இனிமை என்றால் என்ன? இனிமையே தமிழ். ஏனெனில் அமிழ்து அமிழ்து அமிழ்து என்று சொல்லிப்பாருங்கள் அது தமிழ் ஆவது காண்பீர்கள். இனிமையானவற்றில் மிகவும் இனிமையானது அமிழ்தல்லவா? எனவே தமிழைவிட இனிமையானது வேறு ஏதேனும் கிடைக்குமா? அமிழ்தே தமிழாதலால் இன்றும் கன்னித் தமிழாய் இருந்தபடி அழிவில்லாது இருக்கிறது.
உதாரணத்திற்கு சொல்வதானால் நானூறு ஆண்டுகளுக்கு முன் Shakespeare எழுதிய ஆங்கில நாடகங்களை வாசித்து விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் இன்றைய ஆங்கிலம் உள்ளது. ஆனால் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத் தமிழை புலம் பெயர் நாட்டில் பிறந்து வாழும் சிறு பிள்ளைகளும் வாசித்து விளங்கிக் கொள்ளலாம். இதைவிடத் தமிழின் அருமைக்கு வேறு எடுத்துக் காட்டும் வேண்டுமா?
உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இருப்பினும் ஆறு மொழிகளே செம்மொழிகள் என்ற தகுதியைப் பெற்றுள்ளன. ஒரு மொழியானது செம்மொழி என்னும் தகுதியைப் பெறுவதற்கு
உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இருப்பினும் ஆறு மொழிகளே செம்மொழிகள் என்ற தகுதியைப் பெற்றுள்ளன. ஒரு மொழியானது செம்மொழி என்னும் தகுதியைப் பெறுவதற்கு
- மிகத்தொன்மையான மொழியாக இருக்க வேண்டும்.
- பிறமொழியின் துணையின்றி தானே தனித்து இயங்கக் கூடிய மொழியாக இருக்க வேண்டும்.
- இலக்கியவளம் நிறைந்த மொழியாய் இருக்கவேண்டும்.
- அந்த இலக்கியங்கள்
- அம்மொழி தாய் மொழியாய் பிறமொழிகளை உண்டாக்கி இருக்கவேண்டும்.
இத்தகுதிகளை கிரீக், இலத்தின், சீனம், எபிரேயம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய ஆறு மொழிகளே பெற்றிருக்கின்றன.
அவற்றுள் கிரீக், இலத்தின், சமஸ்கிருதம் மூன்றும் இறந்து போய்விட்டன. எனினும் இலக்கியங்களில் வாழ்கின்றன. பேச்சுவழக்கற்றுப் போன எபிரேயமொழிக்கு 19ம் நூற்றாண்டில் உயிர் கொடுத்ததால் இன்று இஸ்ரேலின் ஆட்சிமொழியாக இருக்கிறது. சீனமொழியும் தமிழ்மொழியுமே அழியாது தொடர்ந்து வாழ்ந்து வருகின்றன.
இன்றும் சீனமொழியை பட எழுத்தாகவே எழுதுகின்றனர். ஆனால் தமிழ்மொழி தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே படஎழுத்து, கருத்தெழுத்து, அசையெழுத்து ஆகிய மூன்று நிலைகளைக் கடந்து இன்று நாம் எழுதும் வரியெழுத்து நிலைக்கு வந்து விட்டது. எனவே இன்று இருக்கும் உலக மொழிகளில் எம்தாய்மொழியாம் தமிழ்மொழியே இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு மேலாக வாழ்கின்றது. ஆதலால் உலகின் சிறந்த ஆறு செம்மொழிகளிலே உயர்தனிச் செம்மொழி தமிழ் ஒன்றே என்பதை தமிழராகிய நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கட்டுமரம் என்ற தமிழ்ச்சொல் ஒன்றே போதும் தமிழின் அருமையை உலகிற்குக் காட்ட. கட்டுமரத்தைக் கட்டி கடலோடிய தமிழன் நாடுவிட்டு நாடு சென்று அரசியல், வணிகம், கலை, பண்பாடு, பொருளாதாரம் யாவற்றுக்கும் உலகிற்கு வழிகாட்டினான். ‘நாவாய்’ என்னும் ஒரு தமிழ்ச் சொல்லில் இருந்தே நவல் [Naval], நவார் [navar], நவிகேட் [navigate], நவிகேசன், நேவி என எத்தனை நூறு சொற்களை ஆங்கிலம் உண்டாக்கி இருக்கிறது? இப்படி உலகெங்கும் உள்ள மொழிகளில் இருக்கும் தமிழ்ச்சொற்கள், உலகின் நாகரிக வளர்ச்சிக்கு தமிழ் கொடுத்தது எவை என்பதைச் சொல்லாமல் சொல்கின்றன அல்லவா!
மொழி இலக்கணதிற்கு தொல்காப்பியம், வீரத்திற்கு புறநானூறு, காதலுக்கு அகநானூறு, தமிழின் கலை பண்பாட்டிற்கு சிலப்பதிகாரம், கட்டிடக்கலைக்கு மயமதம், சிற்பக்கலைக்கு சிற்பச்செந்நூல். கணிதத்திற்கு கணக்கதிகாரம். பக்திக்கு, இசைக்கு, இசை அமைப்புக்கு பரிபாடல், இவை யாவற்றிற்கும் மேலாக உழவு, உணவு, மருத்துவம், அரசியல், பொருளாதாரம், காதல் என மனித வாழ்வியலுக்கு ஒரு திருக்குறள் போதும். தமிழின் அருமையை சொல்ல வேறென்ன வேண்டும்?
இனிதே,
தமிழரசி
No comments:
Post a Comment