Monday, 8 July 2013

எல்லையில்லாப் பெருவளங்கள்!

கலநீடு மனை
ஒரு நாடு வளமுள்ளதாக இருக்கவேண்டுமானால் அந்த நாட்டில் இயற்கை வளம் கொட்டிக்கிடக்க வேண்டும். இயற்கை வளம் நிறைந்த நாட்டிலுள்ள ஊர்கள் வளமுள்ளதாக இருக்கும். ஊர்கள் வளமுள்ளதாக இருந்தால் அங்கு இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் வளம் கொழிக்கும். அத்தகைய கரை காண முடியாத பெருவளங்கள் உள்ள ஒரு நாட்டைச் சேக்கிழார் நாயனார் பெரிய புராணத்தில்  திருநாவுக்கரசர் வரலாற்றைக் கூறும் இடத்தில் படம்பிடித்துக் காட்டுகிறார். 

அது நீர்வளம் நிறைந்த நாடு.  ஆதலால் அந்த நாட்டின் ஊர்களில் இருந்த வயல்களிலே நீலோற்பலம் என்று சொல்லப்படும் கருங்குளை மலர்கள் பூத்திருக்கும். நீலோற்பல மலர்களின் நீலநிறத்தை அங்குள்ள வயல்கள் காட்டும்.  இரவுநேர இருளின் நீலத்தை கருநீலநிற வானித்தில் இருக்கும் நிலவு காட்டும். அங்கு வாழும் மக்களின் மகிழ்ச்சிப் பெருக்கத்தைக் காட்டும் தெருக்கள், அழகான ஊஞ்சல்களையும் காட்டும். பொழுது புலரும் போதிருக்கும் நீலநிறத்தை விலகிச் செல்லும் இருள் காட்டும். உழவுக்குச் செல்லும் உழவர்களின் ஒலி சூரியன் உதிப்பதைக் காட்டும். ஒற்றுமையின் உயர்வை அவ்வூரிலுள்ள மனைகள் காட்டும். 

மலர்நீலம்

“மலர்நீலம் வயல்காட்டும் மைஞ்ஞீலம் மதிகாட்டும்
அலர்நீடு மறுகாட்டும் அணியூசல் பலகாட்டும்
புலர்நீலம் இருள்காட்டும் பொழுதுழவர் ஒலிகாட்டும்
கலநீடு மனைகாட்டும் கரைகாட்டாப் பெருவளங்கள்    
                                      - (திருநாவுக்கரசர் புராணம்: 14)
அந்த நாட்டில் எல்லையில்லாப் பெருவளங்கள் நிறைந்துள்ளது என்பதைச் சேக்கிழாரும் கரைகாட்டாப் பெருவளங்கள் எனக்கூறி மகிழ்கிறார். [கடலின் எல்லை கடற்கரை. ஆற்றின் எல்லை ஆற்றங்கரை. எனவே கரை என்பது எல்லையைக் குறிக்கும்.]

சொல் விளக்கம்:
மலர்நீலம் - நீலோற்பல மலரின் நீலநிறம்
மைஞ்ஞீலம் - மைபோன்ற கருநீலநிறம்
அலர்நீடு - மகிழ்ச்சிப் பெருக்கம்
மறு - தெரு
அணியூசல் - அழகிய ஊஞ்சல்
புலர்நீலம் - பொழுது புலரும் நீலநிறம்
பொழுது - அதிகாலைப் பொழுது
கலநீடு - ஒற்றுமையின் உயர்வு [கல - கலத்தல்]
மனை - வீடு 
கரைகாட்டா - கரையில்லா/ எல்லையில்லா

இனிதே,
தமிழரசி.

Sunday, 7 July 2013

பக்திச்சிமிழ் - 59

உறுபொருள் காண்கிலீர்
- சாலினி -

கடவுள் என்னும் உண்மை பல வேளைகளில் கேள்விக்குறி ஆகிறது. அதற்குக் காரணம் நாம் கடவுளின் உண்மையை உணராமையே ஆகும். அன்பு என்று சொல்லப்படுகின்ற உணர்வு ஒருவரிடம் இருக்கிறதா இல்லையா என்பதை உணர்ந்து அறியலாமே அல்லாமல் இட்டும், தொட்டும் காட்டமுடியாது. அது போன்றதே கடவுளின் உண்மையும்.

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் 
அன்பு சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே                 - (திருமந்திரம்: 270)

அதனாலேயே திமூலரும் அன்பை வேறாகவும் சிவனை வேறாகவும் பிரித்துச் சொல்வோரை அன்றேல் பிரித்துப் பார்ப்போரை அறிவில்லாத மூடர் என்றார். ஏனெனில் உண்மையான பரிவு, பாசம், பற்று, அன்பு போன்றவற்றை யாரும் காசு கொடுத்து வாங்க முடியாது. 

அன்பு உலக உயிர்கள் யாவற்றுக்கும் பொதுவானது. அது தானாகச் சுரப்பது. அதற்கு அளவுகோல் கிடையாது. ஒன்றை எதிர்பார்த்தே, அன்பு செலுத்தப்படுவதாக சிலர் நினைக்கலாம். இந்தப்பரந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் எத்தனையோ இடத்தில் தத்தமக்கு அறிமுகமில்லாத உயிர்களுக்கு  வேறு உயிர்கள் உதவிக்கொண்டே இருக்கின்றன. அவை எதை எதிர்பார்த்து உதவுகின்றன? நெஞ்சில் உண்மையான அன்பென்னும் ஈரம் இருக்கும் எந்த உயிரும் எதையும் எதிர்பார்த்து அன்பு செலுத்தாது.

மலரில் எப்படி நறுமணம் வீசுமோ அதுபோல் எமது உயிரினில் சிவம் எனும் அன்புமணம் வீசும். அதை நாம் உணர்ந்து அறியவேண்டும்.

பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது                  - (திருமந்திரம்: 1459)

அந்த சிவமணத்தை உணர்ந்து அறியாமல் நான் கோயிலில் சுவாமிக்கு தேரிழுத்தேன். ஆதலால் நான் பிறவிப்பயனை அடைந்து விட்டேன். கோயில் கட்டினேன். திருவிழாச்செய்தேன். அந்த சுவாமியார் என்வீட்டில் நின்றார். நான் புனிதம் அடைந்தேன், என்று சொல்வதெல்லோம் உண்மைப் பொருளை அறியாதார் செய்யும் செயல் என்று திருமூலர் சொல்கிறார். 

“உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தை யுறவே தெளிந்திருள் நீங்கினால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே”                  (திருமந்திரம்: 2622)

ஆதலால் எமது சிந்தையில் சிவனை இருத்தி, மனத்திலுள்ள இருளை நீக்கினால் அதுவே எமது பிறவிப்பிணியைப் போகும் மூலகாரணமாய் விளங்கும். [வித்து - காரணம்]

Saturday, 6 July 2013

இரங்கியருள் கந்தவேளே!

கிளிநொச்சி கந்தவேள் வணக்கப் பாமலர்
                                      - இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன்


 


ஒருமுருக மந்திர முச்சரித் தனுதினம்
          உள்ளன்போ டோதிவந்தால்
ஊன்கண் திறந்துநல் லொளிவருங் கண்ணிலே
          உண்மைநிலை நெஞ்சமுணரும்
திருநடஞ் செய்திளமை சேர்கல்வி சேரும்
          செல்வச்செகம் மதிக்கும்
தீராதவினை தீரும் மருத்தீடு பேய்பில்லி
          தீர்ந்துடல் பொன்னாகுமாம்
மருளகன்றே நல்ல மனிதநிலை தந்திடும்
          மனைமக் களுஞ்சிறக்கும்
மாபுகழினோ டிந்த மண்ணாளலாங் காண்
          மதிப்பவர் மனத்திருந்து
இருளகன்றிடநல் லொளிவீசு வேலனே
          எழைகட் கருளுகந்தா
இலங்கு கிளிநொச்சிநக ரெங்குமும் மாரிபெய
          இரங்கியருள் கந்தவேளே!

Friday, 5 July 2013

நானும் நகைத்திட்டேன்















கஞ்சிக்காக அலைந்து அலைந்து
          கால்கள் ஓய்ந்து துவண்டாலும்                    
கொஞ்சும் மழலைச் சிரிப்பாலே
          கொடுக்கா மனதைத் திறந்திடுவோம்          
பஞ்சம் எமக்கு ஈங்கில்லை
          பாறை மனத்தோர் உமக்கென்றே
அஞ்சி மெல்லக் கண்மூடி
          அவனியைக் காண மனமின்றி
பிஞ்சிக் கையால் வாய்பொத்தி
          பெரிதாய் நானும் நகைத்திட்டேன்.
                                                                                               சிட்டு எழுதும் சீட்டு 67

Wednesday, 3 July 2013

மடத்துவெளியில் இருந்த சத்திரம் எங்கே?

புங்குடுதீவு வெளிச்சவீடு

இலங்கையின் வரலாற்றில் இடம்பிடித்த தீவுகளில் புங்குடுதீவும் ஒன்று. அந்தச் சின்னஞ்சிறிய தீவும் தனக்கென கலைப் பண்பாட்டு வரலாற்றை வைத்திருக்கிறது. ஒவ்வொரு ஊரின் நாட்டுப்பாடல்களும் தத்தமது ஊர்களின் பண்பாட்டை வரலாற்றை எடுத்துச் சொல்லும். நாம் அவற்றை உணராது காலங்காலமாக நாட்டுப்பாடல்களைப் புறக்கணித்து வருகிறோம். அது ஒரு வரலாற்றுப் புறக்கணிப்பு என்பதை எப்போது நாம் உணர்வோம்? 

எடுத்துக்காட்டுக்கு கீழேயுள்ள நாட்டுப்பாடலை எடுத்துக் கொள்வோம். இப்பாடல்கள் புங்குடுதீவு மக்களால் நூறு வருடங்களுக்கு முன் பாடப்பட்டவை. ஆனால் இன்று வாழும் என்னால் புங்குடுதீவில் இருந்த சரலப்பிட்டி, எங்கு இருந்து? என்பதையோ, அங்கு இருந்த சத்திரத்தையோ அறிய முடியவில்லை. பலரிடம் கேட்டேன். கடைசியில் புங்குடுதீவில் சரலப்பிட்டி இருந்ததாக, இலண்டன் நாகபூசணி அம்மன் ஆலயக் குருக்களின் தந்தை சொன்னார்.  

இளைப்பாறிச் செல்ல உதவிய அன்னசாலைகளே சத்திரம் என அழைக்கப்பட்டன. புங்குடுதீவினூடாக மற்றைய இடங்களுக்குப் பயணம் செய்வோர் உண்டு, உறங்கிச் செல்லவே அந்தச் சத்திரத்தைக் கட்டியிருப்பர். 1940களின் தொடக்கத்தில் புங்குடுதீவுக்கு கார் வந்ததால் சத்திரத்தின் தேவையில்லாது போயிருக்கும். அச்சத்திரம் பயன்படுத்துவார் இன்றியோ, இயற்கை அழிவுகளாலோ அழிந்திருக்கலாம். சரலைப்பிட்டி இருந்த இடத்தையும், சத்திரத்தின் இடிபாட்டையும் கண்டறிந்தால் அது புங்குடுதீவின் வரலாற்றிற்கு உரம் சேர்க்கும். சரலம் என்றால் அறுகம்புல். எனவே அந்தப் பிட்டி அறுகம்புல் வளரும் இடமாக இருக்கும். 

சரலப்பிட்டிச் சத்திரத்தை, மானிப்பாய் உலகநாதர் மாதர் பரம்பரையில் வந்த, புங்குடுதீவு வள்ளனைச் சேர்ந்த வைத்தியநாரர், வைரவநாதர் சகோதரர்கள் பராமரித்தார்கள். அவர்களது முன்னோர் அந்தச் சத்திரத்தைக் கட்டினரோ தெரியாது. வல்லன் வெளிச்சவீட்டுக்கு அருகே இருந்த துறை, பெரியதுறை - பெருந்துறை என அழைக்கப்பட்டது. இலங்கையை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் பெருந்துறையிலிருந்து வேறு இடங்களுக்கு பருத்தி, சாயவேர் போன்ற பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. 

ஆதலால் சரலப்பிட்டிச் சத்திரம் வல்லன் வெளிச்சவீட்டுப் பக்கம்  அல்லது மடத்துவெளிப் பக்கம் இருந்திருக்கலாம். மடம் என்பதை சத்திரம் என்றும் சொல்வர். சரலப்பிட்டி மடம் இருந்த வெளியே மடத்துவொளி ஆகியிருக்கும். வைத்தியநாதரின் மகன் இராமலிங்கம் குடும்பத்துடன் மடத்துவெளியில் வாழ்ந்தார்.  அக்கட்டிடம் நீள்வட்ட வடிவமானது என்று என் பேரனார் சொன்னார்.  மடத்துவெளியில் வாழ்வோர் எராவது அருகம்புல் வளரும் பிட்டியில் நீள்வட்டமான  அந்நாளைய நாற்சாரம் வீடுபோல் இருக்கும் இடிபாட்டைத் தேடிப்பாருங்கள்.

வைத்தியநாதர், வைரவநாதர் இருவரும் மலேசியா சென்று வர்த்தகம் செய்தவர்கள். அவர்களது சகோதரியே ‘தனித்தமிழ்த்தந்தை’ எனப் போற்றப்படும் மறைமலை அடிகளைப் பெற்று, தமிழ்ப்பால் ஊட்டி வளர்த்த பெருமைமிக்க தாயாய் வாழ்ந்த சின்னம்மை. அவ்விருவரது சகோதரர்கள் கூட நாகபட்டனத்திலும் வேதாரணியத்திலும் வாழ்ந்தார்கள். 
மறைமலையடிகள்

கடைசிக் காலத்தில் சின்னம்மை அவர்கள் வல்லனில் நல்லதம்பி அவர்கள் வீட்டிற்கு அருகே வாழ்ந்தார். மறைமலை அடிகள் கடைசியாக அவரது தாயாரைப் பார்க்க 1916ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு புங்குடுதீவுக்கு வந்தார் என்பதையும் அறியமுடிகிறது. மறைமலை அடிகள் தமது தாயாருக்கு அனுப்பும் பணத்தை, தாயரார் அராலி தபால்நிலையத்திற்கு (அந்நாளில் புங்குடுதீவில் தபால் நிலையம் இருக்கவில்லை) சென்று மாற்றுவார். அப்படிச் செல்லும் பொழுது அராலியைச் சேர்ந்த இராமநாரர் வீட்டில் தங்குவார்.  சின்னம்மையின் தமையனான வைத்தியநாதரின் மகன் இராமலிங்கம் என்பவரை, அந்த இராமநாதரின் மகள் தையல்முத்து மணந்தார். எனவே அவர்களிடையே ஏதாவது உறவுமுறை இருந்திருக்க வேண்டும். சின்னம்மை கையெழுத்து இட்டு பணம் மாற்றிய அடித்துண்டு ஒன்று என் தந்தையிடம் இருந்தது. சின்னம்மை வாழ்ந்த வீட்டை அறிந்து பாதுகாப்பதும் புங்குடுதீவு வாழ் மக்களின் வரலாற்றுக் கடமையாகும். 

காட்டு வெள்ளம் ஓடிவந்து
          கரைதட்டும் கழுதைப்பிட்டி
சீட்டுக்கட்டு சளசளக்கும்
          சத்திரத்து சரலப்பிட்டி 

பெட்டக் கோழி முட்டையிட 
          பேணுகிற பெருங்காடு
கட்டக் கோழி கூவயில
          கழை எடுக்கும் கள்ளிக்காடு
                                                    - நாட்டுப்பாடல் (புங்குடுதீவு)
                                       - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

தமிழில் கழுதை என்பது வடமேற்குத் திசையைக் குறிக்கும். வடமேற்குத் திசையில் இருக்கும் பிட்டி என்பதையே தனித்தமிழில் கழுதைப்பிட்டி என்பர். சரலப்பிட்டி சத்திரத்தில் தங்கிச் சென்றோர் சீட்டாடியதையும் [ஓலைச்சீட்டு] இந்த நாட்டுப்பாடல் வரலாறாகக் காட்டுகிறது. அத்துடன் பெருங்காட்டில் வாழ்ந்தோர் கோழி வளர்த்ததையும் கள்ளிக்காட்டில் வாழ்ந்தோர் விடியற் காலையில் எழுந்து கள்ளி மரங்களைக் கள்ளியாற்றில் தள்ளிக் கொண்டுபோக கழைக்கோல் [மூங்கில் கோல்] எடுத்துக் கொண்டு செல்வர் என்பதையும் சொல்கிறது.  
"சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்
குரங்கின் வன்பறழ் பாய்ந்தென இலஞ்சி
மீன் எறி தூண்டில் நிவக்கும்"

                                                    - (ஐங்குறுநூறு: 278)
என்கின்றது ஐங்குறுநூறு. பெருமூங்கிலை வெதிரம் என்பர். பெருமூங்கில் மரநுனியிலிருந்து குரங்குக்குட்டி தாவும்போது மூங்கில் கம்பு மீன்பிடிக்கும் தூண்டில் போல் நிமிரும் என்று சொல்கிறது. ஆதலால் பெருமூங்கில் கம்பைக் கழைக்கோல் என்றனர் என்பதை அறியலாம்.

புங்குடுதீவில் வாழ்ந்த நம் முன்னோர்கள் வாழ்வை எடுத்துக் காட்டும் நாட்டுப்பாடல்களைத் தேடிக் காப்பாற்றி எம்சந்ததியினருக்கு வைப்போமா?
இனிதே,
தமிழரசி.

Tuesday, 2 July 2013

குறள் அமுது - (69)

குறள்:
“எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு”                                        - 281

பொருள்:
பிறரால் இகழப்படாமல் வாழவேண்டும் என்று நினைப்பவன், மற்றவர்களுடைய எந்தப் பொருளையும் வஞ்சித்து எடுக்க நினையாது தன் நெஞ்சைப்  பாதுகாக்கவேண்டும்.

விளக்கம்:
ஒருவரை வஞ்சித்து அவரிடம் உள்ள பொருளை எடுத்தல் கள்ளம் ஆகும். மற்றோர் அறியாது பிறர் பொருளை எடுத்தலும் கள்ளமே. அப்படி களவு எடுக்காது இருத்தல் கள்ளாமை என்று கூறப்படும். பிறர் வாழவேண்டும் எனும் நல்ல எண்ணம் உடையவர்கள் பிறருடைய பொருளை வஞ்சித்து எடுக்க நினைக்கலாமா? எமது எண்ணங்களே பல கேடுகளுக்குக் காரணமாய் இருக்கின்றன. 

'மனமது சுத்தமானால் மந்திரம் செய்யத்தேவை இல்லை' என்பது ஆன்றோர் வாக்கு. சுத்தமான மனதில் பிறரை வஞ்சித்தல் என்னும் கள்ளம் தோன்றாது. எனவே, உங்கள்  மனதை சுத்தமாக வைத்திருங்கள் என்ற கருத்தில் கள்ளாமை காக்க தன் நெஞ்சு என்றார். 

இகழ்ந்து பேசுதல் எள்ளுதல் என்று சொல்லப்படும். ‘இவன் களவன்’ என்று பிறர் இழிவாக இகழ்ந்து பேசாது இருக்க வேண்டும் என நினைப்பவனே எள்ளாமை வேண்டுபவன் ஆவான். எனைத்து ஒன்றும் என்பதை நாம் எதையும், எதனையும் என்று கூறுகிறோம். எதனையும் களவெடுக்க வேண்டும் என நினையாது இதிருந்தால் களவெடுக்க முடியாது. பிறர் பொருளை எடுக்க நினைக்கும் போதே, அப்பொருளை மற்றவர் அறியாது எப்படி எடுப்பது? எப்போது எடுப்பது? என்ற திட்டங்களை மனம் தீட்டுகிறது.

ஆதலால் பிறர் தன்னை பழித்துப் பேசக்கூடாது என விரும்புகிறவன், மற்றவர்களுடைய பொருட்கள் எதனையும் கள்ளத்தனமாக எடுக்க நினையாமல் தனது மனதை கட்டுப்படுத்திக் காத்துக்கொள்ள வேண்டுமென திருவள்ளுவர் இக்குறள் மூலம் எமக்குச் சொல்கிறார்.

Monday, 1 July 2013

இசைத்தமிழின் இராகம் - பகுதி 1


‘இசைத்தமிழ் அல்லது தமிழிசை எப்போது தோன்றியது?’ எனக் கேட்போருக்கு ‘தமிழ் என்று தோன்றியதோ அன்றே தமிழிசையும் தோன்றிவிட்டது என்று தலைநிமிர்ந்து விடை சொல்லலாம். 

தொல்காப்பியத்தின் மூன்றாவது பாவிலேயே இசை என்னும் சொல்லை தொல்காப்பியர் தருகிறார். 
“அவற்றுள்
அ இ உ எ ஒ என்னும் அப்பால் ஐந்தும்
ஓரளவு இசைக்கும் குற்றெழுத்து என்ப”         (தொல்: 1: 1: 3)
குற்றெழுத்துக்கள் ஐந்தும் ஒரு நொடிப்பொழுதே இசைக்கும் என்கிறார். பாருங்கள் தொல்காப்பியர் இற்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவரே குற்றேழுத்துக்கள் ஐந்தையும் ஒரு நொடி நேரத்தில் சொல்லவேண்டும் என்னும் கால அளவை ‘ஓரளவு இசைக்கும் குற்றெழுத்து என்ப’ என தனக்கு முன்னர் வாழ்ந்தோர் சொன்னதாகச் சொல்கிறார். 

எந்த மொழியாயினும் அதன் ஒலிவடிவத்திற்கு ஒலியே காரணமாகும். ஒலியில்லையேல் மொழியில்லை. ஒரு மொழியிலுள்ள எழுத்துக்களின் பிறப்பை ஒலியே வேறுபடுத்துகிறது. அந்த ஒலிக்குக் காரணம் காற்று. காற்றில் பரவும் ஒலி அலைகள் அதிர்வுகளுக்குத் தக்கபடி மாறுபடும். எமது செவிப்புலன்களைச் சென்றடையும் ஒலிநுண் அலைகளை இன்றைய தமிழர்களாகிய நாம் ஒலியன் என்கிறோம். அதனை பண்டைத் தமிழரான தொல்காப்பியர் வளியிசை என்று மிகவும் ஆழமான அழகிய சொல்லால் குறிப்பிட்டுள்ளார். 
“அஃதிவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்
மெய்தெரி வளியிசை அளவு நுவன்றிசினே”       - (தொல்: 1: 3: 21)

‘இங்கு [இந்நூலில்] சொல்லப்படாது [நுவலாது], எமக்குள்ளிருந்து எழுந்து வெளியே வந்து ஒலிக்கும் எழுத்தின் உண்மைத் தன்மையை தெரிவிக்கும் வளியிசையின் [ஒலியனின்] மாத்திரையின் அளவைக் கூறினேன்’ என்கிறார். ஒவ்வொரு எழுத்தும் வரையறுக்கப்பட்ட கால அளவுள்ள வளியிசையை அதாவது ஒலியனை உடையது என்னும் அறிவியில் கருத்தை தொல்காப்பியர் இச்சூத்திரத்தில் சொல்கிறார். பாருங்கள், தமிழ் எழுத்தின் பிறப்பே நம் முன்னோருக்கு காற்றின் இசையாக - வளியின் இசையாகத் தெரிந்திருக்கிறது. [வளி என்றால் காற்று. வளி + இசை = வளியிசை].

தமிழ் இசைநூல் முறைப்படி தமிழெழுத்தின் ஒலிகள் ஒலிப்பதை
“அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளபென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்”             (தொல்: 1: 1: 33)

எனத் தொல்காப்பியர், ‘தமிழ் எழுத்துக்களின் ஒலிகள் அதன் அளவுக்கு மேலும் நீண்டு ஒலித்தல் நரம்பிசைக் கருவியான யாழிசை நூலிலும் உள்ளதென இசைநூலார் செல்வர் எனப் புலவர்கள் கூறுவர்’ என்கிறார். இதில் தொல்காப்பியரின் காலத்திற்கு முன்பே தமிழிசையும் யாழிசை இலக்கண நூல்களும் தோன்றிவிட்டன என்பதை [இசையொடு சிவணிய - இசையோடு சேர்ந்த; நரம்பின் மறைய - நரம்பு இசையின் இலக்கணம்; உளபென மொழிப - உள்ளதெனச் சொல்வர்;  என்மனார் புலவர் - எனப்புலவர் கூறுவர்], தொல்காப்பியர் எடுத்துச் சொல்லியுள்ளார். எனினும் நாம் அதனைக் கண்டுகொள்வதில்லை.

எழுத்ததிகாரத்தில்[1] அப்படிக் கூறிய தொல்காப்பியர், தமிழ் சொற்களின் இலக்கணத்தைக் கூறும்  சொல்லதிகாரத்தில்[2] 
இசைப்பு இசையாகும்”                          (தொல்: 2: 8: 13) 
என்கிறார். இசைப்பு - இசையின் போக்கு; சொற்களோ சுரங்களோ ஒன்றோடொன்று இசைந்து [சேர்ந்து] ஒழுகவேண்டும். அப்படி இருந்தால் இசை தோன்றும். அதாவது யாழின் இசைப்பு யாழிசையைத் தரும். குரலின் இசைப்பு குரலிசையைத் தரும்.

அடுத்து பொருளதிகாரத்தில்[3] செய்யுள் இலக்கணம் கூறும் தொல்காப்பியர்
அசையும் சீரும் இசையொடு சேர்த்தி
வகுத்தனர் உணர்த்தல் வல்லோர் ஆறே”      (தொல்: 3: 8: 10)
என, பிறருக்கு ஒன்றை எடுத்துச் சொல்லி உணர்த்த வல்லவர்கள் தமிழின் அசையையும் சீரையும் இசையோடு சேர்த்தற்கு வழி வகுத்தனர். அதாவது சீர் என்பதை சொல் என்று வைத்தால் சொல்லைப் பிரிக்கும் இடமே அசையாகும். கண்ணன் என்ற சொல்லை ஒரு சீர் எனக் கொண்டால் அதைப்பிரிக்கும் போது ‘கண்’ ஒரு அசையாகவும் ‘ணன்’ ஒரு அசையாகவும் வரும். சீர் பிரிந்து அசைக்கப்படுவதால் அதனை அசை என்றனர்.  சீர் அசைகளாகப் பிரிந்து பண்ணுக்கு அமைய ஓசை நயத்தைக் கொடுத்து, இசையை உண்டாக்க சீரில் உள்ள அசைகளை பிரிக்கும் முறைகளை வகுத்துக் கொடுத்தனராம். [ஒரு சீர் எங்கே அசைந்து கொடுக்கும் என்பதற்கான இலக்கணத்தை வகுத்தனர்.]

நாம் நினைத்த மாதிரி சீர்களைப் பிரிக்க முடியாது. சீர் எப்படி அசையாக பிரியும் என்பதற்கும் வரைமுறை (இலக்கணம்) இருக்கிறது. அதற்கமையவே அந்நாளைய செய்யுள்கள் இயற்றப்பட்டன. தொல்காப்பியத்தின் செய்யுளியல் அதனை விரிவாகச் சொல்கிறது. அத்துடன் இசையுடனான பாட்டு, பண்ணத்தி, வண்ணம் ஆகியவை பற்றியும் சொல்கிறது. வண்ணத்தில் மட்டும் இருபது வகையான வண்ணத்தைக் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். அதில் வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம் மூன்றும் இசைப் பெயரையே தம்மோடு தாங்கி நிற்கின்றன. இவை முறையே வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்தால் ஆன பாடல்களாகும். வண்ணம் வடமொழியாளர் வாய்ச்சொல்லால் வர்ணம் என்ற பெயர் பூண்டு இன்று எம்மிடையே வலம் வருகிறது.

தொல்காப்பியம் ஐவகை நிலத்துக்கும் உரிய கருப்பொருள் பற்றிக் கூறும் இடத்தில்
“தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு 
அவ்வகை பிறவும் கருவென மொழிப”               (தொல்: 3: 1: 20) 
என்கிறது. தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், யாழின் பகுதியான பண் போன்றவற்றுடன் பிற கருப்பொருள் பற்றியும் சொல்வார்கள் என்கிறது. 

எனவே தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே பண்டைத்தமிழர் ஐவகை நிலத்துக்கும் [குறுஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்] தனித்தனியே பறை, யாழ், பண் எனத் தமிழிசையில் மூழ்கி இருந்தனர் என்பதை தொல்காப்பியம் எடுத்துக்காட்டுகிறது. தொல்காப்பியமும் அதற்குப் பின் வந்த சங்க இலக்கிய நூல்களும், பண்டைத்தமிழரின் இசைக்கருவிகளையும் அவற்றை இசைத்தும் பாடியும் திரிந்த பாணரையும் பாடினியரையும் மிக நுட்பமாகப் படம்பிடித்து பதிவு செய்து இரண்டாயிரத்து அறுனூறு ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருக்கின்றன. ஆனால் தமிழராகிய நாம் அவற்றை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

இவற்றுக்கும் மேலாக கடல் கோளால் [ஆழிப்பேரலையால்] அழிந்து போன குமரிக் கண்டத்தில் பஃறுளி ஆற்றை வெட்டியவனாகச் சொல்லப்படும் வடிவம்பலம் நின்ற பாண்டியமன்னன் தலைச்சங்க காலத்தில் ‘ஏழிசை நூற்சங்கத்தில்’ இருந்தான் என்று பழைய தனிப்பாடல் ஒன்று சொல்கிறது. 
வடிவம்பலம் நின்றானும் அன்றொருக்கால்
ஏழிசை நூற்சங்கம் இருந்தானும்”
இவன் தொல்காப்பியர் காலத்திற்குமுன் வாழ்ந்தவன். அவன் காலத்திலேயே ஏழிசை நூற்சங்கம் வைத்திருந்த தமிழர்களுக்கு இசையைப் பிறர் தந்தார்கள் என்று சொல்வது வேடிக்கையாகத் தெரியவில்லையா? தமிழிசை - இசைத்தமிழின் இராகத்தைத் தொடர்ந்து காண்போம்.
இனிதே, 
தமிழரசி.