Tuesday, 7 May 2013

எழுநூறும் தீதாய்விடும்


நாம் மேலை நாட்டு பண்பாடுகளின் தாக்கத்தால் நம் தமிழ் மூதாதையரின் எத்தனையோ அரிய நல்ல பண்பாடுகளை இழந்து கொண்டிருக்கிறோம். அவற்றில் ஒன்று நன்றி மறத்தல். நன்றி என்ற சொல்லின் உண்மையான கருத்தை மறந்து, பொய்யான பகட்டு உடையை அதற்கு இட்டு, நன்றி என்பதை வாய்ச் சொல்லாக குறுக்கிவிட்டோம். எதுவித உணர்வும் சிந்தனையும் இல்லாது உதட்டு அசைவில் நன்றி வெளிப்படுகிறது. அப்படி வெளிப்படும் நன்றி என்ற சொல்லால் பயனடைவோர் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எமது மனதுக்கும் சிந்தனைக்கும் செயலுக்கும் தொடர்பில்லாச் சொல்லாய் மாறியதாலேயே நன்றியை மறந்து வாழ்கிறோம்.

ஒருவர் இன்னொருவருக்கு எவ்வித பயனும் கருதாது செய்யும் நன்மையை, நன்றி என்று நம் தமிழ் முன்னோர் அழைத்தனர். 
அதனாலேயே ஔவையாரும் மூதுரையில்
"நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால்"
எனக்கூறினார்.

கவனியுங்கள்! ஒருவருக்கு பயன் கருதாது செய்வதே நன்றி (நன்மை). சொல்வது நன்றி ஆகாது. பயன் கருதாது செய்யப்படும் நன்மையானது பொருளாகவோ பணமாகவோ இருக்க வேண்டிய தேவை இல்லை. அது அன்பாக இருக்கலாம், உடல் உழைப்பாக இருக்கலாம், ஏன் கல்வியாகக் கூட இருக்கலாம். உண்மையான அன்பு என்றும் பயன் கருதி உண்டாவதில்லை. அன்பின் காரணமாகவே ஒருவர் தன் உடல் உழைப்பை மற்றவருக்குக் கொடுக்கிறார். 

அதுபோலவே கல்வியும். தன் நேரத்தையும் பசியையும் மறந்து, தன் குழந்தையாக எண்ணி அறிவுக் கண்ணைத் திறக்கும் ஆசிரியரைக் கூட மட்டமான வார்த்தைகளால் திட்டித்தீர்த்து என் பிள்ளைக்கு துரோகம் செய்தாய் எனச் சொல்லி அங்கலாய்க்கும் உலகம் இது. எந்த ஒரு ஆசிரியரும் எக்குழந்தைக்கும் பயன்கருதி கல்வி கற்பிப்பதில்லை என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தன் குழந்தைக்கு கொடுத்த அறிவுக்கே சூடான வார்த்தைகளால் செருப்படி என்றால் அன்புக்கும், உடல் உழைப்புக்கும் இன்றைய உலகம் என்ன மதிப்பு வைத்திருக்கிறது? எடை போடமுடியுமா?

ஒருவர் பயன் கருதாது செய்த நன்மையை யார் தீமையாகக் கருதுவர் என்பதை நாலடியார் எடுத்துக் கூறுகிறது.  ஒருவர் ஒரு நன்மை செய்திருந்தாலும் சான்றோர்கள் அதற்காக  அவர்கள் செய்கின்ற நூறு பிழைகளைக் கூட பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் கயவர்களுக்கு எழுநூறு நன்மை செய்து, தற்செயலாக அவர்கள் பார்வையில் ஒன்று தீதாகத் தெரிந்தாலும் செய்த எழுநூறு நன்மையும் தீமையானதாகவே கருதுவர் என்று நாலடியார் கூறுகிறது. எனவே நாலடியாரின் கூற்றுப்படி, ஒருவர் செய்த நன்றியை - நன்மையை மறப்பவர் கயவர் ஆவார். 
ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழைநூறும் சான்றோர் பொறுப்பர் - கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீதாயின்
எழுநூறும் தீதாய் விடும்                                 - (நாலடியார்: 357)

ஆதலால் நமக்கு நன்மை செய்தோருக்கு நன்மை செய்யாவிடினும் தீமையாவது செய்யாதிருப்போம். தமிழர்கள் எந்த நூல்களைக் கற்காவிடினும் திருக்குறளையும் நாலடியாரையும் நேரங்கிடைக்கும் நேரங்களில் படித்துக் கொள்ளுங்கள். அவை இரண்டும் மனிதரை மனிதராக வாழவைக்கும் இரு கண்களாகும்.
இனிதே,
தமிழரசி.

Monday, 6 May 2013

சீர்யான் பெறவல்லனோ!

 
பெருநிதியம் தந்தாய்! பேறுயான் பெற்றேன்
          பெம்மானே! உன்னையல்லால் வேறு 
ஒருநிதியம் உண்டோ! உலகில் உவப்பினும்
          ஒருகுறை உண்டெனக்கு கண்டாய்!
சிறுநிதியம் வேண்டி சிரிக்கின்ற உலகில்
          சீர்யான் பெறவல்லனோ சிங்காரா!
உறுநிதியம் நீயேயாகில் ஆனந்த வெள்ள
          ஊற்றினுள் ஆழ்த்தியருள்க நன்றே!
இனிதே,
தமிழரசி.

Sunday, 5 May 2013

என்னில் யாரும் எனக்கினியாரில்லை!

 பக்திச்சிமிழ் - 54

பாரதியார் தாம் பிராமணராக இருந்தும் நம் தமிழ்ச்சாதியைப் பார்த்து 
“பார்ப்பானை ஐயன் என்ற காலமும் போச்சே”
எனப்பாடி ஒரு நூற்றாண்டாகியும் நாம் இன்னும் விடாப்பிடியாக ஐயர்மார் கால்களில் விழுந்து எழும்புகின்றோம். அப்படி விழுந்து எழும்பும் நம்மில் எத்தனை பேர் எமது தாய் தந்தையர் காலில் வீழ்ந்து எழுந்திருக்கிறோம்? இன்றைய ஐயர்மாரின் முன்னோரை, நம் தமிழ் முன்னோர் ஏன் ‘பார்ப்பான்’ என அழைத்தனர் என்பதை தமிழர்களாகிய நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். 1951ல் கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் தமிழ்விழா ஒன்று நடைபெற்றது. அதில் இலங்கை, இந்திய அறிஞர்கள் கலந்து கொண்டனர். பண்டிதர்  மு ஆறுமுகன் (எனது தந்தை) பார்ப்பானை அய்யன் என்ற காலமும் போச்சேஎன்ற தலைப்பில் தனது உரையை நிகழ்த்தினார்.

அப்போது அவர், ‘நான் பார்ப்பனருக்கு எதிரியல்ல. தமிழுலகம் சங்ககாலத் தமிழரின் வாழ்வியலின் உண்மையை அறியவேண்டும் என்பதற்காகவேபார்ப்பானை அய்யன் என்ற காலமும் போச்சேஎன்ற தலைப்பை எனது கருப்பொருளாக எடுத்தேன்.
வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த 
வளைகளைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன
என்ற அகநானூற்றுப் பாடல் வரிக்கு பொருள் கூறுவோர் பலர், வேளாளப் பார்ப்பனர் எனவும், யாகம் பண்ணாத ஊர்ப்பார்ப்பான் எனவும் கூறி, சங்க காலத்தில் பார்ப்பனர் சங்கு அறுத்ததற்கு காரணம் கூறி மழுப்புகிறார்கள். அப்பாடலின் பொருள் மிகத்தெளிவாகவே உள்ளது. ‘வேளாப்பார்ப்பான்என்ற சொல்லே சங்ககாலத்தில் பார்ப்பனர் என்ன தொழில் செய்தார்கள் என்பதை சொல்கிறது. வேள் + + பார்ப்பான் = வேளாப்பார்ப்பான். வேள் என்றால் வேள்வி, ஆ என்பது பசு. வேள்விக்கு வேண்டிய பசுவைப் பார்த்தவனே வேளாப்பார்ப்பான். தற்காலத்தில் மேற்பார்வையாளர் என்றும் கண்காணி (கங்காணி) என்றும் சொல்வதைப் போன்றதே பார்ப்பான். அது அவர்களது தொழில், சாதி அல்ல. அப்படி வேள்விப் பசுவைப் பார்த்த பார்ப்பானுக்கு வேள்விப்பசு சொந்தமானது அல்ல. அவன் பார்க்கும் பசுக்கள் எல்லாம் ஒருநாள் வேள்வித்தீயில் வெந்து நீறு ஆகிவிடும். அப்போது அவன் வாழத் தொழில் வேண்டாமா? உயிர்ப் பசுவை வேள்வித்தீயில் இடும் பார்ப்பானுக்கு, அரத்தால் சங்கை அறுத்து சங்கின் தலையை வேறாக்கும் தொழில் செய்வது கடினமா?’ எனப் பேசிக்கொண்டிருந்தார்

அவர் கூறிய உரைப்பொருத்தங் கண்டு அறிஞர் மு வரதராசன் அவர்கள் எழுந்து பண்டிதர் ஆறுமுகனாரைக் கட்டித் தழுவியமை உண்மை வரலாறு, என வித்துவான் சி ஆறுமுகம் ஈழநாடு பத்திரிகையில் பண்டிதர் இறந்த பொழுது எழுதி இருந்தார்.

இந்த அகநானூற்றுப் பாடலைவிட, பார்ப்பனர் என்ன தொழிலைச் செய்தனர் என்பதற்கு வேறு ஆதாரம் வேண்டுமா? சங்ககாலப்புலவரான நக்கீரரை பிராமணராகக் கருதி ‘சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம்?' எனக்கேட்டதாக திருவிளையாடல் படத்தில் காட்டிய காட்சியை உங்களில் பலர் பாத்திருப்பீர்கள். சங்ககாலப் பிராமணர் சங்கறுத்து வளையல் (காப்பு) செய்ததை இவை காட்டவில்லையா?

ஆனால் நம்மில் பலர், இன்று பிராமணர்கள் யாவரையும்  தெய்வப்பிறவிகள் என்று எண்ணி அவர்கள் சொற்களை வேதவாக்காக ஏற்றுக்கொள்வதும், அவர்களே கோயிலிலுள்ள சிலைகளைத் தொடத் தகுதியானோர் என நம்பி அவர்கள் கால்களில் வீழ்ந்து எழும்புவதும் அவற்றை பெருமையாகப் பேசுவதும், பார்க்கப் பார்க்க உலகிற்கு நாகரிகத்தை அள்ளி வழங்கிய தமிழரா நாம் என எண்ணி மனம் வேகின்றது? தமிழர்களே! நாம் நம் வருங்காலச் சந்ததியினருக்கு இச்செயலையா தற்காலத் தமிழனின் நாகரிகம் எனவிட்டுச் செல்லப் போகிறோம். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

 திருநாவுக்கரசு நாயனார் சொன்னது போல 
“ஆவுரித்துத் தின்னும் புலையரேனும் 
          அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே!”
என்பது முற்றும் முழுவதும் உண்மையாகும். ஆனால் பிராமணனர்களாகிய தாமே மற்ற மனிதரைவிட சாதியில் உயர்ந்தவர்கள் என மமதையில் நிற்போரின் கால்களில் விழுந்து எழுவது எந்தவகையில் சரி என்பதை நாமே முடிவெடுக்க வேண்டும்.

தெய்வம் உண்டென்று இரு’ என்பதை முழுமையாக நம்புபவள் நான். அதில் எனக்கு எதுவித கருத்து வேறுபாடும் இல்லை. நம் தமிழ் மூதாதையர் சொன்ன கடவுள் கொள்கையை கடைப்பிடிப்பவள் நான். அவர்களது கடவுட்கொள்கையின் உண்மையை உணர்ந்தவள் என்ற வகையிலேயே நம்மவர் நிலையை கோயில்களில் பார்த்ததால் எழுதுகிறேன்.

நாம் ஒன்றை உணர்ந்து கொள்ளவேண்டும். உலக உயிர்கள் யாவும் உயிர் என்னும் தன்மையில் ஒன்றே தான். அதிலும் மனிதர்களாக இருக்கும் நம் உயிர் - ஆன்மா எப்படி ஆளுக்கு ஆள் வேறுபடும்? அப்படி வேறு படுத்துவது மடமை ஆகாதா? ஆன்ம ஈடேற்றம் ஆளுக்கு ஆள் வேறுபடலாம், ஆன்மா ஒன்றே தான். குருக்கள் காலில் விழுந்து எழும் நமது ஆன்ம பலம் அவர்களது ஆன்மபலத்தை விட கூடுதலாக இருக்கமாட்டாதா? சற்றே சிந்தித்து பாருங்கள். உண்மை புரியும்.

எனவே எமக்கு (எம் உயிருக்கு) இனியவர் யார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அவ்வாறு நாம் சிந்தித்துப் பார்போமேயானால்  எம்மைவிட எமக்கு இனியவர்கள் யாரும் இல்லை என்பதை உணர்வோம். திருநாவுக்கரசு நாயனார் 'என்னில் யாரும் எனக்கினியார் இல்லை' எனக்கூறுகிறார். சிலவேளைகளில் நாமே நமக்குத் தீங்கு செய்து கொள்கிறோம். ஆதலால் எப்படி ‘என்னில் யாரும் எனக்கு இனியார் இல்லை' எனக்கூறமுடியும்? எனச்சிந்தித்து தொடர்ந்து சொல்கிறார். ‘என்னிலும் இனியன் ஒருவன் இருக்கிறான், அவன் நமது உயிர்க் காற்றாய் புறத்தே போயும் அகத்தே வந்தும் எனக்குள்ளே நிற்கின்றான்’ என்கிறார்.

“என்னில் யாரும் எனக்கினியார் இல்லை
என்னிலும் இனியான் ஒருவன் உளன்
என்னுளே உயிர்ப்பாய்ப் புறம்போந்து புக்கு
என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே”    
                                      - (ப.திருமுறை: 5: 21: 1)

எம் உயிர்ப்பாய் வெளியேயும் உள்ளேயேயும் சென்றுவருவது எது? காற்று. அதிலும் உயிர்க்காற்று. அதனை இன்று ஒட்சிசன் என்கிறோம். அந்த மூச்சு நின்றுபோனால் நம் ஆட்டம் அடங்கிப் போகும். பிராமணர்களை வரவழைத்து ‘நெய் சொரிந்து தீவளர்த்து’ சுற்றுச்சூழலை தூய்மை அற்றதாக மாற்றி அல்லல் படுவதைவிட, நமக்குள்ளே இருக்கும் இறைவனை நாம் தேடலாமே.
இனிதே, 
தமிழரசி. 

Saturday, 4 May 2013

ஆலும் வேலும்


கொழும்பு காலிவீதியில் இருந்த ஆலமரம் 1880

"ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்பது முதுமொழி.

ஆலமரத்தை ஆல் என்றும், வேப்பமரத்தை வேல் என்றும் வேம்பு எனவும் கூறுவர். முதுமையால் ஆடி விழும் பற்களைக்கூட ஆலமரத்தின் பால் மீண்டும் உறுதியாக நிலைத்து நிற்கவைக்கும். ஆதலால் ஆலமரப் பாலை முமைக்காலத்தில் பல்லில் தடவி வந்தனர். ஆலமரத்தின் பாலுக்காக ஆலமரத்தை  நம் முன்னோர் பேணி வளர்த்தனர். ஆலமரவிழுதினை வெட்டி, ஒரு நுனியை நன்னி மிருதுவாக்கி பல் துலக்கினர். அப்படி பல் துலக்குவதால் ஆலவிழுதில் உள்ள ஆலமரப்பால் பற்களின் ஈறுகளுக்குள் சென்று பற்களில் கிருமிகள் தொற்றுவதை தடுத்ததுடன், பற்களுக்கு உறுதியையும் அளித்தது பற்களின் வெண்மைக்கு காரணமாகவும் இருந்தது. குழந்தை இல்லா மலட்டுத்தன்மையை ஆலம் பழம் போக்கியது. 



ஆதலால் நம்முன்னோர் பரந்து வளரும் மரமான ஆலமரத்தை ஒவ்வோர் ஊருக்கும் குறைந்தது ஒரு மரம் என வளர்த்தனர். அது ஊரார் சுற்றமான காற்றை சுவாசிக்க, அதிக ஒட்சிசனையும் நிழலையும் தந்து நிலத்தடி நீரையும் காப்பாற்றியது. அந்நிய ஆட்சியாளர்களின் வரவால் எம் முன்னோரின் அரிய கண்டுபிடிப்புகளை நாம் நம் அறியாமையால் தொலைத்து அல்லல்படுகிறோம். அடுக்குமாடிக் கட்டிடங்களை கட்டுவதற்காக எத்தனை ஆயிரம் ஆலமரங்களை மண்ணோடு மண்ணாக ஆக்கி இருக்கிறோம். ஆலமரங்களைப் பேணிக்காக்கவேண்டும் என்று எப்போ புறப்படுப் போகிறோம்?

ஆலமரத்தின் பயனை நாம் அறியாவிட்டாலும் வேப்பமரத்தின் பயனை ஓரளவு அறிந்திருக்கிறோம். ஏனெனில் நம் முன்னோர் ஆலமரத்தை ஊருக்கு ஒன்று, இரண்டு என வளர்த்த போதும் வேப்பமரத்தை வீட்டுக்கு ஒன்று இரண்டு என வளர்த்தனர். ஆதலால் எமக்கு வேப்பமரத்தின் அருமை தெரியும். வேப்பம்பூ வடகம், வேப்பிலைத் துவையல், வேப்பெண்ணெய், வேப்பம்பிசின், வேப்பம்சவற்காரம், வேப்பம்பற்பசை, வேப்பம்பற்பொடி என்று எத்தனையோ விதத்தில் வேம்பை பாவிக்கிறோம். எமது பற்களில் இரத்தம் வடிதலையும், முரசு கரைதலையும் வேம்பு போக்க வல்லது. ஒரு சாண் நீளமான  வேப்பங்குச்சியின் ஒருபக்க நுனியை நன்னி பல் துலக்கிவர பல்லால் இரத்தம் வடிதல் நிற்கும். பல்லின் ஈறுகளில் தங்கும் கிருமிகளை கொல்லும். பல் வெண்மையாகும்.



எந்தக் கோடை வெய்யிலிலும் ஆலமர நிழலும், வேப்பமர நிழலும் குளிர்மையை அள்ளித்தந்ததை அநுபவத்தால் ஆராய்ந்து அறிந்தே நம்முன்னோர் அவற்றை முதன்மை மரங்களாகப் பேணினர். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்றதுபோல் இப்போது ஆலம்பட்டையை பற்பசையில் சேர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். அதுவும் வரவேற்கத் தக்கதே. எனினும் ஆலமரப் பாலே பல்லுக்கு உறுதியைக் கொடுப்பது என்பதை வருங்கால எமது குழந்தைகளாவது ஆய்வு செய்து உலகிற்கு சொல்வது நன்று. அந்த நேரம் ஆலமரங்களை அருங்காட்சியகத்தில் தேடாது இருப்பதற்கு நாம் வழிவகுக்க வேண்டும். எம்மைப்போல் பல்வைத்தியரிடம் பல்லைக்காட்டாது, நம் சந்ததியினர் இருப்பதற்கு ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி தரும் என்னும் தாரக மந்திரத்தை எம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து வழிநடத்துவோம். அதற்கு வழிவகுக்க ஆலையும் வேலையும் நடுவோமா! எமது வாழ்வை வளமுடன் எல்லோருடனும்கூடி மனிதராய்வாழ மரம் வளர்ப்போம்!!

மனிதராய்வாழ மரம் வளர்த்தால் மட்டும் போதாது. எமது மனித மனம் பண்பட வேண்டும். அதற்கு முதலில் பிறரது மனதை புண்படுத்தாது வாழ, எமக்கு கற்றுத் தரவல்ல அரிய நூல்களை நாம் தேடிக் கற்கவேண்டும். மனித நெஞ்சத்தில் உண்மையை, நேர்மையை, அன்பை, பண்பை வளர்ப்பன தமிழில் உள்ள அரிய நூல்களாகும். அவற்றுள் மிக எளிமையாக மனிதவாழ்க்கையின் எல்லா தன்மைகளையும் எடுத்துக் கூறுவன இரண்டே. 

அந்த இரண்டு நூல்களையே மேலேயுள்ள முதுமொழி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி எனச் சொல்கிறது. அது இரண்டு அடியால் ஆன திருக்குறளை இரண்டு என்றும் நாலு அடியால் ஆன நாலடியாரை நான்கு என்றும் சொல்கிறது. இரண்டு அடியால் ஆன ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள் கொண்டதே திருக்குறள். நான்கு அடியால் ஆன நாநூறு பாடல்களை உடையதே நாலடியார். இவை இரண்டையும் நன்கு ஆராய்ந்து கற்றால் நீங்கள் சொல்லும் சொற்கள் உறுதியானவையாக இருக்கும். 

உலக நேயத்துடன் எவரையும் மதித்து வாழவேண்டுமா? நாலடியாரையும் உலகப் பொதுமறையாம் திருக்குறளையும் உங்கள் கண்போல் பேணிக் கற்றுக்கொள்ளுங்கள்.

‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ என்று முதுமொழி புகன்ற எமது மூதாதையர் முழுமையானவர்களே!
இனிதே, 
தமிழரசி.

Friday, 3 May 2013

பாலகர் நிலையினைப் பாரீரோ!












பாரெங்கும் மாந்தர் பழகிடும் அன்பில்
பரிவும் பாசமும்  பிணைத்திடக் கண்டும்
தேர்ந்திடும் ஆற்றலின் மேன்மையை எண்ணி
தேசங்கள் தோறும் தத்தம் இனத்தின்
தார்மிக உரிமையைச் சிதைக்க நாளும்  
போரென்று சொல்லி பொய்மையை விதைத்து 
புரிந்திடும் போர்கள் அழித்திடும் தாய்மையால்
யாரென்று கேட்க நாதியற்று நிதம்
நைந்திடும் பாலகர் நிலையினைப் பாரீரோ!
                                                              - சிட்டு எழுதும் சீட்டு 59

Thursday, 2 May 2013

கன்னியவள் அறியல்லயே!


வேப்பையடிக்குளம்
இன்றைய அம்பாறை மாவட்டத்தின் திருக்கோயில் பகுதி, பண்டைய ஈழத்தமிழரின் வாழ்விடங்களில் ஒன்றாகும். அங்கு வாழ்ந்த பண்டைய ஈழத்தமிழர் தம் எண்ணங்களை, ஆசைகளை கொட்டிக் கொஞ்சிக் குலாவி மகிழ்ந்த இடமே வேம்பை அடி மன்றம். அம்மன்றத்தின் அருகே இருந்தது வேம்பையடிக்குளம். இன்றும் அது அங்கே ஓர் அழகிய சிறுகுளமாக காட்சி தருகிறது. அக்குளத்தை வேப்பை அடிக்குளம் என்கின்றனர். அக்குளத்தில் யானைகள் குளித்து மகிழ்கின்றன. 

ஆனால் அந்நாளில் அந்த வேம்பையடிக் குளத்தில் பெண்கள் குளித்தனர். அங்கு குளிக்க வந்த  கன்னிப் பெண் ஒருத்தியை இளைஞன் ஒருவன் காதலித்தான். அவளைப் பார்ப்பதற்காகவே அவன் 


ஆண்: வேம்பையடி மன்றத்தே
                      காத்திருந்த காரணத்தை
            கன்னியவள் அறியல்லயே!
                      காதலயும் புரியல்லயே!



ஆண்: காத்திருந்தாலும் கண்ணால
                        பாக்குதில்லயே!
            ஓடித்திரிந்தாலும் உறக்கம்
                        வருகுதில்லயே!
                                                      - நாட்டுப்பாடல் (வேம்பையடிக்குளம்)
                                                     - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுபாடல் தேட்டத்திலிருந்து)
அந்த இளைஞனைப் போல சங்ககாலத்திலும் இளைஞன் ஒருவன் தான் கொண்ட ஒருதலைக் காதலால் தன் காதலி தனது காதலை அறிந்தாளோ! இல்லையோ! என எண்ணித் துன்பப்பட்டான். 

“சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக்கிளி கடியும் பூங்கண் பேதை
தான்அறிந் தனளோ இலளோ பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து என்
உள்ளம் பின்னும் தன்னுழை யதுவே. 
                                         - (குறுந்தொகை: 142)

'சுனையில் மலரும் பூக்களைப் பறித்து மாலை கட்டி, தினைப் புனத்தில் கிளிகளை ஓட்டுகின்ற பூவைப் போன்ற கண்ணுடைய இளம்பெண்ணான அவள், என் காதலை அறிந்தாளோ! இல்லையோ! தூங்கும் யானையைப் போல் பெருமூச்சு விட்டபடி என் உள்ளம் அவளிடமே இருக்கிறது' என்று சங்ககால காதலன்பட்ட, காதல் துன்பத்தை சங்ககாலப் புலவரான கபிலர் கேட்டு எமக்காக குறுந்தொகைப் பாடலாகத் தந்திருக்கிறார்.
இனிதே,
தமிழரசி.

Wednesday, 1 May 2013

குறள் அமுது - (63)


குறள்:
“தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்உயிர் எல்லாம்தொழும்”                               - 268

பொருள்:
தனக்கு உயிர் இருக்கிறது என்ற எண்ணம் இல்லாது, பிற உயிர்களின் நன்மைக்காக வாழ்பவனை, ஏனைய உயிர்கள் எல்லாம் வணங்கும்.

விளக்கம்:
தவம் செய்பவர்களில் யாரை உலகம் வணங்கும் என்பதை திருவள்ளுவர் இக்குறளில் எடுத்துக்கூறுகிறார். மன்உயிர் என்பது உலக உயிர்களைக் குறிக்கும். தான் என்ற எண்ணம் இல்லாது போதலே தான் அறப்பெறுதல். தன்னுடைய உயிர், தனது என்னும் பற்று நீங்கப் பெற்றவனையே உலக உயிர்கள் யாவும் கைதொழுது வணங்கும். எவனொருவனுக்கு தான் என்ற எண்ணம் இருக்கின்றதோ அவனிடம் தவவலிமை இருக்காது. அவனை நாம் வணங்கத் தேவை இல்லை. 

இக்குறள் மூலம் கள்ளச்சுவாமிமார் யார்? உண்மையான சுவாமிமார் யார்? என்பதை நாம் எடைபோடும் வழியை திருவள்ளுவர் எமக்குக் காட்டித் தந்துள்ளார். தான் செய்வதாகவோ, செய்ததாகவோ, தன்னிடம் இருப்பதாகவோ எந்தச்சுவாமியார் கூறுகிறாரோ அவர்  தவவேடதாரியே என்பது ஐயன் திருவள்ளுவன் முடிவாகும். எனவே நீங்கள் எவரையும் வீழ்ந்து வணங்கமுன், ‘தனது என்ற எண்ணம் அற்று, பிறருக்காக வாழ்கிறாரா’ என்பதைப் பார்த்து வணங்குங்கள்.  

தவவலிமையால் மிகப்பெரியவனாக இருந்தாலும் தானே பெரியவன் என்னும் எண்ணம் அற்றவனை இவ்வுலக உயிர்கள் யாவுமே தொழும் என்று கூறும் குறள் இது.