Monday 20 April 2015

குறள் அமுது - (105)


குறள்:
“அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு”                               
                                             - (குறள்: 513)

பொருள்:
தொழிலில் பற்றும், தொழில் பற்றிய அறிவும், அதனைச் செய்து முடிக்கும் துணிவும், பிறர்பொருளில் ஆசை இன்மையும் ஆகிய நான்கு பண்பும் இருப்பவனை தொழிலுக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

விளக்கம்:
'தெரிந்து வினையாடல்' என்னும் அதிகாரத்தில் இத்திருக்குறள் இருக்கிறது. வினை என்பது செய்யும் தொழிலைக் குறிக்கும். தொழில் செய்ய ஒருவரைத் தெரிந்தெடுப்பதற்கு  நாம் என்ன செய்யவேண்டும் என்பதை இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுகிறார். 

மனித மனம் எதனை விரும்புகின்றதோ அதனை மிகவும் ஆவலுடன் மீண்டும் மீண்டும் செய்ய விழையும். தாம் செய்யும் தொழில் மேல் பற்று உள்ளவரே அத்தொழிலைத் திறமையுடன் செய்வர். தொழில் மேல் அன்பில்லாவிட்டால் தொழிலின் நுணுக்கங்களை நன்கு அறிந்து ஆர்வத்துடன் எவராலும் செய்யமுடியாது. எனவே அந்த வேலையில் அன்பு உள்ளவனாகப் பார்த்து வேலைக்கு எடுக்க வேண்டும் என்பதை முதலில் சொல்கிறார்.

வேலை செய்ய வருபவருக்கு அந்த தொழில் பற்றிய முன்னநுபவம் இருக்கிறாதா? அத்தொழில் பற்றி ஏதாவது படித்திருக்கின்றாரா? என்பவற்றை ஆராய்ந்து பார்த்தே ஒருவரை வேலைக்குத் தெரிவு செய்ய வேண்டும். அப்படி இல்லாதவருக்கு அந்த வேலையைக் கற்றுக் கொடுப்பதற்கும் தொழில் பற்றிய அறிவு இருக்கிறதா என்ற சோதனை தேவைப்படும். 

தேற்றம் என்பது இங்கு மனங்கலங்காத் தன்மையைக் குறிக்கிறது. ‘பதறிய காரியம் சிதறும்’ என்பார்கள். ஒருவருக்கு ஏற்படும் மனக்கலக்கமே செய்யும் காரியம் சிதறக் காரணமாகும். அதனால் கொடுத்த வேலையை துணிவுடன் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரா என்பதைப் பார்த்தே வேலைக்கு எடுக்க வேண்டும். 

ஆசைப்படாத தன்மையே அவாஇன்மை ஆகும். ஆசையே களவெடுப்பதற்கும் கொள்ளையடிப்பதற்கும் வழி வகுக்கின்றது. ஆதலால் தொழில் செய்யும் இடத்திலிருக்கும் பொருட்களின் மேல், பணத்தில் மேல் ஆசை இல்லாதவரை வேலைக்குத் தேர்வு செய்ய வேண்டும்.

அத்துடன் ‘இந்நான்கு உடையான் கட்டே தெளிவு’ என்று ஏகாரம் போட்டு கூறுகிறார். அதாவது இந்த நான்கு பண்பும் உள்ளவரையே வேலைக்கு எடுக்க வேண்டும். இந்நான்கு பண்பில் ஒன்று குறைந்தாலும் தொழில் செய்யத் தகுதி இல்லாதவரே என்பது திருவள்ளுவர் முடிவாகும்.

No comments:

Post a Comment