Monday 29 February 2016

சங்கத் தமிழ்ச்சான்றோர் காட்டும் கோயில்கள்

சங்ககால முருகன் கோயில் - சாளுவன் குப்பம் [இன்றையநிலை]
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் உள்ளது

சங்ககாலத் தமிழரது கலைகளின் உறைவிடமாகத் திகழ்ந்த கோயில்கள் அழிந்ததால் எமது கலைகளின் பண்டைய பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்ட முடியாத நிலையில் இருக்கிறோம். எனினும் சங்கத்தமிழ்ச் சான்றோர் பலர் அந்நாளில் இருந்த கற்கோயில்கள் பற்றிய தரவுகளைத் தம் சொற்பாக்களில் இயம்பிச் சென்றுள்ளனர். பாண்டியன் கூடாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி என்ற மன்னனது போரின் வலிமையால் பகைநாட்டுக் கோயில் பாழ்பட்டுப் போகும் என்பதை மருதன் இளநாகனார்
கலிகெழு கடவுள் கந்தம் கைவிட
பலிகண் மாறிய பாழ்படு பொதுஇல்
நரைமூதாளர் நாயிடக் குழித்த
வல்லின் நல்லகம் நிறையப், பல்பொறிக்
கான வாரணம் ஈனும்
காடாகி விளியும் நாடுடையோரே
                                                  - (புறம்: 52: 12 - 17)
‘மனித நடமாட்டத்தால், விழாக்களால் ஆரவாரமாய் இருந்த கோயிலின் கடவுள் தூண்[கடவுள்கந்தம்] வழிபாடு இன்றி கைவிடப்பட்டதால் அதற்கு உணவு படைப்பதும் நின்று [பலிகண் மாறிய], பாழ்பட்டுப்போக[பாழ்படு], நரைமுதிர்ந்தோர் சூதாடிய [நாய்] நல்ல மனையிடமும் அழிந்து, கோயில் பலியிடத்தில் காட்டுக் கோழிகள் [கானவாரணம்] முட்டையிடும். நாடாய் இருந்த இடம் காடாகிப் போகும்’ என்கிறார். கடவுள் கந்தம் இருந்த இடத்தை ‘பொதுஇல்’ [அம்பலம்-கோயில்] எனக் குறிப்பிடுவதால் எல்லோருக்கும் பொதுவானதாக அந்த இடம் இருந்ததை உணரலாம். 
சங்ககால கடவுள் கந்தம் [கடவுள் தூண்]

அந்தக் கடவுள் கந்தம் எப்படி இருந்திருக்கும்? மாடு தனது உடலை உராய்ந்து கொள்ளும் கல்லைக் கந்தம் எனச் சொல்வதை சங்க இலக்கியம் காட்டுகிறது.‘ஆண் மரை தினவு எடுத்ததால் [சொறிந்த] அசையும் நிலையிலுள்ள அகன்ற அடியுடைய [மாத்தாள்] கந்தத்தில் சுரைக்கொடி படரும் அம்பலத்தே, சிற்றூரிலுள்ளவர்கள் நாள் தோறும் படைப்பதை மறந்து போனதால் பலிபீடம் [இட்டிகை] வெறிச்சோடிக் கிடக்கிறது’ என்பதை
மரை ஏறு சொறிந்த மாத்தாட் கந்து
சுரைஇவர் பொதியில் அம்குடிச் சீறூர்
நாட்பலி மறந்த நரைக்கண் இட்டிகை"
                                                         - (அகம்: 287: 4 - 6) 
என அகநானூறு காட்டுகிறது.

இப்படி சங்க நூல்கள் காட்டும் பாழ்பட்டுப்போன கோயில் போன்று பல கோயில்கள் இன்று ஈழத்தில் பாழ்பட்டுக் கிடக்கின்றன. மனித வரலாற்றில் கோயில்கள் பாழ்படக் காரணமாக இருப்பவை இயற்கையின் சீற்றமும் அரசின் சீற்றமுமே. யுத்தங்களின் கொடுமையால் கோயில்களும் நாடுகளும் அழிந்து பாழடையும் நிலையை யாரால் மாற்ற முடியும்?

பாழடைந்த பண்டைய கோயில் - பொலநறுவை [இன்றையநிலை]

சங்கத்தமிழ்ச் சான்றோர் இடையே ஈழத்தின் புலவனாக வலம் வந்தவராக முதலில் இனங்காணப்பட்டவர் ஈழத்துப் பூதந்தேவனார். அதனால் சங்ககாலத்தில் ஈழத்தில் தமிழரும் வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரமாய் அவர் நிமிர்ந்து நிற்கிறார். அவர் இன்றைய ஈழத்துக் கோயில்களைப் போல் பாழடைந்து கொண்டிருக்கும் கோயில் ஒன்றை அகநானுற்றில் காட்டுவதைப் பாருங்கள்.

அது கடவுள் இல்லாத கோயில். வழிபடுவோர் இன்மையால் பாழ்பட்டுப் போகும் கோயில். அதன் சுவர்களோ புதர் மண்டி, புற்றுகளுடன் காணப்படுகின்றன. அந்த புற்றுகளில் உள்ள கரையான்களை [குரும்பி - புற்றாஞ்சோற்றை] பெருங்கையுடைய கரடிக் கூட்டம் ஆராய்கின்றது [தேரும்]. எனினும் வலிமையான அடியை உடைய தூண் அசையாது நிற்கிறது. புறாக்கள் அக்கோயிலில் நெடுங்காலம் வாழ்ந்த பழக்கத்தால் அதனைவிட்டுப் போகாது பேடைகளுடன் கூடிசத்தமிட்டு வாழ்ந்து வருகின்றன எனத் தான் நேரில் கண்டதை ஈழத்துப் பூதந்தேவனார் அப்படியே பதிவு செய்திருக்கிறார்.
பெருங்கை யெண்கினங் குரும்பி தேரும்
புற்றுடைச் சுவர புதலிவர் பொதியிற்
கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து
உடனுறை பழமையிற் றுறத்தல் செல்ல
திரும்புறாப் பெடையோடு பயிரும்
பெருங்கல் வைப்பின் மலைமுதலாறே
                                                         - (அகம்: 307: 10 - 15)

போரின் கோரத்தாண்டவம் கோயில்களைப் பாழ்படுகின்றன என்பதை
முனை கவர்ந்து கொண்டெனக் கலங்கி பீரெழுந்து
மனை பாழ்பட்ட மரை சேர் மன்றத்துப்
பணைத் தாள் யானைப் பரூஉப் புறமுரிஞ்சிக்
செதுகாழ் சாய்ந்த முதுகாற் பொதியில்
                                                        - (அகம்: 373: 1 - 4)

எனப் ‘போர் [போர்முனை] நாட்டைக் கவர்ந்து கொள்ள, கலங்கி மக்கள் ஓடியதால் பீர்க்கம் கொடி படர்ந்து வீடுகள் [மனை] பாழ்பட, அங்கேயுள்ள மன்றத்துக்கு காட்டு மரையும் வந்துசேர, பருத்த காலுடைய [பணைத் தாள்] யானை தனது பெரிய முதுகை உரசுவதால் சோர்ந்து விட்டம் வீழ்ந்த[சாய்ந்த] பழைய தூண்களையுடைய [முதுகால்] கோயில் [பொதியில்]’ ஒன்றை பாண்டியனாதி நெடுங்கண்ணனார் தமது சொற்பாவில் செதுக்கியுள்ளார்.

இதே போல் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் மக்கள் ஊரைவிட்டுச் சென்றதால் பாழ் அடைந்த கோயில் ஒன்றை அகநானூற்றில் படம் பிடித்துக் காட்டுகிறார். கோயிலுக்கு அருகே ஒரு முருங்கை மரம். அதனை உண்ண வந்த யானை கோயில் சுவரில் உரசுகிறது. கோயில் சுவர் சரிய அதன் உத்திரம் கீழே விழ அதனால் கோயில் மாடத்தில் குடியிருந்த புறாக்கள் பறந்தன. தூசி மண்டிக் கிடந்த பலியிடத்தில் குட்டியீன்ற நாய் குடியிருந்தது. கறையான்களோ கூரையளவு புற்றெழுப்பி விட்டத்து மரங்களைத் தின்றன. 

இவ்வாறு ஊரார் இன்மையால் கோயில் அழிந்ததைக் காட்டும் கடியலூர் உருத்திரங்கண்ணனார் மக்களால் வழிபாடு செய்யப்பட்டு நன்னிலையில் இருந்த கோயில்களையும் படம் பிடித்துக் காட்டத் தவறவில்லை.

திருமாவளவன் கோயில் அமைத்ததை
கோயிலொடு குடி நிறீஇ
வாயிலொடு புழை அமைத்து
                                              - (பட்டினப்பாலை: 286 - 287)
எனச் சொல்லும் பட்டினப்பாலை சிறைப் பிடிக்கப்பட்ட அரசமகளிர் [கெண்டிமகளிர்] நீராடி, மெழுகி[மெழுக்கம்], மலரால் அலங்கரித்து அந்திரேரம் மாட்டிய விளக்கின் ஒளியில் பலர் கும்பிட, வழிப்போக்கர்களும்[வம்பர்] வந்து தங்கியிருக்கும் கடவுள் தூணையுடைய [கந்துடை] கோயில் இருந்ததை
கெண்டிமகளிர் உணதுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலர் அணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழ
வம்பர் சேர்க்கும் கந்துடைப் பொதியில்
                                                - (பட்டினப்பாலை: 246 - 249)

என்று சொல்வதோடு; சோறு ஆக்கும் போது உண்டான கஞ்சி ஆறு போல ஓடிச் சேறாகி, பின் காய்ந்து தேர் ஓடும் போது துகளாக எழுந்து, சாம்பலில் குளித்த யானை போல் பல்வேறுபட்ட ஓவியங்கள் [ஓவத்து] தீட்டப் பெற்ற கோயிலை மூடுவதை
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறு போலப் பரந்து ஒழுகி
ஏறு பொரச் சேறாகி
தேர் ஓடத் துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல
வேறு பட்ட வினை ஓவத்து
வெண்கோயில் மாசு ஊட்டும்
                                                       - (பட்டினப்பாலை: 44 - 50)
என்றும் காட்டியுள்ளார்.
திருச்செந்தூர் [இன்றைய நிலை]

புறநானூற்றில் செந்தில் முருகன் கோயிலை
வெண்தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறை
                                                      - (புறம்: 55: 20 - 21)
எனக் குறிப்பிடும் மருதன் இளநாகனார் அகநானூற்றில் திருப்பரங்குன்று பற்றி
சூர்மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல்
சீர்மிகு முருகன் தண்பரங்குன்றத்து
அந்துவன் பாடிய சந்துகெழுனெடுவரை
                                                      - (அகம்: 59: 10 - 12)
எனச் சொல்லுமிடத்தில் திருப்பரங்குன்றத்தை நல்லந்துவனார்[அந்துவன்] பாடிய சந்தனமரம் நிறைந்த[சந்துகெழு] நெடியமலை[நெடுவரை] எனக்குறிப்பிடுகிறார். இவரால் குறிக்கப்படும் நல்லந்துவனார் பரிபாடலின் எட்டாம் பாடலில் முருகனையும் திருப்பரங்குன்றையும் பாடி வணங்கியுள்ளார். அதில் முருகனைக் காண மும்மூர்த்திகளும் திருப்பரங்குன்றம் வருவதாகக் குறிப்பிடுகிறார்.
திருப்பரங்குன்றம் [ இன்றைய நிலை]

திருப்பரங்குன்றத்தில் உள்ள சித்திரச்சாலை மன்மதனின் படைவீட்டை ஒத்தது என்பதை
ஒண் சுடரோடைக் களிறேய்க்கு நின்குன்றத்து
எழுதெழில் அம்பலம் காம வேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்
                                                      - (பரிபாடல்: 18: 27 - 29)
எனப் பரிபாடலின் பதினெட்டாம் பாடலில் குன்றம்பூதனார் சொல்கிறார். அதாவது ‘ஒளி பொருந்திய நெற்றிப்பட்டத்தை உடைய உனது பிணிமுக யானையைப்[களிறு] போன்றது நீயிருக்கும் திருப்பரம்குன்றம். அதில் கீறியுள்ள ஓவியங்களால் அழகாக விளங்கும் அம்பலம் மன்மதனின் அம்பின் தொழில் நடைபெறும் இன்பமாளிகை’ என்கிறார்.

குன்றம்பூதனார் சொன்ன சித்திரச்சாலைக்கு - இன்பமாளிகைக்கு பரிபாடலின் பத்தொன்பதாம் பாடல் மூலம் நப்பண்ணனார் எம்மை அழைத்துச் செல்ல முன்னர் திருபரங்குன்றக் கோயிலுக்கு எத்தகையோர் வந்தார்கள் என்பதை மிகவிரிவாக எடுத்துச் சொல்கிறார்.
சுடரொடு சூழ்வரு தாரகை மேருப்
புடைவரு சூழால் புலமாண் வழுதி
மடமயிலோரும் மனையவரோடும்
…………………………
மாஅன் மருகன் மாட மருங்கு
                                                     - (பரிபாடல்: 19: 19-57)
பாண்டிய அரசன் தன் குடும்பத்தினரோடும் அமைச்சரோடும் திருப்பரங்குன்றத்து மலையின் மேல் ஏறி, திருக்கோயிலை வலம்வந்து மனம் மகிழ்ந்து துதிபாடியதையும், பாண்டியனுடன் வந்தவர்களில் சிலர் தலையில் துணி கட்டி இருந்ததையும் வழியில் சிலர் யானைகளை வழியைவிட்டு அகற்றி, அவற்றை மரங்களில் கட்டி கரும்பு முறித்துப் போடுவதையும், சிலர் தேர்களையும், குதிரைகளையும் வழியில் இருந்து அகற்றுவதையும், இசையறிவு உடையோர் பிரமவீணையை வாசிக்க, சிலர் புல்லாங்குழல் ஊத, சிலர் யாழை மீட்ட, அதற்குத் தக சிலர் முரசை ஒலிக்க, சிலர் பூசையின் சிறப்பைப் பாராட்டுவதைக் காண்பித்து திருப்பரங்குன்றத்துச் சித்திரச் சாலைக்குள் எம்மை அழைத்துச் செல்கிறார்.

மன்மதனின் இன்பமாளிகையான அந்த சித்திரச்சாலையில் துருவ நட்சத்திரத்துடன் சூரியன் முதலிய கிரகங்களின் நிலையை விளக்கும் வானவியல் பற்றிய சித்திரங்களை அவர்கள் பார்ப்பதையும், இன்னோரிடத்தில் இருந்த சில சித்திரங்களைக் காட்டி மனைவியர் கேட்க கணவன்மார் இவள் இரதி, இவன் காமன் எனப்பதில் கூறுவதையும் வேறோரிடத்தில் இருந்த சித்திரத்தைப் பார்த்து இந்த உருவம் பூனையுருவம் எடுத்த இந்திரன், இவள் அகலிகை, இவன் கௌதமன். இவனது கோபத்தினால் அகலிகை கல்லானாள் என்று விளக்கிக் கூறுவதையும் காட்டி மகிழ்விப்பதோடு திருப்பரங்குன்ற முருகன் கோயில் பல சித்திர மண்டபங்களை உடையதாய் மங்கலகரமாக விளங்கியது என்கிறார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த திருப்பறங்குன்றத்து சங்ககால முருகன் கோயிலுக்குச் சென்ற சங்கச் சான்றோராகிய கடுவன் இளவெயினனார், எமக்காக முருகனிடம் மூன்று பொருட்களக் கேட்டு வாங்கி வைத்துள்ளார்.
…………………………யாம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருளிணர் கடம்பின் ஒலிதா ரோயே
                                                         - (பரிபாடல்: 5: 79 - 81)
கடுவன் இளவெயினனார் எண்பத்தியொரு அடிகளில் இயற்றிய இப்பாடலுக்கு சங்ககால இசையமைப்பாளர்களில் ஒருவரான கண்ணன் நாகனார் என்பவர் 'பாலையாழ்' எனும் பண்ணில் இசையமைத்துள்ளார். சங்ககாலத்தில் வாழ்ந்த இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர்.
இனிதே,
தமிழரசி.
['கலசம்' இதழுக்கு 1999ல் எழுதியது]

No comments:

Post a Comment