Monday 23 May 2016

குறள் அமுது - (115)


குறள்:
“இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்
சீறின் சிறுகும் திரு”                                                 - 568

பொருள்:
தலைவன் ஒருவன் இனத்தவர்களுடன் சேர்ந்து சிந்தித்துப் பார்க்காது  சினங்கொண்டு மூர்க்கத்தனமாக நடந்தால் அவனது மதிப்புக் குறைந்து போகும்.

விளக்கம்:
'வெருவந்த செய்யாமை' என்னும் அதிகாரத்தில் இத்திருக்குறள் இருக்கிறது. பிறர் பயப்படக்கூடிய செயலைச் செய்யாதிருத்தல் வெருவந்த செய்யாமை ஆகும். இன்றைய தமிழில் சொல்வதானால் பிறரை வெருட்டாதிருத்தல் என்று சொல்லலாம். ஒருவர் தானே செய்யும் வேலையை, தன் விருப்பப்படி செய்து கொள்ளலாம். சமூகம் சார்ந்த பொதுவான வேலைகளில் ஈடுபடுவோர் ஒன்றைச் செய்வதற்கு தாமே தனித்து முடிவெடுப்பது நல்ல செயல் அல்ல. தன்னைச் சேர்ந்தவர்களோடு கதைத்து அதனால் வரும் நன்மை தீமைகளை ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கவேண்டும். அதுவே இனத்து ஆற்றி எண்ணுதலாகும்.

ஒன்றைச் செய்வதற்கு முன் எப்படிப்பட்ட நிலையில் இருந்து ஆராயாவேண்டும் என்பதை அறநெறிச்சாரம் என்னும் நூலை எழுதிய முனைப்பாடியார் என்னும் புலவர் கூறியதைக் கொஞ்சம் பார்ப்போம்.
“காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண்
உற்றகுணம் தோன்றாதது ஆகும் உவப்பதன்கண்
குற்றமும் தோன்றாக் கெடும்”
                                             - (அற நெறிச்சாரம்: 42)

வெறுப்பு[காய்தல்] விருப்பு[உவத்தல்] இல்லாது நீக்கி[அகற்றி] ஒன்றிலுள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து அறிதல்[ஆய்தல்] அறிவுடையார் செயலாகும். வெறுக்கப்படுவதால்[காய்வதன்கண்] அதன் உண்மையான தன்மை [உற்றகுணம்] தெரியவராது [தோன்றாது]. விரும்புவதால் [உவப்பதன்கண்] அதிலுள்ள குறைகளும்[குற்றமும்] தெரியாது[தோன்றாது] மறைந்துபோகும் [கெடும்]. எதை ஆராய்வதாக இருந்தாலும் பக்கச்சார்பு இல்லாது ஆராயவேண்டும்.

பொது நன்மையைக் கருத்தில் கொள்ளாது ஒரு அரசனோ தலைவனோ தன் இனத்தவரோடு கலந்து ஆராய்ந்து பாராது தானே முடிவெடுத்துக் கோபப்படுட்டு மூர்க்கத்தனமாக நடந்தால் அவனது செல்வம் செல்வாக்கு என்பன மெல்ல மெல்லக் குறையும். சமூகத்திற்கு செய்கிறோம் என்று தாம் நினைத்ததை தாமே முடிவெடுத்து தம்மெண்ணத்திற்கு மற்றவர்களை அடக்கி ஒடுக்கி வெருட்டி செய்யப்படும் எந்தச் செயலும் அச்சமூகத்தால் வெறுக்கப்படும். 

இனத்தவர்களுடன் சேர்ந்து ஆராய்ந்து பார்க்காமல் தானென்ற செருக்கோடு பிறரைத் துன்பப்படுத்தி பயங்காட்டுவதால் இனத்தவர்களின் மனதில் உண்டாகும் வெறுப்பு படிப்படியாகத் தலைவர்களின் மதிப்பைக் குறைக்கும் என்கிறார் திருவள்ளுவர்.

No comments:

Post a Comment