Monday, 15 May 2017

தோழமை ஒன்றே தோள் கொடுக்கும்

மூண்டெழு துன்பங்கள் முழுமையும் நீக்கும்
          முழுமுதலாம் எந்தை முக்கண்ணன் மகனை
நீண்டெழு பிறப்பறுக்க நித்தமும் தொழுவோர்க்கு
          நற்கருணை அருள் நயன ஒளிதன்னால்
மீண்டெழு பிறவிதனை பிறவாதே காத்து
          மிண்டு மனத்தோர் முண்டு அகற்றி
தீண்டெழு சுடராய்த் தோன்றும் அவன்
          தோழமை ஒன்றே தோள் கொடுக்கும்
இனிதே,
தமிழரசி.

Thursday, 11 May 2017

உயிரோடு உறவாடும் உயிரே!

           
                        பல்லவி
உனைநான் அறிவேன் கந்தக் கடம்பா
என்னுயிரோடு உறவாடும் உயிரே
                                                 - உனை நான்

                    அனுபல்லவி
நினைத் தேடி வருவோர்க்கு என்றும்
நிதிநல்கி நற்குணம் நல்கு கந்தா
                                                 - உனை நான்

                      சரணம் 
தினைப் போதும் நினையாது வினையாலே
தடுமாறி தடம் மாறிப் போகுமெமை
மனைநாடி மனம்நாடி ஓடி வந்தே
மலர்க்கழல் காட்டி மணம் ஊட்டுவாய்
                                                    - உனை நான்
இனிதே,
தமிழரசி.

Wednesday, 10 May 2017

குறள் அமுது - (134)


குறள்:
நாச்செற்று விக்குமேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்                               - 335

பொருள்:
நாக்கு அடங்கி விக்கல் எழுவதற்கு [இறப்பதற்கு] முன் நல்ல செயல்களை விரைவாகச் செய்யவேண்டும்.

விளக்கம்:
இத்திருக்குறள் நிலையாமை என்னும் அதிகாரத்தில் ஐந்தாவது குறளாக இருக்கிறது. மனித வாழ்க்கையின் நிலை இல்லாத தன்மையைப் பற்றி இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் எடுத்துச் சொல்கிறார். கல்விச்செல்வமோ பொருட்செல்வமோ எது இருந்தாலும் பின்னர் கொடுப்போம் என்று காலம் கடத்தாமல் இல்லாதோருக்கு அள்ளிக் கொடுக்க வேண்டும். வாழ்க்கை நிலையற்றதாதலால் நன்மைகளை விரைந்து செய்தல் நன்று.

சங்க காலத்தில் அரசாண்ட புகழ்மிக்க சோழ மன்னர்களில் நலங்கிள்ளியும் ஒருவன். அவன் போர் புரிவதிலும் அதனால் கிடைக்கும் வெற்றியில் மகிழ்வதிலும் ஈடுபாடு உள்ளவனாக இருந்தான். பாடல் இயற்றும் ஆற்றல் மிக்க புலவனாகவும் விளங்கிய அவனுக்கு, உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற சங்கப்புலவர், நிலையாமையைச் சுட்டிக்காட்டி, அறச்செயல்களில் ஈடுபடச்சொன்ன புறநானூற்றுப் பாடலில் ஒன்று:

"தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும் 
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் 
அறியா தோரையும் அறியக் காட்டித் 
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து 
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் 
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி 
அருள வல்லை ஆகுமதி''

"நலங்கிள்ளியே! வளர்ந்தது ஒன்று குறையும்; குறைந்தது ஒன்று பின் வளரும்; பிறந்த ஒன்று இறக்கும்; இறந்த ஒன்று பின் பிறக்கும். கல்வியறிவு அற்றவர்களும் அந்த உண்மையை அறியச்செய்ய வானில் நிலவு தோன்றியும் மறைந்தும், வளர்ந்தும் தேய்ந்தும் நிலையாமையைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே, வறுமையால் வருத்தமுற்று வந்தோர்க்கு, பசியால் உட்குழிந்த அடிவயிற்றைப் பார்த்துப் பொருளை வாரி வழங்கி அருள்புரி என்கிறது.

சேர்த்த பொருளை 'வறுமையில் வாடுவோருக்குக் கொடு!' என  அரசனுக்குச் சொல்லும் புலவர் உலகின் நிலையற்ற தன்மையை எடுத்துச் சொல்தோடு நின்றுவிடவில்லை. உயிர்கள் மட்டுமல்ல இவ்வுலகமும் நிலையற்றது. ஆதலால் இவ்வுலகில் பொருளை குவித்து வைக்காமல் பிறருக்கு வழங்கி நன்மை புரிக என்று அறிவு புகட்டுகிறார்.

பிறந்த உயிர்கள் யாவும் இந்தெந்த வயதில் இறக்கும் என்ற உறுதிப்பாடு இல்லை. ஆறிலும் சாவு வரலாம். நூறிலும் வரலாம். ஆதலால் நற்செயல்களை செய்யக்கூடிய நேரங்களில் முதலிலேயே செய்தல் வேண்டும் என்பதனையே இத்திருக்குறள் வலியுறுத்துகிறது.

Sunday, 7 May 2017

நாயனையார் நட்பு வேண்டும்


இந்த உலகில் வாழும் மனிதர் யாவரும் இனம், நிறம், மதம், பண்பாடுகளால் மாறுபடுகின்றனர். எனினும் நண்பைப் பேணும் தன்மையில் அந்த மாறுபாட்டினைக் காணமுடியாது. அத்துடன் இளமை, முதுமை என்ற வயதெல்லையோ ஆண், பெண் எனும் வேறுபாடோ நட்புக் கொள்வதற்குத் தடை போடுவதில்லை. இரத்த உறவைக் கைகழுவுவோர் கூட நட்பைக் கைவிடார். அந்த அளவுக்கு நண்பு மனித மனங்களைப் பிணைத்து வைக்கிறது. நட்பெனும் பிணைப்பில் கட்டுண்டோர் நாடுவிட்டு நாடு வெகுதூரத்தில் வாழினும் அவர்களது நட்பு என்றும் அழியாது.

இத்தகைய உயர்வான நட்பில் கூட நல்ல நட்பு, தீ நட்பு, கூடா நட்பு எனப் பலவகை உண்டு. நட்பில் உள்ள இவ்வேறுபாடுகளைத் திருவள்ளுவர் ஐந்து அதிகாரங்களில் [79 - 83] ஆராய்ந்து கூறியுள்ளார். அவை நட்பின் ஆழ அகலங்களை அறிந்து கொள்ள எமக்குத் துணை செய்கின்றன. தீய நட்புக்கும் கூடா நட்புக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? தீ நட்பு என்பது தீய குணமுள்ளோர், அறிவில்லாதோர், செல்வம் உள்ளபோது நட்பாகவும் அது இல்லாதபோது விலகிசெல்வோர் போன்றோருடன் கொள்ளும்  நட்பாகும். கூடாநட்பு அது நெஞ்சில் வஞ்சனையும் தம் தேவைக்காக உதட்டில் தேனுமாக நடிப்போரது நட்பாகும்.

பன்றிக் குட்டிகளுடன் சேர்ந்த கன்றும் சேற்றில் கிடந்து புரளும். அதுபோல் மனிதனும் சார்ந்ததன் வண்ணமே. எனவே எப்படிப்பட்டோரின் நட்பை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் தாம் கண்ட அநுபவத்தால் அறிந்து கூறியுள்ளனர்.

யானை வலிமை மிகுந்தது. உருவத்தில் பெரியது. ஆனால் நாய் வலிமை அற்றது. யானையுடன் ஒப்பிடும் பொழுது உருவத்தில் மிகவும் சிறியது. நாம் நட்புக் கொள்வதற்கு யானையா? நாயா? சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடமே உண்டு. யானை வன்மம் கொண்டது. அது தனக்கு உணவளித்துப் பாதுகாத்த பாகனையே அடித்து மிதித்துக் கொல்லும். நாய் நன்றியுள்ளது. வளர்த்தவன் எறிந்த வேல் அதன் உடலில் பாய்ந்திருந்தாலும் தன் வாலைக் குழைத்து அவனது காலடியில் கிடக்கும். எனவே நாய் போன்றோரின் நட்பை அணைத்துக் கொள்ளவேண்டுமாம்.

“யானை அனையார் நண்புஒரீஇ நாயனையார்
கேண்மை தழீஇக் கொளல்வேண்டும் யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்”                             
                                             - (நாலடியார்: 213)

எத்தகையோரின் நட்பைப் பேணிப் பாதுகாக்கவேண்டும் எப்படிப்பட்டோரின் நட்பைக் கழற்றி விடவேண்டும் என்பதை இந்த நாலடியார் பாடல் எடுத்துச் சொல்கிறது. 
இனிதே,
தமிழரசி.

Saturday, 6 May 2017

அலைகடல் அரிப்புக்கு அலையாற்றி!

அலையாற்றி [கண்ணா மரங்கள்]

இயற்கை அன்னை அள்ளிக் கொடுத்த பலவகைக் கொடைகளைக் கொண்ட இடம் புங்குடுதீவு. ஆனால் புங்குடுதீவாராகிய நாம் செய்த செய்யும் புறக்கணிப்புகளால் இயற்கையின் வளங்களை இழந்து கொண்டிருக்கிறோம். அப்படி என்ன புங்குடுதீவில் இருக்கிறது என்று கேட்போர் ஒருமுறை கண்ணாத்தீவுக்குச் சென்று வாருங்கள். நம் முன்னோர் கண்ணாமரங்கள் வளர்ந்து இருந்த தீவைக் கண்ணாத்தீவு என அழைத்தனர். அது நம் புங்குடுதீவிற்கு மிக அருகே உள்ள ஒரு சிறு தீவு. நம் கண்ணாத் தீவு சிறு மீன், நண்டு, இறால் போன்றவற்றின் உறைவிடமாய் இருந்தது. அதன் கரையோர மணலில்
சிறு நண்டு மணல் மீது படமொன்று கீறும்
சிலவேளை இதை வந்து கடல் கொண்டு போகும்”
என்ற உருத்திரமூர்த்தியின் வரிகளை சிறு நண்டும் கடலும் நாளுமே நடாத்திக் கொண்டிருந்தன.

நெய்தல் நிலத்து சங்க இலக்கியப் பாடல்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக என் தந்தை கண்ணாத்தீவுக்கு என்னை முதன் முதல் அழைத்துச் சென்றார். அதற்கு முன் கடல்வாழ் உயிரினங்கள் எப்படி வாழ்கின்றன என்பதை அறிந்திராத எனக்கு கண்ணாத்தீவில் அவற்றை நேரடியாகக் காட்டிக் கற்றுத் தந்தார். 
நீருக்கு மேல் சுவாசிக்கும் வேர்கள்

கடல்வாழ் உயிர்கள் ஒன்றினுள் ஒன்று தங்கி ஒன்றினை ஒன்று உண்டு வாழ்வதை அறிவதும் ஓர் அநுபவமே. கண்ணா மரங்கள் வேரினால் சுவாசிப்பதற்காக வேரைக் கடல் நீருக்கு மேலே வைத்திருப்பதைப் பார்ப்பது ஓர் அழகு. இவ்வேர்களின் இடையே ஆயிரமாயிரமாகச் சிறு மீன்கள் மின்னியாச் சுழன்று நாட்டியமாடிச் செல்வதும் ஓர் அற்புதம். பெரிய மீன்களிலிருந்து தப்பி தம்முயிரைக் காக்க கண்டல் வேர்களிடையே பதுங்கும் இறால்களின் கண்ணாமூச்சு விளையாட்டு ஓர் ஆனந்தம். கண்ணா மரவேர்களில் சறுக்கிச் செல்லும் நண்டு வளைபுகுவது ஓர் எழில். கடல்வாழ் உயிரினங்கள் பற்றி அறியவிரும்புவோர்க்கு கண்ணாத்தீவு ஓர் அமுதசுரபி. 

இத்தகைய அழகை சங்ககாலப் பெண்கள் பார்த்து மகிழ்ந்து விளையாடியதை சங்க இலக்கியம் காட்டுகிறது.
“சேர்ப்புஏர் ஈர்அளை அலவன் பார்க்கும்
சிறுவிளையாடல்”                   
                                      - (நற்றிணை: 123: 10 - 11)

என அளையில் இரண்டு இரண்டாகச் சேர்ந்திருந்த நண்டுகளைப் பார்த்து விளையாடிய கன்னியரை நற்றிணை சொல்கிறது.

இன்று கண்ணாத்தீவு எந்த நிலையில் இருக்கிறது? புங்குடுதீவின் வட கிழக்கே கண்ணாத்தீவையும், வடமேற்கே சற்றுப் புங்குடுதீவுக்கு உள்ளே கண்ணாப்பிட்டியையும் பார்க்கலாம். கண்ணாப் பிட்டியை ஏனோ முனிவர் பிட்டி என்றும் அழைக்கின்றனர். ஊருக்குள் இருக்கும் மரங்களை விட கண்ணாத்தீவிலும் கண்ணாப்பிட்டியிலும் உள்ள மரங்கள் கொஞ்சம் கொடுத்து வைத்தவை. இயற்கை புங்குடுதீவின் கடல் அரிப்பைத் தவிர்ப்பதற்கென்று கொட்டிக் கொடுத்த கொடை இந்தக் கண்ணா மரங்கள் என்பேன்.

அலையாற்றி பற்றிக் கூறாமல் கண்ணாமரம் பற்றிச் சொல்கிறேனா? அலையாற்றி மரங்களில் ஒருவகையே காண்ணாமரம். ஆற்று நீர் கடலோடு கலக்கும் நெய்தல் நிலக் கழிமுகங்களில் பெரும்பாலும் அலையாற்றி மரங்கள் வளரும். அதாவது நன்னீராறு கடலுடன் கலக்கும் இடத்தை கழிமுகம் என்பர்.  எனவே அந்நாளில் புங்குடுதீவில் நந்நீர் ஆறு ஓடியது என்பதற்கும் சான்றாக நிற்பன அலையாறி மரங்களே! அந்த ஆற்றின் அடிச்சுவடே இப்போதும் மழைக்காலங்களில் கள்ளியாறாய் கேரதீவின் மூன்று பக்கமும் சுற்றி ஓடி கடலோடு கலக்கிறது. சுவடே இன்றி அழிந்து ஒழிந்த சரஸ்வதி நதியை தேடிப் பாயவைக்கும் தற்காலத்தில் நம் புங்குடுதீவின் உயிர்நாடியாம் கள்ளியாற்றுக்கு உயிர் கொடுக்க முடியாதா!

கள்ளியாற்றுக்கு உயிர் கொடுக்கிறோம் எனக்கூறி எவராவது சென்று கள்ளியாற்றை ஆழப்படுத்தவோ அகலப்படுத்தவோ JCP அல்லது Bulldozerஐக் உடனே கொண்டு சென்று இறக்கி வேலை செய்யத் தொடங்காதீர்கள் என என் உறவுகளைக் கேட்கிறேன். ஏனெனில் அங்கிருக்கும் பல நூறு நன்னீர் ஊற்றுக் கண்களை நாம் அடைத்து விட நேரிடும். அந்த ஊற்றுக் கண்களை நாம் கண்டறிய வேண்டும். அதற்கு என்ன செய்வது? அடுத்த பதிவில் அதனைச் சொல்கிறேன். 'இன்றும் புங்குடுதீவில் நன்னீர் உண்டு' என்னும் பதிவைப் பாருங்கள்.

நான் புங்குடுதீவில் பிறந்தவளும் அல்ல. வளர்ந்தவளும் அல்ல. ஆனால் என் முன்னோர் பல நூறு ஆண்டுகளாக காதல் மொழிபேசிக் களித்திருந்த இருந்த இடம் புங்குடுதீவு.  அந்தப் பற்றில் புங்குடுதீவின் வரலாறுகளைச் சுட்டிக் காட்டிய என் தந்தையுடன் [பண்டிதர் மு ஆறுமுகன்] புங்குடுதீவைச் சுற்றி சனி, ஞாயிறு நிலவொளியில் நடை பயின்றிருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கே புங்குடுதீவு மேல் தீராக் காதல் இருக்கும் போது அங்கு பிறந்து வளர்ந்து நடைபயின்ற உங்களுக்கு நம் ஊரின்மேல் உயிரே இருக்கும். எனவே ஊரின் புவியியல் தன்மையை அழிக்கும் கொடுஞ்செயலை செய்யமாட்டீர்கள் என  நம்புகிறேன்.

கள்ளியாறு மீண்டும் உயிர்பெற்றால் அலையாற்றி மரங்கள் பல்கிப் பெருகி பெருவனமாக மாறும். அலையாற்றி மரங்களில் மோதும் பேரலைகள் சிதறிச் சிறு நுரையாகக் கரைந்து போகும். இவ்வாறு கடலில் எழுந்து வரும் பேரலைகளை அமைதியாக்கி ஆற்றுப்படுத்திய மரங்களை அலையாற்றி என்றனர். கொதித்துப் பொங்கும் குடிநீரை ஆற்றிக் குடிப்போம் அல்லவா. அப்படி வேகமாகப் பாய்ந்து வரும் பேரலைகளை இம்மரங்கள் ஆற்றின. கொதிநீரை ஆற்றித்தா என்று கூறுவதை ‘ஆத்தித்தா’ என்பது போல அலையாற்றி மரங்களை ‘அலையாத்தி’ என்கிறார்கள். இதற்கும் ‘ஆத்தி’, ‘அத்தி’ மரங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை. 
தில்லை மரப்பூ

அலையாற்றி என்பது சதுப்பு நிலத்தாவரங்களின் பொதுப்பெயர் எனலாம். ஆற்றிவகையில் அலை ஆற்றி, வெள்ள ஆற்றி என இருவகையுண்டு. தில்லை நடராசன் திருநடம் செய்யும் தில்லைவனமும் [சிதம்பரம்] அலையாற்றிக் காடே. தில்லை, கண்டல், சுரபுன்னை போன்றவற்றின் பொதுப்பெயரே அலையாற்றி. கண்டல் மரத்திலும் பல இனமுண்டு. சிறுகண்டல், செங்கண்டல், கருங்கண்டல், தேன்கண்டல். தேன்கண்டல் மரத்தை கண்ணா என்பர். இலங்கையில் மட்டும் மரம், செடி, புல் என நாற்பதுக்கும் மேற்பட்ட கண்டல் தாவரங்கள் இருக்கின்றன. கடல் அலை கண்டல் மரத்தை மோதுவதைக் காஞ்சிப்புலவர்
“புலவுத்திரை உதைத்த கொடுந்தாட் கண்டல்” 
                                                -(நற்றிணை: 123: 9)
எனக்கூறுகிறார். மீன்வாடை[புலவு] வீசும் கடலலை[திரை] மோதும்   [உதைத்த] வளைந்த அடியுடைய கண்டல்களாம்.

இயற்கையே உலகின் படைப்பையும் அழிப்பையும் செய்கிறது. தீவகங்களையும் ஆக்கியும் அழிப்பதும் இயற்கையே என்று நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எமக்கு ஆக்கங்களை அள்ளித் தரும் கடலலை மணல் அரிப்பால் அழிவையும் தருகிறது. கடற்பெருக்குக் காலங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுவதற்கும் அது வழிவகுக்கிறது. அதற்காக மணல் அரிப்பைத்தடுக்கத் தடுப்புச்சுவர் கட்டுவதால் பயனில்லை. அதுபோல் மழைக் காலத்தில் ஓடிவரும் நன்னீரைத் நாம் சேமித்து வைப்பதற்காகத் தேக்குவதும் புங்குடுதீவைச் சூழவுள்ள கடல்வாழ் உயிரினங்களின் சமநிலையைப் பாதிக்கும். 

அதற்கு நம் முன்னோர்கள் போல கடற்கரைச் சோலைகளை உருவாக்குவதே மிகச்சிறந்த வழியாகும். கடலும் கடற்சோலையும் போல சொல்லுக்கு பொருள் இருக்கவேண்டும் என்பதை 
“கல்லறை கடலும் கானலும் போலவும்
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்”
                                            - (பரிபாடல்: 15: 11 - 12)
என இளம்பெரு வழுதியார் கூறியுள்ளார். பொருள் விளக்கம் அற்ற சொல்லால் என்ன பயன்? அது போல கடற் சோலையில்லா கடலால் பயன் என்ன? அத்தகைய கடல் அழிவையே கொடுக்கும் என்பதை சங்கப்பாடல்களில் பல புலவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். கடலுயிர்கள் நல்ல காற்றைச் சுவாசித்து ஒளித்துப் பிடித்து விளையாடி இனப்பெருக்கம் செய்ய கடற்சோலை உதவுகிறது. அத்துடன் ஊரை அழிக்கவென்று ஓங்கி எழுந்து வரும் பேரலையை தடுத்து நிறுத்துவதும் கடற்சோலையே.

நம்முன்னோர்கள் புவியியல் உயிரியற் சமநிலையைப் பேணித் தம் வாழ்வியலை அமைத்துக் கொண்டனர். அவர்களுக்கு என்னென்ன வகையில் அலையாற்றி கைகொடுத்தது என்பதை நான் வெளியிட இருக்கும் ‘புங்குடுதீவு பற்றிய நூலில்’ கண்டுகொள்ளுங்கள்.
இனிதே,
தமிழரசி.

Friday, 5 May 2017

பட்டமரம் நானா! பச்சைமரம் நானா!


Bewdley sweet chestnut, Worcestershire (credit: The Tree Council)

வெட்டமரம் தேடி யலைந்து வெட்டும்
          வையத்து மானுடரே வந்தெனைப் பாரும்
பட்டமரம் நானா பச்சைமரம் நானா
          பகுத்துநீர் சொல்லின் பாரெலாம் பகரும்
நெட்டமரம் ஆனேன் நாநூ றாண்டாய்
          நாளுமே வளர்ந்து நாற்றிசை படரும்
கெட்டமரம் என்று கணத்தினில் வெட்டா 
          காத்திடும் மாண்பை கண்டிட வாரும்

                                                                                  - சிட்டு எழுதும் சீட்டு 138 
குறிப்பு:
இந்த மரம் 10 மீற்றரைவிட உயரமானது. இதன் கிளைகள் மரத்தில் இருந்து 23 மீற்றருக்கும் கூடிய நீளமானவை. கால் ஏக்கர் சுற்றளவான இடத்தில் பரந்து வளர்ந்து நிற்கிறது. இங்கிலாந்தில் உள்ள வயதான அதிசயமரங்களில் இதுவும் ஒன்று.
இனிதே,
தமிழரசி.

Wednesday, 3 May 2017

கோயிலில் இருப்பது யாரறிவார்!


ஆணோ பெண்ணோ அலியோ தானறியார்
          காணாக் கடவுள் கருணையினை
ஊணோ உயிரோ உடலோ பேரறியார்
          ஏனோ மனத்துனைத் தேடுகிறார்
காணாக் காட்சி காணப் பேதிலியார்
          காலை மாலை போற்றுகிறார்
கோண் ஆர்பிறை அணி அம்மாளே
         கோயிலில் இருப்பது யாரறிவார்
இனிதே,
தமிழரசி.

சொல்விளக்கம்:
காணாக்கடவுள் - காண்பதற்கு அரிய கடவுள்
ஊண் - உணவு
காணாக் காட்சி - பார்க்காத காட்சி
காண - பார்க்க
பேதிலியார் - மனக்கலக்கம் உடையோர்
போற்றுகிறார் - வணங்குகிறார்
கோண் ஆர்பிறை - வளைந்த அழகிய பிறை