Sunday 12 March 2017

பாவற்குளத்தில் பண்டிதர் ஆறுமுகன் ஐயா

       12/03/1914                 12/03/2014         

எழுதியவர்
திரு. பரமேஸ்வரன் நாராயணபிள்ளை, 
வவுனியா


ஈழத்திரு நாட்டில் வடக்கில் உள்ள வவுனியா மாநகரில் மேற்குத் திசை நோக்கி ஒன்பது மைலுக்கு அப்பால் அமைந்துள்ளது, பாவற்குளம் என்ற அழகிய கிராமம். ஒரு பக்கம் மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலமாகவும் ஒரு பக்கம் வயலும் வயல் சார்ந்த மருத நிலமாகவும் ஒரு பக்கம் காடும் காடுசார்ந்த முல்லை நிலத்தோடு மிகப்பெரிய வாவியும் ஒரு பக்கம் குடியேற்றத் திட்டங்கள் அமைந்த நிறைந்த வீடுகளையும் கொண்டு இயற்கை அன்னை மகிழ்ந்து இருக்கும் அழகிய கிராமம் பாவற்குளம்.

அந்நாளில் அங்கிருந்த குளத்தருகே நிறைய குருவித்தலை பாகற்காய்ச் கொடி [Momordica balasamina] படர்ந்து வளர்ந்து இருந்த படியால்  அக்கிராமம்  பாகற்குளம் என அழைக்கப்பட்டது என்பர். பாகற்குளம் என்ற பெயர் மருவி இப்போது பாவற்குளம் என அழைக்கின்றோம் என நினைக்கின்றேன்.

நான் இந்தக் கிராமத்துக்கு வரும்போது எனக்கு ஒரு வயது. அப்போது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பிறந்த இடத்தைவிட்டு இங்கு குடியேற்றப்பட்டோம். பெற்றோர் சகோதரங்களுடன் எனது வாழ்க்கை இங்கு ஆரம்பமானது. எமது வீட்டுக்கு முன் ஒரு காணித்துண்டு காடாக இருந்தது. அது பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்று எனது தந்தையார் கூறினார். 

அந்தக் காலத்தில் அக்கிராமத்தில் பாடசாலை இல்லை. கல்வி கற்போர் மிகக்குறைவு. படிப்பவர் கூட தொலைதூரம் சென்றுதான் படித்து வந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் 1959 என நினைக்கின்றேன் வெள்ளை நசனல் [national] உடையில் ஒருவர் வந்தார். உயர்ந்த மெலிந்த அழகான திடமான உடல், நேரான பார்வை, சாந்தமான முகம், அழகான தமிழ் உச்சரிப்புடைய பேச்சு, தன்னை ஒரு ஆசிரியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இந்தக் கிராமத்தில் பாடசாலை ஆரம்பிக்கப் போவதாகக் கூறி அதற்குரிய வேலையும் செய்ய ஆரம்பித்தர்.

மிகக் குறுகிய காலத்தில் ஒரு சிறிய பாடசாலை கிடுகினால் வேயப்பட்டு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. தானாகச் சென்று வீடு வீடாக மாணவர்களைச் சேர்த்து முடிந்தவரை கல்வி புகட்டினார். இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது, அப்போது அங்கு படித்த மாணவர்கள் சிலர் வேட்டியுடனும், சாரம் அணிந்தும், பெண் பிள்ளைகள் சேலையும் பாவாடைத் தாவணியுடனும் வந்து படித்திருக்கிறார்கள்.

நானும் அப்பாடசாலையில் அரி வரி எனச் சொல்லப்படுகின்ற பாலர் வகுப்பில் கல்வி கற்றேன். சிறிது காலம் செல்ல அப்பாடசாலைக்கு அரசாங்கத்தினால் சிறந்த கட்டிடம் கட்டப்பட்டு பாவற்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடாசாலை எனப் பெயர் சூட்டப்பட்டது. இந்தியாவில் இருந்து கவிஞர் சுத்தானந்த பாரதியாரை அழைத்து திறப்புவிழாச் செய்து, நிறைய மாணவர்களுடனும் பல ஆசிரியர்களுடனும் திறம்பட நடாத்தினார்.

பாடசாலைக் கல்விமட்டும் அல்லாது விளையாட்டிலும் ஊக்கம் கொடுத்து மாணவர்களை விளையாட்டுக்குத் தயார்படுத்தி முதன்முதல் வவுனியா மாவட்டப் பாடசாலைகளுக்கான போட்டியில் பங்கு பெறவைத்து பல பரிசுகளையும் பெறக் காரணமாக இருந்தார். அன்றைய நாள் இன்றும் ஞாபகம் இருக்கின்றது. அன்று பாடசாலைக் கொடியை ஏந்தி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர்மக்கள் எல்லோரும் சேர்ந்து பாவற்குளத்திற்கு ஜேய்! புண்ணிய குளத்திற்கு ஜேய்! என்று கோசம் போட்டு, அந்தக் கிராமத்தை வலம் வந்தது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது.

பாடசாலை விடயங்கள் மட்டுமல்லாது ஊரிலுள்ள பொது விடயங்களிலும் முன்னின்று நடாத்தி நன்மதிப்பைப் பெற்ற சேவையாளராகப் பணிபுரிந்தார். கல்வித்திணைக்கழகம் அவரை அதிபராய் பாவற்குளம் 2ம் யூனிற் பாடசாலைக்கு மாற்றலாகிச் செல்லப் பணிக்க வேண்டிய கடிதத்தில், தவறுதலாக பாவற்குளம் 1ம் யூனிற் முகவரியை இட்டதால் அவர் எங்கள் கிராமத்துக்கு வந்தார். அங்கே பாடசாலை இல்லாது - அக்கிராமப் பிள்ளைகள் கல்வி கற்க முடியாதிருப்பதைக் கண்டு, பாடசாலையை உருவாக்கினார். இப்படிப்பட்ட பண்டிதர் ஆசிரியர் திரு ஆறுமுகன் ஐயா அவர்கள் பல காலமாக அரச ஊழியம் எதுவும் பெறாமல் அப்படிபட்ட அரிய பெரிய சேவைகளை ஆற்றியதை நான் பின்பு தான் அறிந்து கொண்டேன்.

அவர்களுடன் சேர்ந்து அவரின் துணைவியார், மகள் ஆகியோரும் சகல சேவைகளிலும் பங்குபற்றியுள்ளார்கள். அதன் பின் அவர்கள் பணி மாற்றலாகி வேறு இடம் சென்றுவிட்டார். பின் நாளில் அப்பாடசாலை பாவற்குளம் தமிழ் மகாவித்தியாலயம் எனத் தரம் உயர்த்தப்பட்டு 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடனும் G C E சாதாரண தர [கா பொ த] வகுப்பு வரையும் இருந்தது. ஆனால் அப்பாடசாலை இன்று நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆசிரியர்களுடனும் 13 மாணவர்களுடனும் 5ம் வகுப்புவரை நடைபெற்றுக் கொண்டு இருப்பதை அறியும் போது என் மனம் வேதனைப்படுகின்றது.

புங்குடுதீவில் பிறந்து, அங்கேயே வளர்ந்து, யாழ்ப்பாணத்தில் படித்துத் தொழிலுக்காக மாற்றலாகி தற்செயலாகப் பாவற்குளக் கிராமத்திற்கு வந்த பண்டிதர் திரு ஆறுமுகன் ஐயா அவர்களால் கல்வியிலே பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடிந்தது. ஆனால் அந்த பாடசாலையில் படித்த எத்தனையோ மாணவர்கள், புத்திஜீவிகள், உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள். நாம் படித்த இந்தப் பாடசாலைக்கும், நாம் பிறந்த இக்கிராமத்துக்கும் நாம் என்ன செய்யப்போகிறோம்? என்ற கேள்வியை பண்டிதர் ஆறுமுகன் ஐயாஅவர்கள் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அவர் இன்று எம்மோடு இல்லவிட்டாலும் அவர் செய்த அரும் பெரும் சேவைகளையும் நற்பண்புகளையும் நாம் என்றும் நன்றியுடன் நினைவில் கொள்வோம். அவருடைய புகழும் பெருமையும் என்றும் பாவற்குளத்தில் நிலைத்திருக்கும்.

இறுதியாக இந்தக்கருத்துக்களை பண்டிதர் ஐயா அவர்களின் நூற்றாண்டு மலரில் வழங்க எனக்கு வாய்ப்பளித்த அவரது மகள் திருமதி தமிழரசி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1 comment:

  1. வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    ReplyDelete