Thursday, 12 May 2016

மனைவி எனும் அருளமுதம் 5

கன்னித் தமிழ்நாட்டில் காவிரியாறு கடலோடு கலக்கும் காவிரிப்பூம்பட்டனத்தில் கண்ணகை எனும் கற்பரசியின் காற்சிலம்பு சிரித்தது. வடநாட்டிலோ கங்கை ஆற்றங்கரையில் கனகர் விசயர் என்னும் முடியுடை மன்னர்களின் தலைகள் கல் சுமந்து நெரிந்தன. இதனையே சிலப்பதிகாரம் சித்தரிக்கின்றது.

காவிரிப்பூம்பட்டனத்தின் பெருஞ் செல்வர்களான மாநாய்கன் மகளான கண்ணகிக்கும் மாசாத்துவான் மகனான கோவலனுக்கும் திருமணம் நடந்தது. கண்ணகியின் கொஞ்சும் சிலம்பொலியில் நெஞ்சம் நெகிழ்ந்தான் கோவலன். கண்ணகி மேல் தீராக் காதல் கொண்டான். மனையறம் இனித்தது. சில ஆண்டுகள் சீராகச் சென்றன.

கோவலன் மாதவியின் ஆடற்சிலம்பொலி கேட்டான். கண்ணகியின் கொஞ்சும் சிலம்பொலியை மறந்தான். கலையரசியின் காதற் சிலம்பொலியில் கட்டுண்டான். காலம் உருண்டது. காசும் கரைந்தது. காதற் சிலம்பொலியே அவனுக்குப் புலம்பற் சிலம்பொலியாயிற்று. பாடினான் கானல்வரி. அதைக் கேட்ட மாதவியும்
“ஆங்கு கானல்வரி பாடல்கேட்ட மான்நெடுங்கண் மாதவியும்
மன்னும் ஓர் குறிப்புண்டு இவன் தன்நிலை மயங்கினான் எனக்
கலவியான் மகிழ்ந்தாள் போல் புலவியால் யாழ்வாங்கித்
தானும் ஓர் குறிப்பினள் போல் கானல்வரி பாட”
                                                         - (சிலம்பு: 7: 138 - 141)
கானல்வரி பாடினாள். அதனால் மாதவிமேல் கோபம் கொண்டு மீண்டும் கண்ணகியிடம் சென்றான் கோவலன்.

“சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக்
குலம்தரு வான்பொருட் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுத் தரும் எனக்கு என்ன”
                                                         - (சிலம்பு: 9: 69 - 71)
‘வஞ்சனையை வாழ்வாகக் கொண்டவளோடு இவ்வளவு காலமும் கழித்தமையால் முன்னோர் தேடித்தந்த பெருஞ் செல்வத்தைத் தொலைத்துவிட்டேன். என் வறுமைக்காக[இலம்பாடு] நாணுகிறேன்'  என்று கண்ணகியிடம் கூறினான்.

அதனைக் கேட்ட கண்ணகி, தன் காற்சிலம்பை எடுத்து கோவலன் கையிற் கொடுத்து இச்சிலம்பை விற்று வரும் பணத்தை வைத்து இழந்த செல்வத்தை தேடிக்கொள்ள முடியும் எனத் தைரியம் ஊட்டினாள். தன் வறுமை நிலைக்கு வெட்கப்பட்ட கோவலன் இரவோடு இரவாக கண்ணகியைக் கூட்டிக்கொண்டு மதுரைக்குச் சென்றான்.

மதுரை நகரிலே பொற்கொல்லர் தெருவில் கண்ணகியின் காற்சிலம்பை விலைகூறி விற்க முயன்றான் கோவலன். கண்ணகியின் காற்சிலம்பு பொற்கொல்லன் ஒருவனின் சூழ்ச்சியால் கள்ளச் சிலம்பாய்ப் புலம்ப கொலை செய்யப்பட்டான் கோவலன். கள்ளச் சிலம்பொலி கேட்டுக் கலங்கினாள் கண்ணகி.
“பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே யாமாகில்
ஒட்டேன் அரசரோடு ஒழிப்பேன் மதுரையையும்”
                                                         - (சிலம்பு: 11: 36 - 37)
என வஞ்சினம் உரைத்து, ஒற்றைச் சிலம்பு ஒலிக்க கொற்றைக் கொற்றவனிடம் சென்று நீதிகேட்டாள்.

“காவி உகுநீரும் கையில் தனிச் சிலம்பும்
ஆவி குடிபோன அவ்வடிவம் - பாவியேன்
காடெல்லாம் சூழ்ந்த கருங்குழலும் கண்டு அஞ்சிக்
கூடலான் கூடுஆயி னான்”
                                                       - (சிலம்பு: 10: 2)
முத்துடைச் சிலம்பொலிக்கும் மணியுடைச் சிலம்பொலிக்கும் வேற்றுமை அறியாக் கொற்றவன் முன்னே  சிரித்தது சிலம்பு. பறந்தன மணிகள். எரிந்தது மதுரை.

தன்னை மறந்து ஓர் ஆடலரசியுடன் வாழ்ந்த தன் கணவனுக்காக நீதி கேட்டு, மதுரையையே எரித்து பத்தினி எனப்போற்றப்பட்டவள் கண்ணகி. சோழ நாட்டில் பிறந்து பாண்டி நாட்டில் வழக்குரைத்து சேர நாட்டில் தெய்வீகம் அடைந்தவள். எனவே சேர, சோழ, பாண்டிய நாடு என மூன்றாய் கூறுபட்டுக் கிடந்த தமிழ்நாட்டை ஒன்றாக்கிய பெருமையும் கண்ணகிக்கு உண்டு.

வடநாட்டு கனக விசயர் சுமந்து வந்த கல்லில் கண்ணகிக்குச் சிலைவடித்து கோயில் கட்டி மகிழ்ந்தான் சேரமன்னன். அன்று முதல் பத்தினித் தெய்வமாய் - கண்ணகி அம்மனாய் போற்றப்படுகிறாள் கண்ணகி.
களனி விகாரை

தமிழகத்தில் கண்ணகி வழிபாடு அருகி வந்து கொண்டிருப்பினும் ஈழத்தின் புங்குடுதீவுக் கடற்கரையில் கம்பீரமாகக் கோயில் கொண்டிருக்கிறாள் கண்ணகி. கி பி இரண்டாம் நூற்றாண்டளவில் நாக அரச வம்சத்தில் வந்த முகநாகன் என்பவன் புங்குடுதீவிலிருந்த பத்தினி கோட்டத்திற்கு [கண்ணகி கோயிலுக்கு] தினசரி செலவுக்குப் பொருள் கொடுத்திருக்கிறான். அதனை களனி விகாரையில் இருந்த ஏட்டால் அறியலாம். அந்த விகாரை இன்றும் தமிழரின்[நாகரின்] கட்டிடக்கலையையும் சிற்பக்கலையையும் ஓவியக்கலையையும் எடுத்துச் சொல்லும் ஓர் அகல்விளக்காக நிமிர்ந்து நிற்கிறது.

அங்கே இருக்கும் ஓர் ஓவியத்தில் நாக அரசன் ஒருவன் தன் தலையில் படம் விரித்த நாகத்தின் தலைவடிவான மணிமுடியை அல்லது கவசத்தை அணிந்திருப்பதைக் காணலாம். அமைதியாகத் தோற்றம் அளிக்கும் அவன் ஒரு கையில் அமுத கலசத்தை வைத்திருப்பினும் கண்களில் இருந்து ஏனோ இரத்தக் கண்ணீர் சிந்துகிறது. அவ்வோவியத்தைப் பார்ப்போர் நெஞ்சங்களை அக்கண்ணீர் உறுத்தும். எனினும் மிக அழகிய ஓவியமது. 
நாக அரசன்
“கன்னலொடு செந்நெல் விளை கண்ணகிப் பெண்ணரசியே”
என முத்துக்குமாருப் புலவராலும் 
“வண்ண வண்ண சேலை கட்டும் மீனாட்சி”
என யாழ்ப்பாணம் வீரமணி ஐயராலும் போற்றப்பட்டவள் புங்குடுதீவுக் கண்ணகி அம்மன்.

கோவலன் “சலம்புணர் கொள்கைச் சலதி” என இளங்கோ அடிகளால் வஞ்சகியாகக் காட்டப் பெற்ற மாதவியோடு முறையற்ற வாழ்க்கை வாழ்ந்தவன். அது தெரிந்தும் கள்வனாய் கொலை செய்யப்பட்ட போது மதுரையை எரித்து கோவலனை தமிழ் உள்ளவரை வாழவைத்த ‘மனைவி எனும் அருளமுதம்’ கண்ணகி. சேரன் தீவு என்று இலங்கையைக் கூறுவதற்கு அமைய அங்குள்ள எல்லா இடங்களிலும் கண்ணகி தெய்வமாகப் போற்றப்படுகிறாள். 
இனிதே, 
தமிழரசி
குறிப்பு:
1997ம் ஆண்டு கலசம் இதழுக்கு 'சாலினி' என்ற பெயரில் எழுதியது.

2 comments:

  1. சேரன் தீவு சேலன் ஆகி பின்பு சிலோன் ஆகி இருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. இலங்கையின் பண்டைய பெயரான சேரன் தீவை[Cerentivu] அரேபியர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே Sarandib என்றனர். 1505 ஆண்டில் போத்துக்கீசப் பேரரசு Ceilão என்று கூற அதனை ஆங்கிலேயர் Ceylon என மொழிபெயர்த்தனர்.

      Delete