Saturday 2 April 2016

சுவர்க்கம் செல்லலாமே!


இந்த உலகில் உள்ள எந்தச் சமயமாவது மனிதர் மிக இலகுவாக சுவர்க்கம் செல்வதற்கு வழி சொல்லியதா? சுவர்க்கம் செல்ல வேண்டுமா? ஆசையை விடு, போகத்தைவிடு என்று கூறினால் முடிகிற காரியமா? எவரால் அவற்றை மிக இலகுவாக கைவிட்டுவிட முடியும்? அதற்காக உண்மைத் துறவறத்தை மேற்கொள்ள முடியுமா? ஆசை, போகங்களைத் துறந்து துறவறத்தை மேற்கொண்ட சுவாமிமாரால் கூட அதில் நிலைத்து நிற்க முடிவதில்லை. எம்போன்றவரால் இயலுமா? 

ஆசை, போகங்களைக் கைவிடாமலேயே சுவர்க்கம் செல்ல வழி சொல்கிறார் சிறுபஞ்சமூலம் என்ற நூலை எழுதிய காரியாசான். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் காரிநாயனார். காரியாசானே காரிநாயனார் என்பது அறிஞர் சிலரின் கருத்தாகும். காரிநாயனாரே 'கணக்கதிகாரம்' என்ற கணித நூலையும் எழுதியவர். அந்நூல் பெண்களுக்கு கணிதத்தைக் கற்பிக்கவே எழுதப்பட்டது என்பதை அச்செய்யுள்களில் இருக்கும் "நேரிழையாய்" "பெய்வளையாய்" போன்ற சொற்கள் எடுத்துச்சொல்கின்றன. தமிழால் இறைவன் திருவடி அடைந்த நாயன்மார்களில் ஒருவராக காரிநாயனாரை சேக்கிழார் பெரியபுராணத்தில் குறிப்பிடுகின்றார். எனவே சுவர்க்கத்தை - இறைவன் திருவடியை - முத்தியை அடைந்த காரியாசான் எமக்கும் சுவர்கம் செல்ல வழி சொல்லித் தந்திருப்பதில் வியப்பில்லை. 

அவர் சொன்ன வழி மிகவும் இலகுவானது. எவரும் எப்போதும் செய்யக்கூடியது. அதிலும் பொதுச்சேவை செய்வோர்கள் அந்தவழியைப் பின்பற்றினால் உண்மையாய் சுவர்க்கம் செல்வார்கள். அதுமட்டுமல்ல உலக உயிர்கள் யாவும் அவர்களைப் போற்றி வணங்கும். இந்த உலகும் செழிப்பாய் மாதம் மும்மாரி பொழிந்து கண்ணுக்குக் குளிர்ச்சியாய் காட்சி அளிக்கும். 

அதற்காக முப்போதும் திருநீறு பூசவோ, கோயில்கள் கட்டி குடமுழுக்குச் செய்யவோ, பண்டைய ஆலயங்கள் தோறும் சென்று வீழ்ந்து கும்பிட்டு எழவோ, சுவாமிமார், பூசாரிமார், ஐயர்மார் கால்களில் வீழ்ந்து வணங்கி பொன்னாடை போர்த்தி மகுடம் சூட்டவோ, தான தர்மம் செய்யவோ காரிஆசான் சொல்லவில்லை. தமிழால் முத்தியடைந்தவராதலால் மேலே சொன்ன எவையும் அவருக்கு சுவர்க்கத்துக்கு செல்லும் வழியைக் காட்டவில்லைப் போலும். இந்த உலக இயற்கையை நன்கு இரசித்து, புசித்து இன்பமாய் சுகத்துடன் உயிர்களின் நன்மைக்காக வாழ்ந்து சுவர்க்கம் செல்ல அருமையான வழியைக் காட்டுகிறார்.

சிறுபஞ்சமூலத்தில் காரியாசான் சொன்ன சுவர்க்கும் செல்லும் வழியைப் பார்ப்போமா?

“குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி - வளம்தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்று இவ்ஐம்பால் படுத்தான்
ஏகும் சுவர்க்கத்து இனிது”                                   
                                                - (சிறுபஞ்சமூலம்: 66)

“குளம்தொட்டுக்[தோண்டி] கோடு[மரக்கிளை] பதித்து[நட்டு] வழிசீத்து[வழியமைத்து]
உளம்தொட்டு[தரிசுநிலத்தைக் கிண்டி] உழுவயல் ஆக்கி - வளம்தொட்டுப்[வளப்படுத்தி]
பாகுபடும்[சுவர்கட்டிய] கிணற்றோடு என்று இவ்ஐம்பால்[ஐந்தையும்] படுத்தான்[செய்தவன்]
ஏகும்[செல்லும்] சுவர்க்கத்து இனிது”                      

இன்றைய காலகட்டத்தில் என்னை மிகவும் ஆழமாக சிந்திக்க வைத்த ஒரு பாடல் இது. அதாவது மக்கள் கமத்தொழில் செய்வதற்கு வேண்டிய தண்ணீரை அள்ளிவழங்கும் பெருங் குளங்களைத் தோண்ட வேண்டும், கோடுகளான மரக்கிளைகளை நட்டு வளர்த்து மக்களுக்கு குளிர் நிழல் தரும் சோலைகளை உண்டாக்க வேண்டும், கட்களும் முட்களும் இன்றி மக்கள் நடப்பதற்கு, வண்டி ஓட்டுவதற்கு ஏற்றவாறு வழியமைத்துக் கொடுக்க வேண்டும், மக்கள் பசியின்றி வாழ கட்டாந்தரையாய் காய்ந்து கிடக்கும் நிலத்தை, உழு நிலமாக்கி, பின்னர் விளைநிலமாக்க வேண்டும். மக்களின் குடிநீர் தேவைக்கு வேண்டிய கிணறுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும். இந்த ஐந்தையும் தன்நலம் கருதாமல் உலக நலன் கருதிச் செய்பவனே இனிதாகச் சுவர்க்கம் செல்வான்.

மேலோட்டமாக இப்பாடலைப் படித்தாலே குளத்தை வெட்டி, மரத்தைநட்டு, தெருப்போட்டு, தரிசு நிலத்தைக் கழனியாக்கி, கிணத்தை வெட்டினால் சுவர்க்கம் போகலாம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

ஆனால் இன்றைய உலக சூழலில் இப்பாடல் எவ்வளவு முதன்மை வாய்ந்தது என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவுகளில் இராசாயனக் கலவையையும், எண்ணெயையும், உப்பையும் கலப்பதால் எமக்குப் புதுப்புது நோய்கள் உண்டாகின்றன. எமது  முன்னோருக்கு இருந்த உடல் நலம் எமக்கு இல்லை. இராசாயனக் கலப்படம் இல்லாத நல்ல உணவை நாம் உண்ண வேண்டுமானால் கமத்தொழில் சிறக்க வேண்டும். அதற்கு குளங்கள் வேண்டும். 

வெப்பநிலை ஏற்றம், மழை இன்மை, சுவாசிக்கும் காற்றில்மாசு இவற்றுக்குக் காரணம் என்ன? மரங்களை வெட்டி சுவர்கட்டினோம். காடுகளை அழித்து நாடாக்கியதால் திண்டாடுகிறோம். அதனால் பசுமைப்புரட்சிக்காக உலகெங்கும் மரம் நடும் இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. அதற்காக மரக்கிளைகளை நட்டு சோலைகளை உண்டாக்க வேண்டும். அதனால் பூமியின் வெப்பமயமாதலைத் தடுக்கலாம். வானமும் மழையைப் பொழியும். இயற்கை தரும் நல்ல உணவை உண்டு மக்களும் நோயின்றி வாழ்வர்.

வீட்டுக்கு வீடு, ஊருக்கு ஊர், பள்ளிக்கூடம், கடைத்தெரு, ஆலயம் என்றல்லாம் சென்றுவர கரடுமுரடு அற்றதாய் பாதைகள் இருக்க வேண்டும். நாம் நடக்கும் பாதைகளில் முள் மரம், செடி, கொடிகளை வளரவிட்டும், அடுத்த வீட்டுத் தெருவில் குப்பையைக் கொட்டி வைத்தும் அழகு பார்த்தல் நல்லதா? இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே தெருக்களை அழகுபடுத்தி வாசனை கமழவைத்த தமிழினம் இன்று, தமது தெருக்களை பாழ்பட விடுதல் நன்றா! நல்ல பாதைகள் அமைத்தல் வேண்டும்.

தரிசு நிலத்தை உழுவயலாக்கி நன் செய்நிலமாக்க எவ்வளவு பாடுபடவேண்டும் தெரியுமா? எழுதுவது போலோ சொல்வது போலோ மிக இலகுவான செயல் அல்ல. உடல் உழைப்பும் பணவசதியும், நீர்வசதியும் இருந்தால் மட்டும் போதாது. நிலம் ஏன் தரிசு நிலமானது என்ற காரணத்தை முதலில் அறிய வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக தரிசு நிலத்தை விளைநிலமாக்கித் தீருவேன் என்ற உறுதிப்பாடு இருக்க வேண்டும். தரிசு நிலங்களை விளை நிலமாக்கி கமத்தொழிலில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் போது வறுமைக்கே வறுமை வரும்.

உலக உயிர்கள் உயிர்வாழ காற்று, உணவு, குடிநீர் மூன்றும் தேவை. நீர் இல்லாமல் எம்மால் வாழமுடியாது. எனவே கிணறுகளை உண்டாக்கி குடிநீர் வசதிசெய்து கொடுக்க வேண்டும். மக்களுக்குத் தேவையான இந்த ஐந்து வசதிகளையும் செய்து கொடுப்போர் சுவர்க்கம் செல்லாமல் வேறு எங்கே செல்வர்?

ஒரு நாடு சிறப்புற விளங்க நீர்ப்பாசன வசதிகளும், நிழல் தரும் மரங்களால் நிறைந்த சோலைகளும், மனிதர் பயமின்றி நடமாடக்கூடிய தெருக்கள் அமைந்த சாலை வசதிகளும், பயிர் செய்ய இயலாத தரிசு நிலங்களை பண்படுத்தி உண்டாக்கிய நல்ல விளை நிலங்களும், குடிநீர் வசதியும் இருக்க வேண்டும். இந்த ஐந்து வசதிகளும் இருந்தாலே அந்த நாட்டு மக்கள் நல்ல காற்றைச் சுவாசித்து, பயிர் செய்து, வறுமை இன்றி, நோய் நொடி இன்றி இன்பமாய் வாழ்வர். மனித குல மேம்பாட்டிற்காக ஆயிரத்து அறுநூறு வருடங்களுக்கு முன்பே இத்தகைய கருத்தைச் சொன்ன காரியாசானை நாம் போற்ற வேண்டும். 

புங்குடுதீவு ஓர் ஊரல்ல. அது ஒரு நாடு. புங்குடுதீவை நாடு எனச்சொல்லல் மிகப்படுத்திக் கூறியதல்ல. ஒரு நாட்டிற்கு தேவையான உறுப்புக்கள் எவை என திருவள்ளுவர் சொல்கிறார்.
“இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு”                         - 737

கிணற்று நீரும் குளத்து நீரும் ஆகிய இரண்டு நீரும் [புனலும்], நல்ல மலையும், அம்மலையில் இருந்து வருகின்ற ஆற்று நீரும், வலிமையுடைய அரணும் நாட்டின் உறுப்புக்களாகும் என்கிறார். ஒரு நாட்டிற்குத் தேவையாய் திருவள்ளுவர் சொன்ன உறுப்புக்கள் யாவும் புங்குடுதீவில் இருக்கின்றன. புங்குடுதீவில் கிணறுகளும், குளங்களும், மலையும், மலையில் இருந்து வரும் ஆறும், கடலால் ஆன அரணும் உண்டல்லவா? மலையும் ஆறும் புங்டுதீவில் எங்கே என்று பார்க்கிறீர்கள்? நாம் அவற்றை புறக்கணித்து விட்டோம். நம் முன்னோர்கள் அவற்றைப் பேணிப் பாதுகாத்தார்கள். இப்போதும் அவற்றை நாம் மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

புங்குடுதீவின் மேட்டுப்பகுதியாய் இன்றும் வீராமலை இருக்கிறது. அந்த வீரமலையில் இருந்து உற்பத்தியாகிய ஒரு சிற்றாறு போக்கத்தைக்கூடாக சென்று கள்ளி ஆற்றில் வீழ்ந்தது என்று என் தந்தை சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கிறது. இது பற்றி அறிய விரும்புவோர் யாழ் பல்கலைக் கழக புவியியற் துறைத் தலைவர் பேராசிரியர் கா குகபாலன் அவர்களைக் கேட்கலாம். அவரும் இதுபற்றி என்னிடம் கூறினார். அந்த ஆறு சென்ற தடத்தை அறிந்து தூர்வாரி மீண்டும் அவ்வழியே ஓடச்செய்யலாம். குளங்களைத் தூர்வாரலாம். கொப்புகளை நட்டும், மரங்களை வளர்த்தும் சோலைகளை உண்டாக்கலாம். தெருக்களை சீர்திருத்தலாம். குடிநீர் வசதிகளை உண்டாக்கலாம். பயிர் செய்வோர் இன்றி பாழாகும் நிலங்களை மீண்டும் கழனிகள் ஆக்கலாம். 

இந்த ஐந்து அறங்களையும் புங்குடுதீவு வாழ் மக்களுக்காக உலகெங்கும் உள்ள புங்குடுதீவு ஒன்றியங்கள், நலன்புரிச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள், உலக மையம், புதிய ஒளி யாவும் சேர்ந்தோ தனித்தனியாகவோ செய்தால் காரியாசான் சொன்ன சுவர்க்கத்தை புங்குடுதீவிலேயே நாம் காணலாம்.
இனிதே,
தமிழரசி.

3 comments: