Friday 1 April 2016

திருவள்ளுவரா வைத்தார்!

ஒரு பெயரில் ஈர் அதிகாரம்!
SOAS, University of London

திருக்குறள் முழுவதையும் எப்போ படித்தேனோ அப்போதிருந்து இந்தக் கேள்வி என் நெஞ்சினில் எழுந்து என்னை மருட்டுகிறது. ஒரு பெயரை இரு அதிகாரத்திற்கு திருவள்ளுவர் வைத்திருப்பாரா! என எண்ணிப் பார்க்கும் போது அது உங்களுக்கும் வியப்பைத் தரும். ஔவையாரால் அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுட்டி குறுகத் தறித்த குறள் எனப் புகழப்பட்ட திருக்குறளில் ஒரே பெயரில் இரு அதிகாரம் எப்படி வந்தது? அதுவும் குறிப்பு அறிதல் என்னும் பெயரில் இருப்பது இன்னும் வியப்பைத் தருகிறது. சாதாரண எம்போன்ற மனிதரின் மனக்குறிப்பை திருவள்ளுவர் அறியாமலா இருப்பார்?

‘மூதுரை’ என்பது ஔவையார் எழுதிய ஒரு நூலாகும். அதில் காட்டில் கிளைவிட்டு நிற்கும் மரங்கள் நல்லமரங்கள் அல்ல பிறரின் குறிப்பை அறிய முடியாதவனே மரம் என்று பாடியுள்ளார்.
“கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் …………..
……  குறிப்பறிய மாட்டாதான் மரம்
இப்படிப் பாடிய ஔவையார் எப்படி ஒரு பெயரில் இரு அதிகாரம் இருக்கும் திருக்குறளை அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுட்டி குறுகத் தறித்த குறள் என்று புகழ்ந்திருக்க முடியும்?? எனவே ஔவையாரின் காலத்திற்குப் பின் எங்கோ இத்தவறு நடந்திருக்கிறது.

திருக்குறளிலே நூற்றி முப்பத்து மூன்று அதிகாரங்கள் இருக்கின்றன. அந்த நூற்றி முப்பத்து மூன்று அதிகாரங்களில் 71, 110 ஆகிய இரு அதிகாரங்களும் குறிப்பு அறிதல் என்ற தலைப்போடு இருக்கின்றன. ஒன்று பொருட்பாலில் வருகின்றது. மற்றது இன்பத்துப்பாலில் வருகின்றது. ஒருவர் ஒன்றைச் சொல்லாமல் அவரது மனக்கருத்தை அறிபவரது தன்மைபற்றி பொருட்பாலின் குறிப்பறிதல் என்ற அதிகாரத்தில் [71] சொல்கிறார். காதலியின் காதல் குறிப்பை அறிதல் பற்றி இன்பத்துப்பாலின் குறிப்பறிதல் என்னும் அதிகாரத்தில் [110] சொல்கிறார். பரிமேலழகரைப் பின்பற்றி எண்ணூறு வருடங்களுக்கு மேலாக திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதிய யாவரும் இவ்விரு அதிகாரங்களின் பெயர்களையும் ‘குறிப்பறிதல்’ என்றே எழுதி வருகின்றனர். 

திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி என்னும் நூலை நான் எழுதிய நேரம், நம் பெரியோரைப் பின்பற்றி இவ்விரு அதிகாரங்களின் தலைப்பையும் ‘குறிப்பறிதல்’ என்றே எழுதினேன். அப்படி எழுதிய போதும் அது சரியென்று எனக்குப்படவில்லை. நூலை மீள்பதிவு செய்த போது அதனைத் திருத்தி எழுதினேன். அதற்கான காரணத்தைப் பார்ப்போம். 

71ம் அதிகாரத்தில் வரும் ஐந்து குறள்களில் உணர்தல் என்னும் சொல்லை திருவள்ளுவர் கையாண்டிருக்கிறார்.
“ஐயப் படாஅது அகத்து உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்”                  - 702

குறிப்பின் குறிப்புஉணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்                        - 703

குறிப்பின் குறிப்புஉணரா ஆயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்                             - 705

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்                    - 708

பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்                  - 709

ஐந்து குறள்களில் உணர்தல் என்ற சொல் வருவதால் இந்த அதிகாரம் ‘குறிப்பு உணர்தல்’ என்று இருந்திருக்குமா? என்ற எண்ணம் எமக்கு எழலாம். அது இயல்பே. ஆனால் திருவள்ளுவர் அப்படி பெயர் வைத்திருக்கமாட்டார். அதுவே திருவள்ளுவரின் தனித்தன்மையாகும்.

பொருட்பாலில் உள்ளவை யாவும் மன்னர்க்கும், மன்னரோடு வேலை செய்வோர்க்கும் கூறிய அறிவுரை என்னும் கருத்து நிலவுகிறது. எனவே மன்னரோடு வேலை செய்வோர் மன்னரின் குறிப்பை உணர்ந்து செயல்படும் போது ஏதாவது தவறு நேர்ந்தால் அது அவர்களின் தலைக்கே உலைவைத்துவிடும். ஏனெனில் உணர்தல், அறிதல் இவ்விரு சொற்களும் ஒரே கருத்தைத் தருவதுபோல இருப்பினும் இருவேறு கருத்து உடையன.

உதாரணமாக நாம் ஓரிடத்தில் நிற்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். அப்போது ஏதோ ஒரு பொருள் வீழ்ந்த ஒலி கேட்டாலோ, எரிந்த மணம் வந்தாலோ அது என்ன என அறிய முற்படுவோம். முதல் அந்த ஒலியையோ மணத்தையோ உணர்ந்த நாம் பின்னர் என்ன நடந்தது? என்பதை அறியப்பார்க்கிறோம். எமது அச்செய்கை உணர்தல் வேறு, அறிதல் வேறு என்பதை வேறுபடுத்திக் காட்டுகின்றதல்லவா?

எனவே மன்னர்களின் முகக்குறிப்பை, சைகையை, சொற்களின் கருத்தை உணர்ந்தால் மட்டும் போதாது நன்கு ஆராய்ந்து அறிந்த பின்பே செயல்பட வேண்டும். ஆதலால் பொருட்பாலில் வரும் திருக்குறளின் 71ம் அத்தியாயத்திற்கு திருவள்ளுவர் ‘குறிப்பு அறிதல்’ என்ற பெயரையே வைத்திருப்பார்.

இன்பத்துப்பாலில் உள்ள திருக்குறளின் 110ம் அதிகாரம் மனிதரின் காதலை - காமத்தைப் பற்றிச் சொல்கிறது. காதலோ காமமோ இரண்டும் உணர்ச்சியின் சங்கமம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். இந்த அதிகாரம் பண்டைத் தமிழரின் களவுநிலைக் காதலில் முன்பின் அறிந்திராத ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்க்கும் கணத்தில் நிகழும் உணர்வின் பரிமாற்றம் பற்றியே கூறுகிறது. இதிலுள்ள பத்துக் குறளில் ஒன்பது குறள் காதலியின் பார்வை[நோக்கு] பற்றியே சொல்கிறது. காதலுக்கு ஒருவரோடு ஒருவர் பேசவேண்டியதில்லை என்பதை கடைசிக் குறளில்

கண்ணோடு கண்ணிணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல
எனத் திருவள்ளுவர் சொல்லும் பாங்கு உணர்வின் ஐக்கியத்தால் காதல் கனிவதை எடுத்துக் காட்டுகிறது.

எனவே திருக்குறளின் இன்பத்துப்பாலில் உள்ள ‘குறிப்பு அறிதல்’ என்னும் அதிகாரத்தை குறிப்பு உணர்தல் என்றே திருவள்ளுவர் அழைத்திருக்க வேண்டும். அதனை திருக்குறளுக்கு உரையெழுதிய காலிங்கரின் உரை மிகத்தெளிவாகக் காட்டுகிறது. அதில் திருக்குறளின் 110ம் அதிகாரம் குறிப்பு உணர்தல் என்றே இருக்கிறது. காலிங்கர் பரிமேலழகருக்குக் காலத்தால் முந்தியவர். எனவே  பரிமேலழகரோ அல்லது அவரது ஏட்டை மீள்பதிவு செய்தோரோ ‘குறிப்பு உணர்தல்’ என்பதை தவறுதலாக ‘குறிப்பு அறிதல்’ என்று எழுத, பரிமேலழகரின் உரையைப் பின்பற்றி எழுதியோர் யாவரும் அதே தவறைச் செய்ததால் அது நீள் கதையாக தொடர்கிறது எனக் கொள்ளலே நன்று.

ஆதலால் இனிமேலாவது திருக்குறள் பற்றி எழுதுவோர், உரை எழுதுவோர் யாராயினும்  இன்பத்துப்பாலில் உள்ள ‘குறிப்பு அறிதல்’ என்ற 110வது அதிகாரத்தை காலிங்கரைப் பின்பற்றி ‘குறிப்பு உணர்தல்’ எனும் பெயரில் எழுதுங்கள் என்று அன்புடன் கேட்கிறேன்.

இனிதே,
தமிழரசி.

2 comments:

  1. திருக்குறள் பற்றி உரை எழுதுவோர்க்குதானே தங்களின் அன்பு கட்டளை....ஒரு பெரு மூச்சு விட்டுக் கொண்டேன்...

    ReplyDelete
    Replies
    1. 'இனிமேலாவது திருக்குறள் பற்றி எழுதுவோர் அல்லது உரை எழுதுவோர் யாராயினும் காலிங்கரைப் பின்பற்றி குறிப்பு அறிதல் அதிகாரத்தை [110], 'குறிப்பு உணர்தல்' என எழுதுங்கள். அதாவது 110வது அதிகாரத்தை குறிப்பிடுவதாயின் குறிப்பு உணர்தல் எனக் குறிப்பிடவும். தாங்கள் குறிப்பிட்டது போல் அதுவே என் அன்புக் கட்டளை. எழுதுவதற்கும் பெரு மூச்சா? நன்று!

      Delete