Friday 1 January 2021

தமிழர் வளர்த்த மழலைக்கல்வியில் இயற்கைக்கல்வி

பேரன் - மயன்

இயற்கையின் தோற்றத்திலிருந்து மனிதன் பலவகைப் பாடங்களைக் கற்றான். இரவும் பகலும், சூரியனும் சந்திரனும், குளிரும் வெய்யிலும், மண்ணும் மலையும், இடியும் மின்னலும், ஆறும் குளமும், மரமும் செடியும், பறவையும் விலங்கும், நெருப்பும் நீரும், காற்றும் மழையும் மனிதனுக்குக் கற்றுக் கொடுத்த பாடங்கள் கோடி. இயற்கை அன்று அவனுக்குக் கற்றுக் கொடுத்த பாடங்களை இன்று எந்த ஒரு பல்கலைக்கழகத்திலும் போய்க் கற்கமுடியாது. எத்தகைய அறிஞராலும் மறுக்க இயலாத உண்மையிது. அதனாலேயே நாலடியார்

கல்வி கரையில கற்பவர் நாள் சில - (நாலடியார்: 135) 

கல்வி கரைகாணடியாத அளவு பெரியது. ஆனால் கற்பவர்கள் வாழும் நாட்களோ மிகக் குறைவு என்கின்றது.

உலகில் பிறக்கும் எவ்வுயிரும் பிறந்ததும் தன்னியல்பாய் தொழிற்படத் தொடங்கிவிடும். மனிதனும் அதற்கு விதிவிலக்கு அல்ல. சிறுகுழந்தை தாயிடம் பால் குடிக்கத் தொடங்கியதுமே தன் விருப்பு வெறுப்புகளை வெளிக்காட்டும். தாயின் அன்பு, அரவணைப்பு, கோபம் போன்றவற்றின் வேறுபாட்டைக் கற்பதோடு மற்றவர்களின் தன்மையையும் அன்பையும் புரிந்து கொள்கிறது. அது குழந்தைக் கல்வியின் ஒரு படிநிலையே. குழந்தையின் புரிதலைப் புரிந்து கொண்ட தமிழர்

விளையும் பயிரை முளையில் தெரியும்

என்றனர். இப்பழமொழி உயிர்கள் யாவற்றுக்கும் பொருந்தும். இயல்பாக குழந்தைகளின் மழலை பெற்றோரையும் கேட்போரையும் இன்பமடையச் செய்யும். அதனை மிக அழகாக

நாவொடு நவிலா நகைபடு தீம்சொல்

யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை                         

- (அகம்: 16: 4 - 5) 

நாக்கைப் பயன்படுத்தாது சிரிப்பைத் தரும் இனிய சொல்லைக் கூறும் குழந்தையை யாவரும் விரும்புவர் என்கின்றது அகநானூறு.  

திருவள்ளுவரும்

குழல்இனிது யாழ்இனிது என்பர்தம் மக்கள்

மழலைச் சொல் கேளாதவர் - (குறள்: 66)

என மழலையின் இனிமையை புகழ்ந்துள்ளார். கலித்தொகையில் 

ஐய! காமரு நோக்கினை அத்தத்தா என்னும் நின்

தே மொழி கேட்டல் இனிது -(கலி: 80: 14 -15)

ஐயனே! ஆசையோடு பார்த்து, ‘அத்தத்தாஎனச்சொல்லும் உன் தேன்மொழியைக் கேட்க இன்பமாக இருக்கிறது என்கிறார் மருதன் இளநாகனார்.

சங்ககாலத் தமிழர் மழலையின் இனிமையை தீந்தமிழின் சுவையோடு கேட்கவிரும்பினர் போலும். அதனால் அவர்கள் கல்வியை அதிலும் மழலையர் கல்வியைப் போற்றினர். திருவள்ளுவர் வாழ்க்கைத் துணையைப் பற்றிச் சொல்லும் இடத்திலும் 

நன்கலம் நன்மக்கட் பேறு         - [குறள்: 60] எனக்கூறியவர் 

புதல்வரைப் பெறுதல் எனும் அதிகாரத்தில்

அறிவறிந்த மக்கட்பேறு - (குறள்: 61)

பண்புடை மக்கட் பெறின் - (குறள்: 62)

சான்றோன் எனக்கேட்ட தாய் - (குறள்: 69)

"தந்தை மகற்கு ஆற்றும் நன்மை - (குறள்: 67) 

"மகன் தந்தைக்காற்றும் உதவி - (குறள்: 70)

எனப் பட்டியல் இட்டுள்ளார்.

ஒரு குழந்தை வெளியுலகை அறிந்து கொள்ள முன்பே உலக இயல்பின் நன்மை தீமைகளை எடுத்துக்கூறி, மழலையரை வழி நடத்துவதே பண்டைய மழலை இலக்கியங்களின் நோக்கமாகும். பொய், களவு, கொலை, கொள்ளை, போர், போட்டி. பொறாமை என்பன உலகை அழித்துவிடும். அதனை அறிந்தே தமிழர் மழலைக் கல்விக்கு முதன்மை கொடுத்தனர். 

கடைச் சங்ககால நூல்களில் ஒன்று நான்மணிக்கடிகை. அதனை இயற்றியவர் விளம்பி நாகனார். அவர்

மனைக்கு விளக்கம் மடவார் மடவார்

தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய

காதற் புதல்வர்க்கு கல்வியே

        - (நான்மணிக்கடிகை:105: 1 - 3)

ஒரு வீட்டிற்கு ஒளிதருவோர் பெண்கள். அப்பெண்களுக்கு ஒளியாக இருப்போர் நற்பண்பு மிக்க பிள்ளைகள். அப்பிள்ளைகளுக்கு கல்வியே ஒளியாகும்என்கிறார். மனிதவாழ்வுக்கு ஒளியாக வழிகாட்டுவது கல்வி. அவ்வுண்மையை அறிந்த தமிழர் மங்கையர் கல்வியையும் மழலையர் கல்வியையும் போற்றினர். பெண்கள் தம் குழந்தைகட்குக் கற்பித்தனர். 

சங்ககாலக் குழந்தை ஒன்று பால் குடிக்க மறுத்து அடம்பிடிக்கிறது. தாய் பால் ஊற்றிய [பால்பெய்] கிண்ணத்தை[வள்ளம்] கையில் பற்றிப்பிடித்தபடி இப்போது எனக்காகக் குடித்தாய், ஒருமுறை உனது தந்தைக்காக 'உண்' எனக்கூறி பாலைப் பருக்குவதை புறநானூறு

பால்பெய் வள்ளம் தால்கை பற்றி

என்பாடு உண்டனை ஆயின் ஒருகால்

நுந்தை பாடும் உண்ணென் நூட்டி    - (அகம்: 219: 5 - 7)

எனக் காட்சிப்படுத்துகிறது. இதனால் குழந்தை பால்குடிக்கும் வயதிலேயே தாய் தந்தையர்க்காக உண்ணவும் வாழவும் கற்கிறது. அந்தப் பண்பில் வளர்ந்த குழந்தை பெரியவன் ஆனாலும் தன் தாய் தந்தையரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பாது. தனக்காக வாழாது பிறர்க்காக வாழும் மனிதப்பண்பை மழலைப்பருவத்திலேயே கற்கத் தொடங்குகிறது.

கடைச்சங்ககாலத் தாயொருத்தி மகனிடம் 

ஐய திங்கள் குழவி வருகென யான் நின்ன

அம்புலி காட்டல் இனிது - (கலி: 80: 18 - 19)

ஐயனே! திங்கட் குழந்தையே வா! எனக்கூறி நான், உனக்கு அம்புலியைக் காட்டுதல் இனிமையானதுஎன்கிறாள். சந்திரனைச் சூரியனை நட்சத்திரத்தைக் காட்டி வானின் இயல்பை மழலையர்க்குப் புகட்டினர். 

பொன் மணிகளோடு புலிப்பல்லையும் கோத்து ஒலிசெய்யும் மணித்தாலியை குழந்தைகளுக்கு அணிவிப்பர். குழந்தைகள் இருபாலார்க்கும் தந்தையர் அணிவிக்கும் தாலி இது. இந்தத் தாலியை நானும் குழந்தையிலிருந்து சிறுமியான பின்பும் அணிந்திருக்கிறேன். புலி போன்ற கொடிய விலங்குகளிடம் அச்சமின்மையை அது ஏற்படுத்தியது. புலியையும் நாம் கொல்லலாம் அடக்கலாம் என்பதை குழந்தை கற்றுக்கொள்கிறது. அந்நாளைய காட்டுவாழ் சூழலில் அச்சமின்மை மிகவும் தேவையானதே. அதனை

"புலிப்பல் தாலிப் புன் தலைச் சிறாஅர்

- (புறம்: 9)

“……………………………… பொன்னொடு 

புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி

- (அகம்: 7: 17 - 18)

அறியலாம்.

விளையாட்டுப் பருவத்தில் புன்னை விதைகளைப் புதைத்து விளையாடிய சின்னஞ்சிறு சிறுமி அதை எடுக்க மறந்து போனாள். அது தானாக முழைத்தது. அவள் தான் குடிக்கும் நெய்கலந்த பாலை ஊற்றி வளர்த்தாள். அதனைக் கண்ட தாய்நீ  நெய்கலந்த பாலையூற்றி வளர்த்தது. உன்னிலும் சிறந்தது. உனக்கு தங்கையாகும்[நுவ்வை]’ எனச் சொன்னாள். அதை 

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி

மறந்தனம் துறந்த காழ்முளை அகைய

நெய்பெய் தீம்பால் பெய்துஇனிது வளர்த்தது

நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று

அன்னை கூறினள் புன்னையது நலனே

- (நற்றிணை: 172: 1 - 5)

என நற்றிணை படம்பிடித்து வைத்துள்ளது. 

புன்னைமரத்தை தம் குழந்தையைவிடச் சிறந்ததாகவும், தங்கை என உறவுமுறை கூறியும் வளர்க்கச் செய்த பாங்கு குழந்தை வளர்ப்பில் அன்றைய தமிழரிடம் இருந்த செழுமையையும் மரநேயத்தையும் காட்டுகிறது. அப்படிப் புன்னைமரத்தை வளர்த்து, வளரும் எந்தக் குழந்தையாவது மரங்களை வெட்டுமா? தற்போது வெளிநாட்டிலிருந்து சென்று வீட்டைச் சூழவுள்ள மரங்களை வெட்டி கல்பதித்து அழகு பார்ப்பது போலச் செய்யுமா? இன்று  தண்ணீர் இல்லை எனப்புலம்பும் நாம் நாளை சுவாசிக்க நல்ல காற்று இல்லையே எனப்புலம்பும் காலம் வெகுதூரத்தில் இல்லை. இவ்வுண்மையை அறிந்தே பண்டைத்தமிழர் மழலைக் கல்வியைப் பேணிக்காத்தனர் போலும்.

ஆத்திசேர் கொன்றை அழகுதமிழ் மூதுரை

பாத்திசேர் நல்வழி பண்புலகம் - பூத்த

நறுந்தொகை நன்னெறி ஏழும் குழந்தைக்

குறுந்தமிழ் என்றறிந்து கொள்

என்கின்றார் டாக்டர் சுப மாணிக்கனார். அதாவது ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, உலகநீதி, நறுந்தொகை [வெற்றிவேற்கை], நன்னெறி ஆகிய ஏழு நூல்களும் மழலைக் கல்விக்காக இயற்றப்பட்டவையே. 

தாய் தந்தையர் தமிழறிந்த அறிஞர்களாக இருந்த வீடுகளில் தம் குழந்தைகளுக்கு இவற்றைக் கற்பித்தனர். மற்றைய வீட்டுக் குழந்தைகள் இந்நூல்களை அறிவரா! பாடத்திட்டத்திற்கு அமைய ஓரிரு நூல்களின் ஒரு சில பாடல்களே பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டன. அதனாலேயே இயற்கை பற்றிய சிந்தனை சிறிதுமின்றி இயற்கையை அழித்துக்கொண்டு இருக்கிறோம். மழலையர்க்கு இயற்கை எத்தகையது என்பதை 

1. ஆத்திசூடி

வைகறை துயிலெழு

பருவத்தே பயிர் செய்

பூமிதிருத்தியுண்

நீர் விளையாடேல் 

இலவம் பஞ்சில் துயில் 

[இலவம் பஞ்சை மறந்து மேலை நாட்டு நாகரீகத்தால் Memory Form Mattressல் படுத்து எமக்கும் எம்முடலுக்கும் துன்பத்தைக் கொடுக்கிறோம்].

2. கொன்றைவேந்தன்

சீரைத் தேடின் ஏரைத்தேடு

ஆறு இல்லா ஊருக்கு அழகு பால்

நீரகம் பொருந்திய ஊரகத்திரு

தையும் மாசியும் வையகத்து உறங்கு

பீரம் பேணில் பாரம் தாங்கும்

[தாய்ப்பாலைப் பேணிக் குடித்தால் நுண்ணுயிர்க் கிருமிகளின் பாரத்தை தாங்கும் எதிர்ப்புச் சக்தியை அது கூட்டும்].  

3. வெற்றிவேற்கை:

அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது

சுடினும் செம்பொன் தன்ஒளி கெடாது

அரைக்கினும் சந்தனம் தன்மணம் ஆறாது

புகைக்கினும் கார்அகில் பொல்லாங்கு கமழாது

கலக்கினும் தண்கடல் சேறு ஆகாது

- (23 - 27)

இயற்கையிற் கிடைக்கும் இப்பொருட்களின் தன்மையை இவற்றைவிட அழகாகச் சொல்ல முடியுமா? ‘புகைத்தாலும் கார் அகில் கெட்ட மணத்தை வீசாதுஎன்பதைப் படித்திருந்தால் கள்ளி மரத்தை வேரோடு சாய்ப்பாரா!

4. மூதுரை

உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா

- (5: 3 - 4)

………………….. -மாந்தர்

குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து

மறைக்குமாம் கண்டீர் மரம்

- (30: 2 - 4)

மனிதர் மரத்தை வெட்டி வீழ்த்தும் வரையும் அது அவர்களுக்கு குளிர்நிழலைத் தந்து வெய்யிலில் இருந்து மறைத்துக் காக்கும். மழலைப் பருவத்தில் இந்த அருமந்த கற்றிருந்த எவராவது மரங்களை வெட்டுவரா!

5. நல்வழி

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய

வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்

உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லைக் கண்டீர்

பழுதுண்டு வேறோர் பணிக்கு

- (12)

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடுமந் நாளுமவ்வா

ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்

- (9)

காலடி சுடும் அளவிற்கு நீர் வற்றிப்போய் மணலாக இருந்தாலும் ஆறானது அதைத் தோண்டினால் ஊற்று நீரைக் கொடுத்து உலகை வாழ்விக்கும். இது மழலையர்க்கு கற்பிக்கப்பட்ட பாடம். என்னே நம் முன்னோர் மேன்மை.

இந்நூல்கள் எல்லாம் நல்வாழ்வுக்குத் தேவையான பலவற்றை மழலைக் கல்வியாகக் கற்றுக் கொடுக்கின்றன.

6. உலகநீதி

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் 

- (1: 1 - 6)

எனச்சொல்கின்றது.

7. நன்னெறி

எந்தை நல்கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்றவன்

மைந்தர் தம் ஈகை மறுப்பரோ -பைந்தொடீ

நின்று பயன் உதவி இல்லா அரம்பையின் கீழ்

கன்றும் உதவும் கனி

- (17)

பொன்னால் ஆன வளையலை அணிந்தவளே! வாழைக் குலையைத் தந்த வாழைமரத்தை வெட்டினாலும் அதன் கீழே நிற்கும் வாழைக்கன்றும் கனி தரும். அதுபோல தந்தை பிறருக்குக் கொடுத்து வறுமை அடைந்தான் என்று மைந்தரும் கொடுக்க மறுப்பார்களா? என்று சிறுமிக்குப் பாடம் புகட்டுகின்றது இப்பாடல்.

பாரதியார் பாடியது போல ஏட்டையும் பெண்கள் தொடுவதில்லைஎன்ற நிலைப்பாடு தமிழரிடம் இருக்கவில்லை. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் மாலிக்கபூர் படை எடுப்பின் பின்னரே அந்நிலை தோன்றியது எனலாம்.

மனித அறிவின் வளர்ச்சி உலகில் வாழும் உயிர்களின் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும்எனும் தலைசிறந்த சிந்தனையைத் திருவள்ளுவர் மிகத்தெளிவாய்ச் சொல்கிறார். குழந்தை வளர்ப்பில் அதனைத் தாய் தந்தையரின் கடமையாக்கி 

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க்கு எல்லாம் இனிது - (குறள்: 68)

எம்மைவிட நம் குழந்தைகள் அறிவுடையவர்களாக இருந்தால் இவ்வுலகத்தில் உள்ள உயிர்கள் யாவும் இன்பம் அடையும் என்கிறார். மழலையர் கல்வி எவ்வளவு இனிமையானது என்பதை ஆத்திசூடியைச் சொல்லும் மயனின் மழலையால் அறிந்திருப்பீர்கள். உலக உயிர்கள் மகிழ்ந்து வாழ மழலைக்கல்வி தேவை. இல்லையேல் மனிதன் மனிதனாக வாழமுடியாது . அதையுணர்ந்து தமிழர் மழலைக்கல்விக்கு முதன்மை கொடுத்துப் பேணி வளர்த்தனர். எனவே இயற்கையின் நுண்மையையும் திண்மையையும் ஊட்டி மழலைக்கல்வியை வளர்ப்போம்.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment