Saturday, 20 February 2016

எம்மால் முடியுமா?


இந்த உலக இயற்கை பலவைகையான அற்புத இரகசியங்களால் நிறைந்தது. மிகச்சிறிய கரையான் தன் சின்னஞ்சிறிய வாயால் மண்ணை மென்மையாக்கி எத்தனை பெரிய புற்றைக் கட்டி எழுப்புகிறது! கரையான் புற்றைப்போல் ஒரு புற்றை எம்மால் கட்ட முடியுமா? அங்கும் இங்கும் தொங்கிப் பாய்ந்து தன்னைவிடப் பல மடங்கு பெரிய வலையை பின்னுகிறதே சிலந்தி அதன் வலையை நம்மால் பின்னமுடியுமா? 

எனது சிறுவயதில் ஒரு சிலந்தி வலையைப் பார்த்து அதைப் போல் கீற எனக்கு மூன்று நாட்கள் பிடித்தன என்பது எனக்குத்தான் தெரியும். ஏனெனில் நான் சாப்பிட்டு வரமுன்போ, பாடசாலை சென்று வர முன்போ அது தன் வலையில் சிறிது மாற்றம் செய்திருக்கும். அதுவும் மிகமிக நுட்பமாகச் செய்திருக்கும். அந்த நுட்பத்தைக் கண்டுபிடித்து நான் திருத்தம் செய்யவேண்டி இருந்தது. கரையானால் சிலந்தியால் மிக இலகுவாகச் செய்ய முடிந்தனவற்றை எம்மால் செய்ய முடியாதல்லவா? 

காரியாசானும் இத்தகைய ஐந்து அற்புதங்களை கூறி, நன்கு கற்றறிந்த வல்லமை உடையோர் கூட அவற்றை செய்வோம் என்று நினைக்க மாட்டார்கள் என்றும் சிலருக்குச் செய்ய அருமையாக இருக்கும் செயல்கள் சிலருக்கு எளிமையாக இருக்குமென்கிறார். காரியாசான் கூறும் செயல்களைச் செய்ய எம்மால் முடியுமா? பாருங்கள்.

“வான்குருவிக் கூடரக்கு வாலுலண்டுநூல் புழுக்கோல்
தேன்புரிந் தியார்க்குஞ் செயலாகா - தாம்புரீஇ
வல்வவர் வாய்ப்பன வென்னாரொ ரோவொருவர்க்
கொல்காதோ ரொன்று படும்”                                      
                                                          - (சிறுபஞ்சமூலம்: 25)

இச்செயல்களைச் செய்வதற்கு முன்னர் காரியாசான் சொல்லும் அற்புதங்கள் ஐந்தும் எவையெனப் புரிந்ததா? காரியாசானின் இவ்வெண்பாவைப் பொருள் விளங்கக் கொஞ்சம் பிரித்துப் படிப்போமா?

“வான்குருவிக் கூடுஅரக்கு வால்உலண்டு நூல் புழுக்கோல்
தேன்புரிந்து யார்க்கும் செயல்ஆகா - தாம்புரீஇ
வல்லவர் வாய்ப்பன என்னார் ஓரோ ஒருவர்க்கு
ஒல்காது ஓரொன்று படும்”                                            
                                                         - (சிறுபஞ்சமூலம்: 25)

அதாவது வான் குருவிக் கூடு, அரக்கு, வால் உலண்டு நூல், புழுக்கோல், தேன் கூடு போன்றவற்றை செய்தல் எல்லோர்க்கும்[யார்க்கும்] செய்ய முடியாது [செயல்ஆகா]. தாமே செய்யக்கூடிய வல்லமை உடையோரும் [வல்லார்] செய்வதற்கு வசதியானது [வாய்ப்பு] எனச் சொல்லார். ஓர் ஒருவர்க்கு [ஓரோஒருவர்க்கு] இயலாதது [ஒல்காது] ஒருவருக்கு இயலும் [ஓரொன்றுபடும்]. 

வான்குருவிக் கூடு, அரக்கு, வால் உலண்டு நூல், புழுக்கோல், தேன் பொதி பார்த்திருக்கிறோம். நாம் அன்றைய தமிழ்ச் சொற்கள் பலவற்றை மறந்து போகிறோம். அதனால் காரியாசன் கூறும் சொற்களும் எமக்கு விளங்கவில்லை. 

வான்குருவிக் கூடு:

வானத்தில் தூங்குவதால் தூக்கணம் குருவிக் கூட்டை வான்குருவிக் கூடு என்பர். வான் குருவிகள் [தூக்கணம் குருவிகள்] வானத்தில் சிறகடித்துப் பறந்தபடி, மின்மினிப் பூச்சியை மின் விளக்காக வைத்து அடுக்கு மாடி  வீட்டைக் - கூட்டை எவ்வளவு அழகாகக் கட்டுகின்றன! அவை எவ்வளவு எளிமையாய் விரைவாய் அக்கூட்டைக் கட்டுகின்றன. வான்குருவி போல அந்தரத்தே பறந்தபடி அதன் கூட்டைக் கட்ட எம்மால் முடியுமா?

அரக்கு:

நம் முன்னோர்களின் அரிய கண்டுபிடிப்பு இந்த அரக்கு. இப்போ அரக்கு நிறத்தைத் தெரிந்த எமக்கு அரக்கைத் தெரியாது. அந்நாளில் கடிதங்களை பிறர் உடைத்துப் படிக்காது இருப்பதற்காக செந்நிற அரக்கை உருக்கி ஊற்றி, தமது தனிப்பட்ட முத்திரையை [சீல் - seal] அதன் மேல் அடித்து அனுப்புவர். அந்த அரக்கையே இப்பாடலில் காரி நாயனார் குறிப்பிடுகிறார். அரக்கை கல்யாண முருங்கை, பூவரசமரம் போன்ற மரங்களில் இருந்து எடுப்பர். மரத்தின் சாற்றைக் குடித்து வாழும் ஒருவகைப் பூச்சி [அரக்குப் பூச்சி] மரக்கொப்புகளில் பாச்சும் திரவமே காற்றோடு சேர்ந்து அரக்காக மாறுகிறது. அந்த அரக்கை உண்டாக்க எம்மால் முடியுமா? 

வால் உலண்டு நூல்:

‘வால் உலண்டு நூல்’ கேள்விப்பட்டு இருகின்றீர்களா? உலண்டு என்றால் என்ன? கலித்தொகை  ‘உலண்டு’ பட்டுப்புழுவைச் சொல்கிறது. உயர்ந்த பட்டுப்புழுவின் நிறத்தை ஒத்ததாய் எருதின் கண் இருக்கும் என்று சொல்லும் இடத்தில் கலித்தொகை 
“மேல் பட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன்குருக் கண்”     
- (கலித்தொகை: 110: 15)
எனப் பட்டுப்புழுவை உலண்டு என்று கூறுகிறது. வால் என்பது வெண்மையை - வெள்ளை நிறத்தைக் குறிக்கும். பட்டுப்புழு வெண்மை நிறமானது. பட்டுப்பூச்சி இடும் முட்டையில் இருந்து வெளிவரும் பட்டுப்புழு உண்டாக்கும் ‘பட்டு நூலே’ வால் உலண்டு நூலாகும். கயிறு, நூல் போன்றவற்றை ஒன்றில் சுற்றும் போது மேழும் கீழுமாக மாறி மாறிச் சுற்றுவோமே அப்படிச் சுற்றுவதை உலண்டாகச் சுற்றுவது என்றே இன்றும் கூறுகிறோம். அந்த உலண்டாகப் பட்டு நூல்களைச் சுற்றும் செயலை உலண்டுகளே தம் கூட்டைச் சுற்றி முதன்முதல் செய்தன. நாம் அவற்றைப் பார்த்தே அப்படிச் சுற்றக் கற்றோம். வால் உலண்டு நூலை [பட்டு நூலை] உருவாக்க எம்மால் முடியுமா?

புழுக்கோல்:

ஒருவகை அந்துக்கள் நேரான மரக்குச்சிகளை ஒன்றோடு ஒன்று அடுத்தடுத்து வைத்து கூடுகட்டி கூட்டுப்புழுவாக வாழும். அத்தகைய கோல்கூடுகளே புழுக்கோல் என்று அழைக்கப்படும். அந்தப் புழுக்கோலை அமைக்க எம்மால் முடியுமா?

தேன்கூடு:

இயற்கையின் இனிமை ததும்பும் ஓர் அற்புதமே தேன்கூடு. யாராவது தேன் கூட்டை எடுத்து அளந்து பார்த்திருக்கிறீர்களா? எனது சிறுவயதில் தேன் மெழுகை எடுத்து வைத்து, தேன்கூட்டினுள் அறுகோணத்தில் இருக்கும் சின்னஞ்சிறு அறைகளை அளந்து பார்த்திருக்கிறேன். எல்லா அறைகளும் ஒன்றுபோல் எவ்வளவு நேர்த்தியாகக் கட்டுகின்றன. எந்த வெப்பநிலை மாற்றத்தையும் தாங்கி தேன் பழுதடையாமல் இருக்கிறதே. அந்தத் தேனை, தேன் மெழுகை, தேன்கூட்டை செய்ய எம்மால் முடியுமா? 

குருவி, பூச்சி புழுக்களால் மிக இலகுவாகச் செய்ய முடிந்தவற்றை எம்மால் செய்ய முடியுமா? ஆதலால் ஒருவர் மிக இலகுவாகச் செய்ததை மற்றவரால் அதே போல் எளிதாகச் செய்ய இயலாது என்கிறார் காரியாசான். 
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment