Thursday, 16 May 2013

உணர்வினில் கலந்து உயிரொடு நின்றான்


கதறி அழைத்தும் காணாத கந்தன்
கணத்தினில் கண்ணெதிரே வந்தான்

பதறி நின்றேன் பக்குவம் ஊட்டி
பழந்தமிழ் தீஞ்சுவை பரிவொடு தந்தான்

சிதறிடும் சித்தத்தில் செம்மையை கூட்டி
சிந்தனை ஆற்றலைப் பெருகிடச் செய்தான்  

உதறிடும் நெஞ்சில் உவகையை மீட்டி
உணர்வினில் கலந்து உயிரொடு நின்றான்.
இனிதே,
தமிழரசி.

Tuesday, 14 May 2013

சீவனுக்குள்ளே சிவமணம்



உலகில் உள்ள பல இந்துக் கோயில்களில் நடைபெறும் சிறப்பான அபிசேகங்களின் போது வாசனைத் திரவியங்களாக சந்தனம், கற்பூரம், புனுகு சேர்த்துக் கொள்வார்கள். தமிழகத்திலே மிகவும் பணக்கார தெய்வமான திருப்பதி வெங்கடேஸ்வரருக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அபிசேகத்திற்கு புனுகு சேர்க்கப்படுகிறது. புனுகுபூனையின் மதம் (புனுகு) பாவிக்கப்படுவதால் திருப்பதியான் சிலை வழவழப்பாக இருக்குமாம். புனுகு அதிகவிலைக்கு விற்கப்படுவதால் புனுகு எடுப்பதற்காக திருப்பதி தேவஸ்தான வளாகத்துள் புனுகுபூனைகளை வளர்க்க 2008ல் இந்திய மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்ததை பத்திரிகையில் வாசித்தேன். 2011ல் அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் திருப்பதியானின் அபிசேகம் காணும் பக்தர்களும் புனுகு மணத்தில் திளைப்பர்.

திருமந்திரத்தை எழுதிய திருமூலர் ‘எமக்குள்ளே இருக்கும் இறைவனின் தன்மையை நாம் உணரும் போது சிவமணம் கமழும் [பூக்கும்] என்பதை 
“பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல் 
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர வல்லார்கட்கு 
நாவி அணைந்த நடுதறி ஆமே”                 - (திருமந்திரம்: 1459)

இத்திருமந்திரத்தில் கூறியுள்ளார். பூ மலர முன்னர் பூவின் மணம் அதனுள் அடங்கி இருப்பது போல, நமது ஆன்மா இறைவன் என்னும் உண்மையை உணர முன்னர், ஆன்மாவுக்குள்[சீவனுக்குள்] அடங்கியிருந்த சிவமணமும், வரைந்திருக்கும் ஓவியம் என்ன கருத்தைச் சொல்கிறது என்பதை உணர்ந்து அறிவது போல உணர்ந்து அறிய வல்லவர்கட்கு, புனுகு பூனை[நாவி] புணர்ந்த[அணைந்த] மூங்கிலில்[நடுதறியாக பயன்பட்ட மூங்கில்] புனுகு மணம் வீசுவது போல, விசும் என்கிறார்.

திருமூலரின் இந்தத் திருமந்திரத்திற்கு பொருள் எழுத முற்பட்ட போது நான் அடைந்த அதிர்ச்சியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். புனுகுபூனையை நாவி என்று அழைப்பர். நாபி என்பது தொப்பூழ். நாவியும், நாபியும் வேறு வேறானவை. தமிழகராதிகள் சில இரண்டையும் ஒன்றாகக் கருதுகின்றன.  நடுதறி, இங்கு மூங்கிலைக் குறிக்கிறது. எதற்காக புனுகுபூனை மூங்கிலோடு சேரவேண்டும்? என்ற கேள்விக்கு கிடைத்த விடை என்னை சிந்திக்க வைத்தது. அதற்கு முன்னர் புனுகு ஒரு வாசனைத் திரவியம் என்று நானும் நினைத்திருந்தேன். 

வாசனைப் பொருளாகக் கருதப்படும் புனுகு, புனுகுபூனையின் மதத்தில் இருந்தே எடுக்கப்படுகிறது. புனுகு எப்படி பெறப்படுகின்றது என்பதை அறிந்தால் என்னைப்போல் நீங்களும் அதிர்ந்து போவீர்கள்.

சில விலங்குகள் தமது இன்ப வேட்கையை வெளிப்படுத்தி எதிர்ப்பால் (ஆணையோ/பெண்ணையோ) விலங்கைக் கவர மணமுள்ள ஓமோனை வெளிப்படுத்தும். புனுகு பூனை தன் இன்பவேட்கைக்காக வெளிப்படுத்தும் ஓமோனே புனுகு. அந்த புனுகு எடுக்கப்படும் விதத்தையே “நாவி அணைந்த நடுதறி” காட்டுகிறது.

புனுகுபூனையைப் பிடித்து கூட்டில் அடைத்து நன்றாக உணவு கொடுத்து வளர்ப்பார்கள். அது தகுந்த வயதை அடைந்ததும், அதன் கூட்டில் மூங்கில் குழாய்களைப் பொருத்தி, அதற்கு இன்ப வேட்கை வரும்படி செய்வர். அப்போது புனுகுபூனை முங்கில் குழாய்களைச் சேர்ந்து (அணைந்து) மதத்தை வெளிப்படுத்தும். அது வெளிவிடும் மதம் மூங்கில் குழாய்க்குள் சேரும். மூங்கில் குழாயினுள் சேரும் மதம் புனுகு என அழைக்கப்படுகிறது. 'ஆன்மிகப் பூசைக்கு புனுகு' என்ற பெயரில் தரம் குறைந்த புனுகு விற்கப்படுகிறது. அதனையும் கோயில்கள் தம் தேவைக்கு வாங்குகின்றன.

புனுகுபூனையை வதைத்து எடுக்கும் புனுகு, 21ம் நூற்றாண்டிலும் கோயிலினுள் அபிசேகத்துக்கு மிகவும் வேண்டிய பொருளாக இருப்பது மூடநம்பிக்கையாகப் படவில்லையா? முட்டை என்பதை வாயால் சொல்லாது, உயிர்களைக் கொன்று தின்னாது வாழும் பிராமணர்கள் எப்படி புனுகு கலந்து கோயிலில் அபிசேகம் செய்கிறார்கள்? கோயில்களின் குடமுழுக்கு வேளையில் இவற்றின் தேவை மிகவும் கூடுவது ஏன்? அதுவும் திருப்பதியானின் மேனி மினுமினுக்க புனுகு பூசுவது வேடிக்கையாக இல்லையா? கோயிலின் கருவறையினுள் புனுகு எப்படி நுழைந்தது? விடை தெரியுமா? 
இனிதே,
தமிழரசி.

Sunday, 12 May 2013

பல்லாங்குழி ஆடுவோமே!!















கூடுவோமே கூடுவோமே தினம்
குழந்தைகள் ஒன்றாய் கூடுவோமே!
பாடுவோமே பாடுவோமே உயர்
பைந்தமிழ் பாவினைப் பாடுவோமே!
தேடுவோமே தேடுவோமே எம் 
தேயத்தின் பழமையை தேடுவோமே! 
ஆடுவோமே ஆடுவோமே சுழன் 
றாடுவோமே பல்லாங்குழி ஆடுவோமே!
                                               - சிட்டு எழுதும் சீட்டு 60

Saturday, 11 May 2013

ஆசைக்கவிதைகள் - 63

தலைசாய்க்கும் தாமரையே!
















தாமரை மொட்டாட்டம்
          தலைசாய்க்கும் தாமரையே!
தாமரை மலரடிக்கு
          தங்கக்கொலுசு நாதரவோ!

தாமரையடி நோகுமென்னு
          தாங்கிவர நானிருக்கேன்
பூமகளே! புவனமே!
         புன்னகையைக் காட்டாயோ!
                                                           -  நாட்டுப்பாடல் (வள்ளியூர்)
                                                            பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

Friday, 10 May 2013

குறள் அமுது - (64)


குறள்:
“யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”                   - 127

பொருள்:
எவற்றைக் காக்காவிட்டாலும், நாக்கை காத்துக் கொள்ளவேண்டும். அப்படி காக்கத் தவறினால் சொல்லிழுக்காகிய வசைக்கு உட்பட்டு சிறைப்படுவர்.

விளக்கம்:
பாதுகாக்கப்பட வேண்டியனவற்றுள் எவற்றைப் பாதுகாக்கத் தவறினாலும் நாக்கை அடக்கிக் காக்க வேண்டும். கோபத்தை அடக்கிக் காக்க முடியாவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.  நாவை அடக்கிக் காக்காது, சொல்லத் தகாத சொற்களால் எடுத்தெறிந்து பேசுவதால், அச்சொற்கள் கேட்போர் மனதைப் புண்ணாக்கி, கடும் கோபத்தை உண்டாக்கும். இப்படி நாவை அடக்காது ஒருவர் மாறி ஒருவர் தர்க்கப்படுவதால் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படும். அது உயிர் இழப்பையும் கூட உருவாக்கலாம்.

விளையாட்டாகப் பேசியது வினையாக முடிவதும் உண்டு. அடங்காக் கோபம் பல கேடுகளை உண்டாக்கி சிறைக் காவலில் இருக்கவைக்கும். சிறைக்காவலையே ‘சோகாப்பர்’ எனத்  திருவள்ளுவர் குறிக்கிறார்.  ‘சோ’ என்பது ஒருவகை காவல் அரண் ஆகும். 

தப்பிப் போக முடியாத பலவகைப் பொறிகளோடு செம்பால் செய்யப்பட்ட அரண், சோஅரண் எனப்படும். சோஅரணை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்
“...........................தம்பியொடும் கான்போந்து
சோஅரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே”
என்கிறார்.  சோஅரண் இராவணனின் இலங்கையிலும், வாணன் ஆண்ட சோணிதபுரதிலும் இருந்ததை இலக்கியங்கள் சொல்கின்றன.

மனிதருக்கு நாவடக்கமே மிகவும் வேண்டியது. நாவை அடக்குங்கள் இல்லையேல் பழிச் சொல்லுக்கு உள்ளாகி சிறைக்காவலில் இருக்க நேரிடும் என இக்குறள் கூறுகிறது.  

Thursday, 9 May 2013

ஔவையாரும் அதியமான் நெடுமான் அஞ்சியும்

Photo: source Tamil Wikipedia


‘ஔவைக் கிழவி நம் கிழவி அமிழ்தின் இனிய சொற்கிழவி’ என சிறுவயதில் படித்தது பலருக்கு ஞாபகம் இருக்கும். அந்த ஔவைக் கிழவி யார்? எப்போது வாழ்ந்தார்? என்பவற்றை ஆராய்ந்து பார்த்தால் ஔவையார் என்ற பெயருடன் பலர் சங்ககாலம் தொடக்கம் வாழ்ந்ததை அறியலாம். நம் தமிழ் முன்னோர்கள் பெண்களில் மூதறிஞர்களை ஔவையார் என அழைத்தனர் போலும். இதனை தமிழ் இலக்கிய வரலாறு எமக்குக் காட்டுகிறது. அவர்களில் சங்க கால ஔவையாரை இங்கு பார்ப்போம்.

அதியமான் நெடுமான் அஞ்சி சங்ககால அரசர்களில் ஒருவன். அவனது அன்பைப் பெற்ற சங்ககால ஔவையார் அரசர்களும் புலவர்களும் போற்ற பெருமதிப்புடன் வாழ்ந்தவர். சங்ககால ஔவையாரின் வாழ்க்கை வரலாற்றை சுவைத்தே பாரதியார்
“நிமிர்ந்த நன்நடை நேர்கொண்ட பார்வையும்
          நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
          செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்”         
                                               -(பாரதியார் பாடல்)
என புதுமைப் பெண்ணை படைத்திருப்பார் என எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் பாரதி கூறிய அத்தனை இயல்புகளூம் இரண்டாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன் வழ்ந்த சங்ககால ஔவையாரிடம் அதிகமாகவே இருந்திருக்கின்றன.

அதிகமான் நெடுமான் அஞ்சியும் ஔவையாரின் தமிழ்ப்புலமைக்காகவும், எவருக்கும் தலைவணங்காத அவரது இயல்புக்காகவும் அவர் மேல் மதிப்பும் பற்றும் வைத்திருந்தான். ஒருநாள் அதியமானின் அரண்மனைக்கு வந்த ஒருவர் அதிசய நெல்லிக்கனி ஒன்றை அவனிடம் கொடுத்தார். அந்நெல்லிக் கனியை உண்பவர் நீண்டநாள் சுகமாக வாழலாம் என்பதை அதியமான் அறிந்தான். அக்கனியை ஔவையாருக்குக் கொடுத்தான். அதியமான் நெல்லிக்கனியை ஔவையாருக்குக் கொடுத்ததை சிறுபாணாற்றுப்படையில்
“........................... ....... மால் வரை
கமழ் பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த
உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்
அரவக் கடல் தானை அதிகனும் .............”           
                                            - (சிறுபாணாற்றுப்படை: 99 - 103)
நல்லூர் நத்தத்தனார் கூறியுள்ளார். 

அதிகமான் நெடுமான் அஞ்சி தான் வாழ்வதைவிட ஔவையார் வாழ்ந்தால் தமிழ் வாழும் என நினைத்தான். ஆதலால் ஔவையாரும் தனக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமானை சிவபெருமான் போல இவ்வுலகில் நிலைத்து வாழ வாழ்த்தியுள்ளார். 
“வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார்
களம்படக் கடந்தகழல் தொடி தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க, எமக்கு ஈந்தனையே”                
                                              - (புறம்: 91)
‘வெற்றிவாளை ஏந்தி, பகைவரின் பல போர்க்களங்களை கடந்த கால்களையும், தொடியணிந்த கையில்  நுரைக்கும் தேனுமுடைய அதியர் கோமானே! வெற்றிச் செவத்தையும் பொன்மாலையையும் உடைய அஞ்சியே! பழமை வாய்ந்த பெரிய மலையின் பிளவினுள் அரிதாக வளர்ந்த சிறிய இலையுள்ள நெல்லியின் இனிய கனியை, அதன் அருமையை எனக்கு சொல்லாது உன் மனத்துள் வைத்துக் கொண்டு, சாகாது இருக்க எனக்கு தந்தாய். ஆதலால், நீலமணி போன்ற கழுத்தை உடைய சிவன் போல நிலைபெற்று நீ வாழ்வாயாக! என வாழ்த்தியுள்ளார்

அப்படி அதியமானின் அன்பையும் பெருமதிப்பையும் பெற்ற ஔவையார் ஒருமுறை அவனைப் பார்த்து பரிசில் பெற சென்றிருந்தார். ஏதோ காரணத்தால் அவன் ஔவையாரை அழைக்க காலதாமதம் ஏற்பட்டது. அதனால் ஔவையார் கோபத்துடன் ‘வாயிற்காவலனே! வாயிற்காவலனே! வள்ளல்களின் செவிகளில் செறிவு நிறைந்த தமிழ் மொழியை விதைத்து, தாம் நினைத்ததை முடிக்கும் உறுதியான நெஞ்சுடன், பாராட்டினைப் பெறுவதற்காக துன்பத்துகுள்ளாகி, பரிசு பெற்று வாழ்கின்ற பரிசிலர்க்கு (புலவோர்க்கு - கலைவல்லார்க்கு) கதவை மூடாத வாயிற்காவலனே! கடுஞ்சிங்கம் போலத் தோற்றம் அளிக்கும் நெடுமான் அஞ்சி, தன் தகுதியை அறிய மாட்டானோ? அல்லது என் தகுதியும் அறிய மாட்டானோ?

அறிவும் புகழும் உடையவர் பசியால் இறந்தார் என்று சொல்லக்கூடிய வறுமையில் இந்த உலகம் இல்லை. அதனால் எங்கள் இசைக்கருவிகளை கலப்பையினுள் (கலைப்பை) போட்டு சுருக்கிக் கொண்டோம் மரம்வெட்டும் தச்சனின் கைத்தொழிலை அறிந்த சிறுவர்கள் கோடாலியுடன் காட்டினுள்  சென்றால் வெட்ட மரம் கிடைக்காது போகுமா? எந்தத் திசையில் சென்றாலும் அந்தத் திசையில் சோறு கிடைக்கும்’ என்று சொல்லிய புறநாநூற்றுப் பாடலின் முழுவதையும் பார்ப்போம்.
“வாயிலோயேஎ! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழ்இ வித்தித் தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறியலன் கொல் என்அறியலன் கொல்
அறிவும் புகழும் உடையவர் மாய்ந்தென
வறுந்தலை உலகம் அன்றே; அதனால்
காவினம் கலனே சுருக்கினம் கலப்பை
மரங்கொல் தச்சன் கைவல் சிறார்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”                   
                                                        -(புறம்: 206)

ஔவையாருக்கு அதியமான் மேல் கோபம் ஏற்படக் காரணம் என்ன? ஔவையாரின் தகுதியை நன்கு அறிந்தவன் அதியமான். அதனாலேயே அவன் ஔவையாருக்கு நீண்டநாள் சுகமாக வாழவைக்கும் நெல்லிக்கனியைக் கொடுத்தான். அப்படிப்பட்டவன் ஔவையார் வந்தது அறிந்தும் காலதாமதம் செய்ததாலேயே அவருக்கு அவன் மேல் கோபம் ஏற்பட்டது. அந்தக் கோபத்தை இப்பாடலின் 
“கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி!
தன்அறியலன் கொல்? என்அறியலன் கொல்?
அறிவும் புகழும் உடையவர் மாய்ந்தென
வறுந்தலை உலகம் அன்றே; அதனால்
காவினம் கலனே! சுருக்கினம் கலப்பை!”
என்னும் வரிகள் எடுத்துச் சொல்கின்றன.

ஔவையாரின் அறிவுச் செருக்கை “அறிவும் புகழும் உடையவர் பசியால் இறந்தார் என்று சொல்லக்கூடிய வறுமையில் இந்த உலகம் இல்லை. அதனால் எங்கள் இசைக்கருவிகளை கலைப்பையினுள் போட்டு சுருக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டோம்” எனச் சொன்னவை காட்ட யாருக்கும் அஞ்சாத அவரது இயல்பை
“மரங்கொல் தச்சன் கைவல் சிறார்
மழுவுடைக் காட்டகத்து அற்றே!
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே!”
என்னும் தொடர்கள் காட்டுகின்றன அல்லவா?

எனினும் அதியமான் நெடுமான் அஞ்சி இறந்த பொழுது ஔவையார் பாடிய பாடல்கள் நெஞ்சை உருக்குபவை. அதியமானின் புகழ் இன்றும் இருப்பதற்கு ஔவையாரின் பாடல்களே காரணம்.

அதியமான் பெயர் பொறித்த முத்திரை மோதிரம்

அதியமான் வாழ்ந்த காலம் கி மு முதலாம் நூற்றாண்டிற்கு முந்தியது என அதியமானின் பெயர் பொறித்த முத்திரை மோதிரம் ஒன்றால் தெரியவருகின்றது. டாக்டர் இரா கிருஷ்ணமூர்த்தி (தினமலர் ஆசிரியர்) தாம் எழுதிய ‘சங்ககாலம் என்பது எப்போது? என்ற கட்டுரையில் கரூரில் அதியமானின் முத்திரை மோதிரத்தை தான் வாங்கியதாகவும், அம்மோதிரத்தில் தமிழ்ப் பிரமி எழுத்தில் அதியமான் என எழுதப்பட்டிருந்தை தொல் எழுத்தறிஞர் கே ஜி கிருஷ்ணன் படித்து சொன்னார் என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்த முத்திரை மோதிரத்தின் படத்தை மேலே படத்தில் காணலாம். எனவே சங்ககால ஔவையார் கி மு முதலாம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்திருக்க வேண்டும்.
இனிதே,
தமிழரசி.

Wednesday, 8 May 2013

அடிசில் 54


பாகற்காய் சம்பல்
                                          - நீரா
























தேவையான பொருட்கள்:
துருவிய பாகற்காய்  -  3 கப்
சின்ன வெங்காயம்  -  5
பச்சை மிளகாய்  -  2  
தக்காளிப்பழம்  -  1
தேங்காய்ப் பூ  -  1 மேசைக்கரண்டி
தூளாக்கிய மாசி  -  2 தேக்கரண்டி
எலுமிச்சம் சாறு  -  தேவையான அளவு 
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
1.  பாகற்காயைக் கழுவி, இரண்டாகப் பிளந்து விதைகளை நீக்கி துருவியில் துருவிக்கொள்க.
2.  துருவிய பாகற்காயை உப்புப்போட்டு பிசைந்து 15 நிமிடம் வைத்து, பிழிந்து எடுத்துக் கொள்க.
3.  சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளிப்பழம், கறிவேப்பிலை நான்கையும் குறுணலாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போடவும்.
4.  அதற்குள் பிழிந்து வைத்திருக்கும் பாகற்காய்த் துருவலுடன் தேங்காய்ப்பூ, மாசிப்பொடி, எழுமிச்சம் சாறு, உப்பு சேர்த்து கலந்து எடுக்கவும்.