Thursday 25 February 2016

குறள் அமுது - (112)

குறள்:
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற”                                                   - 34

பொருள்:
மனத்தில் குற்றம் இல்லாமல் இருத்தலே எல்லா அறங்களுமாகும். மற்றவை யாவும் வெறும் ஆரவார ஆடம்பரங்களே. 

விளக்கம்:
இத்திருக்குறள் அறத்தின் மேன்மையை வலியுறுத்திக் கூறும் ‘அறன் வலியுறுத்தல்’ என்னும் அதிகாரத்தில் இருக்கிறது. இத்திருக்குறளில் அறம் செய்பவன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார்.

அறநூல்கள் முப்பத்திரெண்டு அறங்கள் பற்றிக்கூறும். இந்த அறங்களைச் செய்வோரின் மனம் தூய்மையாக இருக்க வேண்டும். மனத்துக்கண் மாசிலன் ஆதல் - களவு, பொய், அகங்காரம், போட்டி, பொறாமை, அடுத்துக் கொடுத்தல், நயவஞ்சகம் போன்ற குற்றங்கள் இல்லாது மனம் சுத்தமாக இருக்க வேண்டும். 

அதாவது தூசு போன்ற மாசு படிந்த கண்ணாடிக்கு அருகே மிக விலையுயர்ந்த உயர்ந்த பொருள் இருந்தாலும் அதனை அக்கண்ணாடியில் பார்க்க முடியாது. அது போல் மாசு - குற்றம் நிறைந்த நெஞ்சினர் செய்யும் அறமும் அறமாகாத் தெரியாது -விளங்காது. மங்கி மறைந்து போகும். அதுவும் தனியொருவர் அல்லாமல், பொது நலத்திற்கு உழைப்போர் என்று தம்மை அடையாளப்படுத்துவோர் நெஞ்சம் - உள்ளம் - எண்ணம் யாவும் மிகவும் தூய்மையானதாக கைகள் கறைபடியாததாக இருக்கவேண்டும். 

அறத்தை வலியுறுத்திக் கூறவந்த திருவள்ளுவர் ஏன் மனத்தூய்மையை வலியுறுத்துகிறார் என்பது சிந்திக்கத் தக்கது. உலக ஆற்றல்களில் மிகவலிமையான ஆற்றல் தூயமனம் உடையோரின் மன ஆற்றலேயாகும். அத்தகைய மனமுடையோர் எதனையும் ஒருவர்க்கு கொடுக்காத போதும் செய்யவேண்டும் நினைத்தாலே அது அறனாகும். அந்தத் தூய்மை உள்ளத்தின் மன ஆற்றல் அறனாற்றலாய் பிறரை வாழ்விக்கும். அவர்கள் நினைத்தது தானாக நிறைவேறும்.  மனமது சுத்தமானால் மந்திரம் செய்யத் தேவையில்லை என்ற முதுமொழி இதனைச் சொல்லாமல் சொல்கிறது. தூய மன ஆற்றாலே அனைத்து அறனாகும் என்கிறார் திருவள்ளுவர்.

ஆகுலம் என்றால் ஆரவாரம். மனத்தூய்மை இல்லாமல் செய்யப்படுகின்ற அனைத்து அறங்களும் பகட்டுக்காய் செய்யப்படும் கபட நாடகங்களே. இந்த ஆரவாரத்தையே அறநிறுவனங்கள் என்ற போர்வையில் பலர் செய்கின்றனர். எனவே அறம் செய்பவனுடைய மனதில் - எண்ணத்தில் தூய்மை இருக்க வேண்டும். அதுவே எல்லா அறங்களுமாகும். மனதில் தூய்மை இல்லாமல் செய்யும் அறங்கள் யாவும் வெறும் ஆடம்பரமான ஆரவாரங்களே. 

No comments:

Post a Comment