Tuesday, 21 March 2017

பொன்கை நகர்

புங்குடுதீவு வெளிச்சவீடு
‘நாடாக இருக்கலாம். காடாக இருக்கலாம். மலையாக இருக்கலாம். பள்ளமாக இருக்கலாம். அந்தந்த இடத்தில் வாழும் ஆண்கள் எவ்வளவுக்கெவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு நீயும் நல்லை. வாழ்வாயாக! நிலமகளே!’ என மக்கள் வாழும் நானிலத்தை விழித்துப்பாடினார் ஔவையார். நீங்களும் அதனை ஒருமுறை பாருங்கள்.
“நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”
                                                       - (புறம்: 187)
இச்செய்யுட் கருத்தை அடியிட்டு நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள். அன்னாரின் செயற்கருஞ் செயல்களைப் பாராட்டிய நண்பர்களும் பெரியோர்களும் நமது தாயகத்திற்கு அன்புடன் இட்ட பெயர் தான் பொன்கை நகர். எல்லா நல்ல கருமங்களுக்கும் முன்னின்று உடல் பொருள் ஆவி அனைத்தினாலும் தொண்டுபுரியும் பெருங்குணம் படைத்த உத்தமர் வாழும் நற்பதியை நல்லோர் நற்பெயரால் அழைப்பது இயல்பு தானே. “பெருமையும் சிறுமையும் தான் தர வருமே” என்பது அநுபவமொழி அல்லவா!

வல்லிபுரக் கோயிலை அடுத்துள்ள பகுதியிற் புதைபொருள் ஆராச்சியின் பொழுது கிடைத்த ஒரு சாசனத்தில் கி மு 300 வரையில் புங்குடுதீவு மக்கள் சிறப்புடன் வாழ்ந்தமை பொறிக்கப்பட்டுள்ளது. கி மு 300ல் பாலிநகர்ச் சிவாலயம் சிறப்புடன் விளங்கியதாகவும் பாலியாற்றை மறித்து அதற்கு அணி செய்வதற்கான வாவி கட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை இலங்கை அரசாங்கத்தின் கமத்தொழில் திணைக்களம் வெளியிட்ட “கமத்தொழில் பண்டைக்கால நிலை” தொகுப்பு 2ல் காணலாம். 
 பாலிநகர் காலத்தில் இருந்த சிவலிங்கம் [வவுனிக்குளம்]

பண்டைக்கால பாலி நகரே இன்று வவுனிக்குளம் என்று வழங்கப்படும் குடியேற்றத் திட்டமாகும். பாலி வாவியே தற்போது வவுனிக்குளம் என்று வழங்கப்படுகின்றது. வவுனிக்குளத்தை நிரப்பும் ஆறு இப்பொழுதும் பாலியாறு என்றே அழைக்கப்படுகின்றது. இன்றைக்கு 2,300 ஆண்டுகளுக்கு முன் வடபகுதியில் தமிழ்மக்கள் அரசோச்சிக் குடியமர்ந்து வாழ்ந்தமைக்குப் பொன்கை நகர் பற்றியும் பாலிநகர் சிவாலயம், பாலியாறு பற்றியும் பேசப்படும் ஏடுகள் சான்று பகர்கின்றன.

அன்றியும் அனுராதபுரியைத் தலைநகராக வைத்து ஈழம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண்ட எல்லாள மன்னன் காலத்தில் மருந்து மூலிகைகள் நிறைந்த பழம்பெரும்பதியாகப் பொங்கைநகர் இருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன. தொடும்தோறும் நன்னீர் சுரக்கும் இயற்கைவளமும், நெய்தலும் மருதமும் கலந்த நிலவளமுங் கூடிய ஊரதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வரகவி முத்துக்குமாருப் புலவர் 1815ம் ஆண்டளவில் நயினை நாகராசேஸ்வரி அம்பாளுக்குப் பத்தும் பதிகமும் பாடியவர். தமது தாயகத்தின் தென்பால் அமைந்த கண்ணகை அம்பாளுக்கும் பத்தும் பதிகமும் பாடினார். அக்கவிதைகளின் இறுதி தோறும்
“கன்னலொடு செந்நெல்விளை பொங்கை நகர்
தன்னிலுறை கண்ணகைப் பெண்ணரசியே”
என வாழ்த்திப் பாடியுள்ளார்.

கண்ணகை அம்பாள் கோயிலின் தென்மாக்கடலில் மேற்புறமாக ஒளிரும் நீலக்கடற் பிரதேசம் நம் முன்னோரால் ‘குளத்துவான்’ எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டது. இது பண்டைக் காலத்தில் ஒரு துறைமுகமாக விளங்கியிருந்தது. இந்தியர், அரேபியர் முதலான பிற நாட்டினர் ஈழத்துக்கு இத்துறைமுகம் மூலம் வந்து போயினர். ஊர்காவற்றுறையில் ஒரு காலம் நங்கூரமிட்டு ஒதுங்கிய மரக்கலங்களை வடகீழ்ப் பருவக் காற்றுக் காலத்தில் எம் தாயகத்துத் தென்மாக் கடற் ‘குளத்து  வானில்’ நங்கூரமிட்டனர்.

நடுவுத்துருத்தி, குறிகாட்டுவான், புளியடித்துறை, களுதைப்பிட்டி இவைகளும் பண்டைய இயற்கைத் துறைமுகங்களாக அமைந்திருந்தன. அக்காலத்தில் வடமேற்குப் புறமாக எமது தாயகத்தின் வாயில்கள் இருந்தன. மக்கள் தமது தேவைகளை இந்திய வர்த்தக மூலம் அனுபவித்தனர்.

சேதுக்கரை -> கச்சதீவு -> நெடுனைநகர் -> இவற்றைத் தொட்டு குளத்துவானுக்கு வந்த மரக்கலங்கள் மண்டைதீவின் கிழக்குப்புறமாக அலுப்பாந்தி -> கொழும்புத்துறை -> இவற்றைத் தொட்டுக் கொண்டு பூநகரித்துறையில் நங்கூரமிட்டன. இந்தக் கடற்பாதை சேதுக்கரையில் இருந்து பூநகரி வரும் வரையிலும் பூநகரியில் இருந்து சேதுக்கரை செல்லும் வரையிலும் இருக்கும் ஒவ்வோர் இடங்களையும் வெறுங்கண்ணாற் பார்க்கக்கூடியதாகவும் போக்கு வரவு செய்யும் பண்டைய மக்களுக்குப் பாதுகாப்பு உள்ளதாகவும் இருந்தது. இந்தியாவின் கொடுங்கோலாட்சி நடந்த போதும் ஈழத்தில் அத்தகைய ஆட்சி நடந்த போதும் இருபகுதி மக்களும் அவ்வப்போது பாதுகாப்பான இடங்களுக்குக் குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தனர்.
நாச்சார் வீட்டில் மழைபொழியும் நேரம்

போத்துக்கீசர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் பெருங்கொடுங்கோல் தாண்டவமாடியது. எந்த வழியிலும் மக்களுக்கு அரசு உதவவில்லை. தமது பொருளாரதத்திலேயே மக்கள் வாழவேண்டியிருந்தது. அதுவொரு சர்வோதய வாழ்வாக அமைந்திருந்தது. அன்னியருடைய ஆட்சிக்காலத்தில் அவர்களின் பிடியில் இருந்து கன்னியர்களையும் பெண்களையும் பாதுகாக்க வேண்டிய அவலநிலை தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருந்தது. அதனால் தீவகங்களில் நால்சார் வீடுகளமைத்து வீட்டினுள் முற்றத்திலே வடகீழ்ப்புறமாகக் கிணறுகளும் தோண்டி உள்ளறைகளிலும் உள் விறாந்தைகளிலும் பெண்களும் உணவுக் களஞ்சியமும் இருக்க வீட்டின் புறச்சுற்றாடலில் வீட்டுக்காரரும் ஏவலாளராகிய ஆண்களும் வாழ்ந்தனர். புறனோக்காக ஆராய்ந்தால் ஒவ்வொரு நாற்சார் வீடுகளும் ஒவ்வொரு குறுநில மன்னரின் கோட்டைகள் போல் இருந்தன. இவ்விதமான வீடுகளை இன்றும் தீவகங்களிற் காணலாம்.

இலங்கையின் சுதந்திரத்திற்காகக் கடைசிவரைப் போராடிய கடைசிக் கண்டியரசன் ராஜசிம்மன் ஆங்கிலேயருடன் கடுஞ்சமர் செய்தான். அவனது சுதேசியப்படையின் ஒரு பிரிவுக்குத் தலைமை வகித்தவர் பொன்கை நகரில் வீராமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மன்னனும் படைகளும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதப்படைகளுடைய படைக்கு எதிர்நிற்க முடியாத நிலையில் ராஜசிங்கன் தனது வீரர்களை ஆயுதங்களுடன் தத்தம் வதிவிடங்களுக்குச் செல்லுமாறு உத்தரவிட்டான். அதனையேற்றுத் தனது துப்பாகியுடன் பிறந்தகம் வந்தவரை மக்கள் ‘துப்பாக்கியர்’ என அன்புடன் அழைத்தனர். அவர் நயினை நகரில் தமது மனைவியை மணந்துகொண்டு அங்கேயே வாழ்வு நடாதினார். அன்னாரின் வழிவந்தவரே இன்றைய மகான்களுக்கும் மகானாகவும் அளப்பரிய சோதிடராகவும் ஆத்மஜோதி ஆங்கில இதழ் ஆசிரியராகவும் ஆத்ம ஞானியாகவும் விளங்கிய பெரியார் க இராமச்சந்திரர் அவர்களாவார். அவரின் அரிய புத்திரர்களில் ஒருவரும் தென்கிழக்காசியாவிலேயே திறமை மிக்க கண்வைத்தியரெனப் பெயர் பெற்றவர் டாக்டர் பரராஜசிங்கம். இலங்கையின் உதவிப் பொலிஸ்மா அதிபராகக இருக்கும் திரு சுந்தரலிங்கமும் அவரின் புதல்வரே.

தனித்தமிழ் கைவந்தயோகி மறைமலை அடிகளாரின் தாயாரும், தவத்திரு யோகர்சுவாமிகளின் தந்தையாரும் பொன்கை நகர் ஈன்ற புனிதர்களே. இந்நகர நங்கையர் தாம் மணந்து கொண்ட நம்பியருடன் தாயகம் துறந்து ஈழத்தின் தென்பகுதியிலும், இந்தியா, மலேயா முதலிய இடங்களிலும் மேல்நாடுகளிலும் கூடச் சென்று சிறப்புடன் வாழ்கின்றனர். சென்ற இடமெல்லாம் தமிழ்ப்பண்பும் சமயாசாரமும் பொங்கிவழியும் குணசீலர்களாகவும் தமது மக்களைக் கலாச்சார சீலர்களாக வளர்க்கும் நன் நோக்குடையரவர்களாகவும் விளங்குகுன்றனர். வாழ்க தமிழ்! வளர்க பொன்கை நகர்!!
இனிதே,
தமிழரசி.

குறிப்பு: இவ்வாக்கத்தை திரு சதாசிவம் சேவியர் அவர்கள் வெளியிட்ட ‘சப்ததீவுகள்’ நூலுக்காக 1978ல் எழுதினேன். அந்நூல் 1979ல் வெளிவந்தது.

No comments:

Post a Comment