Friday 6 May 2016

பூவரசமரமும் புங்குடுதீவும்

புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் மரம்[காவல்மரம்]
(இப்படத்தை அனுப்பிய நல்ல உள்ளத்திற்கு என் வாழ்த்து)

வான்புகழ் கொண்ட புங்குடுதீவின் புகழில் பெரும்பங்கு அங்கு வளர்ந்த மரங்களைச் சேரும். ஒவ்வொரு இன மரமும் ஒவ்வொரு வகையில் புங்குடுதீவின் பொருளாதார மேம்பாட்டிற்கு துணையாயின. அப்படி உதவிய மரத்தில் ஒன்று பூவரசு. புங்குடுதீவில் கோவிற்காடு என்று ஓர் இடம் இருந்தது. அதனை இப்போது வீராமலை என்கிறோம். அன்றைய கோவிற்காடு பூவரசமரக் காடாய் இருந்தை எத்தனை பேர் அறிவர்? இன்று ‘அங்கே எத்தனை பூவரசமரங்கள் இருக்கின்றன?’ Thespesia populnea என்பதே பூவரசமரத்தின் தாவரவியற் பெயராகும்.

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை என்றார் கம்பர். ‘நல்ல தண்ணீர் இல்லாமல் போனதது நதியின் குற்றம் அல்ல’ என்கிறார். நல்ல தண்ணீர் இல்லாது இருப்பதற்கு யார் காரணம்? நல்ல நீரை உலகிற்கு சுரந்து அளிப்பன பசுமை போத்திய காடுகள் அல்லவா! நம் முன்னோரை சும்மா எடை போட்டுவிட முடியாது. புங்குடுதீவில் மட்டும் எத்தனை விதமான காடுகள்? பெருங்காடு, கள்ளிக்காடு, குறிச்சிக்காடு, நாயத்தங்காடு, விளாத்திக்காடு, கோயிற்காடு, கண்டல்காடு, பருத்திக்காடு, மணற்காடு என அந்தச் சின்னத்தீவினுள் காத்து வைத்திருந்தனர். நாம் என்ன செய்தோம்? அத்தனை காட்டையும் அழித்து அவற்றை பெயரில் மட்டும் வைத்திருக்கிறோம். என்னே எமது தொலை நோக்கு!

பூவரசமரம் பன்னெடுங்காலமாக புங்குடுதீவுக்கு எழில் தரும் மரமாக விளங்குகிறது. ஒருகாலத்தில் புங்குடுதீவின் கடற்கரை மணலில் கால்பதித்து நடந்த போது கண்ணுக்கு இதமாக காட்சி அளித்தது பூவரசு. புங்குடுதீவைச் சூழவுள்ள கடற்கரை மேட்டில் அணிவகுத்து நின்று கடல் அலையே வா!’ ‘என்னைத்தாண்டி ஊருக்குள் புக உன்னால் முடியுமா? எனக் கேட்டபடி மிக ஒய்யாரமாய் நிற்குமே. அந்த அழகே தனியானது. பூவரசு என்ற பெயருக்கு ஏற்றாற்போல் பூத்துக் குழுங்குமே! அதுவும் மங்கலமான மஞ்சள் நிறத்தில் பூவைப் பூத்து உதிர்ந்து வீழமுன் செம்மையாய் மாறி உதிருமே. முதுமையில் மனிதர் செம்மை அடையவேண்டும் எனும் இரகசியத்தை தன் பூவைச் செம்மையாக்கிக் காட்டி எம்மை வழிநடுடத்துமே!  

கடந்த வருடம் நான் புங்குடுதீவு சென்ற போது அந்த கடற்கரையோர மரங்களைக் காணவில்லை. நூற்றுக்கணக்கான வருடம் வாழக்கூடிய பூவரச மரங்கள் எங்கே போயின? ஒரேயடியாக போர்க்காலச் சூழலே அதற்குக் காரணம் என்று கூறி தட்டிக் கழித்துவிட முடியாது. நயினாதீவுக்கு போவோர் வருவோரை வெய்யில் வாட்டி எடுக்கிறது. இப்போது சீமெந்துச்சாந்து பூசிய தரையும் கட்டாந்தரையுமாய் காட்சிதருகிறது கடற்கரை. கானல் நீரைத்தேடி ஓடும் மான் போல மக்கள் நிழல் தேடி ஓட வேண்டிய நிலை. இருக்கும் மரங்களுக்குக் கீழும் வாகனங்களை நிறுத்தி வைத்து சீட்டு ஆடுகிறார்கள். பச்சிளம் குழந்தைகள் வெய்யிலில் வதங்குவதும் அவர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை. ஏன் இந்த நிலை. பூவரச மரங்கள் எமக்கு என்ன கேடு செய்தன?

பணத்தைக் கொட்டித்தரும் மரங்களென நாம் நினைக்கும் தேக்கமரம், முதிரைமரம், தென்னைமரம் யாவும் பெரும் சூறாவளி அடித்தால் முறிந்து வீழும். வீழ்ந்தாலும் மீண்டும் வளராது. பூவரசமரம்  சரிந்து வீழ்ந்தாலும் சரிந்து கிடந்தபடியே தளிர்த்து நல்ல காற்றையும் நிழலையும் தரும். நீங்கள் பிடுங்கி எறிந்தாலும் வேர் நன்றாக இருப்பின் மீண்டும் அந்த இடத்தில் வளரும் ஆற்றல் பூவரசமரத்திற்கு உண்டு. அதனாலேயே சேர அரசர்கள் அதனைப் போற்றி வளர்த்தார்கள். அதன் பூமாலையைச் சூடிமகிழ்ந்தனர்.

கண்ணகிப் பெண்ணரசிக்கு எடுத்த சிலப்பதிகார விழாவால் புங்குதீவின் பெருமை இலங்கையில் மட்டுமல்ல இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளுக்கும் சென்று சேர்ந்தது. நம் முன்னோர் சிலப்பதிகார விழா தொடங்குவதற்கு முன்பு பூவரசமரத்தை வழுத்தியது தெரியுமா? அதனை ஏன் செய்தார்கள் என்பதாவது தெரியுமா? சிலப்பதிகார விழாவை நாம் செய்தோம் என்று மார்தட்டுவோர் எவராவது பூவரசமரத்தின் பெருமையை ஏன் புங்குடுதீவு மான்மியத்தில் எழுதி வைக்கவில்லை என்பது வியப்புக்குரியது ஒன்றே! விழா நடத்தியவர்கட்குத் தெரியாமலா இருக்கும்?

எனது தாய் எழுதிய ‘வஞ்சியவள் வெஞ்சினம்’ என்ற ஒரு நாடகத்தில் சேரன் செங்குட்டுவனாக நடித்தேன். அது சிறுவர்களுக்காக எழுதப்பட்ட கண்ணகியின் கதையைத் தழுவிய நாடகம். சேரன் செங்குட்டுவன் தன் வாளுக்கு வஞ்சி மாலையைச்  சூட்டி, வஞ்சிப்பூ மாலையை பனம்பூ மாலையுடன் தொடுத்து தன் கழுத்தில் சூடி, வஞ்சிப்பூவை தன்முடிமேல் அணிந்து கண்ணகிக்கு சிலை வடிக்க கல் கொண்டு வர இமயமலைக்குப் புறப்படும் காட்சி. அந்த வஞ்சிப்பூ என்ன பூ தெரியுமா? பூவரசம் பூவே! வஞ்சிப்பூ.

சங்கத் தமிழர் வஞ்சிமரம் என்று சொன்ன மரத்தையே இன்று நாம் பூவரசமரம் என்கின்றோம். சேரன் செங்குட்டுவனின் வஞ்சிமாநகர் எங்கனும் வஞ்சிமரங்கள் - பூவரசமரங்கள் நிறைந்தே நின்றன. அதனாலே சேர இளவலான இளங்கோ அடிகளும் வஞ்சியின் பெருமை பேச வஞ்சிக்காண்டத்தை சிலப்பதிகாரத்தில் வைத்து வஞ்சியின் புகழ் பாடினார். [சிலர் பூவரசமரத்தை குடசம் என்று கூற சிலர் புரசம் என்பர். குடசம் என்பது வெட்பாலை; புரசம் என்பது முள்முருக்கு]

‘சேரன் செங்குட்டுவன்
“பூவா வஞ்சிப் பொன்னகர்ப் புறத்து, என்
வாய்வாள் மலைந்த வஞ்சி சூடுதும்”           
                                                   - (சிலம்பு: 25: 148 - 149)
வஞ்சிமாநகரின் [பூவாவஞ்சி வஞ்சிமாநகர் பூக்காது] புறத்தே, என் வாளிற்கு பூவரசமாலை[வஞ்சிமாலை] சூட்டுவோம்’ என்கிறான், எனவும்

“புரைதீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன்”   
                                                    - (சிலம்பு: 26: 46)
குற்றமற்ற பூவரசம் பூமலையை பனம்பூமாலையுடன்[போந்தை] தொடுத்து அணிந்த சேரன் செங்குட்டுவன்

“பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி
வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக்கு அணிந்து”   
                                                    - (சிலம்பு: 26: 50 - 51)
வஞ்சி நகரில் பூத்த பூவரசம்பூவை[பூத்த வஞ்சி] தனது மணிமுடியில் அணிந்தான்’ எனவும் இளங்கோவடிகள் கூறியுள்ளார்.

சேரன் செங்குட்டுவன் போர் வெற்றிக்காக பூவரசமாலையைச் சூடிச்சென்று கனகவிசயரை வென்று, இமயமலையில் வெட்டிய கல்லை அவர்கள் தலையில் ஏற்றிவந்து கண்ணகிக்கு சிலை வடித்தான். இமயமலை வரை சென்று பகையரசரை வெற்றி கொண்ட சேரமாமன்னனின் மணிமுடிக்கு மேல் இருந்த பெருமை பூவரசம் பூவுக்கு உண்டு. 

ஹவாய் பூவரசமரம் - Hawaii Milo Tree

புங்குடுதீவில் கால்கொண்ட கண்ணகி அம்மனுக்கும் காவல் மரமாய் - கோயில் மரமாய் நிற்பதுவும் பூவரச மரமே. சேரனைக் கருத்திற் கொண்டே பூவரச மரத்தை வழுத்தி சிலப்பதிகார விழாவைத் தொடங்கினர். சேரனின் வஞ்சி நகரத்திற்கு எப்படி காவல் மரமாக பூவரசமரம் இருந்ததோ அப்படி புங்குடுதீவுக்கும் பூவரசமரம் காவல் மரமாக இருக்கும் என்று நம் முன்னோர் நம்பினர். ஹவாய்[Hawaii] நாட்டு  மக்கள் பூவரசு மரத்தை தமது உயிராய்க் காதலிக்கின்றனர். சேரன் செங்குட்டுவன் போல அதன் பூவைச் சூடிக்கொள்கின்றனர். அவர்களால் Milo என அழைக்கப்படும் பூவரசமரம் கடற்கரை ஓரங்களில் மிக செழிப்பாக வளர்ந்து நிற்கிறது.

சூளுக்குச் சென்று பிடித்து வந்த மீனை பூவரசம் சுள்ளி விறகை எரித்து சுட்டு உண்ணும் பழக்கம்  புங்குடுதீவு மக்களிடம் இன்றும் இருக்கிறது. அதுபோல் சங்ககால மக்களும் பூவரசம் விறகை எரித்து மீனைச் சுட்டு உண்டனர். சங்ககால பாண்மகள் ஒருத்தி தூண்டில் போட்டு மீன் பிடித்து பூவரசம்[வஞ்சி] விறகு கொண்டு சுட்ட வரால் மீனை, கள் குடித்த தந்தைக்குக் வாயினுள் ஊட்டுவதை
“நாண்கொள் நுண்கோலின் மீன் கொள் பாண்மகள்
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல்
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்” - (அகம்: 216: 1 - 4)
என ஐயூர் முடவனார் அகநானூற்றில் காட்டுகிறார்.

புங்குடுதீவைக் குறிக்கும் வல்லிபுரப் பொன்னேடு -  An inscription on gold plate found at Vallipuram, near Point Pedro, is dated in the reign of Vasabha (67-111) and records that Piyaguka Tisa built a vihara at Badakara (presumably, present Vallipuram), while the Minister, Isigiraya, was governor of Nakadiva (Nagadipa). Piyaguka, which is identical with Piyahgudipa or Puvangudiva where 12,000 monks are said to have resided, is modern Pungudutivu. (‘Journal of the CEYLON BRANCH OF THE ROYAL ASIATIC SOCIETY HISTORICAL TOPOGRAPHY OF ANCIENT AND MEDIEVAL CEYLON’ by C. W. NICHOLAS) கி பி இரண்டாம் நூற்றாண்டில் 12,000 பௌத்த பிக்குகள் [சிங்களவர்கள் அல்ல] புங்குடுதீவில் வாழ்ந்ததைச் சொல்கிறது. இந்தப் பௌத்த பிக்குகள் உடுத்த காவியுடைக்கு வேண்டிய பருத்தியையும் காவி நிறத்துக்கு வேண்டிய காவியையும் புங்குடுதீவே கொடுத்தது. துறவிகளின் ஆடைகளுக்கு காவி நிறத்தைக் கொடுத்த பெருமை பூவரசமரத்தையே சாரும்.

பூவரசமரத்தின் பட்டையை அவித்து துணிக்கு, தோலுக்கு சாயம் ஏற்றினர். மரத்தின் வயதிற்கு ஏற்ப மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு நிறங்கள் கிடைத்தன. முப்பது வயதிற்கு கூடிய மரப்பட்டை சிவப்பு நிறத்தைக் கொடுத்தது. நூறு வயதிற்குக் கூடிய பூவரச மரப்பட்டை காயகல்பமாக மருந்துக்கு உதவியது. இலை, பூ, காய், பட்டை யாவும் மருந்தையும் சிகிரியா ஓவியத்தின் மஞ்சள், சிவப்பு நிறங்களுக்கான மையையும் நல்கி அன்றைய மக்களை வாழ்வித்தன. பூவரசமரங் காயிலிருந்தும் பட்டையில் இருந்தும் எண்ணெய் எடுத்தனர். அவை யும் மருந்தாயின. பூவரச மரத்தின் மருத்துவக் குணத்தை எழுதுவதானால் ஒரு புத்தகம் எழுதலாம்.

நம் கோயில்களில் நாதசுரத்துடன் வாசிக்கப்படும் தவில் அந்நாளில் புங்குடுதீவில் செய்யப்பட்டது என்பதை நம்புவீர்களா? என் தந்தை எனக்கு யாழ் நூலைக் கற்பித்த காலத்தில் எனது தாயர் இருபது பக்கங்களுடைய ‘தவில் வாத்தியம்’ என்ற புத்தகத்தை தந்தார். அதில் புங்குடுதீவில் வாழ்ந்த நீலாத்தையார் என்பவர் பூவரசமர வைரத்தில் தவிலின் பானையைக் குடைந்து தவில் செய்து வேதாரணியத்திற்கு எடுத்துச் சென்று விற்று வந்தார் என்ற செய்தி இருந்தது. புங்குடுதீவில் வாழ்ந்த அந்த நீலாத்தையார் சந்ததியினர் இதனை அறிந்திருப்பர். 

பூவரசமர வைரத்தில் கோடிக்கலப்பை என்று ஒருவகை கலப்பை செய்து வயல் உழுதனர். அம்மரப் பலகையில் நீர் ஊறாது என்பதைக் கண்டு படகு செய்யப் பயன்படுத்தினர்.  நூறு வயதான பூவரசமரப் பலகையில் செய்த கட்டிலில் படுப்பதால் வெண்குஷ்டம், தொழுநோய், கரும்படை, செம்படை போன்ற நோய்கள் மாறுவதையும் மலட்டுத் தன்மை நீங்குவதையும் நம்முன்னோர் அறிந்து வைத்திருந்தனர். அவர்கள் பூவரச மரத்தை நாட்டுத் தேக்கு என அழைத்து அதில் கதிரை, மேசை, யன்னல், கதவு என்பன செய்தனர். பூவரசமரம் மரச்சிற்பங்கள் செதுக்க நல்ல வாய்ப்பான மரமாகும். உணவுண்ணும் பாதிரங்களும் நீர் அள்ளும் பாத்திரங்களும் செய்தனர். ஆனால் பூவரசமரக் கட்டையில் இடியப்ப உரல் செய்வது மட்டுமே எமக்குத் தெரியும்.

இன்று நாம் பார்க்கும் பூவரசமரங்களில் பெரும்பாலானவை போறையாக இருப்பதே அதற்குக் காரணம் எனலாம். முறையற்ற முறையில் நாம் பூவரசமரத்தை வளர்க்கிறோம். அதனாலேயே அதில் போறை உண்டாகிறது. ஏழடி நீளமான தடியை வெட்டி, அரை அடியாழக் குழியில் நிலையாக நடுகிறோம். மழை பெய்யும் பொழுது அதன் காழுக்குள் நீர் போவதால் தாய்த்தடியில் போறை உண்டாகிறது. அதிலிருந்து உண்டாகும் மரமும் வைரமற்றுப்போகிறது. மெல்லத் தட்டினால் வீழ்ந்து விடுவேன் என்றபடி இன்றைய பூவரசமரங்கள் நிற்கின்றன. செழிப்பான பூவரசமரம் 30 அடி உயரமாக வளரக்கூடியது.

பூவரச மரங்களை கரும்பு நடுவது போல நடவேண்டும். கரும்பு நடுவது எப்படி என்று தெரியுமா? மண்ணில் மூடிவிட வேண்டும். பூவரசம் தடிகளை 15” - 20” நீளமான துண்டுகளாக வெட்டி, இரண்டடி அடி நீள, அரையடி ஆழக்குழியில் தளிர் நுனை மேலே இருக்க கிடையாக வைத்து,  3:1 என்ற விகிதத்தில் மண்ணையும் எருவையும் கலந்த மண்ணால் நன்றாக மூடிப் புதைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும். நீங்கள் நடும் நிலத்தைப் பொறுத்து கிழமைக்கு ஒன்று அல்லது இரண்டுமுறை நீர் விட்டால் போதும். அதற்கு புங்குடுதீவுக் கிணற்று நீரே போதுமானது. தடியிலிருந்து இரண்டு, மூன்று  கிழமையில் துளிர்கள் வரத்தொடங்கும். அவற்றுள் நல்ல செழிப்பானதை வைத்துக் கொண்டு [ஒருகுழிக்கு ஒன்று] ஏனையவற்றை கிள்ளி எடுத்துவிட வேண்டும். பின்னர் இரண்டு கிழமைக்கு ஒருமுறை நீர் விட்டால் போதும். ஐந்து ஆறு மாதத்தின் பின் தண்ணீர் தேவையில்லை. இயற்கை தன் வேலையைச் செய்து கொள்ளும். இப்படி மண்ணினுள் புதைத்து வளர்த்தெடுக்கும் மரங்களில் போறை வருவதில்லை.
கமலை ஏற்றம்[மாடுகளால் நீர் இறைத்தல்]

நம்முன்னோர் பிராணவாயுவை[ஒட்சிசனை] கூடுதலாக வெளிவிடும் மரங்களில் பூவரசமரமும் ஒன்று என்பதை அறிந்திருந்தனர். அதனால் மாடு கொண்டு நீர் இறைக்கும் போதும், செக்கில் எண்ணெய் ஆட்டும் போதும் மாடுகள் சோர்ந்து போகாது இருக்க பூவரசமரங்களை அருகே நட்டு வைத்தனர். வீட்டிலும் மாட்டுத் தொழுவத்திலும் நட்டு நல்ல காற்றை சுவாசித்தனர். பூவரச இலையினுள் வைத்து கொழுக்கட்டை, அடை, என்பவற்றை அவித்து உண்டனர். கோயில்களில் அதன் இலையில் பொங்கல், சுண்டல் போன்றவற்றைக் கொடுத்தனர். ஈரத்தன்மை உள்ள மரமானதால் காட்டுதீயைக் கட்டுப்படுத்தியது. வேர் பரவி வளர்வதால் கடற்கரை ஓர மணல் அரிப்பை தடுத்து நிறுத்தியது.

பூவரசமரத்தின் அடிப்பகுதி எந்தக் கோடையிலும் வறண்டு போகாது ஈரத்தன்மை உடையதாக இருக்கும். வேண்டுமானால் பூவரசமரத்தைடியைக் கிண்டிப்பாருங்கள் அதன் உண்மைபுரியும். மண்புழுக்கள் உள்ள மண் வளமான மண்ணாய் இருக்கும். அதனால் உழவர்களின் தோழன் என்று மண்புழுவைச் சொல்வார்கள். உங்களுக்கு மண்புழு வேண்டுமா? பூவரசமரத்தின் பழுத்த இலைகளை பிடுங்கி பூவரச மரத்தடியில் தாட்டு தண்ணீர்விட்டு நான்கு நாட்களின் பின் கிண்டிப்பாருங்கள் அதில் மண்புழு இருக்கும். (வன்னிப்பகுதி மண்ணில் நான்கு ஐந்து நாட்களில் உண்டாகும் மண்புழு தீவுப்பகுதி மண்ணிற்கு சிறிது நாட்கள் கூடுதலாக எடுக்கலாம்). பூவரசின் பசுந்தழை தாவரங்களுக்கு நல்ல உரமாகும். மரங்கள் நன்கு காய்க்க வேண்டுமா? நெல் நன்கு விளைய வேண்டுமா? எருவை விட ஆவாரை, பூவரசு, வாதமடக்கி, எருக்கலை போன்றவற்றின் பசுந்தழை சிறந்தது.
அரக்கு

நம்மூர்களில் அரக்கைத் தரும் மரமாக பூவரசமரம், முள் முருக்க மரம் [கல்யாண முருங்கை], இலந்தை என்பன இருந்தன. ஒரு மரத்தில் அரக்குப் பூச்சிகள் இருந்தால் அவை இருக்கும் ஒரு கொப்பை வெட்டி இல்லாத மரத்தில் கட்டி, அரக்குப் பூச்சிகளை குடியேறச் செய்து அவை உண்டாக்கும் அரக்கை கொப்புகளில் இருந்து சுரண்டிச் சேகரித்தனர். அப்படி சேகரித்த அரக்கை கொம்பரக்கு என்பர். அவை மரத்தின் தன்மைக்கு ஏற்ப பல நிறங்களில் கிடைத்தன. இந்த அரக்கை நம் முன்னோர்கள் நெடுங்காலமாக  பட்டு, பருத்தி, தோல் போன்றவற்றை  சாயமிட; மரத்தளவாடங்கள், வீட்டு வளைகள், தரைகள் போன்றவற்றை மெருகேற்ற பயன்படுத்தியதோடு எமது தோலை வரட்சியில் இருந்து காக்கவும், உள்ளங்கையை பாதத்தை மென்மையாக்கவும் மருந்தாக்கினர். மேல் நாட்டு அழகு சாதனப் பொருட்களின் நிறத்துக்கும் மிருதுத் தன்மைக்கும் கூட அரக்கே பயன்படுகின்றது. அதனால் இன்று உலகெங்கும் இந்த அரக்கின் தேவை பல்கிப் பெருகியுள்ளது. 

புங்குடுதீவின் கோயில்காட்டு மக்களாவது அன்றேல்  பூவரசம் விருந்து வைப்போராவது பூவரசமரங்களை நட்டு சோலையாக்கி புங்குடுதீவின் நறும்புனல் இன்மையை நீக்குவார்கள் என நம்புகிறேன். புங்குடுதீவின் காவல் மரமான பூவரச மரத்தை பொன்போல் காத்து வளர்த்து, நம் ஊரின் வெப்பத்தை தணிவித்து, தண்ணீரைக் கனிவித்து, நல்ல காற்றை சுவாசிப்பதோடு பொருளாதாரத்தையும் பெருக்குவோமா?
இனிதே,
தமிழரசி.

10 comments:

  1. அரிய தகவல்

    ReplyDelete
  2. அரிய தகவல்

    ReplyDelete
  3. உண்மையில் என் போன்ற இளையவர்களுக்கு அவசியமானதும் மிகத்தெளிவுடையதுமான தகவல்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி. 'கீறலின் முனையில்' நன்று..

      Delete
  4. பூவரச மரத்தை பொன்போல் காத்து வளர்த்து, நம் ஊரின் வெப்பத்தை தணிவித்து, தண்ணீரைக் கனிவித்து, நல்ல காற்றை சுவாசிப்பதோடு பொருளாதாரத்தையும் பெருக்குவோமாக!.....nalla akkam...

    ReplyDelete
  5. பயன்தரும் தகவல்கள்

    ReplyDelete