Saturday, 30 April 2016

வாழ்வின் இன்பம் வழங்கிய கொடையே!

மரணம் என்பது மகிழ்ச்சியின் எல்லை
மானுட வாழ்வின் முடிவினைக் காட்டும்
கரணம் தப்பின் மரணம் உண்டாகும்
கருவின் உயிரும் மரணம் எய்தும்
தருணம் தன்னில் தப்பிய உயிரும் 
தாயின் வயிற்றில் தங்கிய கருவும்
விரணம் எய்தின் மரணம் அடையும்
வாழ்வின் இன்பம் வழங்கிய கொடையே!
இனிதே
தமிழரசி.

Thursday, 28 April 2016

அடிசில் 98

அவரைக்காய் கூட்டு
- நீரா -
  


தேவையான பொருட்கள்
அவரைக்காய்  -  12
வறுத்த பயற்றம்பருப்பு  - ½ கப்
துருவிய தேங்காய் பூ  - 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள்  -  ½ தேக்கரண்டி
மஞ்சள்தூள்  -  ¼ தேக்கரண்டி
வெங்காயம்  -  1 சிறிதாக வெட்டியது
பச்சைமிளகாய்  -  2 சிறிதாக வெட்டியது 
கறிவேப்பிலை  -  கொஞ்சம்
கடுகு  -  ½ தேக்கரண்டி
சீரகம்  -  ½ தேக்கரண்டி
எண்ணெய்  -  ½ மேசைக்கரண்டி
உப்பு  -  தேவையான அளவு

செய்முறை: 
1. பயற்றம் பருப்பை கழுவி மஞ்சள் சேர்த்து, ஒன்றரைகப் தண்ணீர் விட்டு வேகவைத்து எடுக்கவும்
2. அவரைக் காயைக் கழுவி நார், காம்பு ஆகியவற்றை நீக்கி சிறியதாக வெட்டிக் கொள்க.
3. ஒரு பாத்திரத்தில் வெட்டிய அவரைக்காயை இட்டு மிளகாய்த் தூள், உப்பு சேர்ர்து காயை மூடும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேகவிடவும்.
4. தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், சீரகம் மூன்றையும் பட்டுப் போல் அரைத்து எடுக்கவும். 
5. காய் வெந்து வரும் போது அவித்து வைத்துள்ள பயற்றைச் சேர்த்துக் கலந்து மெல்லிய நெருப்பில் வேகவிட்டு கொதிக்கும் பொழுது அரைத்த கூட்டைச் சேர்த்து வெந்ததும் இறக்கவும்.

6. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகைப்போட்டு வெடித்ததும் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, இறக்கிவைத்துள்ள அவரைக்காய்க் கூட்டோடு சேர்த்துக் கலந்து கொள்க.

Wednesday, 27 April 2016

கண்ணீரைத் தெளித்தேனும் தேற்றாமரம் வளர்ப்போமா!


இந்த உலகத்தில் தண்ணீரை விலைகொடுத்து வாங்குகிறோம். ஆனால் கண்ணீரை விலை கொடுத்து வாங்குவோர் யார்? நல்ல தண்ணீர் அற்றுப் போகப் போக கண்ணீர் ஊற்றுப் பொருக்கெடுத்து ஓடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அந்நேரம் நாம் செய்த மாபெரும் தவறுக்காக நமது கண்ணீரைத் தெளித்தே மரங்களை நட்டு வளர்க்க வேண்டிய நிலைவரும். அப்போதாவது எம் கண்ணீரைத் தெளித்தேனும் தேற்றாமரம் வளர்ப்போமா? ஏனெனில் கண்ணீரின் உவர்ப்பை நீக்கத் தேற்றாங்கொட்டை தேவை. ஈழத்தமிழர்கள் தேற்றாமரத்தை ‘தேத்தாமரம்’ என்றும் அழைப்பர். ஆங்கிலத்தில் clearing nut tree எனச் சொல்வர். இதன் தாவரவியல் பெயர் Strychnos Potaorum ஆகும்.

கண்ணீரைத் தெளித்து வளர்க்க வேண்டிய அளவுக்கு தேற்றா மரத்திற்கு அப்படி என்ன பெருமை இருக்கிறது என வியக்கின்றீர்களா? வியப்படையும் நிலையிலேயே நாம் வாழ்கிறோம். தேற்றா மரம் சங்ககாலப் பழமை உடையது.  அதிலும் இடைச்சங்ககால நூலான தொல்காப்பியத்தில் எடுத்துச் சொல்லப்பட்ட மரங்களில் ஒன்று. அதனை
“இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே”
                                                - (தொல்: புள்ளிமயங்கியல்: 18)
என்று தொல்காப்பியர் கூறுவதால் அறியலாம். தேற்றா மரத்திற்கு இல்லம் என்ற பெயரும் உண்டு.
“முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ”
                                                - (அகநானூறு: 4: 1 - 2)
முல்லைச் செடியில் கூரான அரும்புகள் தோன்ற, தேற்றா மரத்திலும் கொன்றை மரத்திலும் மொட்டுக்கள் கட்டவிழ்ந்து விரிய எனத் தோழி தலைவிக்குச் சொல்வதாக  குறுங்குடி மருதனார் ஒரு காட்சியைக் காட்டுகிறார். சங்ககாலத்தில் இல்லம் என்ற பெயரில் தேற்றாமரம் அழைக்கப்பட்டதை சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. 

சங்ககால ஆடவரும் மகளிரும் தேற்றா மலரை மாலையாகத் தொடுத்து தலையில் சூடினர். சங்ககாலக் காதலன் ஒருவன் முல்லை[குல்லை], காட்டுமல்லிகை[குளவி], கூதளம்[கூதாளி], குவளை, தேற்றா[இல்லம்] மலர்களைச் சேர்த்துக் கட்டிய மாலையை[கண்ணியை] தலையில் சூடியிருந்ததை
“குல்லை குளவி கூதளங் குவளை
இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன்”
                                                - (நற்றிணை: 376: 5 - 6)
என நற்றிணையில் கபிலர் குறித்துள்ளார்.

தைலவருக்கம் என்னும் மருத்துவ நூலும் தைலங்காய்ச்சுவதற்கு தேற்றாங்கொட்டை சேர்ப்பதைக் கூறுமிடத்தில்
இல்லமுறு அண்டங்கள் நூறுபலம்”
                                                - (தைலவருக்கம்: 33)
என்கின்றது. சிறுநீரக நோய்களை நீக்க இத்தைலம் பயன்பட்டது. அண்டம் போன்ற வடிவில் இருந்த தாவர விதைகளை  நம் முன்னோர் அண்டம் என்றனர். மற்ற விதைகளைப் போல அல்லாமல் தேற்றாங் கொட்டைகள் அண்டவடிவில் இருப்பதை கீழே உள்ள படத்தில் பாருங்கள்.

சங்ககாலப் புலவரான முடத்தாமக்கண்ணியார் தான் அரசனிடம் பெற்ற பரிசையும் அரசனின் தன்மையையும், சுறாமீன் திரியும் கடலோர நெய்தல் நிலத்து வழியில் கண்டகாட்சிகளையும் ஒரு பொருநருக்குச்  சொல்கிறார். அதில் பறைவைகள், மலர்கள், மரங்கள் எனப் பலவற்றை மிக விரிவாக எடுத்துச் சொல்லும் போது
“நகு முல்லை உகு தேறு வீ”   - (பொருநராற்றுப்படை: 200)
‘சிரித்தது[நகு] முல்லை சிந்தியது[உகு] தேற்றா[தேறு] வீ[மலர்]
சிரித்தது முல்லை, சிந்தியது தேற்றா மலர்எனத் தேற்றா மலர்கள் மரத்தில் இருந்து தேன் சிந்துவது போலச் சிந்தியது என்கிறார். தேன் நிறைந்த சிறிய மலர்கள்; அவை மரத்திலிருந்து சிந்துமே அல்லாமல் சிதறாது. அதனாலேயே பண்டைய தமிழர் அதனை எழில்மரமாக [ornamental tree] வளர்த்து தம் சுற்றுச் சூழலை எழிலாக்கினர். 

இல், இல்லம் என்பன வீட்டடைக் குறிக்கும். இல் + அம்[அழகு] = இல்லம். வீட்டிற்கு அழகைக் கொடுப்பது இல்லம். பண்டைய நம் முன்னோர் தேற்றா மரத்தைத் தமது இல்லத்தின் எழில் மரமாக [ornamentaltree] மட்டுமல்ல அதற்கும் மேலாகப் போற்றி வளர்த்தனர். ‘இல்லம் இல்லத்தில் இருக்க இல்லாதது இல்லை’ என்பதையும் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதையும் அறிந்திருந்தனர். தேற்றாமரம் அப்படி என்ன பெரும் பொருளை நம் முன்னோருக்குக் கொடுத்து?

காற்றும் நீரும் மனித வாழ்வுக்கு மிகமிகத் தேவையானவை. தீவுப்பகுதிகளிலும் கடற்கரை ஓரங்களிலும் உள்ள காற்றின் உவர்ப்புத் தன்மையை, தூசுக்களை, மாசுக்களை [மீன், வண்டல் மண் போன்ற மணங்களை] நீக்கி, சுத்தமான நல்ல காற்றை உயிர்களின் வாழ்வுக்கு அள்ளி வழங்கிய ஓர் அற்புதமான மரம் தேற்றாமரம்.. காற்றைச் சுத்தமாக்கி, சுவாசத்துக்கு உதவி மனிதர்களை நோய் இன்றி வாழவைத்தது. இன்று சிறுநீரகக் கல், கல்லீரல் கல் எனப் பல நோய்களால் தத்தளிக்கிறோமே அவற்றுக்கு ஒரு காரணம் நீரல்லவா? நிலத்தடி நீரை நன்னீராக்கும் தன்மை தேற்றாமர வேருக்கும், நெல்லிமர வேருக்கும் உண்டு. அதனால் நம் முன்னோர் கிணற்றுக்குச் சற்றுத் தள்ளி (இலைவிழாத தூரத்தில்) இம்மரங்களை நட்டனர்.

நிலம் பாலை வனமாக மாறுவதற்கு ஒரு காரணியாய் இருப்பது வலிமையான காற்றே. அத்தகைய வலிய காற்றையும் தடுத்து நிறுத்தி மற்ற உயிரினங்களைக் காத்த தேற்றாமரத்தை ஏன் அழித்தோம்??. இம்மரம் வாளால் வெட்டுவதற்கு கடினமானது. கமம் செய்வதற்குத் தேவையான கலப்பை, நுகம் போன்றவற்றை இம்மரத்தில் செய்தனர்.
தேற்றாங்கொட்டை

இவற்றைவிட நம் முன்னோரின் அரிய கண்டு பிடிப்பொன்றை கோடிட்டுக் காட்டுகிறது கலித்தொகையின் நெய்தற்கலி. 
“கலஞ்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக்
கலங்கிய நீர்போல் தெளிந்து நலம்பெற்றாள்
நல்லெழில் மார்பனைச் சார்ந்து”
                                                - (கலித்தொகை: 142: 64 -67)
‘குடத்தின்[கலத்தின்] உள்ளே தேற்றாவின்[இல்லம்] விதையால் தேய்க்கக் கலங்கிய நீர் தெளிந்தது போல தலைவனின் பிரிவால் கலங்கியிருந்த தலைவி, தலைவனைக்கூடி பழைய நலத்தைப் பெற்றாள்’ என்கிறார் நல்லந்துவனார். சங்ககால மக்கள் கலங்கிய நீரை எப்படித் தெளிந்த நீராக்கிக் குடித்தார்கள் என்பதைக் இச்சங்கப்பாடல் காட்டுகிறது. சங்ககாலத்தமிழர் ஆராய்ந்து அறிந்து  பயன்படுத்திய ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு  இது. தேற்றாங்கொட்டையைத் தேய்த்துத் தெளிந்த நீரை நானும் குடித்திருக்கிறேன்.

ஆம். அது 1964ம் ஆண்டு மார்கழி மாதம் நடந்தது. வடக்குக் கிழக்கு மாகாணத்தை இடுகாடாக்கிய பெரும் சூறாவளி வீசிய நேரம். வீடுகளையும் மரங்களையும் சிதைத்து சூறையாடியது அச்சூறாவளி. வெள்ளம் வீட்டினுள் புகுந்து மனித நேயத்தை, மர நேயத்தை என்னுள் புகுத்தியது. அற்காகத் தான் அங்கு வந்ததோ என்னவோ. மல்லாவியில் இருந்த பழைய கிராமத்தையே அது கொள்ளை கொண்டது. சூறாவளி என்ற பெயரில் இயற்கை ஆடிய கோரத் தாண்டவம் எனலாம். அதனை என் மனத்திரையில் அழியா ஒவியமாகப் படிந்திருக்கும் காட்சிகளில் கோரக் காட்சி என்பேன். 

அப்போது என் தந்தை மல்லாவியில் அதிபராக இருந்தார். நான் சிறுமியாயிருந்தேன். சூறாவளியால் வீடு இழந்தோரையும், வெள்ளத்தால் வீடு இழந்தோரையும் அழைத்து வந்து மல்லாவிப் பாடசாலையில் என் தந்தை தங்கவைத்திருந்தார். அவர்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் நீர் வேண்டாமா? வெள்ளத்தால் கிணற்று நீர் பாழாய்ப் போயிருந்தது. ‘அந்த நீரைக் குடித்தால் படிக்கும் மாணவர்கள் வாந்தி பேதியால் அவதிப்படுவார்கள்’ என்றார். மல்லாவியில் சலவைத் தொழில் செய்யும் ஒருவரை அழைத்தார். ‘தேற்றாங்கொட்டை இருக்கிறதா?’ என்று கேட்டார். ‘ஆம்’ என்று தலையாட்டியவர், ஒரு கடகம் நிறையத் தேற்றாங்கொட்டையைக் கொணர்ந்து  கொடுத்தார். கிடாரங்களின் அடியில் தேற்றாங் கொட்டையைத் தேய்த்து நீரை ஊற்றி வைக்க தெளிந்த நீராகியது. துள்ளிக்குதித்தேன். அப்போது மேலேயுள்ள கலித்தொகை வரியை என் தந்தை எனக்குச் சொன்னார். அந்த நிகழ்வும் சங்கத்தமிழ் மீதும் சங்கத்தமிழர் மீதும் எனக்குப் பற்றுதல்வர ஒரு காரணமாயிற்று.

“சலவைத் தொழிலாளியிடம் தேற்றாங்கொட்டை இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனத் தந்தையிடம் கேட்டேன். வெளுத்து வந்திருந்த என் உடுப்பு ஒன்றை எடுத்து, அதன் கழுத்தில் இடப்பட்டிருந்த கடும் ஊதா நிறக்குறியீட்டைக் காட்டினார். சலவைத் தொழில் செய்வோர் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு குறியீடு வைத்திருப்பர். அக்குறியீட்டின் படியே அவ்வவ் வீடுகளுக்கு வெளுத்த உடைகளைக் கொடுப்பர். அந்த அழியாக் குறியீட்டை இடப்பாவித்த ‘மை’ தேற்றாப் பழத்தின் சாறு என்பதை என் தந்தை சொல்லி அறிந்தேன். எனவே இலங்கையின் எல்லா ஊர்களிலும் தேற்றாமரம் இருந்தது. சிகிரியா ஓவியங்களில் இருக்கும் கருநாவல் நிறத்திற்கும் தேற்றா மையே பயன்பட்டதாம். இயற்கையாகக் கிடைத்த அழியா மையைத் தரும் தேற்றாவை அழித்தது சரியா?

உங்களுக்குத் தெரியுமா மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் தேற்றாத்தீவு என்று ஒரு தீவு இருப்பது? என் தந்தை மட்டக்களப்பில் அதிபராக இருந்த காலத்தில் நான் அங்கு சென்றிருக்கிறேன். தேற்றாமரங்கள் நிறைந்து இருந்ததால் அத்தீவை தேற்றாத்தீவு என நம் முன்னோர் அழைத்தனர். முடத்தாமக்கண்ணியார் நெய்தல்[கடல் சார்ந்த] நிலத்தில் தேற்றாமலர்கள் சிந்தியதை மேலே உள்ள பாடலில் கூறுகிறார் அல்லவா! ஆதலால் தேற்றாமரம் தீவுகளில் பன்னெடுங்காலமாக வளர்ந்த மரம் என்பதை தீவுப்பகுதி மக்களாகிய நாம் உணரவேண்டும். மீண்டும் அதற்கு உயிர் கொடுப்போமா?
தேற்றாவின் பூ

நீங்கள் இளவேனிற் காலத்தில்  தேற்றா மரத்தைப் பார்த்து இருக்கிறீர்களா? அதன் எழிலே தனியானது. கண்ணுக்கு குழுமையான அழகியதொரு பச்சை நிறத்தில் பளபளப்புடன் முதிர் இலைகள் காட்சிதர தளிர்களோ பச்சைநிறத்தில் எத்தனை வண்ணம் தெரியுமா? எனக் கட்டியம் கூறும். அந்த தளிர்களின் இடையே கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கும் மலர்களில் தேன் அருந்த தேனீக்கள் வட்டமிடும். காற்றில் அசைந்து சிந்திய மலர், கம்பளம் விரித்து நிலத்தைப் போர்த்தி குளிர்மையாய் வைத்திருக்கும். அவை மக்கி மண்ணோடு மண்ணாகி மண்ணை வளப்படுத்தும். சிறிய கொட்டப்பாக்கு அளவு உருண்டையான பச்சைக் காய்கள். பழுத்ததும் கருநாவல் நிறப்பழமாகக் காட்சி தரும். பாடசாலை செல்லும் சிறுவர் தேற்றாம் பழத்தைப் பறித்து உப்போடு உண்பர். தேற்றாமரக் கொம்பரில் இருந்து குயில் கூவ, பள்ளிச் சிறுவரும் உடன் கூவுவர்.

வசந்த காலத்தின் அந்த எழிலுக்கு எதிர்மாறாக இலையுதிர் காலத்தில் காட்சி தரும். சுல்லித்தலை விரித்து நிற்கும் தேற்றாமரக் கிளையில் காகங்கள் கூடு கட்டி, ஊரைக் கூட்டிக் கும்மாளம் போடும். அதுவும் ஒருவித அழகே. காக்கை இனம் இல்லை என்றால் நாம் குயிலின் குரலைக் கேட்க முடியுமா? இயற்கையே ஒன்றில் ஒன்று தங்கித்தானே சுழல்கிறது.
தேற்றாவின் பழம்/காய்

கனிந்த தேற்றாப்பழம், கொட்டை இரண்டும் விசக்கடிக்கு, அதிலும் பாம்புக்கடிக்கு மருந்தாகக்[andidotes] பயன்பட்டது. தேற்றாப்பழத்தை நஞ்சுக்குச் சிறந்த மருந்தாக வாகடங்கள் கூறுகின்றன. தேற்றாமரப்பட்டையைத் தூளாக்கி எலுமிச்சம் சாற்றுடன் வாந்தி பேதிக்குக் கொடுத்துக் குணமாக்கினர். இப்படி எத்தனையோ நோய்களை நீக்கியது. தேற்றாமரத்தின் பெருமையை அறிந்து அமெரிக்காவில் அதனை ஆய்வு செய்கின்றனர். அதனை அறியக் கீழேயுள்ள வலைத்தளத்தைப் பார்க்கவும். 

நம் முன்னோர் தேற்றாமரத்தை இல்லம் என்று பெயரிட்டு தம் இல்லத்தில் ஏன் வளர்த்தனர் என்பது புரிகிறதா? வீட்டையும் தேற்றா மரத்தையும் ‘இல்லம்’ என்ற பெயரில் அழைத்து தேற்றா மரத்தின் முதன்மையை எமக்குக் காட்டியும் நாம் கண்மூடி இருத்தல் தகுமா? இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக தமிழரின் வாழ்வோடும் வளத்தோடும் தொடர்ந்து வரும் தேற்றாமரத்தை கண்ணீரைத் தெளித்தேனும் வளர்ப்போமா!!!
இனிதே,
தமிழரசி.

குறிப்பு:
இக்கட்டுரையை 1998ல் எழுதினேன். அந்த வருடம் நான் இந்தியா சென்றிருந்த போது டாக்டர் கலைக்கோவன் அவர்கள் எனக்குச் சில புத்தகங்களைத் தந்தார். வரலாறு 7, ஆய்விதழின் பக்கம் 22ல் ஒரு கட்டத்துள் 'நீர் தெளியக் காழ்' எனும் தலைப்பில் ஏழு வரிச் செய்தி இருந்தது. அதன் கடைசிவரியில் 'நீர் தெளியப் பயன்பட்ட அந்த விதையை இன்றெங்கே காணோம்?' என ஆதங்கத்துடன் எழுதப்பட்டிருந்தது. நான் அவருக்கு போன் செய்து எனது தந்தை 1964ல் நீரைத் தெளியவைத்த கதையைச் சொன்னேன். தேற்றா மரம் பற்றி நான் அறிந்ததை எழுதித்தரச் சொன்னார். டாக்டர் கலைக்கோவனுக்காக எழுதிய கட்டுரையையே இப்போது தூசி தட்டி இன்றைய புங்குடுதீவு இளைஞருக்காக கொஞ்சம் சேர்த்துத் தருகிறேன்.

Thursday, 21 April 2016

முத்துக்குளிக்க வாரியளா?

தேங்காய் தரு முத்து

முத்து என்றதும் எம் கண்ணில் நிழல் ஆடுவது முத்துச் சிப்பியே. முத்து எடுக்க முத்துக்குளிக்க வாரியளா? மூச்சை அடக்க வாரியளா? எந்தக் கடலினுள் முத்துக்குளிப்பது? நேரத்தைக் கழிப்பதற்காக பண்டைய உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தேன். 

பன்னெடுங்காலமாக ஆசியாவின் மேற்குக் கடற்கரை ஓரத்தில் முத்துக்குளிப்பு மூன்று இடங்களில் மட்டுமே நடைபெற்றதை அறிந்தேன். அது எனக்கு பெரிய வியப்பைத் தந்தது. செங்கடல், பாரசீகக் குடா, மன்னார் வளைகுடா ஆகிய மூன்றிலும் மன்னார் வளைகுடா முத்தே உலகப்புகழ் பெற்றதாக விளங்கியது. அதைப் படித்த போது நெஞ்சம் பெருமிதம் அடைந்தது. அது தமிழரின் முத்துக் குளிக்குங் கலையின் சிறப்பையும் காட்டுகிறதல்லவா! மன்னார் வளைகுடா என்றபோதிலும் இலங்கையில் எங்கெங்கொல்லாம் பவளப்பாறைகள் இருந்தனவோ அங்கெல்லாம் முத்துக்கள் கிடைத்தன. காரைநகர் முதற்கொண்டு புங்குடுதீவின் தென்மேற்கு, தெற்கு, தென்கிழக்கு கடலிலும் முத்துக்குளிப்பு நடைபெற்றுள்ளது.

அதனால் உலகில் உள்ள முத்துக்களைப் பற்றிக் கொஞ்சம் ஆய்வு செய்தேன். மூச்சை அடக்கி அல்லவா முத்துக்குளிக்க வேண்டும். அது எல்லோராலும் முடியுமா? முடியாதே! நீரில் மூழ்கி எடுக்கும் முத்தைவிட வேறு முத்துக்கள் உலகில் இல்லையா? நிறையவே இருக்கின்றன. எனவே முத்துக் குளிக்காமலே முத்தெடுபோம் வாருங்கள்.
சிப்பி தரு முத்து

முத்துக்கள் சிப்பியில் இருந்து மட்டும் பிறப்பதில்லை. அவை பிறக்கும் இடங்களைப் பொறுத்து அவற்றின் வடிவங்களும் நிறங்களும் மாறுபடுகின்றன. அந்த முத்துக்கள் எங்கெங்கே பிறக்கின்றன என்பதை தமிழ் இலக்கியங்கள் புராணங்கள் மட்டுமல்லாமல் சமஸ்கிருத நூல்களும் சொல்கின்றன.  கி பி 300ம் ஆண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட கருடபுராணம் சிப்பிமுத்து, சங்குமுத்து, நாகமுத்து, பன்றிமுத்து, யானைமுத்து, மூங்கில்முத்து, திமிங்கலமுத்து, மீன்முத்து, மேகமுத்து என ஒன்பது வித முத்துக்களைப் பற்றிப் பேசுகிறது. இந்தியாவின் சிறந்த வானவியலாளரும் கணிதமேதையுமான வராகமிகிரர் [கி பி 505 - 587] தான் எழுதிய ‘பிருகத் சம்கிதம்’ [Brihat Samhita] என்னும் நூலில் கருடபுராணம் சொல்லும் ஒன்பது வகை முத்துக்களையே குறிப்பிடுகிறார்.
சங்கு தரு முத்து

நம் தமிழ் இலக்கியங்கள் முத்துப்பிறக்கும் இடங்களாக  இருபதிற்கும் மேற்பட்ட இடங்களைக் குறிப்பிடுகின்றன. திருவிளையாடற் புராணத்தை எழுதிய பரஞ்சோதி முனிவர் மாணிக்கம் விற்ற படலத்தில்
தக்க முத்து இரண்டுவேறு தலசமே சலசம் என்ன
இக்கதிர் முத்தம் தோன்றும் இடம் பதின்மூன்று சங்கம்
மைக் கருமுகில் வேய் பாம்பின்மத்தகம் பன்றிக்கோடு
மிக்க வெண்சாலி இப்பி மீன் தலை வேழக் கன்னல்”    
                                                                                         - (திருவிளை.பு: மாணிக்கம்.வி.ப: 53)

கரிமருப்பு ஐவாய் மான்கை கற்புடை மடவார் கண்டம்
இருசிறை கொக்கின் கண்டம் எனக்கடை கிடந்த மூன்றும்
அரியன ஆதிப்பத்து நிறங்களும் அணங்கும் தங்கட்கு
உரியன நிறுத்தவாறே ஏனவும் உரைப்பக் கேண்மின்
                                                            - (திருவிளை.பு: மாணிக்கம்.வி.ப: 54)
என பதின்மூன்று இடங்களைக் கூறுகிறார். அவர் முதற் செய்யுளின் தொடர்ச்சியாய் இரண்டாவது செய்யுளைப் பாடியிருப்பதால் இரண்டு செய்யுள்களையும் ஒன்றாகச் சேர்த்துப் படித்தே அவற்றின் கருத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
யானைத் தந்தம் தரு முத்து

அதாவது ‘சுத்தமான நல்ல [தக்க]  முத்துக்கள் தலசம், சலசம் என இரண்டு வகைப்படும். {நிலத்தில் வாழும் உயிர்களிடம் இருந்து தோன்றும் முத்துக்கள் தலசம் எனவும் நீரில் வாழும் உயிர்களிடம் இருந்து தோன்றும் முத்துக்கள் சலசம் எனவும் அழைக்கப்படும்}. ஒளியுடைய[கதிர்] இத்தகைய முத்துக்கள்[முத்தம்] தோன்றும் இடம் பதின்மூன்றாகும். சங்கு [சங்கம்], கருமேகம் [முகில்], மூங்கில் [வேய்], பாம்பின்தலை [மத்தகம்], பன்றிக்கொம்பு [கோடு], வெள்ளைநெல் [வெண்சாலி], சிப்பி [இப்பி], மீன்தலை, பேய்க்கரும்பு [வேழக்கன்னல்], யானைத்தந்தம் [கரிமருப்பு], சிங்கத்தின் [ஐவாய்மான்] கை, கற்புடைய பெண்களின் [மடவார்] கழுத்து [கண்டம்], இரண்டு சிறகுகளையுடைய [சிறை] கொக்கின் கழுத்து என்று சொல்லப்படுவனவற்றுள் கடைசியாகவுள்ள [கடைகிடந்த] மூன்றும் அரிதாகவே [அரியன] கிடைக்கும். முதலில் [முதற்கண்] உள்ள பத்துவகை முத்துக்களின் நிறங்களும் அவற்றிற்கு [தங்கட்கு] உரியனவாகிய தெய்வங்களும் [அணங்கும்], அந்த முறைப்படி சொல்கிறேன் கேளுங்கள்’ என்கிறார்.
வயது முதிர்ந்த யானையின் தந்ததத்தின் உள் பகுதியில் இருந்து முத்து எடுத்தனர்

பரஞ்சோதி முனிவர் சொல்லும் முத்துக்களும் நிறங்களும்
[திருவிளையாடற்புராணம்: மாணிக்கம் விற்ற படலம்: 55 - 56]

எண்முத்து பிறக்கும் இடங்கள்
முத்தின் நிறங்கள்

1
சங்கு தரு முத்து  வெள்ளை நிறத்தது.
2
மேகம் தரு முத்து செந்நிறச் சூரியனின் ஒளி நிறத்தது.
3
மூங்கில் தரு முத்து ஆலங்கட்டி மழையின் நிறத்தது.
4
பாம்பின் தலை தரு முத்து நீல நிறத்தது.
5
பன்றிக் கொம்பு தரு முத்து குருதியின் நிறத்தது.
6
வெள்ளை நெல் தரு முத்து பச்சை நிறத்தது.
7
சிப்பி தரு முத்து வெள்ளை நிறத்தது.
8
மீன் தலை தரு முத்து பாதிரிப்பூப் போன்ற நிறத்தது.
9
பேய்க்கரும்பு தரு முத்து பொன் போன்ற நிறத்தது.
10
யானைத் தந்தம் தரு முத்து பொன் போன்ற நிறத்தது.
11
சிங்கக் கை தரு முத்து கிடைக்க அரியது
12
மகளிர் கழுத்து தரு முத்து கிடைக்க அரியது
13
கொக்குக்கழுத்து தருமுத்து கிடைக்க அரியது 

மேலே சொல்லபட்ட முத்துக்களில் கடைசியாக இருப்பவை மூன்றும் கிடைப்பது அரிது ஆதலால் அவற்றின் நிறங்களை அவர் குறிப்பிடவில்லை. எனவே மனைவியின் கழுத்தில் நீங்கள் வாங்கிக் கொடுத்த முத்தைத் தவிர வேறு முத்து இருக்கிறதா என அறிய முற்பட வேண்டாம். பேய்க்கரும்பு என்பது ஒருவகை நாணல் புல். பேய்க்கரும்புத் திடல் என்ற இடத்திலேயே அப்துல் கலாம் அவர்களின் இறுதிச்சடங்கு நடந்து ஞாபகம் இருக்கிறதா? அங்கு போனால் பேய்க்கரும்பைப் பார்க்கலாம்.
நாகம் தரு முத்து

‘மருதமலையாண்டவர் பிள்ளைத்தமிழ்’ என்ற நூல் முத்து பிறக்கும் இடங்களாக இருபது இடங்களைச் சொல்கிறது.
தந்தி வராக மருப்பு இப்பி பூகம் தனிக்கதலி
நந்து சலஞ்சலம் மீன்றலை கொக்கு நளின மின்னார்
கந்தரம் சாலி கழை கன்னல் ஆவின்பல் கட்செவி கார்
இந்து உடும்பு கரா முத்தமீனும் இருபதுமே
ஆண்யானை, பன்றிக்கொம்பு, சிப்பி, கமுகு, கதலி, நத்தை, சங்கு, மீன்தலை, கொக்கு, தாமரை, பெண்களின் கழுத்து, நெல், மூங்கில், கரும்பு, பசுவின்பல், பாம்பு, மேகம், நிலவு, உடும்பு, முதலை ஆகிய இருபதும் முத்தை ஈனும் என்கிறது இப்பாடல்.
மேகம் தரு முத்து

இவை மட்டுமல்ல செந்நெல், வயல், மலை, உழும் கலப்பையின் கொழு நுனி, வாழை, தேங்காய் போன்றவற்றில் இருந்தும் முத்துப் பிறப்பதாக அபிதான சிந்தாமணி போன்ற நூல்களும் சொல்கின்றன. சங்கைப் போல் நத்தையும் முத்தைத் தருவதால் வயல் வெளியில், உழும் கலப்பையின் நுனியில் முத்துக் கிடைத்திருக்கக் கூடும். மூங்கிலின் கணுக்களுக்கு இடையில் உள்ள நீர் வற்றி மூங்கில் முத்து உருவாகும். மூங்கில் முத்து மருந்தாகப் பயன்படுகின்றது. சிவன் மூங்கிலின் முத்தாக இருந்தார் என்பதைப் பக்தி இலக்கியங்கள் சொல்வதால் அறியலாம். இந்நாளில் இம்முத்துக்களின் பெயர்களைச் சொல்லி செயற்கைக் கற்களை விற்கிறார்கள்.

கடலில் முத்துக் குளித்திருந்தால் சிப்பி ஈன்ற முத்தை மட்டுமே எடுத்திருப்பீர்கள். என்னுடன் முத்துக்குளிக்க வந்ததனால் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட முத்து வகைகளை எடுத்திருக்கின்றீர்கள். மகிழ்ச்சியா?
இனிதே,
தமிழரசி.

Tuesday, 19 April 2016

நிலைத் திருக்க காணுவமே!


காளை எனில் காளையாய்
          யானை எனில் யானையாய்
நாளை உலகு காணவென
          நாளும் இருந்து எண்ணி
வாளு ருவஉளி கொண்டு
          வாய்த்த நின் சிற்பம்
நீளு லகம் உள்ளவரை
          நிலைத் திருக்க காணுவமே!
                                                              - சிட்டு எழுதும் சீட்டு  114 

Monday, 18 April 2016

மக்களை மதித்து வாழ்மின்!

அருள்மிகு திருக்கோணேஸ்வர நாதர்
வணக்கப் பாமலர்
- இயற்றியவர் பண்டிதர் மு ஆறுமுகன் - [எனது தந்தை]

நினைத்தபடி வாழநீர் விரும்பிடிற் கேளுங்கள்
           விண்ணவரை ஏவல் கொளலாம்
நீதிவடி வாகவொரு சோதியுளதா மன்பு
           நிறைந் துலக உயிர்கடோறும்
வானைநிக ராகப்பரந் துலகு முடிமுட்டி
           வளரமுத மழை பொழியுமாம்
வாழத்தெ ரிந்ததும் தெரியாததும் அதன்
           வளர்ப்புக் குழந்தை தானாம்
மானைத் தொடர்ந்த பெருமானைத் தவஞ்செய்ய
           வைத்துள நெருப்பு மலையின்
மாதவம் பேணுங்கள் நீதிவழி நில்லுங்கள்
           மக்களை மதித்து வாழ்மின்
சேனைக்கொர் தலைமையும் தேசத்தார் தலைமையும்
           தேகத்தர் தலைமையின் பின்
சேவகஞ் செய்யவொரு தேவன் நமக்குளன்
           தென்கயிலை மலை யண்ணலே!
இனிதே,
தமிழரசி.

Friday, 15 April 2016

அடிசில் 97

வாழைப்பூ வறை
- நீரா -

தேவையான பொருட்கள்: 
வாழைப்பொத்தி [பூ]  -  1
துருவிய தேங்காய் பூ  - 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள்  -  ½ தேக்கரண்டி
மஞ்சள்தூள்  -  ¼ தேக்கரண்டி
வெங்காயம்  -  1
பச்சைமிளகாய்  -  3 
ஒடித்த செத்தல்மிளகாய்  -  2
கறிவேப்பிலை  -  கொஞ்சம்
கடுகு  -  ½ தேக்கரண்டி
சீரகம்  -  ½ தேக்கரண்டி
எண்ணெய்  -  ½ மேசைக்கரண்டி
உப்பு  -  தேவையான அளவு

செய்முறை: 
1. ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு அதில் அரைக் தேக்கரண்டி உப்புப் போட்டு வைக்கவும்.
2. வாழைபொத்தியின் காய்ந்த மேல் மடல்களை நீக்கி, அடித்தண்டில் பிடித்துக் கொண்டு நுனியைச் சுற்றிக் கொத்திக் குருணலாக வெட்டி எடுத்து உப்புக்கலந்த நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவிடவும்.
3. பின்னர் நீரில் கழுவிப்பிழிந்து எடுத்து, தேங்காய்ப்பூ, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அளவான உப்புச் சேர்த்துப் பிசிரி வைக்கவும்
4. வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் குறுணலாக வெட்டவும்.
5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகைப்போட்டு வெடித்ததும் சீரகம், செத்தல் மிளகாய், வெட்டியவெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
6. தாளிதம் பொன்னிறமாக வரும் பொழுது, பிசிரி வைத்துள்ள கலவையை இட்டுக் கிளரி, சிறிது தண்ணிர் தெளித்து மெல்லிய நெருப்பில் வேகவிட்டு, நீர்த்தன்மை அற்று வற்றியதும் இறக்கவும்.

குறிப்பு:
குறுணலாக வெட்டி எடுக்கும் வாழைப்பூ கயறுபிடிக்காதிருக்க உப்புக்கலந்த நீரில் ஊறவிட வேண்டும். உப்பு நீரில் ஊறவிடுவதால் கழுவிப் பிழிந்தெடுத்தபின் போடும் உப்பைச் சிறிது குறைவாகப் போட வேண்டும்.

Thursday, 14 April 2016

சித்திரைப் புத்தாண்டில் சித்திரக் கவிதை வாழ்த்து!

இன்பச் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் உறவினர்க்கும், நண்பர்க்கும், வாசகர்கட்கும், என் மாணவர்கட்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து. தமிழ் கூறும் நல்லுலகிற்காக என் இனிய வாழ்த்தை ஒரு சித்திரத் தேரினில் சித்திரக் கவிதையாக அனுப்புகிறேன். வாசித்துப் பார்த்து மகிழுங்கள்!
சித்திரத்தேரினுள் சித்திரக்கவிதை

புத்தாண்டு வாழ்த்துக்காக நான் கீறிய சித்திரத் தேரினுள் இருக்கும் எனது சித்திரக் கவிதை இதோ!
ஆயதமிழிசை நாடுவா ரானந்த மெல்லாம்
தூயஏழிசை போலமின்னும்நற் றமிழ்புத்தாண்டி - லேயபுவிமிசை
மேழியோர் ஏத்தயின்ப மனையறம் பொழிய
வாழிய தமிழ்போல் வாழிய!

சித்திரத்தேரினுள் இருக்கும் சித்திரக் கவிதையை எப்படி வாசிப்பது என்று சொல்லவா!

இந்தச் சித்திரத் தேரின் இடது சில்லில் இருந்து தொடங்கி மேலேறி வலது சில்லில் இறங்கி, அடித்தட்டின் வலது நுனியிலேறி இடப்புறமாகச் சென்று, அதற்கு மேல் தட்டின் இடது நுனியிலிருந்து வலப்புறமாகச் சென்று, வலது நுனியிலேறி முன்போல் மாறி மாறி ஒவ்வொரு தட்டாக ஏறி தேரின் உச்சிக்குச் சென்று, நடுவழியாக நேரே கீழே இறங்கி வரவும். இக்கவிதையின் கடைசி அடியிலுள்ள ‘வாழிய தமிழ்போல் வாழிய’ எழுத்துக்கள் யாவும் முதல் மூன்று அடியிலும் மறைந்து கிடக்கிறது. இதுவே இச்சித்திரக் கவிதையின் சிறப்பாகும்.

ஆயதமிழ் இசையை விரும்புவோர்[நாடுவார்] ஆன்ந்தம் எல்லாவற்றையும்
தூய ஏழிசை போலமின்னும் நற்றமிழ் புத்தாண்டில் - உலகத்து[ஏயபுவிமிசை]
உழவர்கள்[மேழியோர்] போற்ற[ஏத்த] இன்ப இல்லறம்[மனையறம்] நிறைய[பொழிய]
வாழிய! தமிழ்போல் வாழிய!

தமிழிசையை விரும்புவோர் யாவரும் எல்லா ஆனந்தத்தையும் ஏழிசை போல மிளிரும் தமிழ்ப் புத்தாண்டில் உலகத்தில் உள்ள உழவர்கள் போற்ற இன்ப இல்லறம் நிறைய வாழ்க! தமிழ்போல் வாழ்க!

எமக்கு உணவு கொடுப்பவர்கள் உழவர்கள். ஆதலால் உலகிற்கு உணவளிக்கும் உழவர்கள் மனம் நிறைந்து போற்ற வாழ்தலே சிறந்த வாழ்வாகும்.
இனிதே,
தமிழரசி.

Tuesday, 12 April 2016

நெஞ்சகம் வெந்ததே!


யாழகம் தன்னில் நூலகம் 
         இருந்தது வையகம் அறியும்
தாயகம் தன்னில் நூலகம் 
         எரிந்தது சேயகம் அறியும்

ஊரகம் தன்னில் நூலகம்
         ஒழிந்திட நெஞ்சகம் வெந்ததே!
தீயகம் தன்னால் நூலகம்
         தீய்ந்திட போரகம் எழுந்ததே!

குறிப்பு:
வானொலிக்காக 31- 05- 2012 எழுதியது. [எரியூட்டப்பட்டு 31வது வருடம்]

Monday, 11 April 2016

சேரனின் மாந்தை

இலங்கையின் தேசியமரமான நாகமரம்
இலங்கையை பண்டைக்காலத்தில் சேரர்கள் ஆண்டார்கள். அதனால் இலங்கையை சேரன்தீவு எனவும் அழைத்தனர். அதற்கு சங்ககால நூல்களில் நிறையவே சான்று இருக்கிறது. அவர்கள் தமது தலைநகராய் மாந்தையை வைத்து ஆண்டதையும் அவை சொல்கின்றன. சங்ககால நூல்களில் இருந்து தொகுக்கப்பட்ட தொகைநூலாகிய முத்தொள்ளாயிரமும் மன்னாரில் உள்ள மாந்தையை சேரனின் மாந்தையாகச் சொல்கிறது.
புன்னைப்பூ
மாந்தையில் வாழ்ந்த இளம் மங்கை ஒருத்தி சேரனைக் காதலித்தாள். அவளின் காதலை அவளது தோழிமாரும் அறிவர். இரவு பகலாக அவனின் நினைவாகவே வாழ்ந்தாள். சேரனின் நினைவில் தோழிமாரைக் கண்டாலும் பேசமாட்டாள். சேரனின் நினைவோடு தூங்கி எழுபவளின் கனவில் ஒரு நாள் இரவு அவன் வந்தான். அவளைத் தடவித் தழுவினான். சேரனின் தழுவலின் மயக்கத்தில் தூங்கி எழுந்தவள் மகிழ்ச்சியோடு இருந்தாள். தோழிமாரைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு வரவேற்றாள். அவளின் மகிழ்ச்சிக்காண காரணத்தைப் புரிந்து கொண்ட தோழிமார், ‘சேரமாராசன் என்ன சேதி சொன்னார்?” எனக் கேலி செய்தனர்.
நாகப்பூ

அவள் திகைத்துப்போனாள். “என் கனவில் சேரன் வந்தது இவர்களுக்கு எப்படித் தெரிந்தது?” அவளது திகைப்பை முத்தொள்ளாயிரம் ஒரு பாடலாகச் சொல்கிறது.
“புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை
நன்னாகம் நின்றலரு நல்நாடன் - என்னாகம்
கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்
எங்கொல் இவரறிந்த வாறு”               - (முத்தொள்ளாயிரம்: 5)

‘புன்னைமரச் சோலையும் நீர் நிறைந்த (தெங்கு)தென்னஞ் சோலையும் சூழ்ந்த மாந்தை நகரத்தையும் நல்ல நாகமரம் (நின்றலரும்)பூத்துக் குலுங்கும் நல்ல நாட்டையும் உடைய சேர அரசன் ஒரு நாள் இரவு கனவில் வந்து என்னுடலைத் தடவித் தழுவினான். அது எப்படி இவர்களுக்குத் தெரியவந்தது.’ என நினைத்தாள்.
நாகலிங்கப்பூ

இப்பாடல் அவளின் திகைப்பைமட்டும் கூறவில்லை. அவள் குறிப்பிடும் மாந்தை ஈழத்தின் மாந்தை என்பதையும் மெல்லக் கோடிட்டுச் சொல்கிறது. 

இந்தபாட்டில் வரும் நாகமரம் இலங்கையின் தேசிய மரமாகும். தொன்று தொட்டு இலங்கையில் இருக்கும் மரங்களுள் நாகமரமும் ஒன்று. இப்பாடல் சொல்லும் புன்னை, தென்னை, நாகமரம் மூன்றையும் இன்றும் மாந்தையில் காணலாம். எனவே சேர அரசர்கள் ஈழத்தின் மாந்தையை ஆண்டதை இந்த முத்தொள்ளாயிரப் பாடலும் எடுத்துச் சொல்கிறதல்லவா! இயற்கை தேர்வாய் மாந்தையில் வண்ண இலைகளோடு வெண்ணிறப்பூவுமாய் பூத்துக் குழுங்கும் நாகமரத்தின் அழகை இரசிக்க ஆயிரம் கண் வேண்டும். அந்த அழகுக் கம்பிரத்தை நாம் எம் அறியாமையால் வெட்டி அழிக்கின்றோம். 

நாகமரம் மாந்தையில் மட்டுமல்ல இலங்கையின் கடற்கரையை அண்டிய காடுகளில் பலவண்ண இலைகளோடு சிலிர்த்து நிறப்தைக் கண்டிருக்கிறேன். 9 பாதை வழியாகச் செல்வோர் நாகமரத்தை முருகண்டி பிள்ளையார் கோயிலில் கால்கழுவும் இடத்தினருகே பார்க்கலாம். புங்குடுதீவில் பருத்தியடைப்புக்கு சற்றுக் கிழக்கே நின்றது. தற்போதும் அங்கு நிற்கும் எனநினைக்கிறேன். சேரனின் மாந்தை ஈழத்து மாந்தைதான் என்று எடுத்துக் கூறுவதற்காக ஆவது நாகமரத்தைப் வெட்டாது பாதுகாப்போமா?

குறிப்பு:
இலங்கையின் பல பகுதியிலும் இம்மரம் இருக்கிறது. ஆனால் இப்போ அருகி வருகிறது. புன்னைமரமும், நாகமரமும் வெவ்வேறானவை என்பதை இரண்டு மரங்களையும் இப்பாடல் எடுத்துச் சொல்வதால் அறியலாம். சிலர் நாகமரத்தை நாகலிங்க மரமாகாவும்  கருதுகின்றனர். நாகமரத்தின் இலை உதடுபோல் இருக்கும். நாகலிங்க மரத்தின் இலை அப்படி இருக்காது. இம்மூன்று மரங்களின் பூக்களையும் பார்த்து அவற்றின் வேறுபாட்டை அறிந்து கொள்க.
இனிதே,
தமிழரசி.