Wednesday 13 January 2021

பொங்குக! தமிழ் ஓங்கவே!


உலகின் நாற்றிசையிலும் புகழ்பரப்பும் எம் தமிழ் உறவுகளுக்கு பொங்குக! தமிழ் ஓங்கவே நன்றாய்! என வாழ்த்துகிறேன். 

நாற்றிசையிலும் இருக்கும் எட்டு நாகங்கள் ஒன்றோடொன்று பிணைந்து எம் தமிழைக் காக்கும் பொங்கல் வாழ்த்தை சித்திரக் கவிதையாய் புனைந்துள்ளேன். அப்பொங்கல் வாழ்த்தை மங்கலம் பொங்கப் படித்து மகிழுங்கள்.

பண்டைய தமிழரை நாகர்கள் எனவும் அழைப்பர். இன்றும் தமிழரைத் தெழுங்கில்அரவாளு’ [அரவு - பாம்பு] எனக்கூறும் வழக்கம் உண்டு. அந்நாளைய தமிழர் கிடைத்தற்கு அரிய தமது செல்வங்களை நிலவறைகளில் வைத்து அவற்றுக்குக் காவலாக நாகங்களையும் வளர்த்தனர். அதனாலேயேநாகம் காத்த நிதியம் போலஎன்னும் உவமைத் தொடர் தமிழில் உண்டு. நாகங்கள் காக்கும் பொருளை எவரும் களவாட முடியாதென நம்பினர்.

உலகின் நாற்றிசையிலுள்ள எண்நாகம் ஒன்றாய்ப் பிணைந்துதமிழ்எனும் பெருநிதியை எட்டுப்பக்கமும் காக்க இச்சித்திரக் கவிதையைப் புனைந்தேன்.

கவிதையை வாசிப்பது எப்படி? பார்ப்போமா?

பொங்குக தமிழ் ஓங்கவே நன்றாய் எனும் ஓரடிக் கவிதை எட்டு நாகத்துள்ளும் இருக்கிறது. ஒவ்வொரு நாகத்தின் தலையிலிருந்து வால்வரைபொங்குக தமிழ் ஓங்கவே நன்றாய்எனக் கவிதையை படியுங்கள். விரும்பினால்பொங்குக தமிழ்வரைப் படித்ததும்ஓங்கவே நன்றாய்என்பதை மடித்தும் படிக்கலாம்.

நான் கீறி எழுதிக்கொடுத்த எண்நாகப் பிணையல் சித்திரக் கவிதையை மீண்டும் மெருகேற்றிக் கீறி அதற்குள் எழுத்துக்களை அச்சிட்டுத் தந்த எனது குட்டி மச்சான் கீரனுக்கு என் பொங்கல் வாழ்த்தும் மகிழ்ச்சியும் உரியனவாகுக.

இனிதே,

தமிழரசி.

2 comments:

  1. முதன் முதலாக ஒரு நாக கவி படித்தேன்.
    உண்மையில் இது ஒரு படித் தேன்.
    படிக்க மகிழ்வாயிருந்தது.
    ஏழுமலை புஷ்பராஜ்,
    சேலம்., தமிழ்நாடு.

    ReplyDelete