Thursday, 2 October 2014

மனிதர் அநுபவிக்கும் சுவைகள்

- எழுதியவர் பண்டிதர் மு ஆறுமுகன் -


“நீயார்! எல்லாவற்றையும் இயக்கிச் சரிவர ஓர் அணுவும் பிசகாது நடாத்த, அந்த (இறை) இயற்கை இருக்கிறது. அது சரியாய்த் தான் நடாத்துகின்றது. நீர் உம்முடைய வேலையைப் பாரும்” என்று மகரிஷிகள் உணர்ந்து சொல்கிறார்கள். இதனை - இந்த “மகாவாக்கியத்தைக்” கேட்டுக் கந்தருவர் வீண்வம்பு மேசாமல், வீண் விடயங்களில் தலை வைக்காமல், இந்த வானமண்டலத்தில்  காதல் மீதுரக் கலந்து ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்து நீந்தி விளையாடி வீணை வாசித்து நடமாடி மகிழ்ந்து வாழ்கிறார்களாம்.

வீண்கதைகள் பேசி, வம்பு வளர்த்து, மனத்தாபாப்பட்டுக் கொள்ளும் வழக்கம் படித்த குடும்பங்களிலும் இடையே நுழைந்து விடுகின்றது. அந்த வழக்கதை துணிவுடன் அகற்றி சிட்டு கணவன் மனைவியர் “கந்தருவர்” வாழ்வு வாழ வேண்டும். கந்தருவர் வாழ்வாவது பிறரைப் பற்றி வீண்வம்பு பேசாது, காதலொருமித்து இன்பமாக வாழ்தலே. இறைவனைச் சரணடைந்து வாழல் எனினும் மிகையாகாது.

எண்சுவை - மனிதன் அநுபவிக்கும் சுவைகள் எட்டுவகை. இவை நாவின் சுவையன்று. மனித உள்ளத்து உணர்வின் சுவை. ஒவ்வொரு மனிதரும் இச்சுவைகளை வெளிப்படுத்துவர். அதனை வள்ளுவர் மிகச்சுருக்கமாக அடுத்தது காட்டும் பளிங்கு போல என்கிறார். இச்சுவைகளைக் கொண்டு மனிதரை எடை போடலாம்.

அவை:
  1. நகை - சிரிப்பு
  2. அழுகை
  3. இழிவரல் - தீராநோய், வருமை இவற்றால் உளதாகும் தாழ்வு மனப்பான்மை.
  4. மருட்கை - அற்புதம்; பூனை ஒன்று ஆனையாகி நடந்து போதல். இப்படியே மனத்தை மருளப்பண்ணும் சத்துவம் [சுவை].
  5. அச்சம் - பயம்
  6. பெருமிதம் - அளவுக்கு மிஞ்சிய செல்வம் - கல்வி - அதிகாரம் - இவற்றால் வருவது.  இறுமாப்பு எனினும் ஒக்கும்.
  7. வெகுளி - கோபம்
  8. உவகை - மகிழ்ச்சி - மேலே சொன்ன கந்தருவச்சுவை. 

இந்த எண்சுவையும் தமிழர் கண்டது - தொல்காப்பியம் பகர்வது.
மனிதரில் நிகழும் சுவைகளை - உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளை சத்துவங்கள் என்பர். இந்த எட்டுந்தாண்டிய நிலையில் ஒரு சுவை உண்டு. அது ‘சமநிலை’ - இந்தச் சமநிலை சான்றோரின் மனநிலை. மேலேயுள்ள எட்டில் ஒன்றும் இந்தச் சமநிலை உடையோனை அசைக்காது.
“செஞ்சா தெறியினும் செத்தினும் போழினும்
நெஞ்சஞ் சோர்ந்தோடா நிலை”

எல்லாம் அவன் செயல் என்று நன்றும் தீதும் அவன் தந்தவை. “எய்தவன் இருக்க அம்பை நோவானேன்” என்ற மெய்யுணர்வாளர் கண்ட உண்மை நிலை. இந்த நிலையை நாம் பழகிக் கொண்டால் கவலையற்று மகிழ்வோடு வாழலாம். பக்திவயப்பட்டு, தானே அவனான நிலையில் கேட்டதெல்லாம் இறை தரும். 

Monday, 29 September 2014

தென்றல் அசையக் கற்றது யாரிடம்?


காற்று வீசுகிறது. அதாவது ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு அசைந்து - இயங்கிச் செல்கிறது. அப்படி காற்று இயங்கும் திசையை வைத்து அத்தத்திசையில் இருந்து வீசும் காற்றுக்கு நம்முன்னோர் ஒவ்வொரு பெயர் வைத்துள்ளனர்.
கிழக்கில் [குணக்கில்] இருந்து வீசும் காற்றை ‘கொண்டல்’ என்றனர்.
தெற்கில் இருந்து வீசும் காற்றை ‘தென்றல்’ என்றனர்.
மேற்கில் [குடக்கில்] இருந்து வீசும் காற்றை குடக்காற்று என்றனர். அதுவே கோடைக்காற்று.
வடக்கில் இருந்து வீசும் காற்றை ‘வாடை’ என்றனர். 

மதுரை நகரில் நடைபெற்ற காதல்விழா பற்றி சொல்லும் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் ‘கொண்டற்காற்று பாண்டிய மன்னனின் கூடல் நகரிலே புகுந்து நெடுவேள் என்று சொல்கின்ற மன்மதனின் வில்விழாவைக் [ காதல்விழாவைக்] காணும் பின்பனிக்காலத்து [பங்குனி] பனியரசன் எங்கே உள்ளான்?’ எனக் கேட்டதாம் என்கிறார். அதனை

“கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல்
வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்து பனியரசு யாண்டுளன்”     - (சிலம்பு: 14:110 - 112)
எனும் சிலப்பதிகார வரிகள் சொல்கின்றன. இது கிழக்கே இருந்து வீசிய பின்பனிக்கால கொண்டல் காற்றை எடுத்துச் சொல்கிறது.

ஆனால் பண்டைத் தமிழரால் காற்றுகளிலே மிகச்சிறந்த இடத்தில் புகழ்ந்து கூறப்படும் காற்று தென்றல் காற்றாகும். தம் முன்னோர் வாழ்ந்த தென்திசையிலிருந்து வீசுவதாலோ அன்றேல் என்றும் தென்கடலே தமிழருடைய கடலாக இருந்ததாலோ தென்றல் காற்றின் மேல் பற்று அதிகமாகவே இருந்திருக்கிறது. தென்கடற்கரையில் நின்று மெத்தென எம் உடலை வருடித் தழுவிச் செல்லும் தென்றற்காற்றை நுகர்ந்தோருக்குத் தெரியும் அதன் இதமான சுகத்தின் உண்மை. அந்தத் தென்றல் வந்து எம்மைத் தொடும் போது தோணும் இன்பத்திற்கு ஈடேது? மென்மையாக பய பக்தியோடு இயங்கத் தென்றல் யாரிடம் கற்றது?

கிழக்கே இருந்து வந்த கொண்டலும் மதுரை நகரில் வில்விழாக்காணவந்த பனியரசன் எங்கே உள்ளான்? எனக்கேட்டது என்றாரே இளங்கோவடிகள். அதுபோல தெற்கே இருந்து வந்து மதுரைக் ‘சோலையில் நுழைந்து, வாவிக்குள் புகுந்து, தாமரைமலரைத் தடவிப் பார்த்து, பசுமையான இருவாட்சி, முல்லை, மல்லிகைப் பந்தர்களில் எல்லாம் தாவிச் சென்று மகரந்தங்கள் விரிந்த மலர்களின் நறுமணத்தைச் சேகரித்து, குளிர்ச்சியோடு மென்மையாய் இயங்கும் தென்றலானது அங்கங்கே பல இடங்களிலும் சென்று அந்தக்கலை என்ன சொல்கிறது? இது என்ன சொல்கின்றது? என கலைகளை ஆராய்ந்து கற்று அறியும் மாணவனைப் போல இயங்குமாம்’ என்கின்றது திருவிளையாடற் புராணம்.

“பொங்கரில் நுழைந்து வாவி புகுந்து பங்கயம் துழாவிப் 
பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர் தாவிக்
கொங்கலர் மணங்கூட்டு உண்டு குளிர்ந்து மெல்லென்று தென்றல்
அங்கங்கே கலைகள் தேரும் அறிவன் போல் இயங்கும் அன்றே” 
                                  - (திருவிளையாடற் புராண திருவாலவாய்க் காண்டம்: 19) 

“பொங்கரில் [சோலையில்] நுழைந்து வாவி புகுந்து பங்கயம் [தாமரை] துழாவிப் [தடவி]
பைங்கடி [பசுமையான] மயிலை [இருவாட்சி] முல்லை மல்லிகைப் பந்தர் [பந்தல்] தாவிக்
கொங்கலர் [மரந்தம் விரிந்த] மணங்கூட்டு [மணத்தை] உண்டு [சேகரித்து] குளிர்ந்து மெல்லென்று [மென்மையாகத்] தென்றல்
அங்கங்கே [பல இடங்களிலும்] கலைகள் தேரும் [தேர்ச்சிபெறும்] அறிவன் [மாணவன்] போல் இயங்கும் அன்றே”

கலைகள் பல கற்கும் மாணவர் பொறுமையோடு பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழகம் நூலகம் என்று சென்று தேடி ஓடித் திரிந்து படித்து, ஒவ்வொன்றாய் ஆராய்ந்து குறிப்பெடுத்து நல்லனவற்றைச் சேகரித்து கற்று மகிழ்வோடு மென்மையாகத் திரிதல் போல தென்றலும் இயங்கித் திரிகிறதாம். கற்கும்  மாணாக்கர் போல் தென்றல் அசைகிறதாம். 
இனிதே,
தமிழரசி.

Sunday, 28 September 2014

பாரின் பசுமை மீண்டிடுமோ!!


காட்டுமரம் தேடிவெட்டி
காலை மாலை சமையல் செய்தோம்
துட்டுநிதம் காணவேண்டி
துனை ஆலை காகிதம் செய்தோம்
கட்டுமரம் கட்டிகொண்டு
கடல் மேலை கப்பல் செய்தோம்
நாட்டுமரம் யாதுமில்லை
நாளை வேளை யாது செய்வோம்
வீட்டுமரம் நடுவாரில்லை
வேலை வேலை யாது செய்வோம்
பட்டமரம் காணவில்லை
பாலை நிலை ஆகச் செய்தோம்
பட்டமரம் தளைத்திடுமோ!
பாரின் பசுமை மீண்டிடுமோ!!
இனிதே,
தமிழரசி

சொல் விளக்கம்:
துட்டு - வெட்டப்பட்ட காசு (துள் - வெட்டு, துட்டு - வெட்டப்பட்டது)
துட்டுநிதம் - காசைநாளும்
துனை - விரைவு
துனை ஆலை - விரைவான ஆலை
பாலை - பாலை நிலம்
நிலை - தன்மை
பாலை நிலை - பாலை நிலத்தின் தன்மை

Saturday, 27 September 2014

தளிர்க்கரம் நீட்டவல்லாய் அல்லாயோ!


என்போடு கசிந்துருகி
இன்னிசை பாடவல்லேன் அல்லேன்
அன்போடு  ஒருதரம்
அலர்மலர் சூட்டவல்லேன் அல்லேன்
இன்போடு உன்நாமம்
            இதயத்தே மீட்டவல்லேன் அல்லேன்
துன்போடு துவழாது
             தளிர்க்கரம் நீட்டவல்லாய் அல்லாயோ!
இனிதே,
தமிழரசி.

Thursday, 25 September 2014

ஆசைக்கவிதைகள் - 95


ஆண்: விழிகள் இரண்டும் மூடியே
வார்த்தை ஏதும் பேசாது
மௌனமாக நின்றாளே
மனதை தட்டி சென்றாளே!
- நாட்டுப்பாடல் (ஈழம்)
                                                       (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

Wednesday, 24 September 2014

குறள் அமுது - (95)

குறள்:
பயந்தூக்கார் செய்த உதவி நயந்தூக்கின்
நன்மை கடலின் பெரிது                                         - (குறள்: 0103)

பொருள்:
எதுவித எதிபார்ப்பும் இல்லாமல், ஒருவர் செய்த உதவியின் அளவைச் சீர்தூக்கிப்பார்த்தால் அதன் நன்மை கடலைவிடப் பெரிதாக இருக்கும்.

விளக்கம்:
பிறருக்கு உதவி செய்யும் பொழுது அதனால் தனக்குப் பயன் கிடைக்கும் என்று எதிர்பாராது செய்கின்ற உதவியின் தன்மை எப்படிப்பட்டது என்பதை இத்திருக்குறள் எடுத்துச் சொல்கிறது. நாம் இவருக்கு உதவி செய்தோமேயானால் இவர் எனக்குப் பின்னர் உதவுவார் என எதிர்பார்த்து உதவுவோர் பலராவர். அத்தகைய எதிர்பார்ப்பு சிறிதும் இன்றி பிறருக்கு உதவுவோரும் இருக்கின்றனர்.

தாம் செய்யும் உதவிக்கு எத்தகைய பயன் திரும்பக் கிடைக்கும் என்று எண்ணாது, ஒருவர் மற்றவருக்கு செய்கின்ற உதவியின் பெருமதியை அளவிட்டுப் பார்ப்போமேயானால் அதனால் கிடைக்கும் நன்மை கடலைவிடப் பெரிதாய் இருக்கும்.

இந்த உலகில் தன்னலம் கருதாப் பெருங்கொடையாளி இயற்கை அன்னையே. உலக உயிர்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் அள்ளிக் கொடுப்பது இயற்கையே. கடலும் இயற்கையின் ஒரு கூறே. இன்றைய மனிதர்களாகிய எமக்கு இயற்கையின் தொழிற்பாடுகள் அந்நியமாய்ப் போய்விட்டன. ஐபாட், ஐபோன் என மணிக்கணக்கில் மூழ்கிக் கிடக்கும் எமக்கு காடென்ன? மலையென்ன? கடலென்ன? எல்லாமே வேண்டாப் பொருளாய் மாறிவிட்டதில் என்ன வியப்பு?

கடற்கரையில் நின்று கடலை, கடலலையைப் பார்த்து இரசித்து, கடற்காற்றை நுகரும் நாம் எப்போதாவது கடல் எமக்கு அள்ளித்தரும் பொருட்களைப்பற்றிச் சிந்திக்கிறோமா? கடல் எம்மிடமிருந்து எதுவித பயனையும் எதிர்பாராது மீன், நண்டு, இறால், கணவாய், சிப்பி, சங்கு, முத்து, பவளம் என எத்தனையோ பொருட்களை எமக்குத் தருகிறது. அத்தகைய கடலைவிட பயனைச் சிறிதும் எண்ணிப்பாராமல் செய்கின்ற உதவி பெரிதாகும்.

Tuesday, 23 September 2014

அடிசில் 84

அவித்த முட்டைப்பொரியல்
 - நீரா -      

தேவையான பொருட்கள்:
முட்டை - 6
மிளகு தூள் - ¼ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ½ தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - ½ தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு  
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 
  1. முட்டை மூழ்கும் அளவுக்குத் தண்ணீர்விட்டு உப்பும் சேர்த்து, நன்கு வேகவைக்கவும்.
  2. வெந்ததும் தண்ணீரை வடித்து குளிர்ந்த நீரில் மூட்டையைப் போட்டுவைக்கவும்.
  3. முட்டை ஆறியதும் அதன் கோதை உரித்து முட்டையை எடுக்கவும்.
  4. அவித்தமுட்டையை முள்ளுக்கரண்டியால் சுற்றவரக் குத்திக்கொள்க.
  5. ஒரு கண்ணாடிப்பாத்திரத்தில் மிளகுதூள், மிளகாய்த்தூள், எலுமிச்சம் பழச்சாறு, உப்பும் சேர்த்து இரண்டு தேக்கரண்டி தண்ணீர் விட்டு கலந்து கொள்க.
  6. அக்கலவையுள் முட்டையைப் போட்டு புரட்டி 15 நிமிடம் ஊறவிடவும்.
  7. வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய்விட்டுச் சூடானதும் முட்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.