Tuesday, 8 May 2012

பகுத்துண்டு வாழு!


காடுகள் வெட்டி கழனிகள் செய்தவன்
கழனியை மேவி கட்டிடம் கட்டினான்
நாடுகள் என்றும் நகரங்கள் என்றும்
நாத்தழும்பு ஏற நவின்றனன் மனிதன்.
காடுகள் இருந்த காலங்கள் தொடங்கி
கழனிகள் வந்த காலங்கள் தன்னிலும்
கூடுகள் கட்டி குலவிய பறவைகள்
நாடுகள் நகரங்கள் ஆகிய பின்னர்
கூடுகள் கட்ட கூரையை நாடி
குலவியே மகிழ்ந்தன குவலயம் எங்கும்.

சாடிடும் பகையின் தீரத்தைக் காட்ட
சணத்தினில் பொழிந்த குண்டுகள் அதனால்
நாடுகள் நகரங்கள் நொறுங்கின நன்றாய்
நானிலம் எங்கும் நர மாமிசம் 
காடுகள் போச்சு கழனிகள் போச்சு
கட்டாந் தரையாய் கல்லும் மண்ணும்
வீடுகள் இன்றி வீதிகள் இன்றி
வெளியெலாம் சிதறிக் கிடந்தன எங்கும்.

கூடுகள் இல்லாப் பறவைகள் கூடி
கூக்குரலிட்டு கூவின ஒன்றாய்!
காடுகள் வெட்டி வீடுகள் நாடுகள்
கட்டிடும் மானுடா! கருத்தினில் கொள்ளடா!
போடிடும் குண்டுகள் தன்னால் நிலம் 
பாழ்பட்டு நீரற்று பயனற்றுப் போவதை,
போட்டியை விட்டு பொறாமையை விட்டு
பகுத்துண்டு வாழு! நற் பண்போடு!
இனிதே,
தமிழரசி.                              

Monday, 7 May 2012

நெஞ்சக் கனல்

ஆண்மையும் வீரமும் போரும் தமிழரின் மறம் என எண்ணி வாழ்ந்தவன் தமிழன். அதனால் அவன் காலங்காலமாக இழந்தவை எண்ணில் அடங்கா. உலகெலாம் கூடி நடத்திய இன்றைய வன்னிப்போரை மட்டுமா ஈழத்து வன்னிமண் கண்டது? அதற்குமுன் எத்தனையோ போர்களைக் கண்ட களபூமியது. ஆங்கிலேயரும், ஒல்லாந்தரும், போர்த்துக்கீசரும், சாவகரும், சோழரும், சிங்களவரும் தாக்கத் தாக்க எதிர்த்து நின்று களமாடி பகைவரை வென்றாரும் வீழ்ந்தாருமாய் வாழ்ந்த தமிழரின் களபூமிதானே வன்னிமண்.

(கீழ்லுள்ள படம், 1870ல் இலங்கையில் யானை வயல் உழுததற்கான ஆதாரம்) 
[Image courtesy: Wade G Burck]




















அப்படி நடந்த ஒரு போரில் முல்லைத்தீவின் பேராற்றங்கரையிலிருந்த மணிபூங்குன்றும்  அழிந்தது.   அவ்வூரே “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என முழங்கிய மணிபூங்குன்றனார் ஊராகும். அங்கே உயிர் தப்பியோரில் வயதான ஒரு கிழவனும் ஒருகிழவியும் இருந்தனர். அவர்களுக்கு உறவு என்று சொல்ல ஒருவரும் இல்லாது எல்லோரும் இறந்துபோயினர். அந்த ஊரே அழிந்து, உண்ண உணவற்று இடுகாடாயிற்று. அவர்களால் அங்கு வாழமுடியாத நிலை. உயிர் தப்பியோர் வேறு வேறு ஊருக்குப் போய்விட்டனர். ஆதலால் அவர்கள் இருவரும் அந்த தள்ளாத வயதிலும் வேறு ஊர் செல்வதற்கு  பேராற்றங்கரையில் ஓடத்திற்காக காத்திருந்தனர். 
அந்நாளில் வன்னிப்பகுதி மக்களிடம் ஐம்பது, நூறு ஏக்கர் என வயல் நிலம் இருக்கும். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலத்தில் விளையும் நெற்கதிரை  மாட்டைக் கொண்டு போரடிக்கலாம் (சூடுமிதிக்கலாம்). ஐம்பது ஏக்கர்,  நூறு ஏக்கர் நிலத்தில் விளையும் நெற்கதிரை மாட்டைக் கொண்டு அடிக்க முடியுமா? அதனால் யானையைக் கொண்டே போரடிப்பர். ஆனையைக் கொண்டு சூடுமிதிப்போர் பெரும்வீரர்களாக இருப்பர்.
ஓடத்திற்காக காத்திருந்த போது அந்த மூதாட்டிக்கு அவர்களின் இளமைக்காலம் நினைவுக்கு வந்தது. இளமையில் சிங்கம் போலிருந்த தன் காதற்கணவன் முதுமையில் அல்லற்படுவதையும் போரால் ஊரழிந்ததையும் யாருமற்றவராய் தாமிருப்பதையும் எண்ணிக் கலங்குகிறார்.













பெண்:  மாடுகட்டிப் போரடிச்சா
                      மாளாது என்னு சொல்லி
             ஆனகட்டி போரடிச்ச
                       ஆளான சிங்கமல்லோ!
பெண்:  ஆடுகட்டக் கூடாம
                      அல்லற்படு நாளாச்சு
             ஊரு சனமெல்லாமே
                       கூண்டோடு போயாச்சி
பெண்:  ஓடுகின்ற ஆற்றோரம்
                       ஓடம்வரும் காத்திருப்பம்
             தேடிவர யாரிருக்கா
                        தேம்பியழக் கூடலயே!
                                          -  நாட்டுப்பாடல் (மணிபூங்குன்று - பேராற்றங்கரை)
                                           (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து) 

தமிழர் போர் செய்தபோது பெரும்பாலும் முதியோர்களை, பெண்களை, நோயுற்றோரை தவிர்த்தே செய்தனர். ஆதலால் இந்த அவலம் மேலைநாட்டினர் இலங்கை வரமுன்னர் நடந்திருக்க வேண்டும். 
ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த போரால் மனிதர் பிணங்களாய் கிடந்த அவலத்தை இன்னொரு நாட்டுபாடல் சொல்கின்றது. 









காட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓசாமியே
வீட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓசாமியே
மேட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓசாமியே
றோட்டுப் பக்கம் நூறு பிணம் - ஓசாமியே
இப்படி நடந்த போர்களைப் புறட்டிப்பார்த்தால் நெஞ்சம் கனன்று கனலாய்க் கொதிக்கின்றதே! ஏன்? ஏன்? நானும் பெண் என்பதால். மனிதன் தோன்றிய காலம் தொட்டு உலகவரலாற்றில் நடந்த போர்கள் காட்டும் மிகக் கேவலமான கொடிய உண்மை எது தெரியுமா? போர்களால் சிதைந்து சீரழியப்படுபவர்கள் பெண்கள் என்பதே அந்தக் கசப்பான உன்மை. பெண்கள் தங்கள் மானத்தை மட்டுமா இழக்கிறார்கள்? வீட்டை, நாட்டை, உற்றாரை, பெற்றாரை, கணவனை அவற்றுக்கும் மேலே தன் கருவில் சுமந்த பிள்ளைகளை இழக்கிறாளே! அதுவே பெண்மை நிலைகுலைந்து நிற்கும் பேரவலமாகும். கன்னியராகாத இளம் பிஞ்சுகளின் பெண்மை சூரையாடப்படுகின்றது. அவர்களின் தனிமனித சுதந்திரம் பறிக்கப்படுகிறது. ஏதேதோ காரணங்களுக்காக நடந்த போர்களின் முடிவுகளில் எல்லாம் போகப்பொருளாய் பெண்ணே இருக்கின்றாள். எந்தப் போரானாலும் அவற்றின் முடிவில் போகப்பொருளாய் பெண்களை இழிவுபடுத்தி, அழித்து ஒழிக்கும் ஒற்றுமை இழையோடிக் கொண்டே இருக்கின்றது.
அதனாலேயே சங்ககாலப் புலவரான ஔவையாரும் ‘நாடாய் இருந்தால் என்ன? காடாய் இருந்தால் என்ன? மேடாய் இருந்தால் என்ன? பள்ளமாய் இருந்தாய் என்ன? எந்த வழியில் ஆண்கள் நல்லவர்களாய் இருக்கிறார்களோ, அந்த வழியில் இந்த நிலமும் நல்லதாக இருக்கும்’ என்றார். 
“நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!”
நமது வாழ்வும் தாழ்வும் வாழும் நிலத்தை பொறுத்தில்லை. அந்தந்த நிலத்தில் வாழும் ஆண்களைப் பொறுத்தது என்கின்றார். ஔவையாரின் பெண்மையின் திண்மையே அவரை இப்படிப் பாடவைத்தது.
ஆதலால் உலகில் நடக்கும் எல்லா போர்களையும் அழித்து ஒழிக்கவேண்டிய பொறுப்பு பெண்ணிடமே இருக்கின்றது. ஏனெனில் அவளின் பிள்ளைகளே கொல்லப்படுகிறார்கள், உறுப்பிழந்தோராய், அறிவிலியாய் ஆக்கப்படுகிறார்கள். ஈழத்தின் மிகச் சிறிய இடத்தில் நடந்த போரிலே 93 ஆயிரம் விதவைகள் என்றால் உலக வரலாற்றின் போர்களிலே எத்தனை எத்தனை கோடானு கோடி பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டும், மானம் அழிக்கப்பட்டும் இருப்பர். நினைக்க உங்கள் நெஞ்சம் கனலாய் சுடவில்லையா? எனவே முள்ளிவாய்க்கால் போரின் போது மாபெரும் இன்னலை அனுபவித்த இளம்  பொண்ணொருத்தி உலகப் போர்களை அழிக்க போர்க்கொடி உயர்த்த வேண்டும். அவளிடமே அந்த ஆர்வமும் ஆற்றலும் எந்நேரமும் கனன்று கொண்டிருக்கும். நீ யாராக, எங்கே இருந்தாலும் இனிவாழும் பெண்களின் நலனுக்காக உலகப் போர்களை ஒழிக்க போர்க்கொடி தூக்கிப் புறப்பட்டு வா மகளே! என நெஞ்சக் கனலோடு இரந்து  கேட்கிறேன். மகளே! அதுவரை தமிழினம் அதிலும் தமிழ்ப்பெண்ணினம் நெஞ்சக் கனலை சுமந்து நிற்கும். 
இனிதே, 
தமிழரசி. 

Saturday, 5 May 2012

கடவுளை அவரவரின் அநுபவ அறிவு உணரும்


இந்த உலகில் வாழும் மனிதர்கள் தமக்கு மேலான சக்தியை கடவுள் எனப் போற்றியதோடு, அத்தகைய மேலாம் நிலையில் நின்று மனிதவாழ்வுக்கு வழிகாட்டிய ஒப்பற்ற மனிதரையும் கடவுள் எனப்போற்றுகின்றனர். மனிதராகிய நாமே அக்கடவுள்களின் பெயரால் மதங்கள் என்றும் சமயங்கள் என்றும் கூறி பல கடவுள் கொள்கைகளைப் படைத்துக் கொண்டோம். ஒரு மதம் கடவுள் உருவம் உள்ளவர் என்கின்றது. இன்னொன்று கடவுள் உருவம் இல்லாத அருவம் என்கிறது. பிறிதொன்று அண்ட வெளியே கடவுள் என்கின்றது. மற்றொன்று ஒளிமயமே கடவுள் எனச்சொல்கிறது. வேறொன்று தீயே கடவுள் எனக்கூறுகிறது. இப்படி சமயங்கள் ஒன்றோடு ஒன்று முரண்படுகின்றன. 
இவை அனைத்தையும் ஒன்றாகச் சொல்லும் சமயம் ஒன்று இருக்கிறது. அதுவே சைவசமயம். அது  தீ, ஒளி, ஆகாயம், அண்டம், உருவம், அருவம், அருவுருவம் என எல்லாமாய் நிற்பதே கடவுள் என்று கூறுகிறது. எனவே கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என முடிவெடுக்க கடவுட்கொள்கையின் உட்பொருளை நாம் நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். கடவுட்கொள்கையின் உட்பொருள் என்ன சொல்கிறது?
“உருவெனவும் அருவெனவும் உளதெனவும் இலதெனவும்
உழலுவன பரசமய கலையார வாரமற
உரையவிழ உணர்வவிழ உளமவிழ உயிரவிழ
உளபடியை உணருமவர் அநுபூதி ஆனதுவும்”      
                                                       - (சீர்பாதவகுப்பு )
என அருணகிரிநாதர் பாடியுள்ளார். இப்பாடலை கொஞ்சம் பிரித்துப் படிப்போமா?

“உருவு எனவும் அருவு எனவும் உளது எனவும் இலது எனவும்
உழலுவன பரசமயகலை ஆரவாரம் அற
உரை அவிழ உணர்வு அவிழ உளம் அவிழ உயிர் அவிழ
உளபடியை உணரும் அவர் அநுபூதி ஆனதுவும்”   

இப்பாடலில் அருணகிரிநாதர் கடவுளை உருவம் என்றும், அருவம் என்றும், உள்ளது எனவும், இல்லை எனவும் [உழலுவன] தடுமாறி வருந்தும் [பரசமய] மற்றைய சமயக் கூறுகளின் ஆரவாரங்கள் ஒழிய; [அவர்]நம் [அநுபூதி]அநுபவ அறிவுக்கு, மெய்ப்பொருள் விளங்கி, உண்மை உணர்வு வெளிப்பட்டு, உள்ளம் நெகிழ, உயிர் உருகி உள்ளதை உள்ளபடி உணரும் என்கிறார். எமது அநுபவ அறிவே எமக்குக் கடவுளை உள்ளபடி உணர்த்தும். ஆதலால் கடவுள் சமயங்களைக் கடந்தவர். அவரை எமக்குள்ளே தேடிக் கண்டுகொள்ளலாம்.   
குறிப்பு:
சொல்விளக்கம்:
உழலுதல் - வருந்துதல்
பரசமயம் - பிற/மற்றைய சமயங்கள்
பரசமய கலை - பிறசமயக் கூறுகள்
ஆரவாரமற - கூச்சல்கள் ஒழிய
அவிழ்தல் - விரிதல்/ மலர்தல்/தெரிதல்/ நெகிழ்தல் (தாமரை மொட்டவிழ)
உரையவிழ - சொல் விளங்க
உணர்வவிழஉணர்வு வெளிப்பட
உளமவிழ - உள்ளம் நெகிழ
உயிரவிழ - உயிருருக
உளபடி - உள்ளபடி 
அநுபூதி - அநுபவ அறிவு

ஆனதுவும் - வந்ததும்

இனிதே,
தமிழரசி.

Friday, 4 May 2012

சண்டேசுவர நாயனார்


பெரியது கேட்கின் எரிதவழ் வேளோய்! எனச் செந்தமிழால் தமிழ்க்குமரனான முருகணை விழிக்கும் ஔவை, இறைவறோ தொண்டர் தம் உள்ளத்து அடக்கம் என தொண்டர்களின் பெருமையைப் பெருமைப் படுத்துகிறார். இத்தகைய தொண்டர்களின் தலைவனாகும் பெருமை பெற்று, பெருமைக்கு பெருமை சேர்க்கிறான் விசாரசருமர் என்னும் சிறுவன். இவன் சோழநாட்டின் மண்ணியாற்றங் கரையிலுள்ள சேய்ஞலூரில் எச்சத்தன் பவித்திரை என்போருக்கு மகனாக அவதரித்தான்.
இவன் மண்ணீயாற்றங்கரை மணலால் சிவலிங்கம் அமைத்து, தான் மேய்க்கும் பசுக்களின் பாலால் சிவலிங்கத்திற்கு திருமுழுக்காட்டி வணங்கி வந்தான். இதனை அறியாத விசாரசருமரின் தந்தை அவ்விடம் வந்தார். மகன் பசும்பாலை மணலில் ஊற்றுவதைக் கண்டு கோபங் கொண்டு மகனை அடித்து பாற்குடத்தைக் காலால் உதைத்தார். தன் சிவபூசைக்கு இடையூறு விளைவித்த தந்தையின் காலை விசாரசருமர் மழுவால் வெட்டினார். அப்போது சிவலிங்கத்தில் இருந்து சிவன் வெளிப்பட்டு
தொடுத்த இதழி சூழ்சடையார்
         துணைத்தாள் நிழற்கீழ் விழுந்தரை
எடுத்து நோக்கி ‘நம் பொருட்டால்
         ஈண்ற தாதை வீழ எறிந்தாய்
அடுத்த தாதை இனி உனக்கு நான்’ என்று
         அருள் செய்தணைத் தருளி
மடுத்த கருணையாற் றடவி உச்சி
         மோந்து மகிழ்ந்தருள”
என விசாரசருமரை தன் மகனாக ஏற்று, அவருக்கு சண்டிகேசுவர பதவி அளித்ததை சண்டேசுவர நாயனார் வரலாறு கூறுகின்றது. ‘நாம் உண்டகலமும் உடுப்பனஞ் சூடுவனவும் உனக்காகச் சண்டீசனுமாம் பதந்தந்தோம்’ என்று சிவன் தன் சொத்துக்கள் யாவற்றையும் விசாரசருமருக்குக் கொடுத்தார் என்கின்றது பெரியபுராணம். இதனை
“மாணி பால்கறந்து ஆட்டி வழிபட
நீணு லகெலாம் ஆளக் கொடுத்த என்
ஆணியைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற
தாணுவைத் தமியேன் மறந்து உய்வனோ”      - (திருமுறை: 5:2:4)
என்று திருநாவுக்கரசு நாயனாரும் தமது தேவாரத்தில் குறிப்பிடுட்டுள்ளார். 
அதனாலேயே கோயில் சொத்துக்கள் சண்டீகேசுவரர் பெயரில் வாங்கி விற்கப்பட்டு வந்தன. அதற்கு கல்வெட்டு சான்றுகள் கூட இருக்கின்றன. அது சண்டீசப் பெருவிலை என அழக்கப்பட்டது. அதனாலேயே எல்லாச் சிவாலயங்களிலும் சண்டிகேசுவரருக்கு என தனித் திருமுன் அமைக்கப்படுகின்றன. அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவராக கருதப்படும் இவரது பெருமையை சமயகுரவர் நால்வரும் போற்றிப் பாடியுள்ளனர். மேலே கூறிய வரலாற்றை மிக எளிதாக நான்கு வரிகளில் சம்பந்தர் படம் பிடித்துக் காட்டுகிறார்.
வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பாலாட்டும்
சிந்த செய்வேன் தன்கருமம் தேர்ந்து சிதைப்பான் வருமத்
தந்தைதனைச் சாடுதலும் சண்டீசன் என்றருளிக்
கொந்தணவு மலர் கொடுத்தான் கோளிலி எம்பெருமானே”  
                                               - (திருமுறை: 1: 62: 4)
சண்டீச பதவி கொடுத்து தன் தலைக் கண்ணியான கொன்றை மலர்மாலையயும் இறைவன் சூடினான் என்னும் ஞான சம்பந்தரின் கூற்றை நாம் நேரில் பார்ப்பதற்கு கங்கைகொண்ட சோழ புரத்திலுள்ள சோழீசுவரர் கோயிலுக்குச் செல்லவேண்டும். இந்த ஞானக் கவிதைக்கு ஏற்ற மோனச்சிலை அங்கு இருக்கின்றது. உண்மையான பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்பதனை சண்டேசுவரர் முகத்தில் காணப்படும் அமைதியும் பக்தி கலந்த அடக்கமும், இருகரம் கூப்பி இருக்கும் நிலையும் எடுத்துக் காட்டுகின்றன. சிவன் கருணை வழிந்தொழுக சண்டேசுவரருக்கு மாலை அணிவித்து அருள்பாலிக்கின்றார். மலர் மாலையில் உள்ள ஒவ்வொரு மலரின் இதழும் புதுமலர் போல் பொலிய சிற்பி தன் கைவண்ணத்தைக் காட்டி இருக்கின்றான். பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் இந்த மோனச் சிலையை சிற்பி, சம்பந்தரின் தேவாரத்தை பாடி இரசித்தே படைத்திருப்பான் போல் இருக்கின்றது. 
ஞானசம்பந்தர் மட்டுமல்ல சுந்தரரும் “சண்டிக்கு உன்சடைமிசை மலர் அருள் செயக்கண்டு” தான் சிவனை வணங்குவதாகக் கூறியுள்ளார்.
“தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப் 
பாதகமே சோறு பற்றினவா தோள் நோக்கம்”      
                                                -  (திருமுறை: 8: 15: 7)
என மணிவாசகரும் சண்டேசுவரருக்கு சிவன் அருள் புரிந்ததை திருவாசகத்தில் பாடிப் பரவசப்பட்டுள்ளார்.
இனிதே,
தமிழரசி.
குறிப்பு:
சாலினி என்ற பெயரில் 'கலசம்' இதழில் எழுதியது.

Thursday, 3 May 2012

அடிசில் 23


தாமரைவிதை அல்வா
                                                     - நீரா -
தேவையான பொருட்கள்:
கோது இல்லாத தாமரை விதை - 300 
சீனி - 200 கிராம்
பட்டர் - 125 கிராம்
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
தண்ணீர்  - 200 மி. லீற்றர்
எலக்காய் தூள் - 1 சிட்டிகை
உப்பு -  சிட்டிகை



செய்முறை:
  1. தாமரைவிதையை 4 மணி நேரம் ஊறவிட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீரைச் சூடாக்கி சீனி, ஏலத்தூள் சேர்த்து, கையில் ஒட்டும் பதத்தில் பாணியாகக் காய்ச்சிக் கொள்க.
  3. வாயகன்ற பாத்திரத்தில் பட்டரை உருக்கி முந்திரிப்பருப்பை பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.
  4. அந்த பட்டரினுள் அரைத்த விழுதைப் போட்டு இளம் சூட்டில் கிளறவும்.
  5. நெய் பிரிந்து வரும் பொழுது சீனிப்பாணி, உப்பு, பொரித்த முந்திரிப்பருப்பு சேர்த்துக் கிண்டவும்.
  6. எல்லாம் ஒன்றாக கரண்டியுடன் திரண்டு வரும் போது இறக்கி நெய்பூசிய தட்டில் கொட்டி, பரப்பி விரும்பிய வடிவில் துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.
குறிப்பு:
தாமரைவிதை வயது போவதால் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி இளமையாகத் தோன்றச் செய்யும். 
கருவுற்றிருக்கும் போது தாமரைவிதை உண்பதைத் தவிர்க்கவும்.

Wednesday, 2 May 2012

தேர்ந்து தெரிந்து தந்தான்


துள்ளித் திரிந்த பருவமதில்
           துணையாய் விளையாடி வந்தே
கள்ளமில்லா என் நெஞ்சம்
           கரந்துறை கந்தன் அவன்
பள்ளிப் பருவமதில் பலகலை
           பயின்றிடும் வேளையிலே
தெள்ளு தமிழின் சுவை
           தேர்ந்து தெரிந்து தந்தான்.
இனிதே,
தமிழரசி.

Tuesday, 1 May 2012

ஆசைக்கவிதைகள் - 30

 வாடி பெண்ணே என்னோட!

அந்நாளில் பெண்கள் கூடையில் பொருட்களை எடுத்துச் சென்று கோயில்களிலும் சந்தைகளிலும் விற்பது வழக்கமாகும். பொலநறுவையில் வாழ்ந்த இளம் பெண்ணொருத்தியும்  ஒவ்வொரு நாளும் கூடை மேலே கூடை வைத்து பொருட்களை விற்பதற்காக எடுத்துச் சென்று விற்று வந்தாள். அவள் கூடை மேலே கூடை வைத்து பொருட்களை எடுத்துச் செல்வதை பல நாட்களாக பார்த்து மகிழ்ந்தான் ஓர் இளைஞன். அவனை அறியாமல் அவள் மேல் ஏற்பட்ட ஈர்ப்பால் எப்போ அவள் வருவாள் எனப்பார்த்திருந்தான். அவளைக் கண்டதும் தனது ஆசையை வெளிப்படுத்துகிறான். 
  ஆண்: கூடைமேல கூடை வைத்து
                     குடுகுடுஎன்னு போற பெண்ணே
            கூட நானும் வந்திடட்டா
                     குமரி உன்னை கொஞ்சிடட்டா.
அவளும் அவனுக்கு கொஞ்சமும் சளைக்காமல் எதிர்ப்பாட்டு (எசப்பாட்டு) பாடுகிறாள். அவன் அவளைக் கொஞ்சினால் அந்த ஊரார் அவனை சும்மா விட்டுவிடுவரா? மரண அடி கொடுப்பர். அந்த வேதனையை தாங்கமுடியாமல் அவன் பாழும் கிணற்றில் விழவேண்டி வரும் என்பதை மிக நளினமாகச் சொல்கிறாள்.
பெண்: கூட நீயும் வந்திடலாம் 
                      குமரி என்னை கொஞ்சிடலாம்
             பாட(டை)யில போறதற்கு நல்ல
                      பாழும் கிணறு பாருமய்யா.
அவளின் எசப்பாட்டுக்கு அவனும் விடாமல் எசப்பாட்டு பாடுகிறான். மரண அடியையோ மரணத்தையோ அவன் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. அதற்கு முன் அவளுடன் வாழ்ந்தால் போதும் என்றே நினைக்கிறான்.
ஆண்:  பாட(டை)யில போறதற்கு நல்ல
                      பாழும் கிணறு பாக்கமுன்னம் 
             வாழவேணும் உன்னோட
                      வாடி பெண்ணே என்னோட.
                                -  நாட்டுப்பாடல் (பொலனறுவை)
                                         (பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)