Saturday, 25 May 2013

தாமரையில் தவளை இருந்தால் என்ன?


மலர்களிலே நிறைந்த தேனும் நல்ல மணமும் அழகும் உள்ள மலர் தாமரை மலராகும். யாராவது ‘பூ’ என்று சொன்னால் தாமரைப்பூவையே நம் முன்னோர் நினைத்தனர். அதனை 
“செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி
பாதம் போற்றும் வாதவூர் அன்ப
பா எனப்படுவது உன் பாட்டு
பூ எனப்படுவது பொறிவாழ் பூவே”          
                               - (நால்வர் நான்மணிமாலை: 40)
நால்வர் நான்மணிமாலையின் கடைசிப்பாடலான இப்பாடலால் அறியலாம்.

























பாட்டு என்றால் மாணிக்கவாசகரின் திருவாசகம், பூ என்றால் வரிவண்டு வாழும் பூ - அதாவது தாமரைப் பூ என்கிறது இப்பாடல். பொறி என்பது வரிவண்டு. வரிகளையுடைய வண்டு எது? தேனீயே வரிவண்டாகும். தேனீக்களில் பலவகையுண்டு. அவற்றில் ஒன்று வரிவண்டாகும். இந்த வரிவண்டுகள் பெரும்பாலும் நீர்நிலைகளில் வளரும் தாமரை போன்ற மணமுள்ள மலர்களை நாடிச்சென்று தேனை எடுக்கும். பல பொறிமுறைகளை அறிந்து அவை தேன் கூடுகளைக் கட்டுவதால் பழந்தமிழர் தேனீயை 'பொறி' என அழைத்தனர். அதனால்
“பூ எனப்படுவது பொறிவாழ் பூவே 
என்கிறார். 

தேனீ, தேன் கூட்டில் அல்லவா வாழும். ஆனால் இப்பாடலோ தேனீ தாமரைப்பூவில் வாழும் என்கிறது. தாமரைப்பூவில் தேனீக்கள் தேன் அருந்துவதைப் பார்த்திருக்கும் நம்மில் எத்தனை பேர் அவை அதில் வாழ்வதை பார்த்திருக்கிறோம்? எனவே இப்பாடல் சொல்வது சரியா? என்பதை கடைச் சங்கப் புலவரான நக்கீரரிடம் கேட்டுப் பார்ப்போமா? 
“மாடம் மலிமறுகின் கூடல் குடவயின்
இருஞ்சேற்று அகல்வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல் ஊதி எல்படக்
கண் போல் மலர்ந்த காமரு சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்று அமர்ந்து உறைதலும் உரியன்”             
                              - (திருமுருகாற்றுப்படை: 71 - 77)

என்று திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்றைக்காட்டி, அங்கே முருகன் இருப்பதாகக் கூறுகிறார்.

முருகன், ‘மாடம் [உப்பரிகை, நிலாமுற்றம் (balcony)] உள்ள வீடுகள் நிறைந்த[மலி] தெருக்களையுடைய[மறுகு] மதுரையின்[கூடல்] மேற்கே[குடவயின்], கரிய நிறமான சேறு[இருஞ்சேறு] உள்ள அகலமான[அகல்] வயலில் மலரும்[விரிந்து வாய் அவிழ்ந்த] முள்ளிருக்கும்[முள்] தண்டுள்ள[தாள்] தாமரைப் பூவிலே இரவில் தூங்கி[துஞ்சி], அதிகாலையில்[வைகறை] தேன்மணக்கும் [கள்கமழ்] நெய்தற்பூவை ஊதி, சூரியன் உதித்ததும்[எல்பட] கண் போல மலர்ந்திருக்கும் கருங்கற்குளங்களிலுள்ள மலர்களில் சென்று அழகிய சிறகையுடைய[அஞ்சிறை] வண்டின் கூட்டம்[அரிக்கணம்] இரையும்[ஒலிக்கும்] திருப்பரங்குன்றில் உறைபவன்’ என்கிறார்.


இதில் நக்கீரர் கூறும் ஒரு விடயத்தை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். ‘தேன் எடுக்க வரும் வண்டுகள் தாமரைப்பூவிலே இரவில் தூங்குகின்றன’ என்று கூறுகிறாரே, ஏன் அவை தேன் கூட்டில் தூங்காமல் தாமரைப் பூவில் தூங்குகின்றன? பூக்களில் சென்று தேனெடுக்கும் வேலைக்காரத் தேனீக்கள்  தமது தேன்கூடுகளில் இருந்து பல மைல் தொலைவில் இருக்கும் தேனுள்ள பூக்களில் சென்று தேனைச் சேகரிக்கின்றன. அப்படிச் செல்லும் தேனிக்கள் சூரியன் மறையமுன் மீண்டும் தேன்கூடுகளுக்கு செல்லமுடியாத நிலை ஏற்படும். அப்போது காலநிலை வெப்பத்திற்காக (இரவு நேரம் வெப்பநிலை குறைவதால்) இரவில் கூம்பி பகலில் விரியும் பூக்களில் தங்கி, இரவைக் கழிக்கின்றன. இப்போது தான் மேற்கு உலகநாட்டினர் இரவில் கூம்பும் தாமரை மலரினுள் வெப்பம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள். பூக்கள் ஏன் பூச்சிகளைக் கவர்கின்றன என்பதை ஆராய்ந்த போது இதனைக் கண்டுபிடித்திருகிறார்கள். ஆனால் இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே தாமரை மலர் இரவில் கதகதப்பாக இருக்கும் என்பதை படுமரத்து மோசிகொற்றன் என்னும் சங்ககாலப் புலவர் கூறியுள்ளார்.  

அவர் தாமரை மலரின் வெப்பநிலையை மட்டும் அப்பாடலில் சொல்லவில்லை. பெண்களின் உடல் வெப்பநிலை - வெப்பகாலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் சிறிது வெப்பமாகவும் இருப்பதாகக் கூறியுள்ளார். அவர் தாமரை மலரை மட்டுமல்ல, பெண்களையும் நன்றாக ஆராய்ந்து பார்த்திருக்கிறார் போலும். 

தலைவன் ஒருவன் தன் நெஞ்சிற்கு சொல்வதாக, படுமரத்து மோசிகொற்றன் சொல்வதைப் பார்ப்போம். அவரது தலைவி, ‘உலக உயிர்களால் முற்றாக அறியப்படாத பொதியமலையில் இருக்கும் சந்தனம் போல கோடையில் குளிர்ச்சியாக இருக்கிறாள். பனிக்காலத்திலோ, வெப்பத்தை வாங்கும் சூரியக்கதிர்கள் மறையக் கூம்பி, நுண்மையாக அசைகின்ற வெயிலை சேமித்த தாமரை மலரின் உள்ளிடத்தைப் போல சிறிது வெம்மையாக இருக்கிறாளாம்.



















“மன் உயிர் அறியாத் துன் அரும் பொதியில்
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப
வேனிலானே தண்ணியள் பனியே
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென
அலங்கு வெயிற் பொதித்த தாமரை
உள்ளகத் தன்ன சிறு வெம்மையளே!”      
                                          - (குறுந்: 376)

பாருங்கள்! இந்தப் பாடலில் அவர் 
“வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென
அலங்கு வெயிற் பொதித்த தாமரை
உள்ளகத் தன்ன சிறு வெம்மை”
என்ற வரிகளில் அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பை, மிகவும் நுட்பமான தமிழ்ச்சொற்களால் சொல்லியிருக்கும் பாங்கு போற்றுதற்கு உரியதாகும். பண்டைய நம் சங்கச் சான்றோர் அறிந்து சொன்ன இத்தகைய விஞ்ஞான நுட்பங்களை நாம் அறியாது இருப்பது எமது அறியாமை இல்லையா?

தாமரைமலர் சேகரித்து வைத்திருக்கும் கதகதப்பான சூட்டின் காரணமாக தேனீக்கள் தாம் தங்கிப் போகும் இரவு விடுதிகளாக கூம்பிய தாமரை மலரைத் தேர்ந்து எடுத்தன போலும். 

தாமரை வளரும் சுனைகளையோ, குளங்களையோ, பொய்கைகளையோ பார்த்தறியாது எங்கோ தொலைதூரத்தில் காட்டில் தேன் கூடுகளில் பிறந்து வளர்வன தேனீக்கள். ஆனால் அவை தாமரை மலரின் மணத்தாலும் நிறத்தாலும் கவரப்பட்டு அவற்றைத்தேடி சின்னஞ்சிறு சிறகுகளால் பறந்து வருகின்றன. தாமரைப்பூக்கள் தம்மை நாடி தேடிவரும் தேனீகளுக்கு தேனையும் கதகதப்பான வெப்பத்தையும் கொடுக்கின்றன. தாமரையின் அழகு, நிறம், மணம், தேன், கதகதப்பு யாவற்றையும் எங்கோ பிறந்த தேனீ தேடிவந்து பெற்றுச் செல்கிறது. 

ஆனால் தவளையோ தாமரை வளரும் அந்தப் பொய்கையிலோ குளத்திலோ பிறந்து தாமரையோடு வளரும். அப்படி தாமரையோடு வளரும் தவளைக்கு தாமரைமலரின் அழகோ, நிறமோ, மணமோ, அதன் தேனின் சுவையோ, அது கொடுக்கும் கதகதப்போ தெரியாது. அதுபோல எத்தனையோ சிறந்த அறிஞர்களின் அறிவை, ஆற்றலை அவர்களுடன் சேர்ந்து பழகும் அறிவிலிகள் அறிவதில்லை. ஆனால் நாடுவிட்டு நாடு வாழ்வோராயும், வேற்று மொழிபேசுவோராயும் இருந்தாலும் கற்ற அறிஞர்கள், மற்ற அறிஞர்களை இனங்கண்டு ஒருவரோடு ஒருவர் பேசி நட்புக்கொண்டு இன்புறுவர் என்கின்றது விவேகசிந்தாமணி.


“தண் தாமரையின் உடன்பிறந்தும் தண்தேன் நுகரா மண்டூகம்
வண்டோ கானத்திடை இருந்தும் வந்து கமலமது உண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லர் நல்லோரைக்
கண்டே களித்து அங்கு உறவாடித் தம்மிற் கலப்பர் கற்றோரே”

இந்தப்பாடல் சொல்வது போல எம்வீடுகளில் கணவனிடம் இருக்கும் ஆற்றலை மனைவியும், மனைவியிடம் இருக்கும் திறமையை கணவனும், தாம் பெற்ற பிள்ளைகளிடம் இருக்கும் சிறந்த வல்லமையைப்  பெற்றோரும் அறிந்து கொள்வதில்லை. ஒவ்வொருவரின் திறமையையும் மற்றவர் மதிப்பவராக வாழ்ந்தால் எல்லோரும் இன்பமாக வாழலாம். 

இந்த விவேகசிந்தாமணிப் பாடல் இன்றைய தமிழர்களாகிய எம்மை தவளைகளாகவும் பண்டைய சங்ககாலச் சான்றோரை தாமரை மலர்களாகவும் காட்டுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. எல்லிஸ் என்ற தனது பெயரை, எல்லீசன் என்ற தனித்தமிழ்ப் பெயராக மாற்றி வாழ்ந்த பிறநாட்டு அறிஞர் போன்ற எத்தனையோ பிறமொழியாளர்களைக் கவர்ந்த சங்க இலக்கியம் நம் தமிழ் மக்களால் புறக்கணிக்கப்படுவது அதனைக் காட்டுகிறது அல்லவா?

சொல்விளக்கம்:
எல்பட - சூரிய ஒளி படும்போது; சூரியன் உதிக்க 
வாங்குகதிர் -  வெப்பத்தை வாங்கும் சூரியக்கதிர்
தொகுப்பக் - மறைய 
ஐயென - நுண்மையாக
அலங்கு - அசைகின்ற
பொதித்த - சேமித்த  
உள்ளகத்து - உள்ளிடத்து 
இனிதே,
தமிழரசி.

Thursday, 23 May 2013

மொத்த இளமை போனதுவே!
























புத்தி கெட்ட மானுடரும்
புத்தன் ஆவான் மகனென்று
பத்தும் அறியா பாலகர் 
பதறித் துடித்து அழுதிடவே
மெத்தப் பிடித்து தலைமயிரை
மொட்டை போட்டு உடையிது 
புத்தம் புதுசு என்றுசொல்லி
புதிய காவி தனையளிக்க
சித்தம் சிறிதும் இல்லாதே
சிரித்து உடுத்து மகிழ்ந்தே
புத்த சங்கத்து இருந்திட்டார்!
பிறந்த பயனை அடைந்திட்டார்!
சுத்தும் உலக வாழ்வதனின்
சுமையை நன்கு அறிந்திட்டார்!
மொத்த இளமை போனதுவே!
மெல்ல முதுமை வந்ததுவே!
புத்தன் சொன்ன வார்த்தைகளும்
பொய்த்தது என்று உணர்ந்தனரோ!
                                                                                          - சிட்டு எழுதும் சீட்டு 62

Wednesday, 22 May 2013

ஆசைக்கவிதைகள் - 64

நான் பெத்த மகனே!

தாயொருத்திக்கு ஒரே ஒரு மகனிருந்தான்.  அவளுக்கு மகனைத்தவிர சொந்தம் என்று சொல்ல வேறு யாரும் இல்லை. கடன்சுமையால், வாழ்வதா சாவதா  என்று வாழ்க்கையோடு திண்டாடினாள். அதனால் ‘தான் இறந்து போனால் மகனாவது சுகமாக வாழ்வானா? அன்றேல் கடன் கொடுத்தவர்கள் வந்து அவனிடம் கடனைக் கேட்டால் அவன் என்ன செய்வான்?’ என நினைத்து பார்க்கிறாள். தான் நினைத்ததை மகனிடம் கேட்கிறாள்.

தாய்: நான் பெத்த மகனே! நாய்க்குட்டி தலையே!
          நான் செத்தா நீ என்ன செய்வாய்?

மகன்: பனையில ஏறி பனம் பாணி குடிப்பேன்

தாய்: கடன்காரன் வந்தா?

மகன்: கடன்காரன் வந்தா கட்டிப்போட்டு அடிப்பேன்

தாய்: எப்படி அடிப்பாய்?

மகன்: சூத்துக்கும் பூத்துக்கும் சுழலச்சுழல
           சூத்துக்கும் பூத்துக்கும் சுழலச்சுழல  
                                                - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

என்று கூறிய மகன் ‘இரு கைவிரல்களையும் ஒன்றோடு ஒன்று பொருத்தி வைத்து, நடுவிரல் இரண்டையும் மாற்றி மாற்றி அங்கும் இங்கும் ஆட்டி ஆட்டி “சூத்துக்கும் பூத்துக்கும் சுழலச்சுழல சூத்துக்கும் பூத்துக்கும் சுழலச்சுழல” எனப்பாடிப் பாடி விளையாடத் தொடங்கினான். அந்தத் தாயும் தன் மகனின் அறியாமை எண்ணி தன் எண்ணத்தைக் கைவிட்டாள். ஆனால் அப்பாடல் சிறுவர்கள் விளையாடும் நாட்டுப்பாடலாக நிலைத்து நிற்கிறது.

Tuesday, 21 May 2013

குறள் அமுது - (65)


குறள்:
“கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி”                                                   - 356

பொருள்:
கற்கவேண்டியவற்றைக் கற்று மெய்ப்பொருளின் உண்மையை அறிந்தவர், மீண்டும் இவ்வுலக வாழ்க்கையுள் வராத வழியுள் புகுவர். 

விளக்கம்:
இந்த உலக தோற்றத்தின் உண்மையை, உயிர் சுமந்து வாழும் வாழ்க்கையின் உண்மையை, ஆராய்ந்து கற்று அறிவதே மெய்ப்பொருளை அறியும் வழியாகும். உலகில் இயங்கும் பொருள் இயங்காப் பொருள் என இருவகைப் பொருட்கள் இருக்கின்றன. இயங்கும் பொருட்களே, இயங்காப் பொருள்களை இயக்குகின்றன. இந்த உண்மையைக் கண்ட மனிதன், இவ்வுலகையும் உலக உயிர்களையும் இயக்கும் பொருள் ஒன்று இருக்க வேண்டுமே என ஆராய்ந்தான். உலகத்தை இயக்கும் அப்பெரும்பொருளாகிய சக்தியை இயக்கி என்றான். இயக்கியோடு இசைந்தவன் இயக்கன் ஆனான். அண்ட கோளங்களை இயக்கும் அம்மெய்ப் பொருளை இன்றைய மனிதர்களாகிய நாம் கடவுள் என்கிறோம்.

அந்த மெய்ப்பொருளை அறிந்தோர், இவ்வுலகில் மீண்டும் மீண்டும் பிறந்து, இறந்து சுழழும் வழியில் வராது வேறு வழியுள் செல்வர். அந்த மாற்றுவழியை, அதாவது கடவுளை அடையும் வழியை திருவள்ளுவர் வாராநெறி என அழைத்துள்ளார். வாரா நெறி என்பது திரும்பவும் பிறவி வராத வழி.  நாம் மீண்டும் பிறவி எனும் வழியே வரத்தேவை இல்லை. அதனாலேயே அதனை நம் முன்னோர் வாராநெறி என அழைத்தனர். 

 மாணிக்கவாசகரும் திருவாசகத்தில்
வாரா வழியருளி வந்து என் உளம் புகுந்த
ஆரா அமுதாய்...............”                                   -(ப.திருமுறை: 8: 8: 2) 
என திருவள்ளுவர் கூறிய வாராநெறியை, வாராவழி எனச் சொல்கிறார்.

மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறந்து வராதிருக்கும் வழியில் செல்ல வேண்டுமானால், உலகின் மெய்ப்பொருள் எது என்னும் உண்மையைக் கற்று அறியுங்கள் என இக்குறள் கூறுகிறது.

Monday, 20 May 2013

ஔவையார் பெண்களைப் பேடு என்றாரா? - பகுதி 1


ஔவையார் பெண்களைப் பேடு என்று சொன்னதாக சிலர் கருதுகிறார்கள். பெண்பாற் புலவர்களில் பலர் ஔவையார் என்ற பெயரில் வாழ்ந்திருக்கிறார்கள். ஔவை என்ற பெயரில் வாழ்ந்த ஔவையர் யாவருமே பேரறிவுடன் இருந்தவர்களே. பெண்ணாக இருந்த ஔவையர் எப்படி பெண்ணைப் பேடு என்பர்? எனவே எந்த ஔவையார் பேடு பற்றிச் சொன்னார்? அந்த ஔவையாரும் பெண்ணை பேடு என்று சொன்னாரா? என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.

கிறிஸ்துவுக்கு முன்பு வாழ்ந்த சங்ககால ஔவையாரே காலத்தால் மூத்தவர். அவருக்கு பின் வாழ்ந்த ஔவையரைப் பற்றிப் பார்க்க முன்னர் விநாயகரை தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த பரஞ்சோதியாரை உங்களுக்கு அறிமுகம் செய்துவைக்க விரும்புகிறேன். பரஞ்சோதி என்பவர் நரசிம்மபல்லவனின் படைத்தளபதியாக   இருந்தார். அவர் கி பி 642ல் வாதாபிக்கு படையெடுத்துச் சென்று புலிகேசியை வென்றார். அங்கிருந்து வரும்பொழுது வாதாபியின் வெற்றியின் அடையாளமாக வாதாபிகணபதியான விநாயகரை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார். அதனால் தான் என்னவோ மற்றக் கடவுளரைவிட பிள்ளையாரை எல்லா அழைப்பிதழ்களிலும் போட்டு, பட்டி தொட்டி எல்லாம் பறக்கவிட்டு எம் வெற்றியை இன்றும் கொண்டாடுகிறோம். 

அறுபத்துமூன்று நாயன்மாரில் ஒருவரான சிறுத்தொண்ட நாயனாரே, இளமையில் பரஞ்சோதி எனும் இயற்பெயருடன் இருந்த பொழுது புலிகேசியை வென்றார். அந்தப் பரஞ்சோதியாரே தமிழர்க்கு விநாயகரை முதன்முதல் அறிமுகம் செய்து வைத்தார் என்பது வரலாற்றறிஞர் முடிபு. அதற்கு முன் தமிழர் விநாயகரை வணங்கியதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. ஆதலால் கி பி 600களின் நடுப்பகுதியில் விநாயகர் வணக்கம் தமிழரிடம் பரவியது எனலாம். எனவே விநாயகரை சங்ககால ஔவையாருக்கு மட்டுமல்ல சங்ககாலப் புலவர் எவருக்குமே தெரியாது.


சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்ந்த காலமான கி பி 700களில் இன்னொரு ஔவையார் வாழ்ந்தார். அவர் விநாயகர் வணக்கம் தமிழரிடையே பரவிய பின்னர் வாழ்ந்தபடியால் விநாயகரை வணங்கி வந்தார். அந்த ஔவையார் ஒருநாள் விநாயகருக்கு பூசை செய்து கொண்டிருக்கும் போது சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான்பெருமாள் நாயனாரும் கைலாயம் செல்வதை அறிந்து, தாமும் அவர்களுடன் கைலாயம் செல்வதற்காக பதற்றத்துடன் விநாயகர் அகவலைப் பாடினார். அதைக்கண்ட விநாயகர், பதற்றப்பட வேண்டாம் என்றும் அவர்கள் கைலாயம் சென்றடைய முன்பு, ஔவையாரை கைலாயத்தில் சேர்ப்பதாகக் கூறி, அப்படியே செய்தாராம். அந்த ஔவையாரே 
சீதக்களப செந்தாமைரைப்பூம் பாதச்சிலம்பும் பலவிசைபாட”
எனத் தொடங்கும் விநாயகர் அகவலை இயற்றியவர்.

கம்பர் வாழ்ந்த காலமாகிய கி பி 1200களில் ஒரு ஔவையார் வாழ்ந்தார். அவர் தனிப்பாடல்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார். அந்த ஔவையாரிடமே பழமுதிர்சோலையில் முருகன் சுட்டபழம் வேண்டுமா? சுடாதபழம் வேண்டுமா? எனக்கேட்டு சுட்டபழம் கொடுத்தார் என்பர். அந்தக் கதை நம் எல்லோருக்கும் தெரிந்த கதையே. அப்போது முருகன் ‘அரியது என்ன?’ என ஔவையாரிடம் கேட்டதற்கு 
“அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது
அதனிலும் அரிது கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செயல் அரிது
தானமும் தவமும் தான் செய்வாராயின் 
வானவர் நாடு வழி திறந்திடுமே”
என்று அவர் பாடிய பாடல் இது. 

இப்பாடலில் ஔவையார்
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது
அதனிலும் அரிது கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது” 
என்கிறார் அல்லவா? இதிலே வரும் 'பேடு' என்ற சொல் பெண்ணைக் குறிப்பதாகவும், பெண்கள் பேடு நீங்கி அதாவது பெண் தன்மை நீங்கி - ஆண்களாகப் பிறந்தாலே ஞானமும் கல்வியும் கிடைக்கும் என்பது சிலரது கருத்து. பெட்டைக் கோழியைப் பேட்டுக்கோழி எனச்சொல்வதால் பெண்ணையே பேடு எனச்சொன்னதாக' நினைக்கின்றனர். அந்த எண்ணம் சரியா? இப்பாடலை இயற்றிய ஔவையாருக்கு முன் வாழ்ந்த சங்ககாலத் தமிழரும், ஏனைய சான்றோரும் ‘பேடு’ என்ற சொல்லை பெண்ணைக் குறிக்கவா பயன்படுத்தினர்? எனப்பார்ப்போம்.

சங்ககாலப் புலவர்களில் காலத்தால் மூத்தவர் தொல்காப்பியர். அவர் தமிழுக்கு தொல்காப்பியம் என்ற ஒப்பற்ற இலக்கணநூலைத் தந்த பெரும் புலவர். அவர் தொல்காப்பியத்தின் சொல் அதிகாரத்தில் சொற்கள் உண்டாகும் முறையை கிளவியாக்கம் [கிளவி என்றால் சொல்] எனும் தலைப்பில் தந்துள்ளார். 

அதில்
“ஆண்மை திரிந்த பெயர் நிலைக்கிளவி
ஆண்மை அறிசொற்கு ஆகுடன் இன்றே”         
                                                        - (தொல்.சொல்: கி.ஆ: 12)
என்று கூறியுள்ளார்.

ஆண்மை திரிந்த - ஆண்தன்மையில் இருந்து மாறிய; 
பெயர் நிலைக்கிளவி - பெயரை உறுதிசெய்யும் சொல்;
ஆண்மை அறிசொற்கு - ஆண் என்பதை அறியத்தரும் சொல்லுடன்;
ஆகுடன் இன்றே - பொருந்தி வராது;

அதாவது ஆண்தன்மையில் இருந்து மாறியவரது பெயரை உறுதிசெய்யும் சொல், அவர் ஆண் என்பதை அறியத்தரும் சொல்லுடன் பொருந்தி வராது என்கிறார். ஆண் தன்மையில் இருந்து திரிந்து மாறியவர்களா பெண்கள்? தொல்காப்பியர் யாரை ஆண் தன்மையில் இருந்து திரிந்தவர் என்று சொன்னார்?

ஆண்மையை விட்டு பெண்தன்மையை விரும்புவோரையும், பெண்மையைவிட்டு ஆண்தன்மையை  விரும்புவோரையும் நம் முன்னோர் பேடு என்றும் அலி என்றும் அழைத்தனர். தம் தன்மையில் இருந்து மாறுவோரை பேடு என அழைத்ததை நன்னூல்
“பெண்மை விட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்
ஆண்மை விட்டு பெண் அவாவுவ பேடு பெண்பால்”         
                                                        - (நன்னூல்: 264)
என்கின்றது.

அவாவுவ என்றால் விரும்புவது. பெண்ணாகப் பிறந்து பெண்தன்மையை விட்டு, ஆண்மையை விரும்பும் பேடு 
பேடு + அன் = பேடன் (ஆண்பால்) ஆகவும் 
ஆணாகப் பிறந்து ஆண்தன்மையை விட்டு, பெண்மையை விரும்பும் பேடு
பேடு + இ = பேடி (பெண்பால்) ஆகவும் அழைக்கப்பட்டனர்.

தாம் பிறந்தபோது இருந்த தன்மையில் இருந்து மாற்றம் அடைவோரை இக்காலத்தில் திருநங்கையர் என்றும் அரவாணிகள் என்றும் அழைக்கிறோம். எனவே பேடுபற்றி தொல்காப்பியம், மகாபாரதம், திருக்குறள் போன்ற நூல்களும், சான்றோரும், கல்வெட்டுகளும்  சொல்வதை  தொடர்ந்து பார்ப்போம்.
இனிதே,
தமிழரசி.

Sunday, 19 May 2013

அடிசில் 55

கொவ்வைக்காய் பிரட்டல் 

                                                                                                     - நீரா -



















தேவையான பொருட்கள்:
கொவ்வைக்காய் - 350 கிராம்
மிளகாய்த்தூள் - ¼ தே.கரண்டி
மஞ்சள்தூள் - ¼ தே.கரண்டி
சிறிதாக வெட்டிய வெங்காயம் - ¼ கப்   
சிறிதாக வெட்டிய பச்சைமிளகாய் -  3
கடுகு - ½ தே.கரண்டி
எண்ணெய் - 1 மே.கரண்டி 
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிதளவு 

வறுக்கத் தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு  -  1 மே. கரண்டி
தேங்காய்ப்பூ -  2 தே.கரண்டி 
சின்னச்சீரகம் - ½ தே.கரண்டி 
மிளகு - ½ தே.கரண்டி
செத்தல் மிளகாய் - 2 

செய்முறை:
1. வறுக்கத்தேவையான பொருட்களை வறுத்து, சிறிது புளியும் சேர்த்து நறுவல் துருவலாக அரைத்துக் கொள்க.
2. கொவ்வைக்காயை கழுவி ஒவ்வொன்றையும்  நீள் பக்கமாக நான்கு துண்டுகளாக வெட்டவும்.
3. வெட்டிய கொவ்வைக்காய்த் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அவித்து எடுக்கவும்.
4. வாயகன்ற இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு போட்டு, கடுகு வெடிக்கும் போது, வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை இட்டு பொன்னிறமாக தாளிக்கவும்.
5. அதனுள் அரைத்து வைத்திருக்கும் பொடியைப் போட்டு கலந்து வேகவிடவும்.
6. அவித்து வைத்திருக்கும் கொவ்வைக்காய்களை அதற்குள் இட்டு கிளறி, மெல்லிய நெருப்பில் தண்ணீர் சுண்டும்வரை வேகவிட்டு இறக்கவும்.