Wednesday, 11 June 2014
Tuesday, 10 June 2014
பார்த்தெடுக்க வேணுமெடி!
சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்களில் இருநூற்றிமுப்பத்தாறு பாடல்களைப் பாடி தனக்கென்று ஓர் இடத்தை நிலைநாட்டிக் கொண்டவர் கபிலர். தனது பாடல்களில் தமிழரின் நாகரீக உயர்வைச் சித்தரித்துக் காட்டும் கபிலரிடம் ஈழத்தின் விடத்தல்தீவு கன்னியும் படித்திருப்பாளே என நாம் எண்ணும் அளவுக்கு அவளின் நாட்டுப்பாடலின் கருத்து அமைந்திருக்கிறது.
கன்னிப்பெண் ஒருத்தி தனக்கு ஏற்ற கணவனை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதைக் கபிலர், பாரிமகளிர்க்குச் சொன்னதாக சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் இருக்கிறது. அப்பாடலை
“மாயோன் அன்ன மால்வரைக் கவான்
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி
அம்மலைக்கிழவோன் நம்நயந்து என்றும்
வருந்தினன் என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்
நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி,
அறிவு அறிந்து அளவல் வேண்டும், மறுத்தரற்கு
அரிய வாழி! தோழி! பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே”
- (நற்றிணை: 32)
என நற்றிணை காட்டுகிறது.
ஒரு கன்னிப் பெண் 'தன்னுடன் வாழ ஒருவனைத் தெரிந்தெடுப்பதற்கு, முதலில் அவனின் குணநலங்களைப் பார்த்து [நீயும் கண்டு], பிடித்திருந்தால் உற்றோருடன் ஆராய்ந்து [நுமரொடும் எண்ணி] மேலும் உணர்ச்சிக்கு இடம் கொடுக்காது, அறிவால் அறிந்து பழக வேண்டுமாம். [அறிவு அறிந்து அளவல் வேண்டும்] சான்றோர்களைப் போல ஆராய்ந்து பார்த்து நட்புச்செய் [நாடி நட்பின்], அல்லது நட்புச் செய்த பின் ஆராயப் போகாதே [நட்டு நாடார்], இது மறுக்கமுடியாதது' என்று கபிலர் சொல்கிறார்.
ஒரு கன்னிப் பெண் 'தன்னுடன் வாழ ஒருவனைத் தெரிந்தெடுப்பதற்கு, முதலில் அவனின் குணநலங்களைப் பார்த்து [நீயும் கண்டு], பிடித்திருந்தால் உற்றோருடன் ஆராய்ந்து [நுமரொடும் எண்ணி] மேலும் உணர்ச்சிக்கு இடம் கொடுக்காது, அறிவால் அறிந்து பழக வேண்டுமாம். [அறிவு அறிந்து அளவல் வேண்டும்] சான்றோர்களைப் போல ஆராய்ந்து பார்த்து நட்புச்செய் [நாடி நட்பின்], அல்லது நட்புச் செய்த பின் ஆராயப் போகாதே [நட்டு நாடார்], இது மறுக்கமுடியாதது' என்று கபிலர் சொல்கிறார்.
ஒருவன் - திருமால் போல் அழகாய், பெரிய மலைநாட்டையும், நன்னீர் ஆற்றையும் உடைய செல்வனாய், உன்னை விரும்பி வருந்தினாலும் உண்மை என நம்பாதே! என்று ஓர் இனிய எச்சரிக்கை விடுக்கிறார். நீயும்காண் - நுமரோடும் எண்ணு - அறிவு அறிந்து அளவளாவு [பழகு] - நாடி நடு - நட்டு நாடாதே என எத்தனை கோணங்களில் “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்” என்பதை உணராது, காதல் எனத்துடிக்கும் வெள்ளை உள்ளம் கொண்ட கன்னியர்க்கு புத்தி புகட்டுகிறார்.
விடத்தல்தீவுக் கன்னியர் சேர்ந்து பேசிச் சிரித்து விளையாடினர். அவர்களின் பேச்சு எத்தகைய கணவனைத் தேர்ந்தெடுப்பது எனும் கேள்விக்கு திரும்பியது. ஒவ்வொருத்தியும் தத்தம் எண்ணத்தைச் சொல்ல, அவர்களில் ஒருத்தி
“என்னில் அழகருமாய் இருசிவப்புக் காரருமாய்”
என்றாள்.
மற்றவர்கள் அவளைப் பார்த்துச் சிரித்து ‘அது என்னடி, இருசிவப்புக்காரர்? அப்படி ஒன்று இருக்கா என்றனர்? ‘எனக்கு கருப்பாய் இருப்பவனையோ, நல்ல சிவப்பாய் இருப்பவனையோ பிடிக்காது. அதனால் பொது நிறமானவனை இருசிவப்புகாரர் என்றேன். என்றவள் தொடர்ந்து
“பல்லில் அழகருமாய் பார்த்தெடுக்க வேண்டுமெடி”
என்றாள்.
தெத்துப்பல், காவிப்பல் என விதவிதமான பற்களுடன் வாலிபரை கண்டிருக்கிறாள். அவர்களின் சிரிப்பைப் பார்த்து எரிச்சல் வந்திருக்கிறது. கணவனின் சிரிப்பில் மகிழ்ந்திருக்க விரும்பியவளுக்கு அழகான வரிசையான பற்கள் தேவையாக இருந்திருக்கிறது. எனவே ‘பல்லில் அழகருமாய்’ தேடி எடுக்க வேண்டும் என்றாள். அவள் சொல்வதைக் கேட்ட
தோழியர்: என்னில் அழகருமாய்
இருசிவப்பு காரருமாய்
பல்லில் அழகருமாய்
பார்த்தெடுக்க வேண்டுமெடி
எனப்பாடிப் பாடி கேலி செய்தனர்.
இன்னொருனாள் அவள் வருவதைக் கண்ட அவளின் தோழி ஒருத்தி ‘என்ன பல்லில் அழகரைப் பார்த்தாயா?” எனக்கேட்க, ‘ஆமாம் பார்த்தேன்’ என்று அவர்கள் கிண்டலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தாள். யாரடியவன்? எப்படி இருப்பான்? எங்கடி பார்த்தாய்? சொல்லடி என கேள்விகள் வந்து விழ
அவள்: உற்றாரை உசாதற்கு
உருவிலே மன்மதனும்
உளத்திலே மயனாம்
உத்தமரை பார்த்தேனடி
- நாட்டுப்பாடல் (விடத்தல் தீவு)
- (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
- (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
எடுத்த உடனேயே ‘உற்றாரை உசாதற்கு’ என்கிறாள். அதாவது தன்னைப் பெற்று வளர்த்த பெரியோர்களிடம் கேட்டு அவர்கள் சம்மதத்தைப் பெறுவதற்கு ஏற்ற வாலிபனைக் கண்ட மகிழ்ச்சியில் அவன் அழகில் மன்மதன் போன்றவன் உளத்திலோ [ஊக்கத்தில்] மயன் போன்ற உத்தமன் என்று பரவசப்படுகிறாள்.
அவள் கூறும் மன்மதனை நாம் அறிவோம். அவள் உத்தமர் எனக்கூறும் மயன் யார்? நம்மில் எத்தனை பேர் அவனை அறிந்திருக்கிறோம்? அவன் மாந்தையத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ஓர் அரசன் - இராவணன் மனைவி வாண்டோதரியின் தந்தை - கலைஞன் - சிற்பி - அவன் இயற்றிய நூல்களுள் ‘மயமதம்’ என்ற நூல் சிற்பிகளால் போற்றப்படுகிறது. ஈழத்தவரின் மூதாதையரான மயனை, விடத்தல்தீவு நாட்டுப்பாடல் மூலமாவது நாம் மீண்டும் அறிவோம்.
கபிலர் ‘நீயும் கண்டு’ எனச் சொன்னதை விடத்தல்தீவுக் கன்னி தன் ஆசைகளையும் சேர்த்து ‘பார்த்தெடுக்க வேணுமடி’ என்கிறாள். அடுத்து கபிலர் ‘நுமரொடும் எண்ணி’ என்றதை ‘உற்றாரை உசாவுதற்கு’ என்றும் ‘அறிவறிந்து அளவல் வேண்டும்’ எனக் குறித்ததை ‘உளத்திலே மயனாம் உத்தமர்’ என்று கூறி அவன் பண்பானவன் என்பதை உறுதி செய்கிறாள். தனது கணவனாக வரவேண்டியவனைத் தெரிந்தெடுக்க ‘நாடி நடு’ எனக் கபிலர் சொன்னதையே அந்தக் கன்னியும் செய்திருக்கிறாள்.
இப்போது சொல்லுங்கள் விடத்தல்தீவுக் கன்னி, கபிலரிடம் படித்திருப்பாளோ என்ற சந்தேகம் உங்களுக்கு வரவில்லையா? சங்கத் தமிழர் வாழ்ந்த வாழ்க்கையை ஈழத்தமிழர் வாழ்ந்தனர் என்பதற்கு இந்த நாட்டுப் பாடலும் ஓர் எடுத்துக் காட்டாகும்.
இனிதே,
தமிழரசி.
இப்போது சொல்லுங்கள் விடத்தல்தீவுக் கன்னி, கபிலரிடம் படித்திருப்பாளோ என்ற சந்தேகம் உங்களுக்கு வரவில்லையா? சங்கத் தமிழர் வாழ்ந்த வாழ்க்கையை ஈழத்தமிழர் வாழ்ந்தனர் என்பதற்கு இந்த நாட்டுப் பாடலும் ஓர் எடுத்துக் காட்டாகும்.
இனிதே,
தமிழரசி.
Monday, 9 June 2014
குறள் அமுது - (91)
குறள்:
“ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு” - 231
பொருள்:
ஈதலும் அதனால் வரும் புகழுடன் வாழ்தலும் அல்லாமல் உயிர்களுக்கு வேறு பயனனில்லை.
விளக்கம்:
நாம் எடுத்திருக்கும் மனிதப்பிறவி எந்த வினாடி எம்மைவிட்டு போகும் என்பது எமக்குத் தெரியாது. உலகில் பிறந்தோர் அனைவர்க்கும் மரணம் உண்டு. அது அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் எவரையும் விட்டுவைப்பதில்லை. மனிதர்களாகிய நாம் ஏன் பிறந்தோம்? ஏன் உயிர்வாழ்கிறோம்? உலக இயற்கையோடும் அரசியல் சூதாட்டங்களோடும் போராடி, பகட்டுக்கு மயங்கி, வஞ்சனைகளால் அலைக்கழிந்து வாழ்வதால் நாம் அடையும் பயன் என்ன? பயன் இல்லா வாழ்வு வாழ்வாகுமா?
நாம் இவ்வுலகில் வாழ்ந்ததால் அடைந்த பயனை, அதற்கான ஓர் அடையாளத்தை இங்கு விட்டுச்செல்ல வேண்டாமா? எமது இளமையும் உடலும் செல்வமும் என்றும் நிலைத்து இருப்பதில்லை. இந்த நிலை இல்லாதவற்றுள், இளமையும் உடலும் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் செல்வம் அப்படியானதல்ல. சிலரிடம் கொட்டிக்கிடக்கும் செல்வம் பலரிடம் இருப்பதில்லை. செல்வம் இருப்பவர்கள் இல்லாதவர்க்கு கொடுக்கலாம். இல்லாதோர்க்கு கொடுத்தலே ஈதலாகும். உங்களிடம் இருக்கும் கல்விச் செல்வத்தையோ, பொருட்செல்வத்தையோ இல்லாதவர்க்கு கொடுத்து புகழைத்தேடிக் கொள்ளுங்கள்.
நாம் இவ்வுலகில் வாழ்ந்ததால் அடையும் பயன் புகழேயாகும். எனெனில் எம்முடல் அழிந்து போனாலும் எமது புகழ் அழியாது என்றும் இருக்கும். புகழ் நம் பெயரை அழியாது நிலைத்து நிற்க வைக்கின்றது. நம் உயிரைச் சுமந்து வாழும் உடலாலேயே நாம் சுட்டப்படுகின்றோம். அவ்வுண்மையை உணர்ந்த திருவள்ளுவர் புகழில்லாத உயிருக்கு ஒருவித பயனும் இல்லை என்கிறார். நாம் அள்ளிக் கொடுத்த கொடையும் புகழுமே உயிர்வாழ்ந்தோம் என்பதற்கான மிச்சமாக இவ்வுலகில் நிலைத்து நிற்கும்.
Saturday, 7 June 2014
அடிசில் 81
ஈழத்து சொதி
- நீரா -
தேவையான பொருட்கள்:
தேங்காய்ப் பால் - 2 கப்
ஒடித்த செத்தல் மிளகாய் - 4
வெட்டிய வெங்காயம் - 1 மேசைக் கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி
வெந்தயம் - ½ தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பழப்புளி - நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. பழப்புளியை அரைக்கப் தண்ணீரில் கரைத்துக் கொள்க.
2. கரைத்த புளிக்குள் உப்பு போட்டு, தேங்காய்ப்பாலும் விட்டு கலந்து வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடாக்கவும்.
4. எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம், செத்தல் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு பொன்னிறமாகத் தாளிக்கவும்.
5. அத்தாளிதத்திற்குள் தேங்காய்ப்பால் கலவையை விட்டு, சூடாக்கி கொதிக்கமுன் இறக்கவும்.
குறிப்பு:
விரும்பினால் சிறிது மஞ்சள் பொடி சேர்க்கலாம்.
Friday, 6 June 2014
காகிதத்தில் பொரிப்போமா?
மிகவும் விரைவாக காகிதம் நெருப்பில் எரிந்துவிடும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதிலும் எண்ணெய் ஊறிய காகிதம் மிகமிக விரைவாக எரியும். ஆனால் நம் தமிழ் முன்னோர் காகிதத்தில் தொன்னை செய்து அதனை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு வடை சுட்டு சாப்பிட்டிருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா? நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ அவர்கள் எப்படி காகிதத்தில் சமைத்தார்கள் என்பதையும் எமக்காகச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.
மா, பலா, வாழை, பூவரசு போன்ற இலைகளிலும், வாழைப் பட்டை, கமுகம் பட்டை போன்ற பட்டைகளிலும் ஈர்க்கினால் குத்தி விரும்பியவடிவத்தில் செய்து எடுக்கும் பாத்திரத்தை ‘தொன்னை’ என்று அழைப்பர். ஆனால் பனை ஓலையில் செய்வதை பிளா என்றும் தட்டுவம் என்றும் அழைப்பர். பிளாவை திரவப் பொருட்களை விட்டுக் குடிப்பதற்கும், தட்டுவத்தை உணவை இட்டு உண்பதற்கும் பயன்படுத்தினர். தொன்னை, பிளா, தட்டுவம் போன்றவற்றை ஒருமுறை பாவித்த பின் எறிந்து விடுவார்கள். மீண்டும் மீண்டும் கழுவிப் பயன்படுத்தமாட்டார்கள். அதனால் நம் முன்னோர் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேணினர் என்பதை நாம் அறியலாம்.
சித்தர்களில் பெரும் சித்தராகப் போற்றப்படும் போகர் - ‘கொஞ்சம் தடிப்பான காகிதத்தில் தொன்னை [பாத்திரம்] செய்து, அதன் வெளிப்புரத்தில் பிரண்டையை அரைத்து எடுத்த விழுதைப் பூசிக் காயவிட்டு, மீண்டும் மீண்டும் இப்படி மூன்றுமுறை பூசிக் காயவிட்டு எடுத்த தொன்னையை அடுப்பில் வைத்து, எண்ணெய்விட்டு சூடானதும் வடை, போளி, அதிரசம் சுடலாம்’ என்கிறார்.
பிரண்டை என்பது ஒரு வகைக் கொடியாகும். பலவகை நோய்களை நீக்கும் தன்மையுடையது. சித்தமருத்துவத்தில் பிரண்டையைப் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்துவர்.
பிரண்டை
போகர் ஒன்பது நஞ்சுகளைக் [நவபாசாணம்] கலந்த கலவையைக் கொண்டு வடித்த சிலையே பழனி முருகன் சிலையாகும். அந்தப் போகர் தந்த மாயாஜாலப் பரிசை நீங்களும் செய்து பாருங்கள்:
தேரரிய பிரண்டைதனை அரைத்துக் கொண்டு
திடமான காகிதத்தாற் தொன்னை செய்து
மாரியே பின்புறத்தில் மூன்று பூசல்
மைந்தனே உலரவைத்துப் பூசிவாங்கி
கோரியே மூன்றுகல்லை அடுப்பு போல
கூட்டியே தொன்னையதன் மேலேவைத்து
வாரப்பா எண்ணையது காய்ந்த பின்பு
வடை போளி அதிரசங்கள் சுட்டுவாங்கே!
இனிதே,
தமிழரசி.
இனிதே,
தமிழரசி.
Thursday, 5 June 2014
தன்னை அறியும் அறிவை அறிதல்
நான் யார்? எனது எண்ணங்கள் யாவை? அவை ஏன் எழுகின்றன? அந்தத்தன்மைகள் ஏன் மனிதருக்கு மனிதர் வேறுபடுகின்றன? அப்படி வேறுபடுவதால் மற்றவர்களை நான் வணங்க வேண்டுமா? என்ற பலவகையான கேள்விகள் என் சிறுவயதிலேயே என்னுள் எழுந்தன. அவற்றுக்கு விடை காணமுடியாது நான் தவித்ததும் உண்டு. என் தந்தையிடம் கேட்டேன். உன் மன விசாரணைக்கு நீதான் பதில் தேடிக் கொள்ளவேண்டும் எனக்கூறி தப்பிக் கொண்டார்.
அறிஞர் என நான் நினைத்த பலரிடமும் கேட்டேன். அதற்கான சரியான விடையை அவர்கள் சொல்லக்கூடிய விதத்தில் என் கேள்விகளை நான் கேட்கவில்லைப் போலும், அதனால் அவர்களால் பதில் சொல்லமுடியவில்லை என நினைக்கிறேன். காலஓட்டம் எனக்குப் பலவகையான புதிய பாடங்களைக் கற்றுத் தந்தது. எமது ஆன்மீகத் தேடலுக்கான விடை எம்மிடமே இருக்கின்றது என்பது அதில் ஒன்றாகும். என் தந்தை சொன்னது சரி என்பதையும் உணர்ந்தேன்.
மற்றைய பொருள்களின் தன்மைகளை நாம் ஆராய்ந்து அறிவது போல் நம்முடைய இயல்புகளையும் நாமே நடுநிலையோடு நின்று ஆராய்ந்து அறியவேண்டும். அப்படிச்செய்வதால் எமக்கு எக்கேடும் வந்துவிடாது. நம்மை நாம் அறியாததால் கெட்டுப்போகின்றோம். நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து அறியும் அறிவைப் பெறுவோமேயானால் நாமே இறை என்பதை உணர்ந்து நம்மை நாமே வழிபடுவோம் என்கிறார் திருமூலர்.
தன்னை அறியத் தனக்கொரு கேடு இல்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே - (திருமந்திரம்: 2355)
தன்னைத்தான் அறிதல் என்பது உணர்வின் தேடலாகும். அது, கடல் நீர் ஆவியாகி மேலே சென்று மழையாகப் பொழிதல் போன்றது. துன்பம் எனும் உப்புக் கரிக்கும் கடல் நீராகிய எம்மை, சூரியக் கதிர் போன்ற அருட்கதிர்களால் தாங்கிக் குளிர்வித்து, நன் மழையாய் பொழிவித்து [அர்ச்சித்து] நாமே தான் என்பதைக் காட்டும் செயலை அறிதலாகும்.
எம் மனத் தேடுதலுக்கு நாம் விடைகாண வேண்டுமாயின் நம்மை நாமே முதலில் அறிந்து கொள்ள வேண்டும். நம்மை நாம் அறிந்து கொள்ளாமல் தட்டுத்தடுமாறுவதாலேயே நாம் கெடுகின்றோம். நம்மை நாம் எப்படி அறிவது? என்னும் அறிவுத்திறமையை [அறியும் அறிவை], அறிந்த பின்னர், அதாவது சுட்டறிவுக்கும் பேரறிவுக்கும் இடைப்பட்ட உண்மையான வேறுபாட்டை நாம் அறிவதால் பேரறிவான பேரொளியாகிய சிவமே நாம் என்பதை உணர்ந்து வழிபடுவோம் என்கிறார்.
இனிதே,
தமிழரசி.
Wednesday, 4 June 2014
உள்மனத்தே இருப்பாயோ!
விருத்தனாய் வந்துநின்று
வள்ளியை மணந்தானென்றே
திருத்தனியில் வந்துநின்று
தினமுமுனைத் தேடியேஎ
கருத்தினிலே இருத்தாமல்
கதறுகிறேன் கந்தனென்றே
ஒருத்தேனே உலகமென்றால்
உள்மனத்தே இருப்பாயோ!
Subscribe to:
Posts (Atom)






