ஈழத்தின் மாந்தை முற்காலச்சேர அரசரின் மாந்தை
அதை பதிற்றுப்பத்து
“ நுஞ்கோ யாரென வினவின் எங்கோ
இருமுந்நீர் துருத்தியுள்
முரணியோர் தலைச் சென்று
கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேரலாதன்” - (பதிற்றுப்பத்து:2: 20: 1- 5)
எனச்சொல்கிறது. '[நுங்கோ] உமது அரசன் யாரென கேட்பீராயின் [எங்கோ] எமது அரசன் [இரு] பெருங் [முந்நீர்] கடல் இடையே [துருத்தியுள்] பவளப்பாறை நிறைந்த தீவில் (இலங்கையில்) இருந்து [முரணியோர்] பகைவரின் தலை [இடத்திற்குச்] சென்று [கடுஞ்சின] கடுங்கோபத்துடன் [கடம்பு முதல் தடிந்த] கடம்பு மரத்தை வெட்டியழித்த நெடுஞ்சேரலாதன்' என்று சொல்கிறது.
துருத்தி என்றால் ஆற்றிடைக்குறை. ஆற்றிடைக்குறைக்கு இன்னொரு பெயர் இலங்கை. துருத்தி, இலங்கை ஆகிய இரண்டும் ஆற்றுக்கு இடைப்பட்ட நிலத்தையே குறிக்கும். துருத்தி - பவளம். பவளப்பாறை உள்ள தீவுகள் துருத்தி எனவும் அழைக்கப்படும். அதனால் இப்பாடலில் முந்நீர் துருத்தி என கடலினுள் இருக்கும் இலங்கையைச் சொன்னார் என்பது தெளிவாகிறது.
பதிற்றுப்பத்து மட்டுமல்ல சேரலாதன் ஈழத்தின் மாந்தை நகரில் இருந்த அவனது அரண்மனை முற்றத்தில் ஆம்பல் பெறுமதியான (நூறு திரிலியன்) பொருளை நிலம் தின்ன கைவிட்டான் என்பதை
“வலம்படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு விற்பொறித்து
நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறையக் குவைஇ அன்றவன்
நிலம் தின்னத் துறந்த நிதியத்து அன்ன”
என அகநானூறு மிக விரிவாகச் சொல்கிறது.
சங்ககால நூல்களில் இருந்து தொகுக்கப்பட்ட தொகைநூலாகிய முத்தொள்ளாயிரமும் மன்னாரில் உள்ள மாந்தையை சேரனின் மாந்தையாகச் சொல்கிறது.
நாகமரம் (இலங்கையின் தேசியமரம்)
ஈழத்தின் மாந்தையில் வாழ்ந்த இளம் மங்கை ஒருத்தி சேரனைக் காதலித்தாள். அவளின் காதலை அவளது தோழிமாரும் அறிவர். இரவு பகலாக அவனின் நினைவாகவே வாழ்ந்தாள். சேரனின் நினைவில் தோழிமாரைக் கண்டாலும் பேசமாட்டாள். சேரனின் நினைவோடு தூங்கி எழுபவளின் கனவில் ஒரு நாள் இரவு அவன் வந்தான். அவளைத் தடவித் தழுவினான். சேரனின் தழுவலின் மயக்கத்தில் தூங்கி எழுந்தவள் மகிழ்ச்சியோடு இருந்தாள். தோழிமாரைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு வரவேற்றாள். அவளின் மகிழ்ச்சிக்காண காரணத்தைப் புரிந்து கொண்ட தோழிமார், ‘சேரமாராசன் என்ன சேதி சொன்னார்?” எனக் கேலி செய்தனர்.
புன்னைப்பூ
அவள் திகைத்துப்போனாள். “என் கனவில் சேரன் வந்தது இவர்களுக்கு எப்படித் தெரிந்தது?” அவளது திகைப்பை முத்தொள்ளாயிரம் ஒரு பாடலாகச் சொல்கிறது.
“புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை
நன்னாகம் நின்றலரு நல்நாடன் - என்னாகம்
கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்
எங்கொல் இவரறிந்த வாறு” - (முத்தொள்ளாயிரம்: 5)
‘புன்னைமரச் சோலையும் [புனல்] நீர் நிறைந்த [தெங்கு]தென்னஞ் சோலையும் சூழ்ந்த மாந்தை நகரத்தையும் நல்ல நாகமரம் [நின்றலரும்] பூத்துக் குலுங்கும் நல்ல நாட்டையும் உடைய சேர அரசன் [கங்குல்] ஒரு நாள் இரவு கனவில் வந்து [என்னாகம்] என்னுடலைத் [தைவந்து] தடவித் தழுவினான். அது [என்கொல்] எப்படி இவர்களுக்குத் தெரியவந்தது.’ என நினைத்தாள்.
நாகப்பூ
இப்பாடல் அவளின் திகைப்பைமட்டும் கூறவில்லை. அவள் குறிப்பிடும் மாந்தை ஈழத்தின் மாந்தை என்பதையும் மெல்லக் கோடிட்டுச் சொல்கிறது. இலங்கையின் தேசிய மரமாகிய நாகமரம் தொன்று தொட்டு இலங்கையில் இருக்கிறது. இப்பாடல் சொல்லும் புன்னை, தென்னை, நாகமரம் மூன்றையும் இன்றும் மாந்தையில் காணலாம். எனவே சேர அரசர்கள் ஈழத்தின் மாந்தையை ஆண்டதை இந்த முத்தொள்ளாயிரப் பாடலும் எடுத்துச் சொல்கிறதல்லவா! இயற்கை தேர்வாய் மாந்தையில் பலவண்ண இலைகளோடு வெண்ணிறப்பூவுமாய் பூத்துக் குழுங்கும் நாகமரத்தின் அழகை இரசிக்க ஆயிரம் கண் வேண்டும். அந்த அழகுக் கம்பிரத்தை நாம் எம் அறியாமையால் வெட்டி அழிக்கின்றோம்.
நாகலிங்கப்பூ
நாகமரம் மாந்தையில் மட்டுமல்ல இலங்கையின் கடற்கரையை அண்டிய காடுகளில் பலவண்ண இலைகளோடு சிலிர்த்து நிறப்தைக் கண்டிருக்கிறேன். 9 பாதை வழியாகச் செல்வோர் நாகமரத்தை முருகண்டி பிள்ளையார் கோயிலில் கால்கழுவும் இடத்தினருகே பார்க்கலாம். புங்குடுதீவில் பருத்தியடைப்புக்கு சற்றுக் கிழக்கே நின்றது. தற்போதும் அங்கு நிற்கும் எனநினைக்கிறேன். ஈழத்து மாந்தை முற்காலச்சேரரின் மாந்தைதான் என்று எடுத்துச் சொல்வதற்கு நாகமரத்தை வெட்டாது பாதுகாப்போமா?
குறிப்பு:
ஈழத்து மாந்தை முற்காலச்சேர அரசரின் [சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை] மாந்தை என்பதை அறிய 2013ம் ஆண்டு நான் எழுதிய "கண்கள் உறங்கிடுமா?" என்னும் ஆய்வையும் பாருங்கள்...
https://inithal.blogspot.com/2013/01/1_20.html
இலங்கையின் பல பகுதியிலும் நாகமரம் இருக்கிறது. ஆனால் இப்போ அருகி வருகிறது. புன்னைமரமும், நாகமரமும் வெவ்வேறானவை என்பதை இரண்டு மரங்களையும் இப்பாடல் எடுத்துச் சொல்வதால் அறியலாம். சிலர் நாகமரத்தை நாகலிங்க மரமாகாவும் கருதுகின்றனர். நாகமரத்தின் இலை வெவ்வேறு வண்ண நிறமாக உதடுபோல் இருக்கும். நாகலிங்க மரத்தின் இலை அப்படி இருக்காது. இம்மூன்று மரங்களின் பூக்களையும் பார்த்து அவற்றின் வேறுபாட்டை அறிந்து கொள்க.
இனிதே,
தமிழரசி.
No comments:
Post a Comment