Monday, 17 June 2013

அடிசில் 58

வாழைக்காய் வதக்கல் 

                                                              - நீரா -



















தேவையான பொருட்கள்:
வாழைக்காய் [மொந்தன்]  -  4
வெங்காயம்  -  1
பச்சைமிளகாய்  -  3
கறிவேப்பிலை  - கொஞ்சம்
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு
கடுகு½ தேக்கரண்டி
சீரகம் -  ½ தேக்கரண்டி
பெருங்காயம்  - 1 சிட்டிகை
எண்ணெய் -  ¾ மே.கரண்டி 

செய்முறை:
1 . வாழைக்காயை தோல் சீவி மெல்லியதாக துண்டுகளாக வெட்டி, சிறிது உப்பு கலந்த நீரில் போடவும்.
2. வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்க.
3. உப்பு நீரில் இருக்கும் வெட்டிய வாழைக்காயை கழுவி, மூன்று நிமிடம் மைக்ரோ அவணில் வேகவைத்து எடுக்கவும்.
4. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, சீரகம் போட்டு, கடுகு வெடித்ததும்  வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை இட்டு தாளிக்கவும்.
5. வெங்காயம் பொன்னிறமாக வரும்போது மிளகாய்த்தூள், மல்லித்தூள், பெருங்காயம், உப்பு சேர்த்துக் கிளறி, வேகவைத்துள்ள வாழைக்காயைப் போட்டு பிரட்டவும்.
6. தேவையாயின் சிறிது தண்ணீர் தெளித்து வேகவிட்டு வதக்கி, வெந்ததும் இறக்கவும்.

Friday, 14 June 2013

பக்திச்சிமிழ் - 57


இன்றுநன்று நாளைநன்று
- சாலினி -

இந்த உலகில் பிறந்த உயிர்கள் யாவும் இன்பமாக வாழ்வதற்கே முயல்கின்றன. அந்த முயற்சி எல்லா உயிர்களுக்கும் ஒன்றே. ஆனால் அவை யாவும் தாம் தாம் முயலும் தன்மையில் வேறுபடுகின்றன. இந்த முயற்சியில் மற்றைய உலக உயிர்களை வென்று வீறுநடை போடுபவன் மனிதனே. எனினும் மனிதர் எல்லோரும் இன்பமாக வாழ்கிறார்களா? இல்லையே? அது ஏன்? சிலருக்கு இன்பமாகத் தெரிவது பலருக்கு துன்பத்தைக் கொடுக்கலாம். அவரவரின் மன ஆற்றலுக்கும் இயல்புக்கும் தக்கபடி அவை மாறுபடுகின்றன. அவை எப்போதும் நிலைத்து நிற்பதும் இல்லை.

இன்பம் என்பது ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம், நேரத்துக்கு நேரம் மாறுபட்டுக் கொண்டிருக்கும். 
உலக இன்பங்களின் மேல் இருக்கும் ஆசையாலேயே நாம் அல்லல் படுகின்றோம். நேற்று நாம் ஆசைப்பட்டது எமக்குக் கிடைக்கவில்லை என்றால் நாளை கிடைக்கும் என நினைத்திருப்போம். இன்றும் கிடைக்கவில்லை என்றால் நாளை நிச்சயம் கிடைக்கும் என எண்ணுவோம். இப்படி எம் ஆசை நிறைவேறும்வரை இன்று நன்றாக இருக்கும், நாளை நன்றாக இருக்கும் என நினைத்து நினைத்தே நாட்களைக் களிப்போம். இதுவே மனித இயல்பு.

இந்த நேற்று இன்று நாளை மூன்றிலும் எது நிலையானது? எம்மால் பதில் சொல்லமுடியுமா? நேற்று நாம் இன்பமான வாழ்ந்திருந்தாலும் துன்பமான வாழ்ந்திருந்தாலும் சரி அது நிலைத்து நிற்கிறதா? இல்லையே. இன்று இன்பமாகவாழ்கிறேன் என்றாலும் துன்ப வாழ்வில் துடிக்கிறேன் என்றாலும் அது நிலைத்து நிற்குமா? நாளை நிற்குமா? கால ஓட்டத்தால் இன்று நேற்றாக, நாளை இன்றாகும். அவற்றை நாம் உணர்வதில்லை. அதற்குக் காரணம் நாம் ஆசையுடன் இன்பவாழ்க்கையைத் தேடித் தேடி அலைவதேயாகும்.

இன்பவாழ்வை நினைத்து நினைத்து இதுவேண்டும், அதுவேண்டும் என்று ஆசைப்படும் அளவுக்கு என்றாவது ஒரு நாள் எமக்கு இறப்பு வரும், நம் வாழ்க்கை நிலையற்றதே என நினைக்கிறோமா? ஆசைப்பட்டு ஆசைப்பட்டு இலவு காத்த கிளியாக வாழ்வோமே அல்லாமல், எமது வாழ்க்கையின் நிலையாமையை என்றுமே சிந்தித்துப் பார்க்கமாட்டோம். என்றோ ஒரு நாள் எம் உடல் பிடிசாம்பல் ஆவது உறுதி. 

அப்படி எமது வாழ்க்கை அழிந்து ஒழிந்து போக முன் தமது உயிருக்கு உறுதி தரும் செயலைச் செய்ய வேண்டுமெனத் திருஞானசம்பந்தர் கூறுகிறார்.

இன்றுநன்று நாளைநன்று என்று நின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையை போகவிட்டு போதுமின்
மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான் கோடிக்காவு சேர்மினே!
                                             - (ப.திருமுறை: 2: 99: 1)

எமது பொன்றுகின்ற [அழிகின்ற] வாழ்க்கையில் இன்று நல்லாதா? நாளை நல்லதா? என்று நல்லது? நாமே முடிவு செய்ய வேண்டும்.

Thursday, 13 June 2013

அளிதரல் ஆகாதா!

மணியாய் என் மனமன்றில்

          மிளிரும் மால் மருகா
அணியாய் வந்த மர்ந்தே
          அளிதரல் ஆகா தா
பணியா மனத் தேனை
          பரிந் தனை த்து 
நணியா நலம் நல்கு
          நானுனை மற வாதே

Wednesday, 12 June 2013

நோய் உருவம்



இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டில் வாழும் மனிதர்களாகிய எம்மிடம் எத்தனை எத்தனை விதமான வசதிகள் இருக்கின்றன. இயற்கையால் வந்த எத்தனை நோய்களை, இன்றைய விஞ்ஞான உலகம் முறியடித்து விட்டது. அதனால் போன நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களை விட இந்த நூற்றாண்டில் வாழும் மனிதர்கள் நோயற்று வாழ்கின்றனர். எனினும் எத்தனையோ புதுப்புது நோய்கள் வந்த வண்ணமே இருக்கின்றன. அளவுக்கு அதிகமான போக்குவரவு வசதிகளால், நாம் நடந்து திரிவதைக் குறைத்ததால் உடலின் எடை கூடி நோய்களுக்கு உள்ளாகின்றோம்.

அத்துடன் மோட்டார் வாகனங்கள் வெளிவிடும் அசுத்தக் காற்று, வளிமண்டலத்தை மாசுபடுத்துகிறது. புதிதாகப் பிறக்கும் குழந்தைகளும் அங்கக் குறைபாட்டுடனும் புத்திக்குறைபாட்டுடனும் பிறக்க அது வழிவகுக்கிறது. மாசுபடுத்தப்பட்ட காற்றை மனிதர் சுவாசிப்பதால் நோய்கள் உண்டாகின்றன. ஆனால் நாம் அவற்றைப் பற்றிய எதுவித சிந்தனையும் இன்றி, ஒவ்வொரு நாளும் வாய்க்கு உருசியான உணவைப்பற்றியும், எமதுடலின் அழகைப்பற்றியும், கவர்ச்சியான உடையைப்பற்றியும் சிந்திக்கிறோம். 

எனது உடல், எனது உணவு, எனது உடை என்று உடலுக்கே அழகு பார்க்கிறோம். ஆனால் மனித உடலோ
“இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை
மருவிய அத்தி வழும்பு ஒடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவம் அலால் உடல் ஒன்றெனலாமே”                  
                                                     - (திருமந்திரம்: 2125)
என்கிறார் திருமூலர்.

1. இதிலே இரதம் என்பது நாம் உண்ட உணவின் சாரமாகும் [chyme]. சாறு அல்லது சத்து என்றும் சொல்லலாம். 
2. உதிரம் என்பதை நாம் இரத்தம் என்றும் குருதி என்றும் சொல்கிறோம் [blood]. 
3. இறைச்சி எமது தசை [muscle]. 
4. தோல் [skin]. 
5. மேதை  என்பது அறிவைச் சுட்டி மூளையைக் குறிக்கிறது [brain].
6. அத்தி என்றால் எழும்பு [bone]. இறந்தவர்களை எரித்தபின், மிகுதியாக இருக்கும் எரிந்த எலும்பை அத்தி என்போம் அல்லவா? எலும்பை நீரில் இடுதலை/சேர்த்தலை[அட்டல்] 'அத்தி அட்டல்' என்றனர். [அத்தி + அட்டல் = அத்தியட்டல்]. ஆனால் நாம் இன்று அத்தியட்டல் என்பதை அதன் பொருள் விளங்காது அந்தியட்டி என்றும் அந்தியேட்டி எனவும் எழுதுகிறோம், சொல்கிறோம். அந்தி வேளையிலா செய்கிறோம்? அதுவும் இல்லை. 
7. வழு வழுப்பான தன்மையுடைய நிணத்திலிருந்து வரும் நிணநீர் வழும்பு எனப்படும் [lymph]. 
8. எலும்புக்குள் இருப்பது மச்சை [marrow]. 
9. சுக்கிலம் என்பது ஆண்களின் இந்திரியம் [semen]. பெண்களுக்கு சுரோணிதம் என்பர்.

இந்த ஒன்பது பொருளும் நமது உடம்பில் ஒழுங்காக இருந்தால் நோயின்றி வாழலாம். இவற்றை ஒழுங்காக இயக்குவது நாம் சுவாசிக்கும் உயிர்க் காற்றே. சுவாசிக்கும் காற்றில் மாசு இருந்தால் நோய்கள் வராமல் என்ன செய்யும்? அதனைச் சிந்தித்தால் காடுகளை அழித்து நாடுகள் நகரங்கள் கட்டி அழகு பார்க்க மாட்டோம். குப்பைகளை தெருக்களில் குவிக்கமாட்டோம். கழிவு நீரைத் தேக்கி வைக்கமாட்டோம். வீட்டில் உள்ளோர் யாவருக்கும் தனித்தனியே வாகனங்களை வாங்கி நிறுத்தமாட்டோம். 

அப்படி மனிதர் சிந்திக்காததனால் பாழாய்ப் போன நோயின் உருவமாக [பாழாம் உபாதி உருவம்] நிற்கிறோம்? எனவே நோயுள்ள எமது உடலை உடம்பு என்று எப்படிச் சொல்லலாம்? அதனாலேயே திருமூலர் பாழான நோய் உருவம் என்றார்.
இனிதே,
தமிழரசி.

Tuesday, 11 June 2013

விடாது தொடர்தல் தகுமா!




ஆழி சூழ் உலகெங்கும் 
ஆனந்த வாழ்வென்று சொல்லி 
தாழிநிறைய ஊண் தேடித் 
திரியும் மானுடர் நாம்
ஊழி முடிவு வந்தாலும்
உவந்து வாழ அறியாதே
பாழிப் படையின் வீரத்தை
பகர்ந்து காட்டப் புறப்பட்டு
கோழிச் சண்டை போட்டு
கொக்கரித்து கொத்துண்டு
வீழினும் சாதிமதப் பூசலை
விடாது தொடர்தல் தகுமா!
                                                          - சிட்டு எழுதும் சீட்டு 64

Monday, 10 June 2013

ஆசைக்கவிதைகள் - 66

மரகதக் குயிலே! சாஞ்சாடு! 

தமிழர்கள் தம் குழந்தைகள் தவழ்ந்து, நடைபயிலத் தொடங்கும் காலத்தில், அவர்களின் கால்களுக்கும் முள்ளந்தண்டுக்கும் வலிமை சேர்ப்பதற்காக சில பாடல்களைப் பாடி ஆடவைப்பார்கள். குழந்தையை இருக்க வைத்தோ, அன்றேல் நிற்கவைத்தோ, இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு, தாமும் வலதுபக்கமும் இடதுபக்கமும் மாறி மாறி சாய்ந்து ஆடுவார்கள். பெண் குழந்தையாக இருந்தால்  “சாய்ந்தாடம்மா! சாய்ந்தாடு!” என்றும் ஆண் குழந்தையாக இருந்தால் “சாய்ந்தாடையா! சாய்ந்தாடு! எனப்பாடி ஆடுவார்கள்.
இந்த நாட்டுப்பாடல் இடத்துக்கிடம் வேறுபடுகிறது. அது குழந்தையை வைத்துக்கொண்டு ஆடியாடிப் பாடுவோரின் கற்பனைக்கு ஏற்ப மாறுபடுகிறது. எனினும் இப்பாடல்களில் ஒரு பொதுவான தன்மை இழையோடுகிறது. பொதுவாக குழந்தை தவழ்ந்து நடைபயிலத் தொடங்கும் காலத்திலேயே பேசவும் கற்றுக்கொள்ளத் தொடங்கும். ஆதலால் தமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்களான பூ [பூவே]. கா [காவே], பா [பாவே] போன்ற சொற்களும்,  ஈரெழுத்துச் சொற்களான கிளி, மான், தேன், பால், கனி, சுவை, புறா போன்ற சொற்களும், மூன்ரெழுத்துச் சொற்களான மயில், குயில், கடல், சங்கு, உயிர் போன்ற சொற்களும் வைத்தே இப்பாடல்களைப் பாடுகிறார்கள். இப்பாடல்களைக் கேட்கும் குழந்தை சாய்ந்து சாய்ந்து ஆடியாடி இலகுவான சொற்களைக் கேட்டுக் கேட்டு சொல்லவும் தொடங்கும்.

குழந்தையை பிடித்துக்கொண்டு பாடிப்பாடி தாமும் சேர்ந்து ஆடுவதால் 
  1. குழந்தையின் உடல் உறுப்புகள் வலிமை அடைகின்றன.
  2. பாடி ஆடுபவரது உடல் உறுப்புக்களும் வலிமை அடைகின்றன.
  3. பெற்றோரின் அரவணைப்பில் குழந்தை மகிழ்ச்சி அடைகின்றது.
  4. குழந்தை செய்யும் செயல்கள் பெற்றோருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. 
  5. இசையைக் கேட்டு இசைஞானத்தை குழந்தை பெற்றுக் கொள்கிறது.
  6. பெற்றோர் கற்பனை வளத்தைப் பெறுகின்றனர்.
  7. குழந்தை பாடலைக் கேட்பதால் கேள்வி ஞானத்தை பெற்றுக் கொள்கிறது.
  8. குழந்தை தமிழில் உள்ள சொற்களை தனது மழலை மொழியில் சொல்லத் தொடங்கும்.
  9. வள்ளுவர் சொன்னது போல் பெற்றோரும் தமது குழந்தையின் மழலையே இனிமையானது என்பர். 
  10. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய பெற்றோர் அலைவதுபோல் Speech Therapist தேடி குழந்தையைக் கொண்டு அலையத்தேவை இல்லை.
எவ்வளவு நன்மை. பார்த்தீர்களா? நம் பண்டைத்தமிழ் முன்னோர் எவ்வளவு விழிப்புணர்ச்சியுடன் குழந்தை வளர்ப்பை கையாண்டார்கள் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்ட இந்த சாஞ்சாடம்மா பாடல் ஒன்றே போதுமானது. 

சாஞ்சாடம்மா! சாஞ்சாடு!
சாயற்கிளியே! சாஞ்சாடு!

மானே! மயிலே! சாஞ்சாடு!
மரகதக் குயிலே! சாஞ்சாடு! 

தேனே! பாலே! சாஞ்சாடு! 
தீங்கனிச் சுவையே! சாஞ்சாடு!

கானே! கடலே! சாஞ்சாடு!
காதலின் கனிவே! சாஞ்சாடு!

ஊனே! உயிரே! சாஞ்சாடு!
உப்பரி நிலவே! சாஞ்சாடு!

வானே! வடிவே! சாஞ்சாடு!
வலம்புரி சங்கே! சாஞ்சாடு!

சாஞ்சாடம்மா! சாஞ்சாடு!
சாயற்கிளியே! சாஞ்சாடு!

                                              -  நாட்டுப்பாடல் 
                                             (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

குறிப்பு:
உலகில் அரிதாகக் காணப்படும் மரகதக் குயில்கள் ஈழத்தின் வன்னிக் காட்டில் வாழ்கின்றன. அந்த மரகதக்குயிலைக் கண்ட தாயோ, அல்லது அக்குயிலோடு கூவித்திரிந்த தாயோ இப்பாடலைப் பாடியிருக்க வேண்டும்.

Sunday, 9 June 2013

குறள் அமுது - (67)


குறள்:
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பவர் கள்ளுண்பவர்                                      - 926

பொருள்:
தூங்குபவரும் இறந்தவரும் வேறுவேறானவர் அல்லர். எப்பொழுதும் கள்ளுண்பவர் நஞ்சு உண்பவரே ஆவார்.  

விளக்கம்:
திருவள்ளுவர்,  இறப்பும் பிறப்பும் எப்படிப்பட்டது என்பதைக் காட்டி உலகவாழ்வின் நிலையாமையைச் சொல்லுமிடதில் நித்திரை கொள்வது போன்றது இறப்பு, நித்திரையில் இருந்து விழிப்பது போன்றது பிறப்பு (குறள்: 339) என்றார். அதுபோலவே இக்குறளிலும் தூக்கத்தை இறப்புக்கு சமமாகவே காட்டுகிறார். படுத்து உறங்குவோர் சுவாசித்தபடி உயிரோடு இருப்பினும், அவரது சிந்தனை செயலிழந்து, அறிவுத் தொழிற்பாடு இன்றி பார்ப்பதற்கு செத்தவரைப் போன்றே தோன்றுவர். ஆதலால் உறங்குபவர்க்கும் செத்தவர்க்கும் வேறுபாடு தெரிவதில்லை. 

கள் என்றால் மது. எனவே எல்லாவகையான மதுவகைகளும் கள் எனும் சொல் குறிப்பதாகாக் கொள்ளலாம். மதுபானம் அருந்துபவரே கள்ளுண்பவர். மதுவைக் குடிப்போர் இறந்து போகாது இருப்பினும் மது மயக்கத்தால் தமது அறிவையும், உடல் நலனையும் இழப்பதால் ஒவ்வொரு நாளும் நஞ்சு உண்பவரை போல் இருக்கின்றனர்.

உறங்குபவர் மூச்சை இழுத்து விடாது இருந்தால் செத்தவர் போலவே இருப்பார். வேறு வேறுபாடு உறங்குபவர்க்கும் இறந்தவருக்கும் இருப்பதில்லை.  நஞ்சு குடித்ததும் குடித்தவருக்கு மயக்கத்தை தந்து உடலைக் கெடுத்து உயிரை எடுக்கிறது. நஞ்சு செய்வதைப் போல மதுவும் மயக்கத்தைத் தந்து மெல்ல மெல்ல உயிரை எடுக்கிறது. ஆதலால் நஞ்சு உண்பதற்கும் கள் உண்பதற்கும் வித்தியாசம் இல்லை.

பெரும்பாலான நஞ்சு குடித்த உடன் உயிரை எடுக்கும். கள் என்னும் நஞ்சோ எஞ்ஞான்றும் உயிரை எடுத்துக் கொண்டே இருக்கும். எனவே மது அருந்துவோர் நஞ்சை அருந்துகிறோம் என்பதை நினைவில் வைத்திருத்தல் நன்று. நஞ்சைக் குடிப்பதும் மதுவைக் குடிப்பதும் ஒன்று எனச்சொல்லும் குறள் இது.