Monday, 1 February 2016

பாற்கடல் பூங்காவனம் எனும் ஏழு தீவகங்கள்

அசுரரும் தேவரும் பால்கடல் கடைதல்
கம்போடியாவில் உள்ள ஐங்கோர்வாட் கோயிலுக்கு 11/11/2012ல் சென்றபோது எடுத்த படம் 

பாற்கடல் பூங்காவனமா! அதுவும் தீவுகளா!! வியப்பாக இருக்கின்றதா!!! பரந்தாமன் பள்ளி கொண்ட பாற்கடலே தான். அமிர்தம் பெறுவதற்காக அசுரரும் தேவருமாய்ச் சேர்ந்து பாற்கடல் கடைந்தார்களே, அதே பாற்கடல் தான். அன்று அந்தப் பாற்கடலின் பொழிலாய் - பூங்காவனமாய் நம் தீவகங்கள் ஏழும் இருந்தன. நம்பமுடியவில்லையா? முதலில் பாற்கடலைப் பார்ப்போமா?

பாற்கடல் என்றால் என்ன? எனது தந்தை [ பண்டிதர் மு ஆறுமுகன்] எனக்கு திருப்பாற்கடல் கடைந்த கதையைச் சொன்ன காலத்தில் [நான் சிறுமியாய் இருந்த பொழுது] நான் அவரைக் கேட்ட கேள்வியே இது. அது ஓர் இரவு நேரம். முற்றத்தில் நிலவு காய்ந்து கொண்டு இருந்தது. முற்றத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். 

நிலவைக் காட்டி “அது என்ன?” என்று என்னைக் கேட்டார்.
“சந்திரன்” என்றேன்.

“வேறு எப்படியெல்லாம் சந்திரனைச் சொல்வார்கள்?” எனக் கேட்டார்.
“நிலவு, மதி, சந்திரன்..” என்று எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன்.

“இந்த நிலவு எப்படித் தெரிகிறது?” என வினவினார்.
“வட்டமாய் பால் போலத் தெரிகிறது” என்றேன்.
“இப்போ பாற்கடல் புரிந்ததா?” என்று சிரித்தார். எனக்கு ஏதும் புரியவில்லை.

“நிலவுக்கும் பாற்கடலுக்கும் என்ன தொடர்பு?” என்றேன்.
“மகள்! கொஞ்சம் முந்தி நீங்க தானே சொன்னீங்க பால் நிலவு” என்று. “ஏன் பால் நிலவு என்று சொன்னீங்க?” “நிலவு என்ன பசும்பாலாய் சிந்துகிறதா?” என்றார்.
“நிலவு பால் போல வெண்மையாய் இருப்பதால் அப்படிச் சொன்னேன்” என்றேன்.
“கடலும் பால் போல் வெண்மையாய் இருந்ததால் பாற்கடல் என்றார்கள்” என்றார்.

“கடல் எங்கே வெள்ளையாக இருக்கிறது?” என்றேன்.
“வடதுருவம் தென் துருவம் எங்கும் கடல் வெள்ளையாக இருக்கிறதே” என்றார்.
“அது பனிப்பாறை அல்லவா” என்றேன்.
“பனிப்பாறைக்குக் கீழே கடல் இல்லையா?” என்றார். கடல் கடுங்குளிரால் உறைந்து மெல்லப் பனிப்பாறையாய் - பாற்கடலாய் மாறி இருக்கும்” என்றார். தொடர்ந்து கதை சொன்னார்.

“ இப்போது வடதுருவம் தென்துருவம் இருப்பது போல அந்தக் காலத்தில் நம்ம வங்கக் கடலிலும் இடையிடையே பனிப்பாறை இருந்தது. அதைக் கண்ட பண்டைய தமிழர் பாற்கடல் என்று அழைத்தனர். கால நிலை மாற்றத்தால் குமரிமலைக்குக் கிழக்கே பெரிய பனிப்பொழிவு ஏற்றட்டது. நீர்நிலைகள் எல்லாம் உறைந்து போக மக்கள் குடிக்கவும் நீர் இன்றி அவதிப்பட்டனர். அதனால் தமிழரும் ஆரியரும் சேர்ந்து வங்கக் கடலைக் கடைந்தனர்.” 

“ஆண்டாள் ‘வங்கக் கடல் கடைந்த மாதவனை’ எனச் சொல்கிறாள் அல்லவா? வங்கக் கடல் பனிக்கடலாய் - பாற்கடலாய் இருந்ததால் அதைக் கடைந்தார்கள். பனிப் பாறையைக் கடையக் கடைய நல்ல தண்ணீர் - குடிநீர் வருந்தானே! தண்ணீரைக் கண்டதும் தமிழரும் ஆரியரும் ஒருவரோடு ஒருவர் அடிபட்டு, போர் செய்து தமிழரில் ஒருபகுதியினர் இறந்தனர். இருந்த தமிழரில் சில அடிவருடித் தமிழரும் ஆரியரும் சேர்ந்து உண்டாக்கிக் கொண்டதே பாற்கடல் கடைந்த கதை”

பாற்கடலைக் கடைய அசுரர்கள்  நின்ற பக்கம் [கம்போடியா]
தீவார்கள் அசுரர்களாதலால் மகனை அசுரர் பக்கம்விட்டு படமெடுத்தேன்

“சங்க காலத்தமிழருங்கூட கிழக்குக் கடலைத் ’தொடுகடல்’ என்பர். தோண்டிய கடலே தொடுகடல். பனிக்கடலை - பாற்கடலைக் கடையக் கடைய அது தோண்டப்படும் தானே? அதுமட்டுமல்ல இந்தப் பனிக்கடல் கடைந்த கதை கிழக்கே சுமத்திரா, யாவா, இந்தோனேசியா, தாய்லாந்து, கம்பூசியா போன்ற நாடுகள் யாவிலும் சொல்லப்படும் கதையாகும். மேற்கே உள்ள நாடுகளுக்கு அவ்வளவாகத் தெரியாது.” 

“மகள்! இங்க நீங்க இரண்டு விடயத்தைக் கவனிக்க வேண்டும். ஒன்று பாற்கடல் மற்றது தண்ணீர். தண்ணீரை, தமிழர் அமிர்தம் என்றனர். அதனால் திருவள்ளுவரும் ‘வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்று உணர்’ என்றார். அவர் இக்குறளில் மழையே உலகத்தை வாழ்விக்கும் அமிழ்தம் என்கிறார் அல்லவா? தண்ணீர் என்ற அமிழ்தத்தையே தேவர்கள் உண்டார்கள். தண்ணீர் இல்லாவிட்டால் உலக உயிர்கள் எத்தனை நாளைக்கு உயிர் வாழும்?”

“பாற்கடல், அமிழ்தம் போன்ற தமிழ்ச்சொற்களின் உண்மைக் கருத்துக்கள் ஆரியருக்குத் தெரியாது. ஆரியர் பழந்தமிழரின் ஆகுபெயரின் கருத்தை அறியாது பாற்கடல் என்றும் அமிழ்தம் என்றும் சொல்ல, நம்மை ஆளவந்த ஆங்கிலேயரும் Milky Ocean, Nectar என்று சொல்கிறார்கள். அது தொடர்கதையாய் நீள்கிறது. பண்டைய தமிழர் மிகத் தெளிவாய் ஆராய்ந்து அறிந்ததை எல்லாம் போட்டு மூடி, சமாதி கட்டுகிறோம்” என்றார்.


வெள்ளத்தின் மேலொரு பாம்பு

என் தந்தை சொன்னது போல நம் முன்னோர்கள் யாராவது பாற்கடலை வேறுவிதமாகச்  சொன்னதுண்டா? எனத்தேடியதில், பெரியாழ்வார் பாடிய பெரியதிருமொழியில்
“வெள்ளை வெள்ளத்தின் மேலொருபாம்பை மெத்தையாக 
                விரித்து அதன்மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் 
                காணலாங்கொல்…”
                                            -(பெரியதிருமொழி: 1: 439: 1- 2)

என்கின்றார். இப்பாசுரத்தில் வரும் ‘வெள்ளை வெள்ளம்’ என்பது வெள்ளை நிறமான வெள்ளப் பெருக்கு. இங்கே பாம்பு என்பது வரம்பைக் குறிக்கும். வெள்ளைநிறமான வெள்ளப் பெருக்கின் மேலே பனியாலான வரம்பை[பாம்பை - பனியாலான வரம்பை பாம்பு என்பர் - தமிழரின் ‘பனி அணை’ என்ற சொல்லை பிறமொழி பேசியவர்கள் ‘பணி அணை’ எனச் சொல்ல பிற்காலத்தில் பாம்பணை ஆயிற்று] மெத்தையாகப் பரவி[விரித்து] பரந்தாமன் கள்ளநித்திரை கொள்வதாகப் பாடியுள்ளார். பெரியாழ்வார் பனிப்பெருக்கை ‘வெள்ளை வெள்ளம்’ எனக்கூறுவதால் பனிக்கடலே பாற்கடல் என்பது தெளிவாகிறது.

இருப்பினும் சிலர் பாற்கடலையே வெள்ளை வெள்ளம் என்று பெரியாழ்வார் சொன்னர் எனக்கருதலாம். கம்பராமாயணத்தின் ‘சடாயு வதைப்படலம்/ சடாயு உயிர் நீத்த படலத்தில்’ இராம இலக்குவனர் சீதையைத் தேடிவரும் வழியில் கம்பர் ஒரு காட்சியைக் காட்டுகிறார். வில்லொன்று உடைந்து கிடப்பதைப் பார்த்த இராமன்
“சிலை கிடந்ததால், இலக்குவ! தேவர் நீர் கடைந்த
மலை கிடந்தென வலியது வடிவினால் மதியின்
கலை கிடந்தன்ன காட்சியது”                             
                                                   - (க.ரா: ஆ.கா: 3487: 1 - 3)
என இலக்குவனுக்குச் சொல்கின்றான்.

அதாவது “இலக்குவனே! வில் [சிலை] கிடக்கிறது. அது தேவர்கள் நீர் கடைந்த மந்தர மலை கிடந்தது போல வலிமையுடையது. வடிவத்தால் பிறைச்சந்திரன் கிடப்பது போல காட்சி தருகிறது” என இராமன் கூறுகிறான். இதிலே ‘தேவர்கள் நீர் கடைந்த மலை வலிமை உடையது’ என இராமர் கூறுவதாகத் தானே கம்பர் பாடியுள்ளார். பால் கடைந்தது என்று பாடவில்லையே. இதைவிடவா தேவர்கள் நீர் கடைந்தார்கள் பால் கடையவில்லை என்பதற்கு ஆதாரம் வேண்டும்? 

இதுமட்டுமல்ல பனிக்கடலைக் [பாற்கடலைக்] கடைவதற்கு தகுந்த வலிமைமிக்க மந்தர மலையைத் தூக்கிச் சென்று ‘புங்குடுதீவாரே’ கடலினுள் போட்டார்கள் என்றும் யுத்தகாண்டத்தில் கம்பர் குறிப்பிட்டுள்ளார். மந்தர மலையையே தூக்கும் வீராதி வீரராய் நம் முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆண்டாள் பாடியது போல் வங்கக் கடலில் நீர் கடைந்திருந்தால்  நம்மவர்களும் மந்தரமலையை பனிப்படலத்தின் மேல் உருட்டிச் சென்று போட்டிருப்பார்கள். 

எனவே இன்றும் வங்கக் கடலில் இருக்கும் நம் தீவகங்களே அன்றும் பாற்கடலாய் இருந்த போதும் இருந்தன. அப்போது அவை பொழில்களாக - பூங்காவனங்களாக -சோலைகளாக இருந்தன. நம் தீவகங்களின் பண்டைய பெயர்களே அவை அன்று பூங்காவனங்களாக இருந்தன என்பதற்கு ஆதாரமாய் இருக்கின்றன. கந்தபுராணம், இராமாயணம், நிகண்டுகள் மட்டுமல்ல 'சங்கீத ரத்னாகரம்' போன்ற சமஸ்கிருத இசை நூல்களும் நம் தீவகங்களின் பண்டைய பெயர்களைக் கூறுகின்றன.

சிறுவயதில் கணிதம் படிப்பதற்காக வாய்ப்பாடு பாடமாக்குவோம் அல்லவா? அதுபோல நம் முன்னோர் தமிழைப் படிப்பதற்கு சிறுவயதில் நிகண்டை மனனம் செய்தனர். இன்று எம்மிடம் இருக்கும் நிகண்டுகளில் காலத்தால் முந்தியது திவாகர நிகண்டாகும். அது  கி பி 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர்.

திவாகரநிகண்டு எமது எழுதீவுகளின் பெயர்களையும் கூறி அவற்றை ஏழு பொழில் - பூங்காவனம் எனவும் சொல்கிறது. 
“நாவலந் தீவே இறலித் தீவே
குசையின் தீவே கிரவுஞ்சத் தீவே
சான்மலித் தீவே தெங்கின் தீவே
புட்கரத் தீவே எனத்தீ வேழே
ஏழுபெருந் தீவும் ஏழ்பொழில் ஏனப்படும்”
                                                       - (திவாகர நிகண்டு: )

          ஏழு பொழிலாய் இருந்த ஏழுபெருந் தீவும்
அன்றைய பெயர்
பேருக்காண காரணம்
இன்றைய பெயர்
நாவலந்தீவு நாவல் மரப்பொழில் நயினாதீவு
இறலித்தீவு மருத மரப்பொழில் 
[இறலி - மருதம்]
காரைதீவு
குசைத்தீவு தர்ப்பைப் பொழில் 
[குசை - தர்ப்பை]
வேலணைத்தீவு
கிரவுஞ்சத் தீவு புங்க மரப்பொழில் 
[கரஞ்சம் - புங்கம்]
புங்குடுதீவு
சான்மலித்தீவு இலவ மரப்பொழில் 
[சான்மலி - இலவு]
அனலைதீவு
தெங்கின் தீவு தென்னை மரப்பொழில்  எழுவைதீவு
புட்கரத்தீவு தாமரைப் பொழில் 
[புட்கரம் - தாமரை]
நெடுந்தீவு


குசை - தர்ப்பை
இன்று இருக்கும் இந்த எழு தீவுகளில் வேலணை - சரவணை, நாரந்தணை, ஊர்காவற்றுறை, மண்டைதீவு எனப் பல பகுதிகளாகப் பிரிந்து இருக்கின்றது. பண்டைக் காலத்தில் இவையாவும் ஒரு பெருந்தீவாக குசைத்தீவு என அழைக்கப்பட்டது என்பதை பண்டைய நூல்கள் ஏழுதீவாய்ச் சொல்வதில் இருந்து அறியலாம். அப்படி இருந்த போதும் சரவணை - சரவணப் பொழிலாகவும், நாரந்தணை - நாரந்தப் பொழிலாகவும் மண்டைதீவு - புன்னைப் பொழிலாகவும் இருந்தமை தெரிகிறது. 


சரவணம் - நாணல்
தர்ப்பையைப் போல சரவணம் என்பதும் ஒருவகைப் புல். சரவணப்புற்கள் வளர்ந்த கரைப்பகுதியை சரவணை என்றனர். அணை என்பது கரையைக் குறிக்கும். தோடை இனத்தில் செம்மஞ்சள் நிறப்பழங்களைத் தருவன நாரந்தம் என அழைக்கப்படும். நாரந்தமரச் சோலையாக இருந்த கரை நாரந்தணை என அழைக்கப்பட்டது.  

புங்கமரமும் புன்னைமரமும் வெவ்வேறானவை. புங்கமரத்தை ‘தைலவருக்கம்’ என்னும் வைத்திய நூல் ‘கரஞ்சம்’ என்று சொல்கிறது. கரிஞ்சம் என்பது அன்றில் பறவை. புங்குடுதீவு புங்கமரப் பொழிலாய் காட்சி அளிக்க, மண்டைதீவுக் கரை எங்கும் புன்னைக்காடு மண்டிக்கிடந்தது. அதனால் மண்டைதீவு என்றனர். கடல் அரிப்பைத் தடுப்பதற்காக நம் தீவுகளின் கடற்கரையைச் சூழ இருந்த கடலுக்குள்ளும் புன்னைமரத்தை பண்டைய தமிழர் நட்டு வளர்த்தனர். இன்றும் புங்குடுதீவு, மண்கும்பான், மண்டைதீவுப் பகுதிகளில் புன்னை மரத்தைப் பார்க்கலாம் என நினைக்கிறேன்.

நம் தமிழ் முன்னோர் எவ்வளவு இரசனை உடையவர்களாக இருந்திருந்தால் ஒவ்வொரு தீவிலும் ஒவ்வொரு மர இனத்துக்கு முதன்மை கொடுத்து வளர்த்து அவற்றின் பெயர்களால் அத்தீவுகளை அழைத்திருப்பர்? நாம் என்ன செய்தோம்??
“மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்”
                                                  - (நற்றிணை: 226: 1)
மருந்துக்காகக் கூட மரத்தைச் சாகடித்து மருந்து உண்ணாத மனிதராய் வாழ்ந்த நம் மூதாதையர் எங்கே? நாம் எங்கே? ஏழு தீவிலும் நம் முன்னோர் எமக்காக விட்டுச்சென்ற ஏழ்பொழிலும் எங்கே!! சிந்திப்போமா?
இனிதே,
தமிழரசி.


2 comments:

  1. இன்று என் வகுப்பில் அன்றில் பறவையை மாணவர்களுக்குக் காட்டுவதற்குத் தேடியபொழுது தங்களின் வலைப்பூ கண்களில் பட்டது. எவ்வளவு அரிய தகவல்கள். மிகவும் நன்றி.

    ReplyDelete