 - 4)
என பரணர் கூறியுள்ளார்.
அகுதை என்பவன் பெரும் வீரன். நான் முன்னே சொன்ன அஃதையும் இந்த அகுதையும் ஒருவர் அல்ல. அஃதை சோழ அரசன் மகள். இந்த அகுதை பாண்டியப்படை மறவன். இவனைக் கபிலர் ‘மணநாறு மார்பின் மறப்போர் அகுதை’ எனப் புறநானூற்றில் புகழ்ந்துள்ளார். இவனின் தந்தையை ‘அகுதை தந்தை’ எனப் பரணரும் குறுந்தொகையில் குறிப்பிடுகின்றார். அகுதையின் தந்தை வெள்ளிப்பூண் போட்ட தலைக்கோல் வைத்திருக்கும் ஆடல் மங்கையருக்கு பெண்யானைகளைப் பரிசாகக் கொடுத்தாராம்.
“இன்கடுங்கள்ளின் அகுதை தந்தை
வெண்கைடைச் சிறுகோல் அகவன் மகளிர்
மடப்பிடி பரிசின் மான”
என்கிறார் பரணர்.
இதில் சிறுகோல் என்பது தலைக்கோல். அதனை
“இருங்கழை இறும்பின் ஆய்ந்து கொண்டறுத்த
நுணங்கு கண் சிறுகோல் வணங்கிறை மகளிரோடு”
- (அகம்: 97: 9 - 10)
என மாமூலர் அகநானூற்றில் சொல்வதால் அறியலாம். அரசர் கையில் செங்கோல் இருப்பது போல பரதக்கலையில் தலைசிறந்து விளங்குபவருக்கு கையை அலங்கரிக்கக் கொடுப்பதே தலைக்கோல். ஐயை தந்தை, அகுதை தந்தை என பிள்ளைகளின் பெயரைக் கூறி தந்தையரை அழைக்கும் வழக்கம் பண்டைக் காலத் தமிழரிடமிருந்து தொடர்ந்து வருகின்றது.
சங்ககாலத் தந்தையர் தம் மக்களுக்கு செய்து கொடுத்த தங்கநகைகள் பற்றிய செய்திகளையும் சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. மகளொருத்தி தனக்கு தோளில் அணியும் எல்வளை வேண்டும் என அழுதாள். ஆனால் தந்தையோ காப்புகள் கழன்று விழாதிருக்க முன்கையில் அணியும் தொடி செய்து கொடுத்தார். அவள் காதல் வசப்பட்ட பொழுது தோள் மெலிந்தாள். அவளது உடல் மெலிய கையில் இருக்கும் காப்புகள் தானே கழன்று விழும். அதனால் அவளின் காதல் பெற்றோருக்குத் தெரியவந்திருக்கும். தந்தை செய்து கொடுத்த தொடி காப்புகள் கழன்று விழாது தடுப்பதால் அவளது காதலை பெற்றோர் அறியவில்லை. எனவே தந்தையின் செயலை எண்ணி மகள் மனதுக்குள் பாராட்டும் காட்சியை
‘திருந்து கோல் எல்வளை வேண்டி யான் அழவும்‘
- (நற்றிணை: 136)
எனத் தொடங்கும் நற்றிணைப்பாடல் காட்டுகிறது. சங்ககாலத் தந்தையர் மட்டுமே பிள்ளைகளுக்கு நன்மை செய்தார்கள் என நினைக்க வேண்டாம். பிள்ளைகளும் தந்தையர்க்கு உதவி செய்ததை சங்க இலக்கியம் எடுத்துச் சொல்கிறது.
அன்னிஞிமிலி என்பவளின் தந்தை கோசர்களின் ஆட்சிக்காலத்தில் மாடுமேய்க்கும் தொழில் செய்து வந்தார். அவருடைய மாடொன்று ஒருவரின் வயலில் புகுந்து அங்கு முளைத்திருந்த பயறை மேய்ந்தது. அது கோசர்களின் அவையில் விசாரணைக்கு வந்தது. அன்னிஞிமிலியின் தந்தை, தமது மாடு பயறை மேய்ந்ததை ஒப்புக்கொண்டபோதும், கோசர்கள் அவரின் கண்களை பெயர்த்து எடுத்தனர். இதனை அறிந்த அன்னிஞிமிலி, ‘தன் தந்தையின் கண்களைப் பறித்தவர்களை யான் பழிவாங்குவேன். அதுவரை பாத்திரத்தில் உணவு உண்ணமாட்டேன். தூய ஆடை உடுக்கமாட்டேன்’, என சூளுரத்தாள். அவள் தந்தையின் கண்கொண்டவர் அரசனாக இருந்த போதும் அவள் அதற்குப் பயப்படவில்லை. அதனை ஒரு தவமாகவே மேற்கொண்டாள். கோசர்கள் செய்த கொடுமையை திதியன் என்பவனுக்கு கூறி, அவன் துணையோடு தன் வஞ்சினம் முடித்து தந்தையை மகிழ்வித்தாள். அந்த வரலாற்றுப் பதிவை
“பாசிலை அமன்ற பயறு ஆபுக்கென
வாய்மொழித் தந்தையைக் கண்களைந்து, அருளாது
ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின்
கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பிய
செருஇயல் நல்மான் திதியற்கு உரைத்து அவர்
இன்உயிர் செகுப்பக் கண்டு சினம்மாறி
அன்னிமிஞ்லி............” - (அகம்: 262)
என பரணர் அகநானூற்றுப் பாடலில் எழுதியுள்ளார்.
அழகிய பெண்ணின் தந்தையை எப்படி தன் வசமாக்கி அவளை அடையளாம் என நினைக்கும் இளைஞன் ஒருவனையும் அகநானூறு காட்டுகிறது.
வேறு நாட்டு இளைஞன் ஒருவன் கடற்கரையில் ஓர் அழகிய இளமங்கையைக் கண்டான். காதல் கொண்டான். ‘பொன் போன்ற பூக்களைச் சூடியிருக்கும் கூந்தலை உடையவள். கடற்கரையில் விளையாடிக் களைத்திருக்கும் அவளுக்கு விலையாக கப்பல் நிறைந்த பொருளைக் கொடுத்தாலும் என்னால் அடைய முடியாதவள். கடல் முத்துக்களை வாரிக் கொணர்ந்து அவற்றைப் பிரித்து எடுக்கும் பெருந்துறைக்கு உரிமையானவன் அவளுடைய தந்தை. ஆதலால் நம் நாட்டைவிட்டு இங்கு வந்து, அவளின் தந்தையுடன் சேர்ந்து அவளின் உப்பளத்தில் வேலை செய்தும், ஆழ்கடலுக்கு மரக்கலத்தில் சென்றும், அவனைப் பணிந்தும் அவனோடு இருந்தால் ஒருவேளை, அவனது மகளை எனக்கு மணம் செய்து தருவானோ?’, என நினைக்கின்றான்.
“பொன் அடர்ந்தன்ன ஒள்ளிணர்ச் செருந்திப்
பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதையள்
திணிமணல் அடைகரை அலவன் ஆட்டி
அசையினள் இருந்த ஆய்தொடிக் குறுமகள்,
நலம்சால் விழுப்பொருள் கலம்நிறை கொடுப்பினும்
பெறல் அருங்குரையள் ஆயின் அறம் தெரிந்து
நாம் உறை தேஎம் மரூஉப்பெயர்ந்து அவனொடு
இருநீர் சேர்ப்பின் உப்புடன் உழுதும்
பெருநீர்க்குட்டம் புணையொடு புக்கும்
படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின்
தருகுவன் கொல்லோ தானே! விரிதிரைக்
கண் திரள்முத்தம் கொண்டு ஞாங்கர்த்
தேனிமிர் அகன்கரைப் பகுக்கும்
கானலம் பெருந்துறைப் பரதவன் எமக்கே?”
- (அகநானூறு: 280)
என அம்மூவனார் கூறுவதிலிருந்து, இரண்டாயிர வருடங்களுக்கு மேலாகியும் காதல் செய்யும் இளைஞர்களின் மாறாத உளப்பாங்கையும் காணலாம்.
பெண்களின் அழகில் மயங்கி பெண்கேட்டு வந்த அரசரையும், அரசரென்றாலும் பெண் கொடுக்க மறுக்கும் தந்தையரையும் தொடர்ந்து காண்போம்.
இனிதே,
தமிழரசி.