Tuesday 19 January 2021

குறள் அமுது (143)


குறள்: மனம்தூய்மை செய்வினைத் தூய்மை இரண்டும்

    இனம்தூய்மை தூவா வரும் - 455


பொருள்: மனத்தின் தூய்மை, செய்யும் தொழிலின் தூய்மை ஆகிய இந்த இரண்டும் நாம் சேர்ந்திருக்கும் இனத்தின் தூய்மையால் வரும்.


விளக்கம்: சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தில் வரும் ஐந்தாவது திருக்குறள் இது. நாம் சேர்ந்திருக்கும் இனம் ஏன் தூய்மையாய் இருக்க வேண்டும் என்பதை யாவரும் மிக எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய அருமையான எடுத்துக்காட்டு ஒன்றைச் இவ்வதிகாரத்தின் இரண்டாவது குறளில் சொல்கிறார். 

நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்பது ஆகும் அறிவு - 452


அதாவது வானத்திலிருந்து மழை மேகங்கள் மழையைப் பொழிகின்றன. அந்த நீருக்கு நிறமும் இல்லை. சுவையும் இல்லை. நாம் பருக்கக் கூடிய நன்னீர் அது. மழை கடலில் பொழிந்தால் அது கடல் நீராகிவிடும். குடித்தால் உப்புக் கரிக்கும். உவர் நிலத்தில் பொழியும் மழை நீர் உவர்க்கும். நன்னீர் நிலைகளில் பெய்தால் நன்னீராய் இருக்கும். அதுவே செம்மண் நிலத்தில் பெய்தால் குறுந்தொகை சொல்லும் 

செம்புலப் பெயல் நீர் போல

செந்நீராய்க் காட்சி தரும். நிலத்தின் தன்மையைப் பொறுத்து மழை நீர் மாற்றம் அடைவது போல மனிதர் தாம் சேரும் இனத்தின் இயல்பைப் போன்ற   அறிவைப் பெறுவர். படிப்போருடன் சேர்வோர் படிப்பது போலவும் மதுவைக் குடிபோருடன் சேர்வோர் குடிப்பது போலவும் சேரும் இனத்துக்குத் தக அறிவும் மனமும் மாறுகிறது.


ஆதலால் நாம் சேரும் அல்லது வாழும் இனம் மிக்கதூய்மையாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். திருவள்ளுவர் சொல்லும்இனம்தூய்மை தூவா வரும்என்பதில்தூஎன்றால் துணை. எமக்கு இனத்தூய்மை துணையாக வரும் என்பதையேதூவா வரும்என்கிறார். வினை என்றால் தொழில். ஒருவர் செய்யும் தொழிலை செய்வினை என்பர். இனத்தூய்மை மனம் தூய்மையாக இருக்கவும் செய்யும் தொழில் தூய்மையாக நடக்கவும் துணையாக வருமாம்.


மனநலத்தையே மனந்தூய்மை என்பர். மனிதர்க்கு முதலில் வேண்டியது மனநலமே. மனநலம் இன்மையே போட்டி, பொறாமை, கொலை, களவு, கொள்ளை போன்ற பல கேடுகளுக்கு எல்லாம் காரணமாகும். மனநலம் மன்னுயிக்கு ஆக்கம் எனவும் கூறியுள்ளார் அல்லவா!


மனநலம் மிக்கவர் செய்யும் செயலும் நன்றாகும். ஆனால் இனந்தூய்மை இல்லாவிடின் மனநலமின்றி செய்யும் செயலையும் இழந்து வாழும் நிலை வரும். ஒருவர் சேரும் இனம், ‘எப்படி மனநலத்தையும் செய்யும் தொழிலின் நலத்தையும் பாதிக்கும்?’ என்பதைப் பார்ப்போம். கஞ்சா விற்போர் ஒரு குழுவாகவாகவும் மூடநம்பிக்கை கொண்டோர் வேறு குழுவாக, கொலை செய்வோர் வேறோர் குழுவாக  வன்முறையாளர் இன்னொரு குழுவாக இவ்வாறு பல் குழுக்கள் உண்டாகின்றன. இத்தகைய குழுக்களுக்கு இடையே வாழ்வோரின் மனநிலை தூய்மையாக இருக்குமா? அங்கு செய்யும் தொழில் சிறந்து விளங்குமா?


தீச்செயல்கள் செய்யும் குழுக்களிடையே வாழமுடியாத மனநலம் உள்ள மனிதர்கள் எப்படி தீமைசெய்யும் இனத்தாரோடு சேர்ந்து வாழமுடியும்?


ஆதலால் மனம் நல்லதாக இருக்கவும் செய்யும் செயல் நன்றாக அமையவும்  சேரும் இனம் தூய்மையாக இருக்கவேண்டும்.

இனிதே,

தமிழரசி.

No comments:

Post a Comment