Monday 6 March 2017

குறள் அமுது - (131)


குறள்:
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை
யாண்டும் அஃதுஒப்பது இல்                              - 0363

பொருள்:
எப்பொருளின் மேலும் ஆசை வைக்காமல் வாழ்வது போலச் சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை. எங்கும் அதற்கு ஒப்பானது ஏதும் இல்லை.

விளக்கம்:
அவா அறுத்தல் எனும் அதிகாரத்தில் வரும் மூன்றாவது திருக்குறள் இது. அவா என்றால் ஆசை. நாம் மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு ஆசையே காரணமாகும். உலகப் பொருள்களின் மேல் ஏற்படும் ஆசையை அறுத்துவிடுதல் ‘அவா அறுத்தலாகும்’. எப்பொருளையும் விரும்பாத தன்மை வேண்டாமையாகும். இன்னொருவகையில் சொல்வதானால் வேண்டாமை என்பது அவா அற்றநிலையே. வேண்டாமை என்னும் வீடுபேறு அடையும் நிலையை அவா அற்ற நிலையின் முதிர்ந்த நிலை எனலாம்.  இதனையே பிறவாமை என்கிறோம்.

எப்போ மனிதருக்கு அவா அற்றநிலை வரும். பால் வேண்டும் என அடம்பிடித்து அழுத குழந்தை பாலகன் ஆனதும் அந்த விளையாட்டுப் பொருள் வேண்டும் இந்த இனிப்பு வேண்டும் என்று ஆசையோடு ஏங்கி ஏங்கி அழும். அந்தப்பாலகனே சிறுவனானதும் வேறு வேறு பொருட்களை விரும்பிக் கேட்பான். பருவவயதில் காதல் எனும் வலையில் சிக்கித் தவிப்பான். கல்வி, தொழில், பொருள், வீடு, மனைவி, மக்கள் சுற்றம் என அவனின்  ஆசைகளின் வட்டம் பெருகிப் பெருகிச் செல்லும். 

பாலுக்கு அழுத குழந்தை பருவவயதில் பால் கேட்டு அடம்பிடிப்பதில்லை. அந்த அவா அவனை விட்டு அறுந்து போய்விடும். வயது முதிர, அறிவும் ஆற்றலும் முதிர அறியாமை எனும் இருள் அகல எம்மைப் பிடித்த ஆசை வட்டங்கள் ஒவ்வொன்றாக அறுந்து போகும். அதாவது தாம் முழுமையாக அநுபவித்ததை மீண்டும் அநுபவிக்க ஆசைப்படாமல் ஒதுக்க ஒதுக்க வேண்டாமை என்னும் விழுச்செல்வத்தை அடையலாம்.

உலகப் பொருட்களின் மேல் வைத்த ஆசையை அகற்றிவிட எல்லோராலும் முடியாது. ஒரு சிலரால் மட்டுமே பொருள் இருந்த போதும் பொருளை இழந்த பொழுதும் இயல்பாக வாழமுடியும். அதற்கான ஆற்றலை அவர்கள் பிறவி தோறும் பெற்றிருப்பர். ஆனால் நிலையற்ற செல்வத்தின் மேல் பற்று வைத்து உழன்று சாமியாடித் திரிவோருக்கு அந்த ஆற்றல் புரியாது. அந்த ஆற்றலே வேண்டாமை என்னும் மிகச்சிறந்த செல்வத்தை எமக்குத்தரும். அந்தச் செல்வத்திற்கு ஒப்பான செல்வம் வேறு ஏதும் இவ்வுலகில் கிடையாது.

No comments:

Post a Comment