Wednesday, 11 December 2013

அடிசில் 72

கறிமிளகாய் சலட்
                             - நீரா -

















தேவையான பொருட்கள்:
கறிமிளகாய் [Capsicum Chillies] - 5
தக்காளிப்பழம் - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
வினாக்கிரி [Vinegar] - 2 மேசைக்கரண்டி 
ஒலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகுதூள் - ½ தேக்கரண்டி
கடுகு தூள் - 1 தேக்கரண்டி
சீனி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1. கறிமிளகாய், தக்களிப்பழம், வெங்காயம், பச்சைமிளகாய் நான்கையும் மிகமெல்லிய துண்டுகளாக வெட்டி ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டுக் கலந்து கொள்ளவும்.
2. இன்னொரு பாத்திரத்தில் வினாகிரி, ஒலிவ் எண்ணெய், மிளகுதூள், கடுகுதூள், சீனி, உப்பு இவற்றை இட்டு நன்றாக அடித்துக் கொள்க.
3. கறிமிளகாய்க் கலவையினுள் அடித்தவினாக்கிரி கரைசலைவிட்டு கலந்து அரைமணி நேரமாவது  மூடிவைத்துப் பாவிக்கவும்.

Tuesday, 10 December 2013

பொல்லாத காட்சியானேன்

சமணமுனிவர்கள்

மனிதவாழ்க்கையில் தவறு செய்தவர்கள் தாம் தவறு செய்ததாக ஒப்புக்கொள்ளுதல் மிகஅரிதாகவே கணப்படுன்றது. எனவே தாம்விட்ட பிழையை ஒப்புக்கொண்டு, அதை எண்ணி வருந்தி, திருந்தியவர்களை நம் முன்னோர் பெரியோர்களாக மதித்தனர். 

தனது வாலிபப்பருவத்தில் சமணசமயத்தில் சேர்ந்து தருமசேனர் என்ற பெயருடன் மூர்க்கனாய் திரிந்தவர் திருநாவுக்கரசு நாயனார். பின்னர் தமது பிழையை உணர்ந்து திருந்திய போது தான் வாழ்ந்த இழிநிலையை

குண்டாக்கனாய் உழன்று கையில் உண்டு
          குவிமுலையார் தம்முன்னே நாணம் இன்றி
உண்டியுகந்து அமணே நின்றார் சொற்கேட்டு
          உடனாகி உழிதந்தேன் உணர்வொன்று இன்றி”         - (ப.திருமுறை: 6: 3: 7)
என்று அவரே சொல்கிறார்.

இன்றைய தமிழ் சினிமாக்களில் வரும் குண்டர்கள் போல குண்டக்கம் (வஞ்சனை) செய்யும் மூர்க்கனாய் தடுமாறினாராம். இளமையான பெண்களின் முன்னே வெட்கம் இன்றி எதுவித உடையும் அணியாமல் நின்று உணவைப் பெற்று உண்டு மகிழ்ந்தாராம். உடை உடுத்தாத சமணர்களின் சொற்களைக் கேட்டு அவர்களுடன் சேர்ந்து நல்லுணர்வு இல்லாது திரிந்தேன் [உழிதந்தேன்], என்கிறார். ஆடை அணியாதவர்கள் என்றகருத்தில் அமணர் என்று அழைத்த சொல்லே சற்று மருவியதால் இப்போது சமணர் என்கிறோம். 

இருந்து உணவை உண்டால் இருக்கும் போதோ, இலையின் கீழோ, எறும்பு போன்ற சிற்றுயிர்கள் அகப்பட்டு இறந்து போகும் என நினைத்து சமணர்கள் நின்றே உணவை உண்பர். அதனால் தமது உணவுப் பாத்திரத்தை [குண்டிகை] உறியில் வைத்து சுருக்கிட்டு முடித்து கையில் தூக்கிக் கொள்வர். பல் துலக்குவதால் பல்லுக்கிடையே வாழும் உயிர்கள் அழிந்து போகும் என்ற காரணத்தால் சமணர் பல் துலக்குவதில்லை. அதனால் அவர்களின் வாய் எப்போதும் ஊத்தவாயாய் நாறிக்கொண்டு இருக்கும். அப்படிப்பட்ட சமணர்களுக்கு ஒரு குண்டனாய், புரியாணிச் சோற்றினை[கறிவிரவு நெய்சோற்று] கையில் வாங்கி உண்டு, என்னைப் பார்ப்போருக்கு பொல்லாத வெறுப்பைத்தரும் காட்சிப்பொருளாய் ஆனேன், என்று கூறி வருந்துவதைப் பாருங்கள்.

“உறிமுடித்த குண்டிகை தம்கையில் தூக்கி
          ஊத்தைவாய்ச் சமணர்க்கோர் குண்டாக் கனாய்க்
கறிவிரவு நெய்சோறு கையில் உண்டு
          கண்டார்க்குப் பொல்லாத காட்சியானேன்            - (ப.திருமுறை: 6: 3: 8)

இப்படி சணர்களைப் பற்றிக்கூறும் தேவாரங்களைப் படித்துப்பார்த்தால் புரியும் அன்றைய காலகட்டத்தில் திருநாவுக்கரசரின் மனத்துன்பமும் அதனால் ஏற்பட்ட தாக்கமும். ஒருவர் தாம் வாழ்ந்த இழிநிலையை பெரிதும் சொல்வதில்லை. அப்படிச் சொல்வதற்கு மிகத்திடமான பண்பட்ட மனம் இருக்கவேண்டும். திருநாவுக்கரசு நாயனார் அத்தகைய ஒரு செம்மல் என்பதை அவரது தேவாரப்பதிகங்கள் எடுத்துக் கூறுகின்றன. பொல்லாத காட்சியானேன் எனச்சொல்ல எவருக்கு முடியும்?
இனிதே,
தமிழரசி.

Monday, 9 December 2013

கொக்கைப் போலக் காத்திருங்கள்


தமிழ்ப்பாக்களுக்கு அழகைக் கொடுப்பது அணியாகும். அணி என்றாலே அழகு என்றே பொருள் தரும். அணிகள் பலவகை. பாக்கள் சொற்களால் ஆனதால் சொல்லணி சிறப்புடையதாகக் கருதப்படும். ஒரு சொல் - வெவ்வேறு கருத்துக்களைத் தரும் சொல்லணியில், ‘மடக்கு சொல்லணி’ என்று ஒருவகை உண்டு.  

நாம் வைத்திருக்கும் ஒரு பொருளை ஒருவன் பறித்துக்கொண்டு ஓடினால் அவனை மடக்கிப் பிடியென்போம். குடையை மடக்கி வைப்போம். அதுபோல் ஒரு சொல்லோ, ஓர் எழுத்தோ மடங்கி வந்து பாவிற்கு அழகைக் கொடுத்து மெருகேற்றுவதால் மடக்கு சொல்லணி என்று அழைக்கப்படும். அதனை தண்டியலங்காரம்

“எழுத்தின் கூட்டம் இடை பிறிது இன்றியும்
பெயர்த்தும் பொருள்தரின் மடக்கு எனும் பெயர்த்தே”   
                                                  - (தண்டியலங்காரம்: 92) 
எனச்சொல்கிறது. பாவில் வரும் சொற்களில் உள்ள எழுத்துக்கள் இடையிலே பிரியாமலும், அதே சொற்கள் பிரிந்தும் வேறு வேறு கருத்துக்களைத் தருமெனில் அது மடக்கு எனும் பெயர் பெறும் என்கிறது தண்டியலங்காரம்.

ஒருவர் ஒன்றைச்செய்வதற்கு ஏன் தகுந்த காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும் என்பதைச் சொல்லவந்த திருவள்ளுவர் காலம் அறிதல் என்னும் அதிகாரத்தின் முதலாவது குறளில்
“பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது”                                 
                                                          - (குறள்: 481)
என்கிறார். அதாவது வலிமைமிக்க ஆந்தையை காகம் பகலில் வெல்லும். அது போல அரசன் தன் பகையை வெற்றிகொள்ள ஏற்ற நேரம் பார்க்கவேண்டும் என்கிறார். பத்தாவது குறளில்
“கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்
குத்து ஒக்க சீர்த்தவிடத்து”                                         
                                                            - (குறள்: 490)
என்கிறார். மீன் வரும்வரையும் காத்திருக்கும் கொக்குப்போல காலம்வரும்வரை காத்திருக்கவும். காலம் வாய்க்கும் போது கொக்கு மீனைக் குத்துதல் போல மிகவிரைவாகச் செயலைச் செய்து முடிக்கவேண்டுமாம். 
திருவள்ளுவர் சொன்ன இந்த இரண்டு குறளின் கருத்துக்களை காளமேகப் புலவுரும் சொல்கிறார். கவிநயம் சொட்டச்சொட்ட ஓர்எழுத்து மடக்குச் சொல்லணிப் பாவில், காளமேகப்புலவர் பாடியிருக்கும் அப்பாடலைப் நீங்களும் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.


“காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா”

திருவள்ளுவர் சொன்ன இரு குறளுக்கும் காளமேகப் புலவர் கொடுத்த விளக்க உரை புரிந்ததா? காளமேகப் புலவரின் விளக்க உரையைக் கொஞ்சம் பிரித்துப் படிப்போமா?
“காக்கைக்கு ஆகா கூகை கூகைக்கு ஆகா காக்கை
கோக்கு கூ காக்கைக்கு கொக்கு ஒக்க - கைக்கைக்கு
காக்கைக்கு கைக்கு ஐக்கு ஆகா”

“காக்கைக்கு [காகத்துக்கு] ஆகா [ஆகாது] கூகை [ஆந்தை] கூகைக்கு [ஆந்தைக்கு] ஆகா [ஆகாது] காக்கை [காகம்]
கோக்கு [அரசனுக்கு] கூ [பூமி] காக்கைக்கு [காப்பதற்கு] கொக்கு [கொக்கைப்] ஒக்க [போல]  - கைக்கைக்கு [பகைமையை எதிர்த்து] (கைக்கை - கசப்பு, வெறுப்பு, பகைமை)
காக்கைக்கு [காப்பதற்கு] கைக்கு [ஆற்றல் உள்ள] ஐக்கு [அரசனுக்கு] ஆகா [முடியாது]”

ஆந்தைக்கு பகலில் கண் தெளிவாகத் தெரியாததால் காகம் ஆந்தையைப் பகலில் வெல்லும். காகத்திற்கு இரவில் கண் தெளிவாகத் தெரியாததால் ஆந்தை காகத்தை இரவில் வெல்லும். பகையை வெல்ல காலம் மிகமுக்கியமானதாகும். 

காகமும் ஆந்தையும் ஒன்றுக்கொன்று பகையானவை. எனவே காகத்திற்கு ஆந்தையைப் பிடிக்காது. ஆந்தைக்கு கூகையைப் பிடிக்காது. அரசன் பூமியைக் காப்பதற்கு கொக்கைப்போலக் காலம் வரும்வரை காத்திருக்க வேண்டும். இல்லை என்றால் பகையை எதிர்த்துக் காப்பதற்கு ஆற்றலுள்ள அரசனுக்கும் முடியாது என்கிறார். இப்போது காளமேகப்புலவரின் விளக்க உரை புரிந்ததா?

காளமேகப்புலவரின் இப்பாடல் ஓர் எழுத்து மடக்குச் சொல்லணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இனிதே,
தமிழரசி.

Friday, 6 December 2013

காணும் இன்பம் ஏதையா!

ஆனந்த வாழ்வுவாழ ஆசை கொண்டே
           அவனியிற் பிறந்து உழலும்
ஊனுடலைச் சுமந்து உருக் குலைந்து
           உவப்ப தென்னே! காயும்
தானாய்க் கனிந்து தித்திக்கும் போது
          தாயாய் உலகு புரந்தவனே!
கூனாய் குருடாய் குறளையாய் படைத்து
         காணும் இன்பம் ஏதையா!

Thursday, 5 December 2013

தென்னாபிரிக்கா ஈந்த விடிவெள்ளி!

மனவானில் சுதந்திரவாசல் திறந்திருக்கக் கண்டு வெற்றி நடை போட்ட இளஞ்சிட்டு! 
பட்டுக் கம்பளத் தொட்டிலிட்டு பாலும் சோறும் பொற்கிண்ணத்தில் அருந்தக்கூடிய அரசகுடியில் பிறந்தும் என்ன பயன்? 
உலகச் சந்தையில் மனிதனை மனிதன் விலைகூறி விற்றகாலம் அது. 
அந்த அடிமை விலங்கை உடைத்தெரிய ஓர் இளம் சிட்டாய் தன் மனவானில் எண்ணச் சிறகடித்துப் பறந்தது. 

மனிதஇனம் கறுப்பு வெள்ளை என்ற நிறத்தால் இணைவதில்லை மனத்தல் இணைவது என்னும் பண்டைய மனித தத்துவத்தை மீண்டும் உலகுக்கு எடுத்துச் சொன்னது. 
அதற்கு கிடைத்ததோ இருபத்துஏழு ஆண்டுகள் சிறைவாசம். அது கொடுத்ததோ தகிக்கும் வெய்யிலில் கல் உடைப்பு. 

அப்போதும் மனித நேயத்திற்காகப் போராடி நிறவெறி எனும் விலங்கை உடைத்தது. 
உலகம் போற்றும் விடுதலை வீரனாய் உயர்ந்து நின்றது. 

தென்னாபிரிக்காவில் தமிழையும் படிக்க வழி செய்தது. 

உலகின் நிறவெறியை உடைத்தெறிந்த
 தென்னாபிரிக்கா ஈந்த விடிவெள்ளியாய்ப்
பறந்து திரிந்த சிட்டு,
இன்று
 மேலேமேலே இன்னும் மேலே
 நெல்சன் மண்டலோ என்னும்  
விடிவெள்ளியாய் மிளிர்கிறதே!


Morgan Freeman - American Actor


Tuesday, 3 December 2013

விந்தை பார்க்கப் போமோ!



மேகம் இருண்டும் மழை இல்லாது 
தாகம் தீர தண்ணீருக்கு அலைந்த
காகம் முற்றத்து குடத்து நீரைத் 
தாகம் போக்கக் குடிக்கப் பார்த்து
தாழ இருந்த நீரைக் கண்டு 
சோகம் கொண்டு சோம்பி இராது
கீழே கிடந்த கல் பொறுக்கி
குடத்தில் இட்டு குடித்து மகிழ்ந்தக் 
காகத்தின் மரபில் உதித்து வந்த
காகம் என்று காட்டுதற்கு நல்ல
வேகம் கொண்டு வெற்றுக் கானை
வேகும் உச்சி வெயில் போதில்
தாகம் தீர்க்க தண்ணீர் வருமென
தத்தித் தாவி தூக்கி வந்து
போடும் விந்தை பார்க்கப் போமோ!
                                                                                 - சிட்டு எழுதும் சீட்டு 78

Monday, 2 December 2013

ஆள்வரக் காணேனடி!


மன்னாரில் வாழ்ந்த கன்னி ஒருத்தி ஓர் இளைஞனைக் காதலித்தாள். அவன் அவளை இரவில் சந்தித்துப் பேசுவது வழக்கம். ஒருநாள் மாந்தைக்குப் போய்வருவதாகச் சொல்லிச் சென்றான். ஆனால் அவன் சொன்ன நேரத்துக்கு வரவில்லை. அதனால் அவன் மேல்  கோபம் கொண்டு ‘புத்தி தடுமாறி வேறேங்கும்  போய்விட்டானா? நடு இரவாகி ஆந்தை கத்தும் நேரமும் வந்துவிட்டதே இன்னும் அவன் வரவில்லையே!’ என்ற தன் மனஏக்கத்தைத் தோழிக்குச் சொல்கிறாள். காதலன் வரவை எதிர்பார்த்திருந்த காதலியின் மனஏக்கத்தைச் சொல்லும் நாட்டுப்பாடல் இது.

காதலி : மாந்தைக்குப் போனவரு
                        மதிமயங்கிப் போனாரோ
              ஆந்தை அலரும் நேரமடி
                        ஆள்வரக் காணேனடி
                                              -  நாட்டுப்பாடல் (மன்னார்)
                                                    - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)

2009ல் நடந்த போரின் பின்னரும் கூட மாந்தைக்கும் மன்னாருக்கும் இடையே பெருங்காடு இருக்கிறது. அங்கே புலி, கரடி, மட்டுமல்ல மதங்கொண்ட யானைகளும் திரிகின்றன. கொடிய விலங்குகள் திரியும் காட்டினூடாக காதலியைக் காண வருபவன் அவன். நேரம் போகப்போக கொடிய விலங்குகளின் நடமாட்டமும் கூடும். அதனால் அவனுக்கு ஏதும் துன்பம் நேருமோ என்ற துடிப்பும் கோபமும் சேர்ந்து நாட்டுப்பாடலாக வடிவெடுத்திருக்கிறது.

அந்நாளில் வாழ்ந்த காதலிகள் ஏன் ஆந்தை அலறுவதைக் கண்டு பயந்தார்கள் என்பதை சங்க இலக்கிய காதலர்கள் மூலம் நாம் அறியலாம். பெற்றோரும், உற்றாரும், ஊராரும் தூங்கிய பின்னர் காதலர்கள் சந்தித்துக் கொள்வது வழக்கம். மன்னாரில் வாழ்ந்த காதலியைப் போல சங்ககாலக் காதலியும் காதலன் வரவுக்காக அவளது ஊரின் நுழைவாயிலில் இருந்த குடிநீர்ச் சுனையிருந்த பூம்பொழிலில் தோழியுடன் காத்திருந்தாள். காதலன் வரவில்லை. நேரமோ உருண்டது. அப்பூம்பொழில் மரத்திலிருந்த கூகை [பேராந்தை] மெல்ல ‘க்கூம், க்கூம்’ எனக் குரல் எழுப்பத் தொடங்கியது.

அப்போது 
“எம்ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முதுமரத்து உடன் உறை பழகிய
தேயா வளை வாய்த் தெண்கண் கூர்உகிர்
வாய்பறை அசாஅம் வலிமுந்து கூகை
மைஊன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்
எலிவான் சூட்டொடு மலியப் பேணுதும்
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல்நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றா தீமே”                    - (நற்றிணை: 83)
என்று பேராந்தையிடம் கெஞ்சினாள்.

‘எங்கள் ஊர் நுழைவாயிலில் உள்ள குடிநீர்துறை அருகே, கடவுள் வீற்றிருக்கும் முதிய மரத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட கூகையே! வளைந்த வாயையும் தெளிவான பார்வையுள்ள கண்ணையும் கூரான நகங்களையும் வாயே பறையாக ஒலிப்பதால் கேட்போரை அச்சம் கொள்ளச்செய்யும் வலிமையும் உடையாய்! ஆட்டிறைச்சி [மைஊன்] புரியாணியோடு [தேர்ந்தெடுத்த நெய்விட்டு சமைத்த வெண்சோறு], சுட்ட வெள்ளை எலியும் நிறையவே தந்து உன்னைப் பேணிக்காப்போம். அன்பு குறையாத எம் காதலர் வரவை விரும்பி நித்திரையும் கொள்ளாது மனக்கலங்கும் வேளையில் மற்றவர்கள் பயந்து  விழித்துக் கொள்ளும்படி உனது கடுங்குரலால் அலறாது இருப்பாயாயே!’ எனக் கெஞ்சினாள் என்று பெருந்தேவனார் என்னும் சங்ககாலப் புலவர் பாடியுள்ளார்.

ஆந்தை அலறினால் பெற்றோரும் ஊராரும் விழித்துக்கொள்வார்கள் என்ற பயத்தால் ஆட்டிறைச்சி புரியாணி மட்டுமல்ல ஆந்தைக்குப் பிடித்த வெள்ளெலியையும் பிடித்து சுட்டுக் கொடுக்க அந்நாளைய காதலிகள் ஆயத்தமாக இருந்திருக்கிறார்கள். மன்னார்க் காதலியும் சங்ககாலக் காதலியைப் போலவே மற்றவர்கள் விழித்துக் கொள்வார்கள் என்பதற்காக ‘ஆந்தை அலரும் நேரமெடி ஆள்வரக் காணேனடி’ எனத் துடிதுடித்தாளோ!
இனிதே,
தமிழரசி.