Thursday, 21 March 2013

சங்ககாலத் தாய்மார் - பகுதி 2

காவற்பெண்டு என்பவர் சங்ககாலத்தில் வாழ்ந்த பெண் புலவர்களில் ஒருவர். அவருக்கு ஒரே ஒரு மகன். அவரின் வீட்டிற்கு வந்த அயல் வீட்டுப் பெண்ணொருத்தி அங்கிருந்த தூணைப் பற்றிப் பிடித்துக் கொண்டு நின்று ‘உன் மகன் எங்கே இருக்கிறான்?’ எனக்கேட்டாள். அதற்கு
“சிற்றில் நற்றூண் பற்றி, ‘நின்மகன்
யாண்டுளனோ என வினவுதி; என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே!”              - (புறம்: 86)

என் சிறுவீட்டின் அழகிய தூணைப் பற்றிப்பிடித்து நின்று ‘உன்மகன் எங்கே உள்ளான்’ என்று கேட்கிறாய், என்மகன் எங்கே இருக்கிறான் என்பதை அறியேன். புலி கிடந்து சென்ற கற்குகை போல, அவனைப்பெற்ற வயிறு இதோ இருக்கிறது. அவன் போர்க் களத்திலே தான் தோன்றுவான்' எனக் காவற்பெண்டு  சொல்கிறார். மகனின் வீரத்தில் மட்டுமல்ல, தான் தாயாக வளர்த்த வளர்ப்பில் எவ்வளவு நம்பிக்கை இருந்தால் அந்தத் தாயால் இப்படி பேசியிருக்கமுடியும்?  

இரண்டாயிர வருடங்களுக்கு மேற்பட்ட பழக்கமாக தமிழர்களிடம் இன்றும் இருப்பது, அடுத்தவர்களைப் பற்றி வம்பு பேசுவதாகும். அப்படி வம்பு பேசுவதில் பெண்களே முன்னிற்கின்றனர். அதில் மட்டும் சங்ககாலத்திற்கும் தற்காலத்திற்கும் எதுவித மாற்றமும் இல்லை. சங்ககாலத்தில் ஒரு கன்னிப்பெண்ணைப் பற்றி ஊரார் வம்பு பேசினர். அதனைக் கேள்விப்பட்டாள் தாய். எடுத்தாள் சிறு தடி. தடி வளைய வளைய போட்டாள் மகளுக்கு அடி. ஊராரின் வம்பால் தாயிடம் அடிவாங்கிய மகள் வீட்டில்  நடந்ததுதை அவளின் தோழிக்கு சொன்னதை நற்றிணை காட்டுகிறது.
“சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி
மறுகின் பெண்டிர் அம்பல் தூற்ற
சிறுகோல் வலத்தனள் அன்னை அலைப்ப
அலைந்தனன் வாழி! தோழி!”                                      - (நற்றிணை: 149)

நம்மூர் தெருவில் சிலரும் பலருமாகச் சேர்ந்து நின்று கடைக்கண்ணால் பார்த்து, ஆ! அப்படியா? என்று மூக்கு நுனியை சுட்டுவிரலால் தொட்டு, ஆச்சரியப்பட்டு, என்னைப்பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லித் தூற்றியதை அறிந்த என் தாய் (அன்னை), சிறுதடியால் அடித்தாள். அடி தாங்கமுடியாமல் நான் துடித்தேன்’ என தோழிக்குக்ச் சொல்கிறாள். 

இந்த தாய்போல் இன்னொருதாயும் மகளை அடித்து விட்டாள். பின்னர் தான் செய்த தவறுக்கு வருந்தி என்ன செய்யலாம் எனச்சிந்திக்கிறாள். அன்னி என்பவர் திதியனின் காவல் மரமான புன்னை மரத்தை வெட்டியது அந்தத தாய்க்கு ஞாபகம் வருகிறது. வெட்டப்பட்ட புன்னைமரம் எப்படியெல்லாம் துடி துடித்திருக்கும்? அப்படித்தானே என் மகளும் துடித்திருப்பாள், என தன் கைக்கு தானே தண்டனை வழங்கிக் கொள்வதை அகநானூறு (145) படம் பிடித்து வைத்துள்ளது.

“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே”
என அரசுக்கும் உலகுக்கும் தத்தம் கடமைகளை எடுத்துகூறிய பொன்முடியாரின் மகன் போர்புரிந்து அடிபட்டு வீழ்ந்து கிடக்கின்றான். பொன்முடியார், போர்க்களத்திற்குச் சென்று மகனைப் பார்க்கின்றார். அவன் சிறுவனாக இருந்த காலத்தில் ‘பாலை கிண்ணத்தில் ஏந்தியபடி, அவனைப்பிடித்து பாலைக்குடி என ஊட்டவும் குடியாது முரண்டு பிடித்தான். கோபப்பட்டவள் போல் சிறுதடியை எடுத்து ஓங்க பயந்து நடுநடுங்கி பாலைக்குடித்தான். ஆனால் இன்றோ யானைகளைக் கொன்றதோடு, மார்பில் அடிபட்டு கேடயத்தின் மீது வீழ்ந்து கிடக்கின்றான். அவனை தூக்கி எடுத்து ‘ஐயோ! மார்பில் அம்பு தைத்துள்ளதே!’ என வருந்தினேன். இளந்தாடியை உடைய அவனோ ‘அதனை யான் அறியேனே’ என்றான். ஏனெனில் முன்பு பெரும்போர்புரிந்து இறந்த மாவீரனின் மகனல்லவா அவன்,” என்று மகனைப் பார்த்துக் கலங்கிப் பெருமிதம் கொள்ளும் மறக்குலத் தாயாக பொன்முடியார் நிமிர்ந்து நிற்கிறார். (புறம்: 310).

வீதியால் போகும் அழகான ஆடவர்களை மகள்மார் பார்க்கக் கூடாது என கதவை மூடிய தாய்மாரையும் சங்க இலக்கியம் காட்டுகிறது.

“தாயார் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே - ஆய்மலர்
வண்டுலா அங்கண்ணி வயமான்தேர்க் கோதையைக்
கண்டுலாஅம் வீதிக் கதவு”                                             - (முத்தொள்ளாயிரம்: )

சேர அரசனான கோதை என்பவன், வண்டுகள் மொய்க்கும் மாலையை அணிந்து குதிரைகள் பூட்டிய தேரில் வருவதை கன்னிப்பெண்கள் பார்க்காதிருக்க தாய்மார் வீதிக்கதவை அடைக்கின்றனர். மகளிரோ திறக்கின்றனர். இப்படி இவர்கள் மாறி மாறிச் செய்ததால் வீதிக்கதவின் குமிழே தேய்ந்ததாம் என்கிறது முத்தொள்ளாயிரம்.

இப்படியெல்லாம் பொத்திப்பொத்தி வளர்த்த கன்னியரும் காளையரும் காதலில் களித்து ஒன்றுபட்டு ஊர்விட்டு ஊர், நாடுவிட்டு நாடு சென்றனர். அப்போது சங்ககாலத் தாய்மார் தவித்த தவிப்பைப் பார்ப்போமா? 

சீர்கெழு வியனகர்ச் சிலம்புநக இயலி
ஓரை ஆயமொடு பந்துசிறிது எறியினும்
‘வாராயோ!’ என்று ஏத்தி.........
............................................
என்பாடு உண்டனை ஆயின் ஒருகால்
நுந்தை பாடும் உண் என்று  ஊட்டிப்
பிறந்ததற் கொண்டும் சிறந்தவை செய்துயான்
நலம்புனைந்து எடுத்த என் பொலந்தொடிக் குறுமகள்
அறனிலாளனோடு இறந்தனள் இனிஎன
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்,
......................................................
.......................  நீர்இல் நீள்இடை
மடத்தகை மெலியச் சாஅய்
நடக்கும் கொல், என நோவல் யானே”                    (அகம்: 219)
   
“செல்வம் கொழிக்கும் பெரிய வீட்டிலே காற்சிலம்பு ஒலிக்க நடந்து திரிந்தவள். அவளது தோழிமாருடன் சிறிது நேரம் பந்துவிளையாடினாலும் களைத்திருப்பாளே என எண்ணி, கிண்ணத்தில் உள்ள பாலை ‘எனக்காக இப்ப உண்டாய், உன் தந்தைக்காகவும் உண்’ என ஊட்டுவேன். இப்படி பிறந்த நேரம் முதல் பற்பல சிறப்புகள் செய்து, அழகெலாம் ஒன்றுசேர்ந்த என் மகளைப் பேணி வளர்த்தேன். பொன் நகைகள் அணிந்த என் இளய மகளோ, அறன் இல்லாத ஒருவனுடன் வீட்டைவிட்டு போய்விட்டாள் அதற்காகக் கூட நான் வருந்தவில்லை. செந்நாய்கள் மானைப் பிடித்துண்ணும் நீர் இல்லா நீண்டநெடு வழியில், தன் இளமை அழகு போகுமாறு மெலிந்து, உடல்வருந்த நடப்பாள் அல்லவா? என வருந்துகிறேன்” என்று ஒரு தாய் புலம்புவதை கயமனார் எனும் சங்ககாலப்புலவர் பாடியுள்ளார்.

மகள் ஒருத்தி தன் காதலனுடன் வீட்டிற்குத் தெரியாமல் வேறுநாட்டிற்குப் போகிறாள் என்பதை அவளை வளர்த்த செவிலித்தாய் அறிந்தாள். அவர்களைத்தேடி அவர்கள் சென்ற வழியில் எதிரே வருவோரை எல்லாம் ‘ என் மகளைக் கண்டீர்களா?’ எனக் கேட்டுக் கேட்டுச் செல்கிறாள். பாலைவனமும் குறுக்கிடுகிறது. தாயன்பால் உந்தப்பட்டு தனியே பாலைவனத்தின் கற்களின் மேலும் முற்களின் மேலும் நடந்து செல்கிறாள். தன் எதிரே வந்த அந்தணர்களைப் பார்த்து, 
“................  கொளநடை யந்தணீர்! .........
என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாமறிகாட்சியர்
அன்னார் இருவரைக் காணீரோ பெரும!”
“அந்தணர்களே! என்மகளும் இன்னொருத்தியின் மகனும் காதலால் கட்டுண்டு இருவருமாய் இவ்வழியே சென்றதைக் கண்டீர்களா?” எனக்கேட்கிறாள். அதற்கு அவர்கள் 
“ காணோம் அல்லேம் கண்டனம் கடத்திடை
ஆணெழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய
மாணிழை மடவரல் தாயிர் நீர் போறீர்

பலவுறு நறுஞ்சாந்தம் படுபவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்
நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என்செய்யும்
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும்
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே”               - (கலி: பாலை: 8)

‘காணாமலில்லைக் கண்டோம். கொதிக்கின்ற பாலவனத்தின் வழியே ஆணழகனுடன் செல்லும் அழகிய நகைகளையணிந்த செழிப்பு மிக்கவளின் தாய்போலத் தெரிகிறீர். மலையில் வளரும் சந்தனம் பூசுபவர்க்கு அல்லாமல் மலைக்கு என்ன பயனைக் கொடுக்கும்? நினைத்துப் பார்த்தாள் உம்மகள் உமக்கும் அப்படித்தான். அழகிய வெண்முத்துக்கள் கடலினுள் விளைந்தாலும் அணிபவர்க்கு அல்லாமல் கடலுக்கு என்ன பயனைக் கொடுக்கும்? ஆராய்ந்து பார்த்தால் உம்மகள் உமக்கும் அப்படித்தான். ஏழு சுரங்களால் யாழினுள் பிறக்கின்ற இசையானது கேட்பவர்க்கு அல்லாமல் யாழுக்கு என்ன பயனைக் கொடுக்கும் எண்ணிப்பார்த்தால் உம்மகள் உமக்கும் அப்படியே. எனவே அவளுக்காக வருந்த வேண்டாம் என வழியெலாம் தேடி ஓடிய தாயின் தவிப்பைத் தணியச்செய்யும் பெருமக்களையும் கலித்தொகை காட்டுகிறது.

‘பால் குடிக்க மறுக்கும் சிறுமி. தேன்கலந்த பாலை பொற்கிண்ணத்தில் ஏந்தியவாறு, பூங்கொத்தால் பொய்யாக அடிப்பது போல் மிரட்டியபடி நற்றாய் செல்கிறாள். செவிலித்தாய் அவளைப்பிடிக்க ஓடுகிறாள். அவளோ இவர்கள் நுழைய முடியாத பூம்பந்தருக்குள் நுழந்து கொள்கிறாள். அப்படி பால் குடிக்காது பொற்சிலம்போடு ஆடித்திரிந்த சிறுமி, வளர்ந்து திருமணம் செய்து கணவன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள். இப்போதோ ஒருநேரம் விட்டு ஒருநேரம் உண்கிறாள். அவளது கணவனின் குடும்பம் வறுமை அடைந்ததைக் கண்டு, தந்தை கொடுத்த பொருளையும் வாங்காது, வாழுகின்ற பண்பை எங்கு கற்றாள்?’ என வியப்படைந்த செவிலித்தாய், அதனை நற்றாய்க்கு சொல்லும் காட்சியும் சங்க இலக்கியத்தில் இருக்கின்றது.

செவிலித்தாய் ஒருத்தி தான் வளர்த்த மகள், குழந்தை பெற்றிருப்பதை சென்று பார்த்துவந்து நற்றாய்க்கு 
“பாணர் முல்லை பாடச் சுடைழை
வாணுதல் அரிவை முல்லை மலைய
இனிது இருந்தனனே நெடுந்தகை
துனிதீர் கொள்கைத் தன்புதல்வனொடு பொலிந்தே”        - (ஐங்குறுநூறு - 408)
என எடுத்துச் சொல்வைதை ஐங்குறுநூறு ஒரு அழகிய காட்சியாக இப்பாடலில் சித்தரிக்கிறது.

அதாவது ‘பாணர்கள் முல்லைப்பண்ணை பாட, ஒளிவீசும் அணிகலன்களையும், ஒளிமிக்க நெற்றியையும் உடைய நம் மகள் முல்லை மலர்களைச் சூடி இருக்க, மேன்மைமிக்க அவளது தலைவன் அவளைப் பார்த்து மகிழ்ந்து, அழகாக மகனுடன் சேர்ந்து இனிது இருந்தான்’ என வளர்த்த தாய் பெற்றதாய்க்கு சொல்கிறாள்.

மகள் தாயாவதைப் பார்த்து மகிழ்ந்தவாறு தாய்த்தாய் நாடி இவ்வுலகம் சுழல்வதை சங்க இலக்கியங்கள் நிறையவே சொல்கின்றன. தாய் இல்லாவிடின் உலகேது? உலக உயிர்ப்பேது?
இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment