Saturday, 28 May 2016

ஒட்டி வாழ்வான்


திருவள்ளுவர் நிலையாமை என்ற அதிகாரத்தில் உயிரின் இயல்பு பற்றிக் கூறுகிறார். அவ்வதிகாரத்தின் கடைசிக்குறளில் 'ஏன் எந்த ஓர் உயிரும் உடம்பினுள் நிலையாகத் தங்கி வாழ்வதில்லை?’ என்பதை மிக அழகாகச் சொல்கிறார்.
“புக்கில் அமைந்துஇன்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு”                           - (குறள்: 340)

உடம்பிற்குள் ஒட்டிக் [துச்சில் - ஒண்டி] குடித்தனம் வாழ்ந்த உயிருக்கு; நிலையானவீடு [புக்கில்] அமையவில்லையோ? [அமைந்தின்று கொல்லோ]. எனவே எமது உயிர் உடலினுள் ஒட்டியே வாழ்கிறது. அப்படி ஒட்டி வாழும் உயிர், நிலையான வாழ்வு எப்போ கிடைக்கும் என்று பிறவி தோறும் தேடுகிறது. அந்தத் தேடலின் வெளிப்பாடே கடவுள் கொள்கையாகப் பிறந்து வளர்ந்துள்ளது.

நாம் வாடகை வீட்டில் அல்லது எமது உறவினர் வீட்டில் வாழநேர்ந்தால் எம்மைத் தேடி வருவோரும் அந்த வீட்டில் தானே வாழவேண்டும். சொந்த வீடற்ற நிலையில் வாழ்வாரைத் தேடி - நாடி வருபவோர் யார்? அப்படி வருவோருக்கு எம்மேல் அளவுகடந்த அன்பும் பாசமும் இருக்க வேண்டும். எமக்கும் அவர்களிடம் அத்தகைய அன்பு இருக்க வேண்டும்.
“என்னில் ஆரும் எனக்கு இனியாரில்லை
என்னிலும் இனியான் ஒருவன் உளன்
என்னுளே உயிர்ப்பாய் புறம்போந்து புக்கு
என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே”                    
                                              - (ப.திருமுறை: 5: 21: 1)

என்னை விட எனக்கு இனிமையானவர் யாரும் இல்லை. என்னிலும் இனிமையானவன் ஒருவன் இருக்கின்றான்.  நான் ஊசலாடித் திரிவதற்கு ஏதுவாக உயிர்ப்பாய் [உயிர்த்தல்] வெளியே போய் [புறம்போந்து] உள்ளே வந்து [புக்கு], என்னுள்ளே உயிர்மூச்சாய் - மூச்சுக்காற்றாய் நிற்பவன் இன்னம்பர் எனும் இடத்தில் வாழும் ஈசனே என்கிறார் திருநாவுக்கரசு நாயனார்.

ஆதலால் எம்மோடு ஒட்டி உறவாடி எந்நேரமும் கலந்து வாழ்வதே தெய்வம். அதைத் தேடி நாம் எங்கும் போகவேண்டியதில்லை. அது எம்மை நாடி ஓடி வரும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதையும் அவரே இன்னொரு தேவாரத்தில் சொல்கிறார்.

உயிராவணம் இருந்து உற்று நோக்கி
            உள்ளக் கிழியின் உருஎழுதிது
உயிர் ஆவணம் செய்திட்டு உன்கைத்தந்தால்
           உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி 
அயிராவணம் ஏறாதே ஆனேறு ஏறி
           அமர்நாடு ஆளாதே ஆரூராண்ட
அயிராவணமே என் அம்மனே நின்
           நோக்காதார் அல்லாதாரே                             
                                              - (ப. தி.முறை: 6: 25: 1)

மூச்சுவிடுவதை உயிர்த்தல் என்று சொல்வர். உயிராத வண்ணம் [உயிராவணம்]. அதாவது யோகாசனம் செய்வோர் பிராணாயாமம் என்று சொல்கிறார்களே அதனை நம் பண்டைத்தமிழ் முன்னோர் உயிராவணம் என அழைத்தனர். மூச்சுக்காற்றாய் வெளியேயும் உள்ளேயும் சுழன்று உயிர்ப்பாய் இருப்பது அது. திரைச்சீலையைக் கிழி என்பர்.

உயிராவணம் செய்து கொண்டு தியானத்தில் இருந்து இறைவனை நினைத்து [உற்று நோக்கி] மனத்திரையில் [உள்ளக்கிழி] அந்த இறைவனின் உருவத்தை வரைந்து [உருஎழுதி] உயிரை ஒப்படைத்துக் [உயிரை ஆவணப் படுத்தி] கொள்ளவேண்டும். அப்படி இறைவனை உணர்ந்து அறிகின்றவரோடு சேர்ந்து வாழ்பவன்[ஒட்டி வாழ்தி]. தேவலோகத்தில் இருக்கும் ஐராவணம் என்ற யானையில் ஏறாது, எருதில் ஏறி, தேவர் உலகத்தையும் ஆட்சி செய்யாது, திருவார்ரூரை ஆளுகின்ற எவ்வித ஐயமும் இல்லாத மெய்ப்பொருள் வடிவானவனே! [அயிராவணமே - ஐ இரா வண்ணம்; ஐ - ஐயம்] உன்னை அகக் கண்ணால் காணமுடியாதவர் [நோக்காதார்] நீ சேர்ந்து வாழாதோரே! [அல்லாதாரே].

எனவே இறைவன் நம்மை நாடி வரவேண்டுமானால் எமது மனத்திரையில் அகக்கண்ணால் அவன் உருவைக் காணவேண்டும். அப்படிக் காணும் போது எம்மொடு ஒட்டி வாழ்வான். மூச்சு போனால் பேச்சு போய்விடும் அல்லவா? அதற்காகத்தான் எமது உயிரை ஆவணப்படுத்தி அவன் கையில் கொடுத்து வைப்பது [உன்கைத்தந்தால்]. அந்த நேரம் எம்மொடு ஒட்டி வாழ்பவன் எம்மைக் கைவிட முடியுமா? என்றும் தன்னோடு நிலைத்து வாழவைப்பான்.

இனிதே,
தமிழரசி.

No comments:

Post a Comment