Friday, 1 May 2026

சித்திரநடம் ஆடும்சிவனே


சித்திரை மலர்தூவும் சித்திரை மாதந்தனில்
               சித்திரநடம் ஆடும்சிவனே நின்தாள் போற்றி
பத்தரை மாற்றுப்பசும் பொற்றரை யாய்மின்னு
               பசுங்கொன்றையம் மலர்சூடி பாம்பினை அரையார்த்து
முத்திரைக் கைகாட்டி முத்தமிழ்ப் பாட்டிசைத்து
               முத்தென முறுவல் முகிழ முக்கண்ணா
நித்திரை இன்றிநீயாட நாம்காண வேண்டும்
               நின் கரணங்கள் நூற்றெட்டும் நன்றே
இனிதே
தமிழரசி.

சொல்விளக்கம்:
சித்திரை மலர் - கொன்றைப்பூ [சித்திரை மாதத்தில் மட்டும் மலரும் பூ]
சித்திரநடம் - கைகளில் முத்திரையும் கரணங்களையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்திக் காட்டுவதால் பரதநாட்டியத்திற்கு சித்திர நடனம் என்ற பெயரும் உண்டு.
பத்தரை மாற்றுப் பசும்பொன் - பத்தரை மாற்றுத் தங்கம்
பொற்றரை - பொன்போன்ற தரை
மின்னு - மின்னும்
பசுங்கொன்றையம் மலர் - புதிய கொன்றைமலர்
பாம்பினை அரையார்த்து - பாம்பை இடுப்பில் கட்டி
முத்திரைக் கைகாட்டி - பரதநாட்டிய முத்திரைகளை கையில் காட்டி
முத்தென - முத்துப்போல
முறுவல் - இளநகை
முகிழ - தோன்ற/தெரிய
முக்கண்ணா - மூன்று கண்களையுடைய சிவனே
கரணங்கள் 108 - நாட்டிய நிலைகள்/உடல் உறுப்பிகளின் நிலைகள்
[இவற்றை 108 தாண்டவம் என்பாரும் உளர்].

No comments:

Post a Comment