Sunday, 10 March 2013

சங்ககாலத் தாய்மார் - பகுதி 1


அன்புக்கு அளவுகோல் கிடையாது. அது எங்கே எப்போது பிறக்கும் என்று யாராலும் உணரவோ அறியவோ முடியாது. அது ஒரு வற்றாத பேராறு. அந்த அன்புப் பேராற்றின் ஆற்றலை, உலககிற்கு வெளிப்படுத்துவது உலக உயிர்களின் தாய்மையேயாகும். அம்மா என்றும் அன்னை என்றும் நாம் யாரையும் அழைத்துவிட முடியும். ஆனால் தாய் என்று அழைப்பதற்கு ஒரு மாபெரும் தகுதி இருக்கின்றது. ஒரு பெண் தன்நலம் செத்து, தான் சுமக்கும் கரு நலம் பேணும் சிலிர்பின் பண்பே தாய்மையாகும். அந்த தாய்மை எனும் தகுதியைப் பெற்றவளே தாயாவாள். தாய்மையின் தகுதியை, அதன் மேன்மையை அறிந்தவர்கள் எம் தமிழ் மூதாதையர். அதனாலேயே தெய்வத்தைவிட தாய்க்கு முதன்மை  கொடுத்தனர். அதனை “தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை” என்ற முதுமொழி எடுத்துக் காட்டுகிறது. தம்மைப் பெற்றெடுத்த தாய் தந்தையரை கண்கண்ட தெய்வமாக தமிழர் போற்றி வணங்கியதால் அவர்களுக்கென தனிப்பட்ட நாள் ஒன்றைக் குறித்துவைத்து சிறப்பிக்கவில்லைப் போலும். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்னும் ஔவையார் வாக்கும் அதனையே காட்டுகிறது. 

அதனால் தமிழர் தாய், தந்தையர் இறந்தபின் அவர்கட்கென்று நாள்குறித்து அவர்களைத் தொழுதனர். அதுவே தென்புலத்தார் வழிபாடு ஆயிற்று. தமிழர் வாழ்ந்த நிலப்பரப்பை தெற்கே இருந்த கடல் பொங்கி எழுந்து பல கடல்கோள்களால் அழித்தது. அப்படி இறந்தோர் தெற்குக் கடலோரம் கிடந்ததால் தென்திசை - தென்புலம் இறந்தோர் இருப்பதாக நம் பண்டைத் தமிழர் நம்பினர் போலும். எனவே இறந்தோரை தென்புலத்தார் என அழைத்தனர். 

வள்ளுவரும்
“தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை”              - (குறள் - 43)
என்றார். இறந்து தென்புலத்தாராய் வாழும் தாயை சித்திரை பௌர்ணமி அன்றும், தந்தையை ஆடி அமாவாசை அன்றும் நினைவு கூர்ந்து வழிபட்டனர். அதிலும் ஈழத்தமிழரே அதனைத் தொடர்ந்தும் செய்து வருவதைக் காணமுடிகிறது. தாம் நேரிற்கண்ட தெய்வமாய் போற்றப்படவேண்டிய தாய் தந்தையர்க்கு வருடத்தில் ஒரு நாள் மட்டும் வாழ்த்துச் சொல்லி, வாழ்த்துமடல் கொடுப்பதால் மட்டும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடமுடியுமா? தன் ஊனுருக்கி  எம் உயிர் சுமந்தவளின் மனம் நோகாது வாழ்தலே, தாய்மார்க்கு நாம் செய்யும் மாபெரும் தொண்டு எனக் கருதினர்.

பெண்களின் சிறந்த பண்புகளான அன்பு, பாசம், எளிமை, அரவணைப்பு யாவும் தாய்மை நிலையை அடையும் போதே, நன்கு மெருகேற்றப்படுகின்றது. ஒரு பெண்ணுக்கு பெற்றோரும், ஆசிரியரும், உலகமும் கற்றுக்கொடுக்காத எத்தனையோ புதுப்புதுப் பாடங்களை தாய்மை கற்றுக்கொடுக்கின்றது.
அத்தகைய தாய்மையின் மேன்மையைச்சொல்லும் சங்கச் சான்றோர் பண்டைய தாய்மாரின் சமுதாய பண்பாட்டு, உளவியல் கருத்துக்களையும் முழுமையாக வடித்து வைத்துள்ளனர்.

பண்டைய தமிழ்ப்பெண்கள் தங்கள் குடும்பங்களை தாமே கொண்டுநடத்த வேண்டியநிலை இருந்தது.  அதனை தமிழிலுள்ள இல்லாள், மனையாள் போன்ற பெண்பாற் சொற்களுக்கு ஆண்பாற்சொற்கள் இல்லாதிருப்பது எடுத்துக்காட்டும். ஆண்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து மேற்படிப்புக்கும், பொருள் தேடவும், போர் புரியவும் சென்ற நிலையில் தாய்மார்களே குடும்பப்பொறுப்பு முழுவதையும் ஏற்று நடத்தினர். போர்களால் தகப்பன், அண்ணன், தம்பி, கணவன், மகன் என எல்லா உறவுகளையும் பறிபொடுத்த நிலையில் தமிழை, தமிழ்ப்பண்பாட்டை, கலைகளை கட்டிக்காத்து, அவற்றைத் தம் குழந்தைகளுக்கு ஊட்டிய பெருமையும் தாய்மாரையே சேரும். அதனாலேயே கணிதம், சோதிடம், மருத்துவம் போன்ற வலிந்து கற்கவேண்டிய நூல்கள் யாவும் சுடர் தொடி கேள்! பொற்றொடியாய்! மாணிழை அரிவை கேள்! என பெண்களை விழித்தே பாடங்களைக் சொல்லிக்கொடுக்கின்றன. அந்நூல்கள் பெண்களை விழித்து பாடங்களை கற்பிப்பதன் காரணம் என்ன? சிந்தியுங்கள்.

எந்த உலோகத்தை எந்த விகிதத்தில் கலப்பது முதற்கொண்டு இரத்தினங்கள், உணவுப்பொருட்கள்,  தானிய, நில அளவைகள் யாவும் பெண்களுக்கே கற்பிக்கப்பட்டதற்கு கணக்கதிகாரம் என்ற நூல் சான்று பகர்கின்றது. அன்றைய சமூக சூழலில் பொருளாதாரம் பெண்ணின் கையில் இருந்ததை அது காட்டுகின்றதல்லவா? தாயாக தன் சமுதாயப் பணியைத் தொடங்கும் பெண், கல்வி அறிவுள்ளவளாக இருந்தாலே தம்மில் தம்மக்கள் அறிவுடையவர்களாக சிறக்க முடியும் என்ற விரிந்த நோக்கு தமிழரிடம் இருந்திருக்கிறது. சங்ககாலத் தாய்மையின் பெரிதுவக்கும் தன்மையையும், அவர்கள் பெறெடுத்த பிள்ளைகள் அறிவில் சிறந்தோராய், சான்றோராய்  இருந்தையும் ஒன்றாகச் சேர்த்து 
“ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய்”                                    - (குறள் - 69)
எனத் திருள்ளுவர் தமது குறளில் வடித்து வைத்திருக்கிறார். கல்வி அறிவு ஏதும் இல்லாது மடமை சூழ்ந்திருக்கும் ஒரு தாயால் எப்படி தன் மகன் சான்றோனாகினான் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்? சான்றோன் யார்? என்பதை அறிந்தால் தானே! அத்தாயால் ஈன்றபொழுதிழும் பெரிதுவக்க முடியும். அறிவுடையவர்களாய் தாய்மார் இருந்ததை இக்குறள் காட்டவில்லையா?

பண்டைய தமிழர் தாய்வழிச் சமூகமாக இருந்ததால் தாய்மார்கள் போற்றப்பட்டார்கள். சங்ககால அரசர்கள் கூட நல்லினி ஈன்ற மகன், பதுமன் தேவி ஈன்ற மகன் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்கள் என்பதை பதிற்றுப்பத்தால் அறியலாம்.  குழந்தையைப் பெற்றேடுத்த தாய் போற்றப்பட்டதை
“ஒண்சுடர் பாண்டில் செஞ்சுடர் போல
மனைக்கு விளக்கு ஆயினள் மன்ற ........
புறவணி நாடன் புதல்வன் தாயே “                              - (ஐங்குறுநூறு: 405)
என ஐங்குறுனூறு கூறுகிறது. இதில் மகனைப் பெற்ற தாய் மிளிர்கின்ற விளக்கின் சிவந்த சுடர் போல அந்த வீட்டிற்கு  வெளிச்சம் கொடுக்கும் விளக்கானாள் என சங்ககாலப் பெண் புலவரான ஓலாந்தையார் கூறியுள்ளார்.

சங்ககாலநூல்கள் யாவும் தாய்மாரை பேரிற்பெண்டே! இற்பொலி மகடே! சிறுவர் தாயே! எனப் பல பெயர்களால் புகழ்ந்து கூறுகின்றன. குழந்தையைப் பெற்றதாய் நற்றாய் என்றும், குழந்தையை வளர்த்ததாய் செவிலித்தாய் என்றும், குழந்தையைப் பெற்றதாயால் பால் கொடுக்க முடியாத இடத்து, முலைப்பால் கொடுப்பவளை முலைத்தாய் என்றும் ஊட்டுத்தாய் என்றும் அழைத்துள்ளனர்.

குழந்தையைப் பெற்ற நற்றாய் ஒருத்தி, தன் தாய்மையின் நிறைவை அவளின் தோழிக்குக் கூறுவதை அகநானூறு காட்டுகிறது.
“இம்மை உலகத்து இசையெல்லாம் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர் எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி!”         - (அகம்: 66: 1-6)

பகைவரும் விரும்பும் குற்றமில்லாத பேரழகுடைய சிறுவரைப் பெற்ற பெருமை உடையோர், இவ்வுலகில் புகழோடு இருப்பதோடு, மறுபிறப்பிலும் குறையில்லாது இருப்பர் என்று சான்றோர் கூறிய பழமொழி எல்லாம் உண்மையானதைக் கண்டேன் தோழி! என ஒரு தாயாய் பெருமைப் படுவதைப் இப்பாடல் சித்தரிக்கிறது.

பொன்முடியார் எனும் சங்ககாலப்பெண்புலவர் தன்னைத் தாயாய் முன்னிறுத்தி, ஒரு பிள்ளைக்கு தந்தை, அரசன், சமூகம் என்னென்ன கடமைகளைச் செய்யவேண்டும் என்பதையும், அப்பிள்ளையின்  கடமை என்ன என்பதையும்
“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கி
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”                    - (புறம்: 312)
எனப் புறநானூற்றில் கூறியுள்ளார்.

புறந்தருதல் எனும் சொல் பாதுகாத்தல் எனப்பொருள்தரும். குழந்தையைப் பெற்று வளர்த்துப் பாதுகாத்தல் தாயாகிய எனது முக்கியமான கடமையாகும். அப்பிள்ளையை அறிவாலும் ஆற்றலாலும் சான்றோனாக விளங்கச் செய்வது தந்தையின் கடமையாகும். அவனின் தொழிலுக்கு வேண்டிய கருவிகளைச் செய்து கொடுத்தல் அவன் வாழ்கின்ற சமுதாயத்தின் கடமையாகும். அது வேல் செய்யும் கொல்லர் உலைக்களமாகவும் இருக்கலாம். கார் செய்யும் தொழிற்சாலையாகவும் இருக்கலாம். அவனுக்கு நல்லொழுக்கத்தை கற்பித்தல் அரசரது அதாவது அரசாங்கத்தின் கடமையாகும். பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியோடு திரும்புதல் இளைஞனின் கடமையாகும். தான் செய்யும் தொழிலில் வெற்றியை நிலைநாட்டுவது பிள்ளையின் கடமை என்கிறார். இரண்டாயிர வருடங்களுக்கு முன் ஒரு தாயாக நின்று, வீட்டிற்கும், நாட்டிற்கும் உள்ள கடமைகளைச் சுட்டிக்காட்டிய ஆளுமையுள்ள தலைசிறந்த பெண்ணாக பொன்முடியார் திகழ்ந்துள்ளார். 

ஆனால்  இப்பாடலில் பெண்ணின் அடிமைத்தனத்தை பொன்முடியார் உறுதி செய்திருப்பதாக சிலர் எழுதி வருகிறார்கள். பெண் அடிமைத்தனம் இப்பாடலில் எங்கிருக்கிறது? நாட்டை ஆளும் அரசனுக்கும் சேர்த்தே இது இது உங்கள் கடமை எனச்சுட்டிக் காட்டி இருப்பதை எப்படி அடிமைத்தனம் என்று சொல்வது?  பெண் அடிமைத்தனம் என எழுதுவோர் “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” என்று பொன்முடியார் சொன்னதில் வரும் புறந்தருதல் என்பதை பிள்ளையைப் பெறுவது எனக்கருகின்றனர். அப்படி பிள்ளையைப் பெறும் இயந்திரமாக அடிமையாக சங்ககாலப்  பெண்கள் வாழ்ந்தார்கள் என எழுதுவது சரியல்ல. பிள்ளையைப் பெறுவதே தன் கடமை என்று பொன்முடியார் இப்பாடலில் கூறவில்லை. 

புறந்தருதல் என்பது என்ன என்பதை பதிற்றுப்பத்து பாடல் சொல்வதைக் கொண்டு பார்ப்போம். அதில் 
“பாடுசால் நன்கலம் தரூஉம்
நாடுபுறந் தருதல் நினக்குமார் கடனே”          
                        - (பதிற்றுப்பத்து: 59: 18 - 19) 
என ‘திறையாக பொருட்களை கப்பலில் அனுப்பி வைக்கும் நாடுகளைப் பாதுகாப்பதும் உனது கடமையாகும்’ என்று நற்செள்ளையார் சேரலாதனுக்கு கூறுகிறார். புறந்தருதல் என்னும் சொல் பிள்ளைபெறுவது என்ற கருத்தைத் தருமானால் திறையளக்கும் நாடுகளையும் சேரலாதரன் பிள்ளை பெறுவது போல் பெற்றெடுப்பானா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். 

குழந்தையைப் பெற்றேடுப்பதை விட அப்பிள்ளையைப் பாதுகாத்து பேணி வளர்ப்பதே தாய்மாரின் பெரும் பொறுப்பாகும். அதிலும் கன்னியரையும் களையரையும் சமுதாய நலம் பேணுபவராய் வளர்த்து எடுத்துக் கொடுப்பது மிகமிகக் கடினமான செயலாகும். அந்தக் கடினமான செயலை சங்ககாலத் தாய்மார் தத்தம் பண்புகளுக்கு ஏற்ப மிக நன்றாகவே செய்திருக்கிறார்கள் என்பதை சங்கப்பாடல்கள் காட்டுகின்றன. சங்ககாலத் தாய்மார் அப்படி வளர்த்திராவிட்டால் சங்கப்பாடல்களையும், சங்க இலக்கியங்களையும், சங்கச்சான்றோர்களயும் நாம் கண்டிருக்க முடியுமா? சங்ககாலத் தாய்மாரை தொடர்ந்து காண்போம்.
இனிதே, 
தமிழரசி.

No comments:

Post a Comment