Wednesday, 9 September 2026

நல்லூரின் தேரேறி நாடியேநீ வருதலென்னே!


பத்திமை அறிந்திலேன் பழவினை தெரிந்திலேன்
                பெற்றியும் படித்திலேன் பொற்புடன் நடந்திலேன்
சித்திமை உணர்ந்திலேன் சிந்தை தெளிவிலேன்
                செற்றிச் செதுக்கிலேன் செம்மை மனத்திலேன்
முத்திமை முயன்றிலேன் முப்போதும் தொழுதிலேன்
                முத்தனாய் உளத்திருக்கும் மூர்த்தியே நின்னை
நத்தியே நயந்திடா நாயேனுக்கு அருளவென்றே
                நல்லூரின் தேரேறி நாடியேநீ வருதலென்னே! 
இனிதே,
தமிழரசி.

சொல் விளக்கம்:
பத்திமை - பக்திசெய்யும் தன்மை
பழவினை - முற்பிறப்பு வினைகள்
பெற்றி - மேன்மைக் குணங்கள்
பொற்பு - தன்மையாக நடத்தல்/உலகுக்கு ஏற்றவாறு
சித்திமை - சித்திகளை [எட்டு சித்திகள்/ திறமைகள்]
உணர்ந்திலேன் - உணர்ந்து அறியேன்
சிந்தை - மனம்
செற்றி - மனதை அடக்கி ஒளியூட்டி மெருகேற்றல்
செதுக்கிலேன் - மனதை செதுக்கி எடுத்தல்
செம்மை - செவ்வை/ தூய்மை
முத்திமை - முத்தி
முயன்றிலேன் -  முயற்சி செய்யவில்லை
முத்தனாய் - முத்துப்போன்றவனாய் மிளிர்ந்து
உளத்திருக்கும் - உள்ளத்துள் இருக்கும்
மூர்த்தியே - முருகனே
நின்னை - உன்னை
நத்தியே - விரும்பியே
நயந்திடா - மிகிழாத
நாயேனுக்கு - நன்மை தீமை அறியா நாய் போன்ற எனக்கு
அருளவென்றே - அருள்புரிவதற்கா என்றே!