Monday, 13 August 2012

குறள் அமுது - (41)


குறள்:
“தவம்செய்வார் தம்கருமம் செய்வார் மற்றால்லார்  
அவம்செய்வார் ஆசையுள் பட்டு”                           - 266

பொருள்:
தவம் செய்பவர்கள் தமது வேலையைச் செய்கிறார்கள். மற்றவர்கள் ஆசைக்கு உட்பட்டு காலத்தை வீணடிக்கிறார்கள்.

விளக்கம்:
உண்மையாகத் தவம் செய்கின்றவர் யாராய் இருந்தாலும் - துறவறத்தானாய் மட்டுமல்ல இல்லறத்தானாய் இருந்தாலும் கூட தம் காரியத்தை, தம் கடமையைச் செய்பவரே. இன்னொருவிதமாகச் சொல்வதானால் எவர் தனது கடமையை, தனது தொழிலை முறையாகச் செய்கின்றாரோ அவரும் தவம் செய்பவரே. எப்படிப் பார்த்தாலும் தவம் செய்வோர் யாவருமே தம் நலமே பெரிதென எண்ணுவோராவர். கடவுளை அடைவதே அவரது எண்ணம். உலகில் வாழும் மற்றைய உயிர்கள் படும் துன்பம், தவம் செய்வோர் கண்களுக்குத் தெரிவதில்லை. 

ஆதலால் தவம் செய்வோர் யாவரும் தம் வேலையையே செய்கின்றனர். உண்மையாகத் தவம் செய்கின்றவர்கள் நிலையே இப்படி இருக்கும் போது போலித்தவம் செய்வோர் நிலை எப்படி இருக்கும்? அதனையும் திருவள்ளுவர் எமக்காக சிந்தித்து கூறியுள்ளார். உண்மையான தவத்தைச் செய்யும் மனவுறுதியில்லாமல் போலித்தவம் செய்வோர், உலக இன்பங்களுக்கு ஆசைப்பட்டு, தவம் செய்கின்றோம் எனக்கூறி காலத்தை வீணடிக்கின்றனராம். காலத்தை வீணடிப்பதையே அவம் செய்தல் என்கின்றார்.

இப்படி போலியாக தவம் செய்கின்றோம் என நடிப்பவரை நம்பியே, பெரும் பணக்காரர் பலர் தாம் கொள்ளை அடித்த காசை போலிச்சுவாமிமாரின் கால்களில் கொட்டி அவர்களை மேலும் மேலும் மமதையிலும் இன்பங்களிலும் வீழ்த்தி, சுகபோகத்தில் மூழ்கடித்து, காலத்தை வீணடிக்க வைக்கின்றனர். தவம் செய்வோரை தவம் செய்யும்படி விட்டுவிட்டு, பணமிருப்போர்  உண்மையாகத் துன்பப்படுவோருக்கு உதவினால் துன்பப்படுவோரும் மகிழ்வடைந்து தவம் செய்வோரும் அவம் செய்யாதிருப்பர். அதற்காகவே திருவள்ளுவர் இக்குறளை வடித்தார் போலும். 

பிறர் நலனை என்றும் சிந்தித்துப் பாராது, தான் முத்தி அடையவேண்டும் என்ற தன்நலத்தோடு  தமது கருமத்தை செய்வோரே தவம் செய்வோர். மற்றையோர் போலியாக நடித்து வீணாகக் காலத்தைக் கழிக்கின்றனர்.

Friday, 10 August 2012

தமிழ்ச்சுவை

தமிழ் அன்னை

சுவை சுவை தமிழ்ச்சுவை சுவைத்திட வந்தேன்
சுவைத் தமிழ் சுவையில் இயற்றமிழ் உண்டேன்
இயற்றமிழ் சுவையில் இசைத்தமிழ் கண்டேன்
இசைத்தமிழ் சுவையில் நாடகம் பயின்றேன்
நாடகச் சுவையில் முத்தமிழ் அறிந்தேன்
முத்தமிழ் சுவையில் மூழ்கியே நின்றேன் 
                                                                                              
இனிதே,
தமிழரசி.

Wednesday, 8 August 2012

தாய்மொழி தமிழ் - பகுதி 7

தமிழி எழுதுக்களை உலக நாடுகளில் சென்று காண முன்னர், தமிழர் உருவாக்கிய சில எழுத்து வடிவங்களை அறிதல் நன்று. அதற்கு முதலில் தமிழுடன் அல்லது தமிழுக்கு முந்திய மொழியென பல அறிஞர்களால் நம்பப்பட்ட வடமொழியாகிய சமஸ்கிருதம் பற்றி சிறிது பார்ப்போம்.

இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத்துறை 1887ல் கல்வெட்டுப்பிரிவு என்று ஒன்றை தொடங்கினர். அவர்கள் இந்தியா முழுவதும் இதுவரை ஒரு இலட்சம் கல்வெட்டுகளை படிவெடுத்திருக்கின்றனர். இந்தியாவில் ஆயிரத்து அறுநூறுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்ட போதும் ஒரு இலட்சம் கல்வெட்டுக்களில் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட கல்வெட்டுக்கள் தமிழ் கல்வெட்டுக்களாகவே இருக்கக் காரணம் என்ன? எவராவது காய்தல் உவத்தல் இல்லாது நடுநிலையோடு சிந்திப்பார்களா? 

உலகில் பேசப்பட்ட மொழிகளில் எத்தனையோ மொழிகள் எழுத்துவடிவங்களைப் பெறாமலேயே அழிந்து இருக்கின்றன. எழுத்துருவைப் பெற்றவையும் கால ஓட்டத்தில் அழிந்தொழிந்து இருக்கின்றன. அழியாது வாழும் மொழிகள் யாவும் ஒன்றிலிருந்து ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்து வருவதை மனிதர்களாகிய நாம் புரிந்து கொள்வதில்லை. மனிதன் தான் எழுப்பிய ஒவ்வொரு ஒலிக்கும் குறியீடுகளை இட்டு உருவாக்கிக் கொண்ட இடுகுறிகளையே நாம் எழுத்து என அழைக்கிறோம். மொழியானது ஒரு சமுதாயத்தவரிடம் பலகாலம் பேசப்பட்ட பின்பே எழுத்து வடிவைப் பெறும்.

நெடுங்காலம் பேச்சு மொழியாகவே இருந்த மொழிக்கு உதாரணமாக சமஸ்கிருத மொழியை எடுத்துச் சொல்லலாம். ஏனெனில் சமஸ்கிருதம் ஒரு எழுதப்படாத மொழி. இது சமஸ்கிருதமொழி வல்லுநர் மாத்தூர் கிருஸ்ணமூர்த்தி போன்ற அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். சமஸ்கிருதத்திற்கு ‘எழுதாக்கிளவி’ (எழுதாதமொழி அல்லது எழுதாதசொல்) என்ற பெயரும் தமிழில் உண்டு. சம்கிருதம் என்ற பெயரே சேர்த்து உருவாக்கப்பட்டது எனும் கருத்தையே குறித்து நிற்கின்றது. [ Sam (together) + kirtam (created) = Samskirtam]

வேதங்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டதால் சமஸ்கிருதமே இறைவன் மொழி என்கிறார்களே அது உண்மையா? வேதங்களில் மிகப்பழமையானது இருக்கு வேதம். அதன் காலம் கி மு 1000 என்கிறார்கள். வேதங்களில் எந்த ஓர் இடத்திலும் சமஸ்கிருதம் என்ற சொல்லே இல்லை. 1982ல் அசடிக்கப்பட்ட என்சைக்லோபீடியா பிரிட்டானிக்கா (Encyclopediia Britanica) சமஸ்கிருத மொழிக்கான ஆதாரம் கி பி 150ல் பிராமி எழுத்தில் எழுதப்பட்ட கல்வெட்டே என்கிறது.

சமஸ்கிருதம் உருவாக்கப்பட முன்னர் இந்தியாவுக்கு வடக்கே இருந்து வந்தவர்கள் (ஆரியர்) பேசிய சண்டச (Chandasa) மொழியிலேயே வேதங்கள் எழுதப்பட்டன. அது மட்டுமல்லாமல் பாணினி எழுதிய அஷ்டகம் அல்லது பாணினீயம் என அழைக்கப்படும் சமஸ்கிருத இலக்கண நூலும் சண்டச மொழியிலேயே கி மு 400ல் எழுதப்பட்டது. [‘Indo-Aryan and Hindi’ S K Chatterji, page 63- 64]. எனவே சமஸ்கிருதம் வேதமொழி இல்லை என்பதோடு இறைவன் மொழியும் இல்லையாகிறது. 

மொழிகளுக்கு எழுத்து வழக்கில் இலக்கணம் இருப்பினும் பேச்சுவழக்கில் அவை விரைவாக இலக்கணங்களில் இருந்து வழுவி பிறமொழிகளுடன் கலந்து புதுமொழிகள் உருவாக இடம் தருகின்றன. நம்மொழி நமக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் எனைய மொழிகளைப் பேசுபவர்க்கும் அவர்களது மொழிகள் முக்கியமே. பிறமொழி பேசுபவருடன் எமது கருத்தைப் பரிமாற அவர்களது மொழியும் எமக்கு அவசியமே.

ஆதிமனிதன் பேசிய மொழியின் வளர்ச்சியே தமிழாகும். எனவே தமிழை இயற்கையாகத் தோன்றிய மொழி எனக் கூறலாம். பிறமொழிகளைப் பார்த்து உருவாக்கப்பட்ட மொழியல்ல. பிறமொழியிலிருந்து உருவாக்கப்பட்ட மொழிக்கு ஆங்கிலத்தைச் சொல்லலாம். பழைய ஆங்கிலத்தில் கி பி 11ம் நூற்றாண்டில் எழுதபட்டதாகக் கருதப்படும் ஆனால் எழுதியவர் யார் என்பதை அறியமுடியாத ‘Beowulf’ எனும் வீரகாவியமே ஆங்கிலத்திற்கான ஆதாரமாக இருக்கிறது. இக்காவியத்தை இன்றைய ஆங்கலத்தில் படித்து அறிய முடியாது.

தமிழ் அப்படிபட்ட மொழியல்ல. பண்டைய தமிழும் இன்றைய தமிழும் மாறிவிடவில்லை. கிறிஸ்த்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் தொல்காப்பியர் எழுதிய தமிழை இன்றைய தமிழ் தெரிந்த எவரும் வாசித்து அறியலாம். தமிழ் என்றும் மாறாது அன்று போல் இருப்பதுடன் பல வேற்று மொழிகளை உருவாக்கியதோடு வேற்று மொழிச் சொற்களையும் உள்வாங்கி இருக்கிறது. என்னினும் தமிழ் மற்ற மொழிகளின் துணையில்லாது தனித்து இயங்கக் கூடியது. 21ம் நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்த செம்மொழி எனும் உயர் புகழுக்கு அதுவும் ஒரு காரணமாகும். 

எந்தவொரு மொழியும் பிறமொழிச் சொற்களை உள்வாங்கிக் கொள்வதால் அழிந்து போவதில்லை. அதனை நம் முன்னோர் நன்கு உணர்ந்திருந்தனர். தொல்காப்பியர் தான் எழுதிய தொல்காப்பியத்தில் திசைச்சொல், வடசொல் பற்றிய குறிப்பைத் தந்துள்ளார்.
“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப்பனவே திசைச் சொற் கிளவி”
இதில் தொல்காப்பியர் திசைச்சொல் எனக் குறிப்பது செந்தமிழோடு சேர்ந்திருந்த அந்தந்த நாட்டுச் சொற்களையே.
“வடசொற்கிளவி வட எழுத்து ஒரீ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே”
வடக்கேயுள்ள மொழியின் சொல் அதன் மொழிக்குரிய வடஎழுத்தை நீக்கி தமிழெழுத்துடன் சேர்ந்து சொல்லாகும் என்கிறார். தொல்காப்பியரும் வடசொல் என்கின்றாரே ஒழிய சமஸ்கிருதம் என்று கூறவில்லை.
Bilingual edict (greek and Aramaic) by King Ashoka - Afghan National Museum

புத்தரும் கூட தனது பௌத்தமத போதனைகளை சண்டசமொழி அறிந்தவர்களாலே பரவச்செய்தார். அவரும் சமஸ்கிருதத்தை எந்த ஒரு இடத்திலும் கூறவில்லை. இதனால் புத்தரின் காலத்திலும் சம்ஸ்கிருதம் உருவாக்கப்படவில்லை என்பது பெறப்படுகின்றது. அசோகனின் கல்வெட்டில் கூட சமஸ்கிருத மொழி இல்லை. பௌத்த மதத்தின் போதனா மொழியாக வலம் வந்த சண்டசமொழி பின்னர் பிராமி, இலத்தீன், தேவநாகரி போன்ற மொழிகளின் எழுத்துக் குறிகளோடு சமஸ்கிருதமாக உருவெடுத்துள்ளது. தாய்மொழி தமிழ் தொடர்ந்து காண்போம்.
இனிதே, 
தமிழரசி.

Monday, 6 August 2012

அடிசில் 32

கோதுமை அல்வா

                                             - நீரா -


























தேவையான பொருட்கள்:
கோதுமை மா  -  1½ கப் 
சீனி  -   ¾ கப்
நெய்  - ½ கப்
முந்திரிப்பருப்பு  -  6
ஏலக்காய் தூள்  - ½ தேக்கரண்டி

செய்முறை:
1.  முந்திரிப்பருப்பை சிறிதாக வெட்டிக்கொள்க.
2.  வாயகன்ற பாத்திரத்தில் அரைவாசி நெய்யை விட்டு சூடாக்கி அதில் வெட்டிய முந்திரிப்பருப்பை பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
3.  அப்பாத்திரத்தில் கோதுமை மாவைச் சேர்த்து இளஞ்சூட்டில் பொன்னிறமாக வறுத்துக் கொள்க.
4.  இன்னொரு பாத்திரத்தில் ¾ கப்  தண்ணீரில் சீனியைச் சேர்த்து சீனிகரைந்து குமிழிகள் தோன்றி, சீனிப்பாணி விரலில் ஒட்டும்வரை சூடாக்கவும். 
5.  வறுத்த மா உள்ள பாத்திரத்துள் இச்சீனிக்கரைசலைச் சேர்த்து இளஞ்சூட்டில் கட்டிபடாமல் கிளறவும்.
6.  கலவை ஒன்றாகச் சேர்ந்தது வரும் போது மிகுதி நெய்யைவிட்டு கிண்டி, முந்திரிப்பருப்பு,
ஏலக்காய் தூள் சேர்த்து நெய் பிரிந்து வரும் போது இறக்கவும். 
7.  நெய் பூசிய தட்டில் கொட்டி ஆறியதும் விரும்பியவடிவில் வெட்டிக் கொள்க.

Sunday, 5 August 2012

வீற்றிருந்தும் அருள்வான்



உள்ளமெனும் பொய்கையிலே நீராட வருவான் 
        ஓங்குபுகழ் சந்தமெல்லாம் ஓர்கணத்தில் தருவான்
கள்ளமில்லா நெஞ்சினிலே கரந்துறைய வருவான்
        கீதத்தமிழ் பாவினிசை கருத்தினில் அருள்வான்  
வெள்ளமனத் தாமரையில் விரைந்திருக்க வருவான்
        வேண்டுபுகழ் வகையெலாம் வேண்டிட அருள்வான் 
வள்ளல்லவன் சிந்தையிலே நிறைந்திருக்க வருவான்
       வீங்குபுகழ் வயலூரில் வீற்றிருந்தும் அருள்வான்
இனிதே,
தமிழரசி.

Saturday, 4 August 2012

குற்றக்கணக்கை எழுதும் கணக்காளர் யார்?



உலக உயிர்களின் பிறப்பை நீக்கி முத்தியைக் கொடுப்பதால் இறைவனை பிறவிப்பிணி தீர்க்கும் மருத்துவன் என்று அழைக்கிறோம். அதனால் அவருக்கு வைத்தியநாதர் என்ற பெயரும் உண்டு. இறவனை பாடல் நாயகனாக, ஆடல் அரசனாக, நோய் தீர்க்கும் மருத்துவனாக - வைத்தியநாதனாகவும் பார்த்திருக்குறோம். நம் முன்னோர்  எவராவது கணக்காளனாகக் கண்டனரா? சித்திரபுத்தரனார் நாம் செய்யும் பாவ புண்ணியங்களை எழுதுவார் என்பர். ஆனால்

“வல்லார்கள் வல்ல வகையாற் தொழில் புரிதல் 
எல்லாம் உடனே ஒருங்கிசைந்து - செல்காலை
முட்டாமல் செய்வினைக்கும் முன்செய் வினைக்கும் செலவு
பட்டோலை தீட்டும் படி போற்றி"                                                                                        
                                           - (போற்றிப் பஃறொடை: 73 - 76)

என போற்றிப்பஃறொடை சொல்கிறது. உமாபதி சிவாச்சாரியார் எழுதிய சைவசித்தாந்த நூல்களில் ஒன்று போற்றிப்பஃறொடை. அவர் உலக வாழ்க்கையில் ஒருவாறு இசைந்து வாழும் நேரத்தில் எம்மை அறியாமல் செய்கின்ற செயலையும், முன்னே செய்த செயலையும் வரவு செலவுக் கணக்காக பட்டோலையில் எழுதி வைப்பதைப் போற்றியுள்ளார். பட்டோலை என்பது பட்டுத்துணியில் தூரிகை கொண்டு மையில் தோய்த்து எழுதும் ஆவணமாகும். 

அதை யார் எழுதுகின்றார் என்ற குறிப்பு அதில் இல்லை. நாம் ஒரு கணக்குப் போட இறைவன் இன்னொரு கணக்குப் பண்ணுகிறான் என்கிறோம். பிரமன் எழுதிய எழுத்துப்படி தான் யாவும் நடக்கும் என்கின்றோம். அதற்கு அரண் சேர்ப்பதுபோல் அருணகிரிநாதரும் கந்தரலங்காரத்தில்
கால்பட்டு அழிந்தது இங்கு என்தலைமேல் அயன் கையெழுத்தே”
என்று பாடியுள்ளார். இதன்படி தலை எழுத்து என்று கூறப்படுவது நாம் இப்பிறப்பு எடுக்க முன்னர் செய்த செயல்களின் கணக்காகும். போற்றிப்பஃறொடை 
முட்டாமல் செய்வினைக்கும் முன்செய் வினைக்கும் செலவு 
பட்டோலை தீட்டும் படி போற்றி”
எனக்கூறுவதில் முட்டுதல் என்றால் தீண்டுதல். முட்டாமல் செய்வினைக்கும், என்றால் தீண்டாமல் - எம்மை அறியாமல் செய்கின்ற செயலாகும். போற்றிப்பஃறொடை அறியாமற்செய்கின்ற செயலுக்கும், நாம் முன்னர் செய்த செயலுக்கும் சேர்த்து, கணக்கு எழுதப்படுவதாகக் கூறுகிறது. ஆதலால் நாம் செய்யும் செயல்களைக் கொண்டு நிலுவை எப்படி இருக்கிறது என தலையெழுத்தை வைத்து சரி பார்க்கப்படுகிறது எனக்கொள்ளலாம். அந்தக் கணக்கை சித்திரகுப்தன் (சித்திரபுத்திரனார்) எழுதுவாரா? இறைவன் எழுதிவாரா? யார் எழுதுவார்? என்ற கேள்வி எழுகிறது. 

இறைவனுக்கு பாடலும் ஆடலும் மருத்துவமும் தெரியுமெனக் கூறும் அருளாளரான திருநாவுக்கரசு நாயனார் கணக்காளராகவும் காட்டுகிறார். இறைவனை, யார்யார் அன்பு பெருக்கெடுக்க ஆனந்தக் கண்ணீர் சொரிந்து மலர் தூவித் துதித்து வணங்குகின்றார் என்பதையும் யார்யார் காலத்தை வீணே கழித்து இறைவனை புறக்கணிக்கின்றார் என்பதையும் இன்னம்பர் ஈசன் எழுதி வைப்பார் என்கிறார். 

தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற்று அரற்று கின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே!                
                                                    - (பன்.திருமுறை: 5: 21: 9)

திருநாவுக்கரசரின் இக்கூற்றை இன்றைய நிலையில் சொல்வதானால் கோயில் திருவிழாவை செய்த பின் எப்படி திருவிழாவைச் செய்தோம் என்பதை பல ஊடகங்களில் செய்தியாகப் போட்டும், அப்படிச் செய்தோம் இப்படிச் செய்தோம் என்று பெருமையாகச் சொல்லி பொழுதைப்போக்கி மமதையோடு இருப்போர் யார்யார் என்பதையும், தூமலர் தூவித் துதிக்கவிடாது கோயில் குருக்கள்மாரும், கோயில் அறக்காவலரும் தடையாக நிற்பினும் கோயிலின் ஒரு மூலையில் இருந்து தன்நிலையை எண்ணி கணப்பொழுது  உள்ளன்போடு துதிப்போர் யார்யார் என்பதையும் இன்னம்பர் என்ற இடத்திலுள்ள ஈசன் எழுதி வைப்பாராம். அதாவது யார்யார் என்னென்ன குற்றம் செய்கின்றனர் என்ற கணக்கை குற்றக்கணக்காக ஈசன் எழுதி வைப்பார். கீழ் + கணக்கு = கீழ்க்கணக்கு. கீழ் என்பது குற்றம் எனும் பொருளில் வருகின்றது. கீழ்க்கணக்கென்பது குற்றக்கணக்காகும். இந்த குற்றக்கணக்கை வைத்தே எமது அடுத்த பிறப்பை தீர்மானிப்பர் போலும். 

கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் இன்னம்பர் ஈசன் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் பங்குனி மாதம் 13ம், 14ம், 15ம் திகதிகளிலும், ஆவணி மாதம் 31ம் திகதியிலும், புரட்டாதி மாதம் 1ம், 2ம், திகதிகளிலும் சூரிய ஒளிக்கதிர் மூலவர் மீது படும்படியாகக் கட்டியிருப்பது தமிழர் கட்டடக்கலையின் ஒரு சிறப்பாகும்.  இவ்வூர் இன்னம்பூர் என அழைக்கப்படுகின்றது.
இனிதே,
தமிழரசி.

Thursday, 2 August 2012

பாட்டி! பாட்டி! எங்கே போறாய்? - பகுதி 2

ஆசைக்கவிதைகள் - 39
பாவற்குளம் - வவுனியா

பேரனும் பாட்டியும் வழிநடைப் பாடலாக பாடிவந்த நாட்டுப் பாடலை முந்திய ஆசைக் கவிதையில் (38) பார்த்தோம். வழி நடந்து செல்லும் களைப்பு தெரியாது இருக்க வழி நடைப் பாடல்களைப் பாடிச் செல்லும் பொழுது குறித்த இடத்தை அடைந்ததும் அவ்விடத்தின் பெயரைக் கூறி அப்பாடலை முடிப்பர். உதாரணமாக முந்திய ஆசைக்கவிதையில் என்ன குளம்? என்ற கேள்வி கேட்கப்படும் போது குளத்தைச் சென்றடைந்தால் இந்தக் குளம் என அப்பாடலை முடிப்பர். அல்லது பாகற்குளம் என்றோ பொரியகுளம் என்றோ கூறி வழிநடைப் பாடலைத் தொடர்வர். மீண்டும் பாகற்குளம் எனக் கூற, என்ன பாகல் எனக் கேள்வி பிறக்கும். ஆனால் பதில் முந்தியது போல் இல்லாமல் வேறு விதமாக வரும். சிறுவர்கள் கேட்ட கேள்வியையே கேட்டாலும் பெரியவர்கள் வெவ்று பொருட்களைக் கூறி அவர்களின் தமிழ்ச்சொல் ஆற்றலின் அறிவை வளர்ப்பர். இப்படிச் சிறுவர்கள் வழிநடைப் பாடல்களைப் பாடும் பொழுது அவர்களை அறியாமலேயே பல புதிய தமிழ்ச்சொற்களைத் தெரிந்து கொள்வர். இது நம் தமிழ் முன்னோரின் குழந்தை வளர்ப்புத் திறனைக் கூறுவதோடு அவர்கள் சிறுவர்களின் கல்விக்குக் கொடுத்த முதன்மையையும் சொல்கிறது.

என்ன பாகல்?
பச்சைப் பாகல்
என்ன பச்சை?
மரத்துப் பச்சை
என்ன மரம்?
முதிரை மரம்
என்ன முதிரை?
பூ முதிரை
என்ன பூ?
எருக்கம் பூ
என்ன எருக்கு?
வெள்ளெருக்கு
என்ன வெள்ளை?
பால் வெள்ளை
என்ன பால்?
பசும் பால்
என்ன பசு?
காராம் பசு
என்ன கார்?
மேகக் கார்
என்ன மேகம்?
மழை மேகம்
என்ன மழை?
பருவ மழை
என்ன பருவம்?
பிள்ளைப் பருவம்
என்ன பிள்ளை?
தென்னம் பிள்ளை
என்ன தென்னை?
கீற்றுத் தென்னை
என்ன கீற்று?
மின்னல் கீற்று
என்ன மின்னல்?
இடி மின்னல்
என்ன இடி?
பேர் இடி
என்ன பேர்?
பறவைப் பேர்
என்ன பறவை?
காட்டுப் பறவை
என்ன காடு?
பனங் காடு
என்ன பனை?
கொட்டுப் பனை
என்ன கொட்டு?
முரசு கொட்டு 
என்ன முரசு?
அரச முரசு
என்ன அரசு?
பூ அரசு
என்ன பூ?
முருக்கம் பூ 
என்ன முருக்கு?
முள் முருக்கு
என்ன முள்?
மீன் முள்
என்ன மீன்?
குளத்து மீன்
என்ன குளம்?
இந்தக் குளம்/பாகற்குளம் 
                                               -  நாட்டுப்பாடல் (பாவற்குளம்)
                           - (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 
இனிதே,
தமிழரசி.