Monday 11 March 2013

குறள் அமுது - (58)



குறள்:
“இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று”                            - 1067

பொருள்:
ஒருவரிடம் ஒன்றைத் தா என்று இரந்து கேட்பதானால், தம்மிடம் உள்ளவற்றை மறைத்து வைத்துக் கொண்டு இல்லை என்போரிடம் இரந்து கேட்க வேண்டாமென, இரந்து கேட்பவரை எல்லாம் இரந்து கேட்கிறேன்.

விளக்கம்:
மிக்க தனித்தன்மை பொருந்திய திருக்குறள் இது. ஏனெனில் திருவள்ளுவர் எழுதிய ஆயிரத்து முந்நூற்றி முப்பது திருக்குறளில், இத்திருக்குறளைப் படிப்போரிடம் திருவள்ளுவரே இரந்து பிச்சை கேட்கிறார். அதுவும் 'பொருளை மற்றோரிடம் கேட்டு வாங்கத் தயங்க வேண்டுமென' எமக்கு அறிவுரை கூறும் இரவச்சம் எனும் அதிகாரத்தில் அவரே எம்மிடம் இரந்து நிற்பது மனதை நெருடுகிறது.

அத்துடன் அவரது ஆளுமையை மெல்ல வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. தமிழராகிய நாம் அவர் கேட்பதை  கொடுக்க மனமில்லாது, ஒளித்து வைக்கமாட்டோம் என்றெண்ணியே ‘தம்மிடம் இருப்பதை இரப்போருக்கு கொடுக்காதோரிடம் கேட்கவேண்டாம்' என எம்மிடம் பிச்சை கேட்கிறார். 

எதற்காக அந்தப் பிச்சை? எமது தன்மானத்தை நாம் காத்துக்கொள்ள, அவர் எம்மிடம் இரந்து நிற்கிறார். திருவள்ளுவர் தனது மானத்தை பெரிதாக மதித்திருந்தால் எம்மிடம் இரந்திருப்பாரா? தன்மானத்தை கைவிட்டு, ‘கரப்பாரிடம் [ஒளித்து வைப்பாரிடம்] இரக்காதீர்கள்‘ என்று எம்மிடம் கையேந்தி நிற்கிறார். எம்மிடம் கையேந்தும் திருவள்ளுவருக்காக பொருளை வைத்துக்கொண்டு இல்லை என்போரிடம் சென்று எதையும் கேட்காது இருப்போம். 

உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவப் பெருந்தகை, தமிழராகிய எம்மிடம் இரந்து கேட்டதற்கு அமைய உலகத் தமிழராய் தலைநிமிர்ந்து நின்று, நாடென்றாலும் வீடென்றாலும் ஈயா மனம் படைத்தோரிடம் இரந்து கேட்காதிருப்போம்.  

No comments:

Post a Comment