Tuesday 21 April 2015

சித்திரக் கவிதை - 2



சித்திரக் கவிதைகள் யாவும் சித்திரங்களுக்குள் அடங்கி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. சித்திரத்துக்குள் அடக்கி வைக்காத சித்திரக் கவிதைகள் சொல்லாடலை, இசையைச் சித்திரமாய்க் கொண்டிருக்கும். அவற்றின் யதிகளும் தாளங்களும் மனதைச் சித்திரமாய்க் கவரும். இத்தகைய சித்திரக் கவிதை வடிவங்கள் சிலவற்றை பன்னிரு திருமுறையிலும் காணலாம்.  செய்யுள் இலக்கண நூலான முத்துவீரியம் சொல்லும் ‘எழுகூற்றிருக்கை’ என்னும் சித்திரக் கவிதை வகையை பதினோராந் திருமுறையில் காணலாம். அதனை நக்கீரர் ‘திருஎழு கூற்றிருக்கை’ என்ற பெயரிலேயே பாடியிருக்கிறார்.

அந்த திருஎழு கூற்றிருக்கையில் இராவணனுக்கு இறைவன் அருள்புரிந்ததை
“பொருந்தினை
லையளி பொருந்தினை 
கேட்டவன் தலையளி பொருந்தினை 
தாழ்வாய்க்  கேட்டவன் தலையளி பொருந்தினை 
பாடத் தாழ்வாய்க்  கேட்டவன் தலையளி பொருந்தினை 
இராவணன் பாடத் தாழ்வாய்க்  கேட்டவன் தலையளி பொருந்தினை 
ஏழின்ஓசை இராவணன் பாடத் தாழ்வாய்க்  கேட்டவன் தலையளி பொருந்தினை”
- (ப.திமுறை:11 :5-4 :42 - 43)  

என சித்திரக் கவிதையாக நக்கீரர் தந்திருக்கிறார்.

இதுபோல் திருநாவுக்கரசு நாயனார் பாடிய தேவாரத்தில் இருக்கும் சித்திரக் கவிதை வடிவைப் பார்ப்போம்.

இராவணனுக்கு இறைவன் திருவருள் புரிந்ததை
“கொடுத்தானை
இனிதுகேட்டு கொடுத்தானை
இசைபாடல் இனிதுகேட்டு கொடுத்தானை
எழு நரம்பின் இசைபாடல் இனிதுகேட்டு கொடுத்தானை”
- (ப.திமுறை:6 :69:10)

என்று கூறும் திருநாவுக்கரசர், அருச்சுனனுக்கு அருள் செய்ததையும்
“கொடுத்தானை
பதம் கொடுத்தானை
பாசு பதம் கொடுத்தானை
அருச்சுனர்க்கு பாசு பதம் கொடுத்தானை”
- (ப.திமுறை:4 :07 :10)

என சித்திரக் கவிதையாகத் தேவாரத்தை பாடுவதற்கு ஏற்றாற்போல் ஆறாம் திருமுறையில் பாடியிருக்கிறார். இப்படி வாசிப்பதை ‘கொண்டு கூட்டி’ வாசித்தல் என்பர். சித்திரக் கவிதை முறையில் கொண்டு கூட்டிப் பாடுவதால் கேட்போர் மனதில் பாடலும் அதன் கருத்தும் நன்கு பதியும். திருத்தாண்டகமாகப் பாடுவதால் சித்திரக் கவிதையின் சுவையை நாம் அறிவதில்லை.

சிவனை நினைந்து நான் எழுதிய ஒரு சித்திரக்கவிதையை கீழே தந்திருக்கிறேன்.
தருவாயோ
கரம்  தருவாயோ
இரு கரம் தருவாயோ
நின் இரு கரம் தருவாயோ
 வருவாயோ நின் இரு கரம் தருவாயோ
உடனே வருவாயோ நின் இரு கரம் தருவாயோ
உமையாள் உடனே வருவாயோ நின் இரு கரம் தருவாயோ
 
இனிதே,
தமிழரசி.

1 comment:

  1. உங்கள் சித்திரக்கவி அற்புதம்!
    ஒவ்வொரு வரியும் தனித்தனியே வாசிக்கும்போது வெவ்வேறு அர்த்தங்களைக் கொடுப்பதுபோலிருந்தாலும், இறுதியில் ஒரே அர்த்ததைக் கொடுத்து விடுகிறது!

    ReplyDelete